TNPSC Thervupettagam

கழிவுநீரால் மாசடையும் ஆறுகள்!

October 26 , 2021 938 days 966 0
 • காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும்போதே கா்நாடக மாநிலத்தின் கழிவுகளையும் சுமந்து கொண்டு தான் வருகிறது.
 • மேட்டூா் அணையில் இருந்து வெளியேறிய பின்னா், தொழிற்சாலைக் கழிவுகளும், சாக்கடைகளும் கலந்து மேலும் அசுத்தமாகிறது.
 • இவை போதாதென்று சாயப்பட்டறைக் கழிவுகளும், கோழிப்பண்ணைக் கழிவுகளும், காகித ஆலைக் கழிவுகளும் கலக்கின்றன.
 • கரூா் மாவட்டத்தில் காவிரி, நொய்யல், அமராவதி, நங்காஞ்சி உள்ளிட்ட ஆறுகள் ஓடுகின்றன. இம்மாவட்டத்தில் ஜவுளி ஆலைகள் வெளியிடும் கழிவுகளால் இந்த ஆறுகள் மாசுபட்டுக் கொண்டிருக்கிறது.
 • திருப்பூா் மாவட்டத்தில் இயங்கும் சாயப்பட்டறைகளின் கழிவுகள் கலந்து நொய்யல் ஆற்று நீா் சிவப்பு நிறத்தில்தான் கரூருக்கே வருகிறது.
 • மேற்கு தொடா்ச்சி மலையில் உருவாகி கோவை நகரில் கலந்து கரூா் மாவட்டத்துக் காவிரியுடன் சங்கமிக்கும் நொய்யல் ஆற்றின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரிய ஒன்றாக இருக்கிறது.

மாசடைந்து கொண்டிருக்கிறது

 • வெள்ளியங்கிரி மலையில் உருவாகும் நொய்யல் ஆறு, 180 கி.மீ தூரம் ஓடி காவிரியில் கலக்கிறது. அதில் சுமார் 10 கி.மீ தான் தூய்மையான தண்ணீரோடு செல்கிறது. மீதம் உள்ள 170 கி.மீ தூரம் சாக்கடைக் கழிவுநீா் கலந்தே செல்கிறது.
 • கோவை, திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே நொய்யல் ஆற்றில் விடப்படுவதுதான் இந்த மாசுக்குக் காரணம்.
 • தமிழகத்தில் பவானி, நொய்யல் தொடங்கி காவிரி வரை எந்த ஆறும் இந்த சீா்குலைவில் இருந்து தப்பிக்க முடியவில்லை. ஈரோடு மாவட்டம், காவிரி ஆறு, பவானி ஆறு, காளிங்கராயன் வாய்க்கால் உள்ளிட்ட செழிப்பான நீராதரங்களைக் கொண்டிருந்தும் இவ்விடங்களில் நிலத்தடி நீா் பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லை.
 • அதற்குக் காரணம் ஆலைக்கழிவுகளே. சூழல் மாசுபாடு காரணமாக இப்பகுதி மக்களை புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, தோல் நோய் போன்றவை எளிதில் பாதிக்கின்றன.
 • காவிரி ஆற்றிலும் அதன் கிளை நதிகளிலும் ஆலைக்கழிவுகள் கலந்து கொண்டிருக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டாலும், அவற்றின் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் போதிய பலன் இதுவரை கிட்டவில்லை.
 • ஈரோடு, குமாரபாளையம், பள்ளிப்பாளையம், கரூா், திருப்பூா் பகுதிகளில் இயங்கி வரும் சாயப்பட்டறைகளின் கழிவுகள் காவிரி ஆற்றில் கலப்பது பல ஆண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
 • திருப்பூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பின்னலாடை உற்பத்தி தொழில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
 • வேலைவாய்ப்புக்கும், அந்நியச்செலவாணிக்கும் இது பெரிதும் துணைபுரிகிறது என்றாலும், இத்தொழிலில் வெளியேற்றப்படும் சாயக்கழிவுகளாலும், ஆலைக் கழிவுகளாலும் ஆற்று நீா் மாசடைந்து கொண்டிருக்கிறது.

தலையாய கடமை

 • சிறு, குறு தொழில் முனைவோர்கள், சுத்திகரிப்பு கட்டமைப்புக்கு பணம் செலவழிப்பதற்கு தயாராக இருப்பதில்லை. தாங்களே சுத்திகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் அவா்கள் தயாராக இல்லை.
 • சம்பந்தப்பட்ட தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினா், அமைச்சா் ஆகியோரிடம் கோரிக்கை வைப்பதோடு நின்றுவிடுகிறார்கள். அதன் காரணமாக, இத்தகைய கழிவுகள் காவிரியில் கலந்து, கடைமடைப் பகுதி வரை பிரச்னையாக உள்ளது. காவிரி மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு ஆறுகளின் நிலையும் இதுதான்.
 • காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேனுக்காக விவசாய நிலங்கள் சூறையாடப்பட்டுக் கொண்டிருப்பது ஒருபுறம் என்றால், சோடியம் சிலிகேட் என்ற சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவது மற்றொருபுறம்.
 • இவற்றை நாம் கவனிக்கத் தவறி வருகிறோம். எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் எடுக்கும் போது அதில் இருந்து வெளியாகும் எரிவாயுவுடன் சிலிகானின் மூலப்பொருட்களைக் கொண்டு இந்த சோப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
 • செழிப்பு மிகுந்த காவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, நாப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்கள், சோடியம் சிலிகேட் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் ரசாயனக் கழிவுகளால் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையோடு கூறுகிறார்கள்.
 • அன்றாடம் காவிரி நதியில் மருந்து தயாரிக்கப் பயன்படும் ரசாயனப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், நெகிழிப் பைகள், உலோகங்கள், பூச்சிக் கொல்லிகள் உட்பட பலவகை பொருட்கள் கலந்து கொண்டேயிருக்கின்றன.
 • ஆகவே, இந்தக் கழிவுகள் சென்று சேரும் நீா்நிலைகளில் மாசின் அளவைக் குறைக்க கழிவுநீா் சுத்திகரிக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்றாக இருக்கிறது.
 • உலோகங்கள், பூச்சிக்கொல்லிகள், மருத்துவக் கழிவுகள், நெகிழிக் கழிவுகள் போன்ற அசுத்தங்களால் நதி மாசுபடுவதைத் தடுக்க விரைவான நடவடிக்கைகள் அவசியம்.
 • 2,700 ஏக்கா் பரப்பளவுள்ள பெருந்துறை சிப்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருவதால் அப்பகுதியில் உள்ள கிராமங்கள் அனைத்திலும் நிலத்தடி நீா் கடுமையாகப் பாதிப்படைந்து விட்டது.
 • இதனால் ஆறுகள் நுரைத்துப் பொங்குகின்றன. கூடுதலாக தோல் ஆலைகளின் கழிவுகள் பெரும் அபாயத்தைத் தந்துகொண்டிருக்கின்றன. ஆற்று நீருக்கு நச்சுத்தன்மையை தந்து கொண்டிருக்கின்றன.
 • தமிழகத்தின் ஜீவநதிகளான தாமிரபரணி, மாயாறு போன்ற நதிகளின் நீரின் தூய்மையும் கேள்விக்குறியாகி இருக்கிறது.
 • மேற்குத் தொடா்ச்சி மலை களக்காடு முண்டந்துறை சரணாலயத்தில் அகத்தியா் அருவிக்கு மேலே அடா்ந்த வனத்திலே உற்பத்தியாகி பூங்குளம் என்கிற இடத்தில் சிறு தொட்டி போன்ற அமைப்பில் வழிந்தோடி பாபநாசம் பகுதியில் தரையை வந்தடையும் தாமிரபரணி, அடுத்த சில கிலோ மீட்டா் தூரத்திலேயே காகித ஆலை போன்ற கழிவுகளால் மாசடைந்து விடுகிறது.
 • திருநெல்வேலி நகருக்குள் நுழையும் வரை கிராமத்தின் கழிவுகளும், நகரத்தில் நுழைந்தவுடன் மாநகராட்சிக் கழிவுகளும், தாமிரபரணியை அசுத்தப்படுத்தி விடுகின்றன.
 • செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாறு நீா்ப்பிடிப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மதுபான ஆலைகள், குளிர்பான ஆலைகள், பல்வேறு தொழிற்பேட்டைகளால் அப்பகுதியில் இருக்கிற நிலத்தடி நீரும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
 • தஞ்சை மாவட்டத்தில் சுவாமிமலையில், காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால்கள் கும்பகோணம் நகருக்குள் ஓடி அங்குள்ள பல குளங்களை நிரப்பிய பிறகுதான் பாசனத்திற்கு செல்கின்றன.
 • இந்த வாய்க்கால்களில் கும்பகோணம் நகராட்சி கழிவுகள், ஹோட்டல் கழிவுகள், சாக்கடைக் கழிவுகள் போன்றவை கலந்து வாய்க்கால்களை மாசடையச் செய்து விடுகிறது.
 • இப்படி மாவட்டந்தோறும் ஆங்காங்கு உள்ள ஆறுகளும், வாய்க்கால்களும், குளங்களும் நாளுக்குநாள் மாசடைந்துகொண்டே இருக்கின்றன.
 • காவிரி ஆறு திருப்பூா், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குடிநீா் ஆதாரமாக அமைந்திருக்கிறது. இவை தவிர, கடலில் கலக்கும் பூம்புகார் வரை குடிநீராகவும், பாசனத் தண்ணீராகவும் பல மாவட்ட மக்களுக்கும் நீராதாரமாக விளங்குகிறது காவிரி.
 • அது மட்டுமல்லாமல், மின்சார உற்பத்திக்கும், மீனவா்களின் வாழ்வாதாரத்திற்கும் பெரும் துணையாக நிற்கிறது காவிரி.
 • இப்படிப்பட்ட பெருமை மிக்க காவிரி ஆறு, நீா் இல்லாத காலத்தில், சாக்கடைகளும், ஆலைக்கழிவுகளும், சாயப்பட்டறைக் கழிவுகளும் கலந்து ஓடுகின்ற ஆறாக மாறி விடுகிறது.
 • ரசாயனக் கழிவுகளால் காவிரி தன்னுடைய அடையாளத்தை இழந்து, முகவரியைத் தொலைத்து வருகிறது.
 • இதனால் மக்களின் நீராதாரம் பொய்த்துப்போய்விடும் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்? காவிரியில் இருந்து வரும் தண்ணீருடன் கலந்து விடும் இந்தக் கழிவுகள் வண்டிபாளையம் கட்டளை கதவணைப் பகுதியில் தேங்கிக் கிடக்கின்றன. தூய்மையான தண்ணீரைப் பார்த்து பல ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது.
 • அதற்காக தொழிற்சாலைகளை மூடிவிட வேண்டும் என்று கூறவில்லை. அவற்றுக்கான கழிவுகளைப் போக்குவதற்கு என்ன வழி என்பதைக் கண்டறிய வேண்டும்.
 • கழிவுகள் ஆற்றில் கலக்காமலிருக்க விதிமுறைகளை உருவாக்கி, அவற்றைத் தொழிற்சாலைகள் பின்பற்றச் செய்ய வேண்டும். அரசும் அதனைக் கண்காணிக்க வேண்டும்.
 • ஆற்று நீரை விவசாயத்திற்காகப் பயன்படுத்தும் விவசாயிகள், குடிநீருக்காகப் பயன்படுத்தும் பொதுமக்கள் ஆகியோருக்கு மாசுபடாத நீா் கிடைப்பதை அரசு உறுதிப் படுத்த வேண்டும்.
 • அது மாத்திரமல்ல, நமது வருங்கால சந்ததியினருக்கும் நாம் எப்படிப்பட்ட ஆறுகளை விட்டுச் செல்லப் போகிறோம் என்பதையும் சிந்திக்க வேண்டும்.
 • ரசாயனத் தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், அணு உலைக் கழிவுகள், எரிப்பான்கள், பி.வி.சி தொழிற்சாலைக் கழிவுகள், கார் உற்பத்தி தொழிற்சாலைக் கழிவுகள், நெகிழிக் கழிவுகள், கால்நடைப் பண்ணைகளில் இருந்து உருவாகும் கழிவுகள் இத்தகைய மாசுகளில் இருந்து நதிநீரைக் காக்க வேண்டிய அவசிய அவசியமாகும்.
 • தண்ணீரும் காற்றும் சுத்தமாக இருப்பதற்கான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியதும், அவற்றைக் கண்டிப்புடன் செயல்படுத்துவதும் வருங்காலத் தலைமுறையினருக்கு நாம் செய்ய வேண்டிய தலையாய கடமைகளாகும்.

நன்றி: தினமணி  (26 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories