TNPSC Thervupettagam

காலத்தின் கட்டாயம்

March 16 , 2023 11 days 52 0
 • அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனேசி குஜராத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு பெற்றார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அவரும் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.
 • இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் வலிமையான உறவு இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம். "க்வாட்' அமைப்பைச் சேர்ந்த இந்த இரு நாடுகளின் கூட்டுறவும் நெருக்கமும் சீனாவின் ஆதிக்க, விரிவாக்க வெளிநாட்டுக் கொள்கையை எதிர்கொள்ள அவசியமாகிறது.
 • ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனேசி இந்த ஆண்டின் முதலாவது இந்திய-ஆஸ்திரேலிய உயர்நிலை பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். புதுப்பிக்கப்படும் எரிசக்தி (சூரிய ஒளி, ஹைட்ரஜன்), பாதுகாப்பு ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டுறவு மேலும் வலுப்பட்டது. இந்த ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் கையொப்பமாகும் என்பதையும் இருதரப்பும் உறுதிப்படுத்தின.
 • ஏற்கெனவே கடந்த ஆண்டு இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகியிருக்கிறது. அதன் அடுத்த கட்டம்தான் ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம். ஆயுத தளவாட உற்பத்தியில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், இரு நாடுகளின் பாதுகாப்புப் படைகள் மத்தியில் கலந்தாலோசனையும், கருத்துப் பரிமாற்றமும் அதிகரித்திருக்கிறது. இரு நாடுகளின் எல்லைகளிலிருந்து விமானங்கள் மூலம் இந்திய-பசிபிக் கடற்பகுதியின் கண்காணிப்பை அதிகரிப்பது குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
 • பல்வேறு சர்வதேச பிரச்னைகளால் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா இணைந்த "க்வாட்' அமைப்பின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா இணைந்து நடத்தும் மலபார் கடற்படைப் பயிற்சியை இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவும் இணைந்து நடத்தும் என்கிற பிரதமர் ஆல்பனேசின் அறிவிப்பு அந்த நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் நட்புறவின் வெளிப்பாடு எனலாம்.
 • சீனாவுடனான ஆஸ்திரேலியாவின் வர்த்தகமும், ராஜாங்க உறவும் கடந்த சில ஆண்டுகளாக சுமுகமாக இல்லை. அதனால் இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொள்ளும் நெருக்கமான பொருளாதார உறவு இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இப்போதைய விநியோகச் சங்கிலிக்கு மாற்றாக புதியதொரு விநியோகச் சங்கிலியை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதால், சீனாவை அகற்றி நிறுத்தி புதிய பாதையை வகுக்க ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் முனைப்புக் காட்டுகின்றன.
 • ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனேசின் சமீபத்திய இந்திய அரசுமுறைப் பயணத்தில் மிக முக்கியமான ஒப்பந்தங்கள் சில போதுமான ஊடக வெளிச்சம் பெறவில்லை. அதில் குறிப்பிடத்தக்கது, கல்வித் துறையில் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தம். அதை அவரது நான்கு நாள் இந்திய விஜயத்தின் முதல் நாளான மார்ச் 8-ஆம் தேதி ஆஸ்திரேலிய பிரதமர் வெளியிட்டார்.
 • ஆஸ்திரேலியாவில் கல்வித் தகுதிபெற்ற இந்திய மாணவர்களின் பட்டங்கள், நாடு திரும்பினால் இந்தியாவில் அங்கீகரிக்கப்படும் என்பதுதான் அந்த ஒப்பந்தம். அதேபோல இந்தியாவில் பெறப்பட்ட கல்வித் தகுதிகள் ஆஸ்திரேலியாவில் அங்கீகாரம் பெறுவதையும் அந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்துகிறது.
 • கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 7.7 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் படிக்க போனார்கள். கனடா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள்தான் பெரும்பாலோர் பட்டப் படிப்புக்காக நாடும் நாடுகள். வெளிநாடுகளில் படிக்கச் செல்வோரின் எண்ணிக்கையில் 60% ஆக 2018-இல் இருந்தது, கடந்த ஆண்டு 75% ஆக அதிகரித்திருக்கிறது. பல லட்சம் ரூபாய் கல்விக் கட்டணத்துக்கும், பயணத்துக்கும் செலவழித்து அந்த நாடுகளில் பட்டம் பெற்று தாயகம் திரும்பினால் அந்த கல்வித் தகுதிகள் வேலைவாய்ப்புக்கு ஏற்புடையதாக இல்லை. வெளிநாட்டுப் பட்டங்களை பல நிறுவனங்கள் அங்கீகரிப்பதில்லை.
 • இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஏற்படுத்தியிருக்கும் புதிய வழிமுறை இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் மிக முக்கியமான முடிவு. அதுமட்டுமல்ல, ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான டீக்கின் பல்கலைக்கழகம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் தனது கிளையை நிறுவும் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகமாக இருக்கப் போகிறது. இதனால் பெரும் பணச் செலவில் ஆஸ்திரேலியா சென்று படிக்க முடியாத மாணவர்கள் பயன்பெறுவர்.
 • இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு ஏற்கெனவே வலிமையடைந்து வரும் நிலையில் புதிய கூட்டுறவு ஒப்பந்தமும், கல்வி, எரிசக்தி, பாதுகாப்பு, தளவாட உற்பத்தி ஆகியவற்றில் கையொப்பமாகியிருக்கும் புதிய ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கும் பயனளிப்பவை என்பது மட்டுமல்ல, இன்றைய தேவையும்கூட. இந்திய மாணவர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இரு நாடுகளுக்கும் இடையே பயணிக்கவும், கல்வி கற்கவும், பணிபுரியவும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் வாய்ப்பு. கருத்துப் பரிமாற்றத்துக்கு மட்டுமல்லாமல் நெருங்கிய நட்புறவுக்கும் வழிகோலும்.
 • ஆஸ்திரேலியாவில் மே மாதம் நடக்க இருக்கும் "க்வாட்' அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடியை நேரில் வந்து அழைத்திருப்பது இரு நாட்டு உறவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் தரும் முக்கியத்துவத்தின் வெளிப்பாடு. காமன்வெல்த் அமைப்பிலும், "க்வாட்' அமைப்பிலும் இடம்பெறும் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்த முற்பட்டிருப்பது காலத்தின் கட்டாயம்.

நன்றி: தினமணி (16 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories