TNPSC Thervupettagam

குறைந்து வருகிறதா தனிமனித ஒழுக்கம்?

April 11 , 2019 1889 days 2378 0
 • ஆண்களிடம், பெண்களை துன்புறுத்தக் கூடாது; தெய்வமாக வணங்க வேண்டும் என்று சொன்னால், ஏற் றுக்கொள்வார்களா? உள்ளுக்குள் அழுக்கை நிரப்பி சமூகத்தில் சான்றோனாய் நடமாடுபவர்கள், அருவெறுக்கத்தக்க செயல்களில்  ஈடுபட்டு சமூகத்தையும் அழுக்காக்குகிறார்கள். தனிமனித ஒழுக்க மீறலின் உச்சகட்டம் இது!
நடந்த சம்பவங்கள்
 • 2012- டிசம்பர்16 உலகை உலுக்கிய மருத்துவ மாணவி நிர்பயா சம்பவம்.  சென்னை  ஹாசினி, காஷ்மீர் ஆசிஃபா, கோவை சிறுமி... இன்னும் கணக்கிலடங்காமல்  நீளும் பெண் குழந்தைகள் பட்டியல் ஒருபுறம்...  மோகம் கொள்வதாய் நடித்து பெண்களின் உடலை கூறு போட்டு  உடலையும் பொருளையும் திருடிய பொள்ளாச்சி அவலங்கள் வெளிச்சத்துக்கு வந்து மறைவதற்குள் மற்றொரு பெண்...
 • என்ன நடக்கிறது இந்தச் சமூகத்தில்? இதைக் கண்டு உலையில் இட்ட அரிசியாய் கொதிக்கிறோம். அனலில் விழுந்த புழுவெனக் கதறுகிறோம். பேசுகிறோம்.. எழுதுறோம்... பொங்கியெழுகிறோம். அப்படியே அடங்கி விடுகிறோம். அடுத்த நிகழ்வு நடக்கும் போது மீண்டும் பொங்குகிறோம்… நம்மால் முடிந்தது அவ்வளவுதானா?
 • உள்ளங்கையில் உலகம். பெருமையாகத்தான் இருக்கிறது. பெரும்பாலான ஒழுக்க மீறல்களும் இதில்தான் அடங்கியிருக்கிறது. கல்வியும் சுதந்திரமும்  பெண்களுக்குத் திகட்டத் திகட்ட கிடைத்துவிட்டது என்று சொல்லும்  சமூகம்,  ஈடாக  பெண்களது உடலை பல நிலைகளிலும் கூறு போட்டு ஒழுக்க மீறலை தெளிவாக செய்துகொண்டிருக்கிறது.
 • ஆண்கள் மத்தியில் பெண்கள் அடக்கி ஆளப்படுகிறார்கள். ’ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்பது பெண்களுக்கு மட்டும் என்றே அப்போது போலவே இப்போதைய சமூகமும் வலியுறுத்துகிறது. கற்பை இழந்த பெண்கள் நடைப் பிணங்கள் என்னும் சமூகம் அதை சூறையாடிய ஆண்கள் பிணந்தின்னும்  கழுகுகளாய் ஒதுக்கி வைக்க வேண்டியவர்கள் என்பதை வலியுறுத்துவதே இல்லை.
 • உலகில் 7 நிமிடங்களுக்கு ஒரு பெண், பாலியல் வன்முறை கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறாள் என்று அதிர்ச்சி தருகிறது ஆய்வு ஒன்று. 2012 நிர்பயா கொடுமைக்குப் பிறகு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. குற்றங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுக்குள் பாலியல் புகார்கள் 45 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.  பெண் என்னும் பிறப்பை உணருவதற்குள் பெண் குழந்தைகள் பாலியல் ரீதியிலான தொல்லைகளை அனுபவிக்கும் நிலைமைக்கு தனி மனித ஒழுக்க மீறலையே முதன்மைக் காரணமாக சொல்லலாம்.
ஒழுக்கம் என்பது:
 • அன்பு, பொறுமை, பக்குவம், கவனம், நிதானம், விவேகம், நேர்மை இவற்றின் மொத்த வடிவம்தான் ஒழுக்கம். அன்று கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இவையெல்லாம் இயல்பாகவே கிடைத்தன. இருந்தன. குட்டு வெளிப்படும் முன்பு ’திருட்டு முழி முழிக்கிறியே’ என்று சிபிஐ  கணக்காக கண்டுபிடித்து குடும்பத் தில் இருப்பவர்களைக் கண்டிக்கும் லகான்கள் பெரியவர்களிடம் இருந்தது.
 • தவறைக் கண்டித்து ஆலோசனை கூறி கண்காணித்தவர்கள், தடம் மாறும் வயது என்று பதின்ம வயது பிள்ளைகளின் செயல்பாடுகளையும் கவனிக்கத் தவறவில்லை. குடும்பத்திலிருப்பவர்களின் நட்பை பலப்படுத்துவதில் கூட மூத்தோர்களது தலையீடுகள் பாலமென இருந்தது.  அதட்டி பேசாமல் அன்பாலேயே கண்டிப்பு காட்டியதால் பிள்ளைகள் ஒழுக்கத்தோடு கண்ணியமாக வளர்ந்தார்கள்.
கல்வி:
 • 25 வருடங்களுக்கு முன்பு பள்ளியிலும் ஒழுக்கத்தோடு தொடர்புடைய பாடங்களே பயிற்றுவிக்கப்பட்டன. வாரம் இருமுறை வாழ்க்கைக் கல்வி, நீதி போதனை வகுப்புகள் இருந்தன. சாரணர் இயக்கத்தின் மூலம் மாணாக்கர்கள் இருபாலரும் சகோதரத்துவத்துடன் பழகவும் சமூகத்தில் செயல்படவும் பழக்கினார்கள்.  கல்விப் பாடங்களை வாழ்க்கைப் பாடத்தோடு தொடர்புபடுத்தி  செயல்முறையில் போதித்தார்கள். மதிப்பெண்ணுக்கு மட்டுமே கல்வி என்னும் நிலை அப்போது இல்லை என்பதால் மாணாக்கர்கள் தனி மனித ஒழுக்கத்தோடு  வீட்டிலும், சமூகத்திலுமாக  சிறப்பாகவே வளர்ந்தார்கள்.
பிளவுப்பட்ட தனிக்குடும்பம்:
 • இன்று பொருளாதாரம், பற்றாக்குறை, பணிச்சுமையில் திணறும் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளைக் கவனிக்க நேரமின்றி சுதந்திரமாகவும் விடுகிறார்கள்.. குழந்தைகள் தவறு செய்தாலும் கண்டிப்பு காட்டாமல், வளர்ந்தால் சரியாகிவிடும், போகப்போக சரியாகிரும் என்று தனக்குள் சமாதானம் செய்து கொள்கிறார்கள். விளைவு... பதின்ம வயதில் பெற்றோர்கள் தவறுகளைக் கண்டிப்புடன் சுட்டிக் காட்டும்போது எனக்கு எல்லாம் தெரியும் என்று நிதானமிழந்து, பெற்றோர்களை எதிரிகளாகவே பாவிக்கத் தொடங்குகிறார்கள்.  கேட்டதெல்லாம் கிடைத்து  வளரும் இத்தகைய பிள்ளைகளுக்கு பதின்ம வயதிலேயே பாலியல் தேடுதல் வேட்கையை அதிகரிக்கச் செய்து வழி காட்டவும் தொடங்கிவிட்டது, தொழில்நுட்பம்..
 • சமூகத்தில் நடக்கும் அவலங்களைச் சுட்டிகாட்டுகிறேன் என்னும் பெயரில் வரும் திரைப்படங்கள் பெரும்பாலும் ஒழுக்க மீறலை தவறில்லை என்பதாகவே போதிக்கின்றன. ஆன்ட்ராய்டு ஃபோனும்,  இணைய தளமும் தன் பங்குக்கு பாலியல் வேட்கையைத் தூண்டும் கருவியாக மாறிவிட்டதை, செய்வதறி யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஒழுக்க மீறலின் உச்சகட்டம்:
 • ஒழுக்க மீறலுக்கு ஹார்மோன் சுரப்பிகளும் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பதின்ம வயது குழந்தைகளை ஹார்மோன்தான் வழிநடத்துகிறது.   எதிர்பாலினர் மீது கவர்ச்சியான ஈர்ப்பு இயல்பாக ஏற்படத்தொடங்கும் வயது இது.  குழந்தையாகவும் இல்லாமல் பெரியவர்களாகவும் இல்லாமல் தவிக்கும் அவர்களை பெற்றோர்கள் நண்பர்களாக நடத்தினால் மட்டுமே  எச்சரிக்கையோடு வயதைக் கடப்பார்கள். பெற்றோர்களின் அன்பு உரிய நேரத்தில் குறையும் போது ஈர்ப்பை எதிர்கொள்ளத் தெரியாமல்  முறைதவறிய சகவாசங்கள் அறிமுகமாகின்றன.
 • பெண்குழந்தைகளுக்கு உண்டாகும் ஈஸ்ட்ரோஜன்,  பிரஜெஸ்ட்ரோஜன், ஆக்சிடோஸின் ஹார்மோன்களின் சுரப்பை கவனமாகக் கடந்தால் வருங்காலத்தில் பொறுப்புள்ளவர்களாகவும், எதிலும் கூர்மையான அணுகுமுறையையும் பெற்று விடுகிறார்கள் என்று சொல்கிறார்கள் உளவியலாளர்கள். ஆனால்  தொடுதலின் நோக்கத்தையும் காமப்பார்வையையும் இயல்பாகவே புரிந்து கொள்ளும் அளவுக்கு இயற்கையிலேயே கூர்மை பெற்ற பெண் பிள்ளைகளை அவ்வப்போது பட்டை தீட்டும் பொறுப்பு அம்மாக்களுக்கு உண்டு. இத்தகைய கவனிப்பும் அன்பும் கிடைக்காத பெண் பிள்ளைகள், வெளுத்ததெல்லாம் பால் என்று  அன்புக்கு போலி சாயம் பூசிய ஆண்களிடம் ஏமாறுவதுதான் வேதனையளிக்கிறது. வெளியில் பெறும் அதீத அன்புக்காக ஒழுக்க மீறல்கள் தவறில்லை எனும் முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.
 • வயதுக்கு வந்த ஆண் மகன்களுக்கு டெஸ்டோஸ்டிரான்   ஹார்மோன்  பதினெட்டு மடங்கு அதிகமாகச் சுரக்கிறது என்று சொல்கிறது ஆய்வு. மேலும் இந்த நேரத்தில் அவர்களைக் கவனமாக கையாளாவிட்டால் போதைக்கு அடிமையாதல், திருடுதல், பாலியல் உணர்ச்சியை பிறருக்குத் தூண்டுதல், அதிகப்படியான வன்மத்தில் ஈடுபடுதல் என எல்லாவற்றிலும் ஈர்ப்பு ஏற்படுவதோடு  தைரியமாக ஈடுபடவும் வைக்கிறது என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள்.
 • இந்த அதிகப்படியான சுரப்பி எத்தகைய ரிஸ்க் எடுத்தாலும் பரவாயில்லை என்ன நடக்கிறது என்று பார்த்துவிடலாம் என்னும் தைரியத்தை உண்டாக்கி பெற்றோர்களிடம் அலட்சியமாக நடந்துகொள்ளும் மனப்போக்கைத் தருகிறது என்கிறார்கள் உளவியல் மருத்துவர்கள். இப்படியான பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கிக்கொடுக்க பெற்றவர்கள் மெனக்கெடும் போது... உடல் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள உடலின் பாலியல் தூண்டுதலை பூர்த்தி செய்ய அருவெறுக்கத்தக்க செயலில் கேவலமான கொடூரமான செயலில் துணிந்து ஈடுபடுகிறார்கள்.
என்ன செய்யலாம்:
 • ஹார்மோன் படுத்தும் பாட்டால் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வெளியில் மூர்க்கத்தனமாக பிடிவாதமாக தன்னை காட்டிகொண்டாலும் உள்ளுக் குள்  தம்மை புரிந்து அன்பு காட்டும் குடும்பத்துக்குள் இணையவே பதின்ம வயது பிள்ளைகள் விரும்புவார்கள் என்றும் வழிகாட்டுகிறார்கள் உளவியல் நிபுணர் கள்.  அன்றாடம் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசலாம். அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்கலாம்.  பிரச்சினைக்குத் தீர்வு சொல்லும் இடத்தில் நீங்கள் இருந்தால் ஒழுக்கம் மீறுவதற்கு அங்கு வாய்ப்புமில்லை.
 • தனி மனித ஒழுக்கம் மிக உயர்ந்த பொக்கிஷம் என்பதை  இருபாலரும் உணர்ந்துகொள்ள பதின்ம வயதுவரை காத்திருக்கத் தேவையில்லை.. சிறுவயதிலிருந்தே அனைத்திலும்  ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க சொல்லிக்கொடுங்கள்.
 • ஒழுக்கமே உயிரை விட மேலானது என்பதை தாரகமந்திரமாகச் சொல்லிக்கொடுங்கள். ஒரு தலைமுறையே சீராகும். சிறப்பாகும். செம்மையாகும்!

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories