TNPSC Thervupettagam

கோல்நோக்கி வாழும் குடி

May 25 , 2023 362 days 320 0
 • இந்திய நாடு பாரம்பரிய வேளாண்மை நாடு. விவசாயிகள் தங்களுக்காக மட்டும் உணவுப்பொருளை உற்பத்தி செய்வதில்லை. அனைத்து மக்களுக்காகவும்தான் உற்பத்தி செய்கிறார்கள். தேசம் தன்னிறைவு அடைந்த நிலையில் வெளிநாடுகளுக்கும் உணவுப்பொருள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், உணவுப்பொருள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தன்னிறைவு அடைந்துள்ளார்களா என்றால் "இல்லை' என்பதே வருத்தமளிக்கும் உண்மையாகும்.
 • அரசாங்கம் அவர்களுடைய துயரைக் களைவதற்கு பதிலாக அதிகரித்துக் கொண்டே போகிறது. விவசாயம் என்பது பழைய தலைமுறையினரின் தொழிலாகவே இப்போதும் இருந்து வருகிறது. இளைய தலைமுறையினர் படித்து முடித்து வேலைக்காக அலைகிறார்களே தவிர, விவசாயத்தில் இறங்குவதற்கு தயாராக இல்லை.
 • நமது கல்வி முறை, கிராமங்களையும், விவசாயத்தையும் நேசிப்பதற்குக் கற்றுக் கொடுக்கவில்லை. பள்ளியிலேயே மருத்துவராக, பொறியாளராக வேண்டுமென்று கனவு கண்டு கொண்டிருக்கும் மாணவர்கள் நகரங்களை நோக்கி ஓடவே நினைக்கின்றனர். அந்தக் கனவுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணிக்கவும் தயாராக உள்ளனர்.
 • உழவுக்கும் தொழிலுக்கும்
 • வந்தனை செய்வோம் - வீணில்
 • உண்டுகளித் திருப்போரை
 • நிந்தனை செய்வோம்
 • என்று பாடினார் மகாகவி பாரதியார். அவர் விவசாயத்தை முன்னிலைப்படுத்தி, தொழிலை இரண்டாவதாக வைத்தார்.
 • உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
 • தொழுதுண்டு பின்செல் பவர்
 • என்றார் வான்புகழ் வள்ளுவர்.
 • கிராமங்கள் அழிந்தால் இந்தியாவும் அழிந்து விடும். இந்தியா அதன் பிறகு இந்தியாவாகவே இருக்காது. "இனி சுரண்டுவதில்லை என்ற நிலை ஏற்பட்டால்தான் கிராமங்கள் புத்துயிர் பெறுவது சாத்தியமாகும்' என்று அண்ணல் காந்தியடிகள் கூறியதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
 • ஆனால், மக்கள் நல அரசுகள் விவசாயத்தைப் புறக்கணித்து விட்டு, தொழிற்சாலைகளைக் கொண்டு வந்து நாட்டில் நிறுவவே துடிக்கின்றன. இதில் அந்த அரசு, இந்த அரசு என்ற வேறுபாடு இல்லை. எல்லா அரசுகளும் இந்த மனநிலையில்தான் இருக்கின்றன.
 • காலங்காலமாக பாடுபட்டுப் பராமரித்து வந்த விவசாய நிலங்களையும், நீர்நிலைகளையும் எடுத்து அந்நிய நாட்டவர்க்குக் கொடுப்பதையே கொள்கையாக கொண்டிருக்கின்றனர் அரசியல்வாதிகள். நம்நாட்டு செல்வங்கள் எல்லாம் வெளிநாட்டுக்குப் போய்க் கொண்டிருப்பதைக் கண்டுகொள்ளாமல், அந்நிய நாட்டு மூலதனத்துக்காக அவர்கள் அலைவதுதான் வேடிக்கை.
 • தொழிற்சாலைகளால் பல கோடி அந்நிய மூலதனம் வருகிறது. வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இது அரசின் சாதனை என்று தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளுகின்றனர். இதற்காகப் புதிய புதிய சட்டங்கள் அவசர கதியில் கொண்டுவரப்படுகின்றன.
 • எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் மக்களுக்கான திட்டங்களை தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கின்றன. மேடை போட்டு வாக்குறுதிகளை வாரி வழங்குகின்றன. வாக்காளர்களைத் தேடி வந்து தேனொழுகப் பேசுகின்றன. வெற்றி பெற்றதும் அவை மக்களுக்கு எதிராகவும், வசதி படைத்தவர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றன.
 • மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருக்கின்றன. மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டங்களை எதிர்த்த மாநில அரசுகளும் அவசரமாகச் சட்டங்களை கொண்டு வருவதை எப்படி ஏற்றுக்கொள்வது?
 • அண்மையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளன்று 17 மசோதாக்கள் சட்டமாக நிறைவேற்றப்பட்டன. அவற்றில் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023 என்பது கடுமையான எதிர்க்க வேண்டிய ஒன்றாகும்.
 • இதே கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்ட தமிழகத்தின் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா அனைத்து இடதுசாரி இயக்கங்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. முதலில் இச்சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விரோதமான அச்சட்டம் ரத்து செய்யப்பட்டது.
 • உலகமெலாம் கொண்டாடப்படும் மே தினம் என்பது எட்டு மணி நேர வேலையை மையமாகக் கொண்டு போராடி பெற்ற உரிமை என்பது அரசுக்குத் தெரியாதா? தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023 என்பதும் மிகவும் ஆபத்தானது என்று கருதப்படுகிறது. நிலத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாக பல சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. அப்படியிருக்க இது ஏன் அவசரமாகத் திணிக்கப்படுகிறது?
 • நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (2013), தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (1978), தமிழ்நாடு தொழில்துறை நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம் (1997), தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் (2001) என ஏற்கெனவே பல சட்டங்கள் உள்ளன. இந்நிலையில் புதிதாக ஒரு சட்டம் எதற்காக என்னும் கேள்வி மக்கள் மனதில் எழுவது நியாயமே!
 • அரசு நிலம், பல்வேறு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுப்பணித் துறை, நீர்ப்பாசனத் துறை, கால்நடைத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, கல்வித் துறை, மருத்துவத் துறை என பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை தேவை என்று அரசு கருதினால் ஒருங்கிணைந்து கையகப்படுத்திக் கொள்வதற்கு இந்தச் சட்டம் வழிகோலுகிறது.
 • அதாவது 250 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தேவைப்படும் திட்டங்களுக்கு இச்சட்டம் பொருந்தும். ஒரு திட்டம், மாநில நலனுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அரசு கருதினால் அதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்துச் செயல்படுத்தலாம்.
 • நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு முன்பாக அறிவிப்பு வெளியிடுதல், கருத்துக் கேட்பு போன்ற நடைமுறைகள் உண்டு. ஆனால், வல்லுநர் குழுவின் முடிவே இறுதியானது. திட்டத்துக்கான 250 ஏக்கருக்கு உள்பட்ட பகுதியில் தனியாருக்கு நிலம் இருந்தால் அதுவும் இச்சட்டத்தின்படி கையகப்படுத்தப்படும்.
 • ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் "நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1894' உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்தது. விடுதலைக்குப் பிறகும் 2013-ஆம் ஆண்டு வரை இந்தச் சட்டம் பயன்பட்டு வந்தது. இது அரசுக்கு வானளாவிய அதிகாரம் அளித்திருந்தது. அரசுக்குத் தேவையென்று கருதினால் குறிப்பிட்ட நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொள்ளும். அதற்கான இழப்பீட்டுத் தொகையை அதிகாரிகளே நிர்ணயிப்பார்கள். அது ஏற்பில்லை என்றால் நீதிமன்றம்தான் போக வேண்டும்.
 • நில உரிமையாளர்களுக்குப் பாதுகாப்பு, நியாயமான இழப்பீடு இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த மைய சட்டம் இருந்தபோதும் மாநில அரசுகள் பல திட்டங்களுக்கு தங்கள் சட்டங்களையே பயன்படுத்துகின்றன.
 • இப்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் சிறப்புத் திட்டங்களுக்காக என்று குறிப்பிட்டாலும் எவையெல்லாம் சிறப்புத் திட்டம் என்று வரையறை செய்யப்படவில்லை. அதனால் மாநில அரசு நினைத்தால் எந்தவொரு திட்டத்தையும் சிறப்புத் திட்டம் என்று அறிவிக்க முடியும்.
 • இப்போது பரபரப்பாகப் பேசப்படும் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு 4,791. 29 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்தப் பரப்பளவுக்குள் 13 கிராமங்களும், 13 ஏரிகளும் உள்ளன. நீர்வரத்துக்கான கால்வாய்கள், ஆறுகள் உள்ளன. பல்வேறு துறைகளுக்குச் சொந்தமான நிலங்களும், விவசாயிகளுக்குச் சொந்தமான நன்செய் நிலங்களும் உள்ளன.
 • புதிய சட்டத்தின் மூலம், ஏற்கெனவே இருக்கும் தடைகளை இல்லாமல் செய்ய முடியும். இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 300=ஆவது நாளை எட்டியுள்ளது. அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழி என்ன?
 • அரசு இப்படியொரு நிலச்சட்டத்தைக் கொண்டு வரக் காரணம் இல்லாமல் இல்லை. மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் தங்கள் நிலங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடுகின்றனர். ஆட்சியாளர்களும் தங்கள் விருப்பம் போல செயல்படுவதற்குத் தடையாக உள்ளது.
 • நெய்வேலி நிலக்கரிச் சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பது, பரந்தூர் விமான நிலையம், சிப்காட் சிட்கோ மூலம் தொழிற்சாலைகளுக்கு நிலம் எடுப்பது இவற்றையெல்லாம் எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 • ஏற்கெனவே உள்ள சட்டங்களில் நில உரிமையாளர்களுக்குப் பாதுகாப்பு, கிராமசபைத் தீர்மானம், நீர்நிலைகளைப் பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல உரிமைகள் இருந்தன. இவை அனைத்தையும் புறந்தள்ளி அரசு நினைத்தபடி செயல்பட ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் வழங்குவதே இந்தப் புதிய நில ஒருங்கிணைப்புச் சட்டத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது.
 • இச்செயல்பாடு, தமிழக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளுக்கு எதிரானது என்று தமிழ்நாட்டு விவசாய சங்கங்கள் போராடி வருகின்றன. தேர்தல் முடிந்துவிடவில்லை. இனியும் தேர்தல்கள் வரும். போராடும் மக்களிடம்தான் அரசியல்வாதிகள் போயாக வேண்டும்.
 • மக்களாட்சி என்பது என்ன? ஆளும் கட்சிக்கு அளிக்கப்பட்டிருக்கும் அரியாசனம் நிரந்தரமானது அல்ல. ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே என்பதை அவர்கள் அடிக்கடி எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும். மக்களாட்சியில் மக்களுக்கு இருக்கிற உரிமையே அதுதான். உச்சி மரத்தில் ஏறிக்கொண்டு அடிமரத்தை வெட்டுவது ஆபத்தானது.

நன்றி: தினமணி (25 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories