TNPSC Thervupettagam

சர்க்கரை நோய்க்கு விலங்கு போடும் சூத்திரம்

November 30 , 2024 12 days 82 0

சர்க்கரை நோய்க்கு விலங்கு போடும் சூத்திரம்

  • திருடன் தனியாக வந்தால் அவனைப் பிடிப்பது சுலபம்; கும்பலாக வந்தால் சரணடைவது தான் வழி! அப்படித் தான் சர்க்கரை நோயும். சர்க்கரை நோய் மட்டுமே ஒருவருக்கு இருக்கிறது என்றால் மார டைப்பு, இதயச் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்குத் தாமதமாகும். அதேநேரம், ரத்தக் கொதிப்பு, கெட்ட கொலஸ்டிரால், புகைப் பழக்கம், முறையற்ற உணவுப்பழக்கம் போன்ற கூட்டாளி களும் சேர்ந்துகொண்டால் சீக்கிரத்திலேயே அவருடைய இதயம் பாதிக்கப்படும்.

சர்க்கரை நோய் விதி:

  • அறிவியல் பாடங்களில் ‘நியூட்டன் விதி’, ‘பாயில் விதி’ (Boyle’s law) என்றெல்லாம் படித்திருப்பீர்கள். இப்போது ‘சர்க்கரை நோய் விதி’ ஒன்றை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். சர்க்கரை நோய் கொண்டுவரும் ஆபத்துகளைத் தவிர்க்க வேண்டுமானால், இந்த ‘விதி’யை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, ‘ரத்தச் சர்க்கரையை எப்படிக் கட்டுப்படுத்துகிறோம் என்பது மட்டுமே முக்கியமல்ல; அட்டைபோல் ஒட்டிக் கொண்ட ‘கூட்டாளி’களையும் எப்படிச் சமாளிக்கிறோம் என்பதில் இருக்கிறது அதன் சூட்சுமம்’.

சர்க்கரை நோயின் சூத்திரம்:

  • ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த ‘5 எஸ்’கள் முக்கியம் என்று முன்பு பார்த்தோமல்லவா? அதுபோல், சர்க்கரை நோயாளிகளுக்கு ‘ஏபிசிடிஇ’ (ABCDE) என்று ஒரு 5 எழுத்துச் சூத்திரம் இருக்கிறது. அதைக் கடைப்பிடித்தால், சர்க்கரை நோய் மட்டுமல்ல, மாரடைப்பும் ஓடிப்போகும். அதைத் தெரிந்துகொள்வோமா?

சூத்திரத்தின் முதல் எழுத்து ‘ஏ’ (HbA1C):

  • ஒருவருடைய ரத்தச் சர்க்கரையின் மூன்று மாத சராசரி அளவுக்குப் பெயர் ‘ஹெச்பிஏஒன்சி’. இது ஏன் அவ்வளவு முக்கியம்? இதற்கு ஓர் உதாரணம் சொன்னால், எளிதில் புரியும்.
  • ரோகித் சர்மா கிரிக்கெட்டில் ‘டக் அவுட்’டும் ஆகியிருப்பார். இரட்டைச் சதமும் விளாசியிருப் பார். ஆனாலும், அவரின் சராசரி ரன் விகிதம்தான் அவருடைய ஒட்டுமொத்தச் செயல்பாட்டைத் தெரிவிக்கும். இதுபோல், சர்க்கரை நோயாளிக்கு அன்றாடம் எடுக்கப்படும் ரத்தச் சர்க்கரை அளவுகளைவிட, மூன்று மாத சராசரி சர்க்கரை அளவுதான் சர்க்கரைக் கட்டுப்பாட்டின் நிஜ நிலவரத்தைப் புலப்படுத்தும்.
  • காரணம், ரத்தச் சர்க்கரையைச் சாதாரணமாகச் சோதிக்கும்போது (Random Blood Sugar), அன்றைக்கு அல்லது முதல் நாள் இரவு என்ன சாப்பிடுகிறோமோ அதை வைத்துத்தான் ரத்தச் சர்க்கரை அளவு காண்பிக்கும். ஒருவர் சோதனை நாளில் மட்டும் சரியாகச் சாப்பிடுகிறார் என வைத்துக்கொள்வோம்.
  • அப்போது அவருக்கு ரத்தச் சர்க்கரை சரியாகத்தான் இருக்கும். இப்போதெல்லாம் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை செய்ய வருபவருக்கு அவர்களே காலை டிபன் கொடுத்துவிடு கிறார்கள். அது அளவுச் சாப்பாடு. ஆகவே, அன்றைக்கு அவருக்குச் சர்க்கரை அளவு சரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
  • ஆனால், அதற்கு முன்னால் பிரியாணி, பரோட்டா, பேக்கரி பண்டங்கள் என அவர் அள்ளி அள்ளிச் சாப்பிட்டிருப்பார். அப்போது அவருக்குச் சர்க்கரை உச்சம் ஏறி இருக்கும். அது அவருக்குத் தெரியாமல் போகும். இந்த நிலை நீடித்தால், உடலில் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்.
  • அதேநேரம், சர்க்கரை எப்போதும் சரியாக இருந்தால் இந்தப் பாதிப்புகள் ஏற்படாதல்லவா? ஆகவே, சர்க்கரை எப்போதும் சரியாக இருக்க வேண்டியது முக்கியம். அப்படிச் சரியாக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் ஒரு சிறப்புப் பரிசோதனைதான் ‘ஹெச்பிஏஒன்சி’ பரிசோதனை.

ரத்தச் சர்க்கரை - எது சரியான அளவு?

  • ‘ஹெச்பிஏஒன்சி’ அளவு 5.7% என இருக்க வேண்டும் என்று பொதுவாகச் சொல்வார்கள். இது 5.8 – 6.4% என இருந்தால், சர்க்கரை நோய் வரச் சாத்தியம் உண்டு (Pre-diabetes) என்றும் சொல்வார்கள். ஆனால், ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இப்படிச் சொல்வது பொருந்தாது.
  • 40 வயதுக்குக் கீழ் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு இது 6.5%க்குக் கீழும், 40 - 60 வயதுக்குள் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு இது 7% என்கிற அளவிலும், 60 – 70 வயதுக்குள் இருப்பவர்களுக்கு 7-5%, 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 8% எனும் அளவிலும் இருக்க வேண்டும். இப்படிரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்திக் கொண்டால், மாரடைப்பு பயத்திலிருந்து விலகிக் கொள்ளலாம்.

அடுத்த எழுத்து ‘பி’ (Blood Pressure):

  • ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்திய கையோடு, ரத்த அழுத்தம் 120/80 முதல் 135/85 வரை இருக்கும்படி பார்த்துக்கொண்டால், மாரடைப்புக்கான பாதையைப் பெரும்பாலும் அடைத்துவிட்டீர்கள் என்று பொருள்.

மூன்றாம் எழுத்து ‘சி’ (Cholesterol):

  • சர்க்கரை நோயோடு ஒட்டிக்கொள்ளும் மூன்றாவது கூட்டாளி கொலஸ்டிரால் என்று சொன் னோம். மொத்த கொலஸ்டிரால் 200 மி.கிராமுக்குக் குறைவாகவும், டிரை கிளிசரைட்ஸ் கொழுப்பு 150 மி.கிராமுக்குக் குறைவாகவும், கெட்ட கொலஸ்டிரால் 100 மி.கிராமுக்குக் குறைவாகவும், நல்ல கொலஸ்டிரால் ஆண்களுக்கு 40 மி.கிராமுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு 50 மி.கிராமுக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும்.
  • சர்க்கரை நோயும் இதயப் பாதிப்பும் சேர்ந்து இருப்பவர்களுக்கு கெட்ட கொலஸ்டிரால் 70 மி.கிராமுக்குக் குறைவாகவும், ஏற்கெனவே பைபாஸ் ஆபரேஷன், ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொண்டிருக்கும் நபர்களுக்கு 50 மி.கிராமுக்குக் குறைவாகவும் இருக்க வேண்டும். இப்படி இருந்தால், கொழுப்பு அடைத்து மாரடைப்பு வந்துவிடுமோ என்று பதற வேண்டியதில்லை.

நான்காம் எழுத்து ‘டி’ (Discipline):

  • அதாவது ஒழுங்குமுறை. உணவு, உடற்பயிற்சி, உறக்கம், மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஓர் ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்து, புகைப்பழக்கத்தையும் தவிர்த்துவிட்டால் மாரடைப்பிலிருந்து அதிக தொலைவு விலகி வந்துவிட்டீர்கள் என்று சந்தோஷப்படலாம்.

கடைசி எழுத்து ‘இ’ (Emotion):

  • மன அழுத்தம், மனக்கவலை போன்ற உள உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல், உளம் சார்ந்த நல வாழ்வுக்கு வழிதேடுங்கள். இப்படி, ‘ஏபிசிடிஇ’ சூத்திரத்தின்படி எல்லாமே உங்களுக்குச் சரியாக இருந்தால், மாரடைப்பு மட்டுமல்ல, சர்க்கரை நோயின் சிக்கல்கள் எல்லாவற்றில் இருந்தும் தப்பித்துவிடலாம்.

ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த...

  • உடல் எடையைச் சரியாகப் பேணுங்கள். அதற்குச் சரியான உணவுத் திட்டம் தேவை.
  • 9 அங்குல உணவுத் தட்டில் ஒரு பாதியில் கீரை, காய்கறி, பழங்கள் இருக்கட்டும்; மறு பாதியை இரண்டாகப் பிரித்து, ஒன்றில் மாவுச்சத்து உணவும் அடுத்ததில் புரதச்சத்து உணவும் இருக்கட்டும்.
  • கொழுப்பு குறைந்த பால், பால் பொருள்கள் சாப்பிடலாம்.
  • கைக்குத்தல் அரிசி, முழு கோதுமை, கம்பு, சோளம் - முக்கியமான மாவுச் சத்து உணவுப் பொருள்கள்.
  • உலர்ந்த பீன்ஸ், பருப்பு, பயறு, பட்டாணி, சுண்டல், கோழி இறைச்சி, முட்டை, மீன், காளான் - முக்கியப் புரத உணவுகள்.
  • இறைச்சி வேண்டாம்.
  • நிலக்கடலை, பொரிகடலை, பட்டாணிக்கடலை, முந்திரி, பாதாம், வால்நட் நல்லது. சாலட் சாப்பிடலாம். சூப், கிரீன் டீ அருந்தலாம்.
  • உப்பின் அளவு நாளொன்றுக்கு 4லிருந்து 5 கிராம் வரை. உப்பு தூவப்படும் உணவு வேண்டாம்.
  • பழச்சாறு வேண்டாம். முழுப்பழமாகச் சாப்பிடுங்கள். நார்ச்சத்து கிடைத்துவிடும்.
  • அதிக இனிப்புள்ள பண்டங்கள், பானங்கள், செயற்கைப் பானங்கள் வேண்டாம்.
  • துரித உணவு, பாக்கெட் உணவு, நொறுவைகள் வேண்டாம்.
  • பேக்கரி பண்டங்கள் வேண்டவே வேண்டாம். இவற்றைக் கொஞ்சமே சாப்பிட்டாலும் கலோரிகள் கூடிவிடும். மாரடைப்புக்குத் தூது செல்லும் ஊடுகொழுப்பும் (Trans fat) இவற்றில் அதிகம்.
  • ஹோட்டல் உணவுக்கு ‘டாட்டா’ காண்பியுங்கள்; வீட்டு உணவுக்கு வரவேற்பு கொடுங்கள்.
  • தினமும் 40 நிமிடம் விறுவிறுப்பான நடைபோடுங்கள்.அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி/ஜிம் வேண்டாம்.
  • மாத்திரைகளைச் சரியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
  • ‘ஹெச்பிஏஒன்சி’ பரிசோதனை மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும், கொலஸ்டிரால் சோதனை வருடத்துக்கு இரண்டு முறையும் தேவைப்படும்.
  • ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்தம் மாதாமாதம் அளக்கப்பட வேண்டும்.
  • வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories