TNPSC Thervupettagam

செந்தில் பாலாஜிக்குப் பிணை: விரைவாக முடியட்டும் வழக்கு

October 1 , 2024 14 days 51 0

செந்தில் பாலாஜிக்குப் பிணை: விரைவாக முடியட்டும் வழக்கு

  • அமலாக்கத் துறை தொடர்ந்த சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனைத் தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) வழக்கில், 15 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியிருக்கிறது. பிஎம்எல்ஏ வழக்காக இருந்தாலும், நீண்ட நாள்களாகச் சிறையில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர், பிணை என்கிற சட்ட நிவாரணத்தைப் பெற முடியும் என்பதை உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் மூலம் உறுதிசெய்திருக்கிறது. அதேவேளையில், பிணையில் வெளிவந்த மூன்றே நாள்களில் செந்தில் பாலாஜி மீண்டும் தமிழக அமைச்சராகியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
  • 2011 - 2015 காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியும், அவருக்கு நெருக்கமானவர்களும் வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பலரிடம் பண மோசடி செய்ததாக, சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் தொடர்ந்த வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளன. இவற்றின் அடிப்படையில் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை பிஎம்எல்ஏ வழக்கு பதிவுசெய்தது. 2023 ஜூன் 14இல் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
  • இந்த வழக்கில் பிணை கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றமும் சென்னை அமர்வு நீதிமன்றமும் தலா மூன்று முறை நிராகரித்திருந்தன. உச்ச நீதிமன்றத்தில் பிணை கோரி அவர் தாக்கல் செய்த மனுவின் மீதுதான், உச்ச நீதிமன்றம் அவருக்கு 15 மாதங்களுக்குப் பிறகு நிபந்தனைப் பிணை வழங்கியுள்ளது.
  • சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை வழக்குகளில் பிணை வழங்கக் கீழ் நீதிமன்றங்கள் தயக்கம் காட்டினாலும்கூட உச்ச நீதிமன்றம் இவ்விஷயத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. அதாவது, ‘பிணை என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு’ என்கிற சட்டப்பூர்வக் கொள்கைக்கு உச்ச நீதிமன்றம் வலுச்சேர்த்திருக்கிறது. இதன்மூலம் மற்ற வழக்குகளைப் போல பிஎம்எல்ஏ வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டோர் சட்டரீதியாக நிவாரணம் பெற முடியும் என்பது வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் அரசியல் ஆயுதங்களாக மத்தியப் புலனாய்வு அமைப்புகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் சூழலில், இந்தத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
  • என்றாலும், செந்தில் பாலாஜி மீது மத்தியக் குற்றப் பிரிவு தொடர்ந்த மூல வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அந்த வழக்குகளின் தீர்ப்பு வராமல் பிஎம்எல்ஏ வழக்கில் தீர்ப்புக் கூற முடியாது என்பதையும், இவற்றின் விசாரணை முடிய 3 - 4 ஆண்டுகள் ஆகும் என்பதையும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
  • அதுவரை குற்றம் சாட்டப்பட்டவரைச் சிறையில் வைத்திருக்க முடியாது என்பதால்தான் செந்தில் பாலாஜிக்குப் பிணை கிடைத்திருக்கிறது. எனவே, போக்குவரத்துத் துறையில் வேலைக்காகப் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், வேலை கிடைக்காமல் போனவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில், மூல வழக்குகளின் விசாரணை விரைவாகவும் அரசியல் தலையீடு இன்றியும் நடைபெற்று உண்மைகள் வெளிவர வேண்டும். பாதிக்கப்பட்டோரின் பக்கம் நிற்பது அரசின் தார்மிகக் கடமையும்கூட.
  • இந்த வழக்கிலிருந்து பிணையில் வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜி உடனடியாக அமைச்சராக்கப்பட்டுள்ளார். அவர் அமைச்சராவதற்குச் சட்ட ரீதியான தடை இல்லை என்றாலும், அமைச்சராக இருந்துகொண்டு ஒருவர் வழக்கை எதிர்கொள்வது என்பது சந்தேக நிழலோடு பார்க்க வழிவகுத்துவிடும். ஊழல் வழக்குகளில் கட்சிக்கேற்ப அரசு சமரசம் செய்துகொள்கிறது என்கிற தவறான சமிக்ஞையையும் மக்களுக்குக் கொடுத்துவிடும். திமுக அரசு இந்த விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories