TNPSC Thervupettagam

நெற்றி வியர்வை

November 20 , 2023 328 days 350 0
  • விலக்கப்பட்ட கனியைச் சாப்பிட்ட ஏவாளிடம், “நீ கர்ப்பவதியாய் இருக்கும்போது உன் வேதனையைப் பெருகப் பண்ணுவேன்என்றார் தேவன். அடுத்து ஆதாமைப் பார்த்து, “நீ பூமிக்குத் திரும்பு மட்டும் உன் முகத்தின் வியர்வையால் ஆகாரம் புசிப்பாய்என்றார். ஆக, பெண் பிரசவ வேதனையால் துடிப்பதும் நெற்றி வியர்வை நிலத்தில் விழ ஆண் கஷ்டப்படுவதுமான இரண்டுமே கடவுளின் சாபங்கள். அதாவது, உழைப்பு என்பது மனித குலத்துக்கு ஆண்டவன் அளித்த தண்டனை. உடல் வியர்வை பூமியில் விழுவதை உழைப்புஎன்று அழைப்பதைப் போலத்தான், பெண்ணின் பிரசவ வலியையும் ஆங்கிலத்தில் லேபர் பெயின்என்கிறார்கள்; பிரசவப் பகுதி லேபர் வார்டு’!

உழைப்பு யாருடையது

  • உழைப்பு உயர்வு தரும்என்பது நான் படித்த பள்ளியின் நோக்க வாக்கியம். அதை உருவேற்றி என்னைச் சமூகத்துக்குள் அனுப்பிவைத்தது அந்தப் பள்ளி. உழைப்பு மட்டுமே உயர்வு தரும் என்று பின்னாள்களில் புரிந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர், அச்சக முதலாளியான ஒரு நண்பரைப் பார்க்கப் போனேன். நான் முதுகலை படித்தபோது அவர் இளங்கலை படித்தார்; சைக்கிளில் வருவார். பிறகு தொழில் தொடங்கி உயர்ந்தோங்கினார். நான் சாயங்காலம் போனபோது, முதலாளி வெளியே போயிருக்கிறார் என்று அச்சகத் தொழிலாளர்கள் கூறினர்.
  • அடுத்த ஷிப்ட்வந்தவர்களும் அதையே எனக்குச் சொல்லிக் காத்திருக்க வைத்தனர். இரவு வரை நண்பர் வரவில்லை. மறுநாள் மாலை போய் இதேபோலத் தொழிலாளர்கள் உழைப்பதைப் பார்த்துக்கொண்டே காத்திருந்து, பின் நண்பரைப் பார்த்தேன். பல்லாண்டுகள் கழித்துப் பார்த்ததால் தன் முன்னேற்றத்தை அறை அறையாக அழைத்துப் போய்க் காண்பித்தார். ‘‘சைக்கிளில் வந்துகொண்டிருந்த என்னைக் காரில் அலுவலகம் வரவழைத்தது உழைப்புதான்என்றார். மற்றவர் உழைப்புஎன்று நான் அதைச் சரியாகப் புரிந்துகொண்டேன்.

ஓய்வின் அவசியம்

  • தூக்கம் என்பது சோம்பேறிகளின் பொழுதுபோக்குஎன்பார்கள்; மனநோய் மருத்துவர்களிடம் கேளுங்கள். தூக்கம் நல்ல மருந்துஎன்பார்கள். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மனிதன் தூங்க வேண்டும். தொடர்ந்து ஆறு அல்லது ஏழு நாள்கள் தூங்கவில்லை என்றால், மனிதன் மரணத்தைத் தழுவிவிடுவான். இது வள்ளலார் மட்டும் அறிந்த ரகசியம் இல்லை. மருத்துவமும் ஒப்புக்கொண்ட உண்மை. ஓய்வு என்பதும் மனிதனின் அவசிய வஸ்து; அதை அவ்வளவு எளிதில் மனிதன் கண்டறியவும் இல்லை; பழகிக்கொள்ளவும் இல்லை. பிறகுதான் ஞாயிற்றுக்கிழமையை ஓய்வு நாளாகக் கண்டடையும் பேறுபெற்றான். வாரத்தின் முதல் நாளே ஓய்வு நாளா என்று அதை உலகம் மாற்றப் பார்த்தது.

யாரோ உறுதியாக இருந்துவிட்டார்கள். பழைய ஏற்பாட்டில், கீழ்வரும் சம்பவம் குறிப்பிடப்படு கிறது

  • இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் ஓய்வு நாளில் விறகு பொறுக்கிக்கொண்டிருந்த ஒருவனைக் கண்டறிந்தார். அவனுக்குச் செய்ய வேண்டியது என்னவென்று தீர்க்கமான உத்தரவு இல்லை. அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலை செய்யப்பட வேண்டும் என்று மோசேயின் மூலம் கட்டளை கிடைத்தது. அவன் அவ்வாறு கொல்லப்பட்டான். ஓய்வை நிலைநிறுத்த உயிரைக் கொடுத்த தியாகியானான். ஓய்வு நாளில் உயிரைக் காப்பாற்றுவதுபோல முக்கிய வேலை இருந்தால் செய்யலாம் என்றும் ஆண்டவர் வேறு இடத்தில் கூறியிருக்கிறார்.
  • அது வேறு. உழைப்பை ஒழிப்போம் என்கிற அளவுக்கு வாதிடவில்லை. ‘In praise of idleness’ என்று பெர்ட்ரண்ட் ரஸ்ஸலைப் போலப் புகழ இப்போது சாத்தியமில்லை. கழுதைகூடத் தாண்டா உழைக்குதுஎன்ற பிரபலமான ரத்தக்கண்ணீர்வசனத்தை வாய்விட்டுச் சொல்ல முடியாது. இயந்திரங்கள் வந்தால் மனிதர்கள் வேலை செய்வது குறையும் என்று சொன்னீர்களே என்று கேட்க முடியும். ஆனால், பதில் கிடைக்காது. மக்கள்தொகை, மக்கள்தொகை என்று சப்தம் கேட்கும்.

மனிதனின் இயல்பு எது

  • எழுபது மணி நேரம் என்பது மனிதர்களைச் சக்கையாகப் பிழிவதற்குச் சமமானது என்பதுதான் மன்றாட்டு. உண்டியும் உறக்கமும் காமமும் ஓய்வும்தான் இயல்பு. வேலை செய்து முடித்த மனிதன் நிம்மதி அடைவது ஏன்? ‘வினைமுடித்த அன்ன இனிமைஎன்று சங்க இலக்கியம் பேசுவது எதை? வேலை முடிந்த தருணமல்ல, ஓய்வின் தொடக்கத் தருணம்தான் அது. கடும் உழைப்பின் ஆதரவாளர்கள், ‘ஜப்பானைப் பாருங்கள்என்பார்கள். அதே ஜப்பானிலிருந்து ஓர் அறிஞர், ‘ஒற்றை வைக்கோல் புரட்சிஎன்கிற நூலில் இப்படிச் சொல்கிறார்: விலங்குகள் வாழ்வதன் மூலம் உயிர் பிழைத்திருக்கின்றன. ஆனால், மனிதர்கள் பைத்தியமாக உழைக்கிறார்கள்.
  • வாழ வேண்டுமானால் உழைக்க வேண்டும் என்று வேறு நினைக்கிறார்கள். விலங்குகள் காலையிலும் மாலையிலும் வெளியே திரிந்து, ஏதாவது கிடைத்தால் சாப்பிடுகின்றன; மதியம் நன்றாகத் தூங்குகின்றன. அது அழகான வாழ்வு. அன்றாடத் தேவைக்கு மட்டும் உற்பத்தி செய்ய முடிந்த ஒரு எளிய வாழ்வு மனிதனுக்கும் சாத்தியமாகும். ஆனால், அதற்கு மனிதன் பேராசையை விட வேண்டும்.அரசியல் தலைவர் ஒருவர், தேர்தல் இல்லாத சமயம் ஒன்றில் பொதுக் கூட்டத்தில் உரையாற்ற வேண்டியிருந்தது. கூடியிருந்த மக்களைப் பார்த்து, “வாக்காளப் பெருமக்களே’’ என்றே பேசத் தொடங்கினார்.
  • அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஓட்டு போடும் இயந்திரம் என்கிற எண்ணம். போலவே முதலாளிகளுக்கு மனிதர்கள் வேலை செய்யும் கருவி. மனிதர்கள், மனிதர்கள். அவர்களுக்குக் காதல் வேண்டும்; அன்பு வேண்டும்; ஆறுதல் வேண்டும்; கோபம் வேண்டும். இவற்றையெல்லாம் செய்ய அவர்களுக்கு நேரம் வேண்டும். நீங்கள் அனுமதிக்கிற நேரத்தில் இதை எல்லாம் அவர்களால் செய்ய இயலாது; ஸ்விட்ச் போட்டால் விளக்கு எரிகிற மாதிரி. செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் அதிகமாகிவருவதை நீங்கள் கவனிக்கவே இல்லையா? மனமும் உடலும் தயாராக நேரம் வேண்டும்; இயல்பான நேரம் வேண்டும். இயல்பான சூழ்நிலை வேண்டும். அதனால் முதலாளிமார்களே! நியாயமார்களே! எங்களைக் கொஞ்சம் வாழவும் விடுங்களேன்!

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 11 - 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories