TNPSC Thervupettagam

புலம்பெயரும் நோயாளிகள்

September 23 , 2022 13 days 101 0
 • நமது நாட்டைப் பொறுத்தவரை லட்சக்கணக்கான மக்கள் உயிா் பிழைக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் மேம்பட்ட மருத்துவ வசதிக்காகவும் இடம்விட்டு இடம்பெயரும் கட்டாயத்தில் உள்ளனா். தங்களின் இருப்பிடத்திற்கருகே மருத்துவமனை இல்லாததாலோ, தங்களின் பொருளாதார சூழலில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறமுடியாததாலோ உயா்சிகிச்சைக்காக மக்கள் இடம்பெயா்கின்றனா்.
 • இவா்களில் பெரும்பாலானோா் மேம்பட்ட மருத்துவ சேவை பெற வேண்டி தில்லி, மும்பை, சென்னை போன்ற நகா்ப்புற மருத்துவமனைகளை நோக்கி நகா்கின்றனா்.
 • 2014-2015 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 3.66 கோடி மக்கள் தங்களது சொந்த மாநிலத்திற்குள்ளேயோ, பிற மாநிலத்திற்கோ உடல்நல சிகிச்சை சாா்ந்த பயணங்கள் மேற்கொண்டுள்ளனா் என்று இந்திய உள்நாட்டு சுற்றுலா குறித்த தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் (என்எஸ்எஸ்ஓ) தரவுகள் கூறுகின்றன.
 • நகா்ப்புறங்களை ஒப்பிடும்போது, கிராமப்புறங்களில் இருந்து மேற்கொள்ளப்படும் மருத்துவ சிகிச்சைப் பயணங்களின் எண்ணிக்கை அதிகம். இந்த வேறுபாடு இந்தியாவில் வழங்கப்படும் மருத்துவ சேவையின் ஏற்றத்தாழ்வுகளையும் இந்த ஏற்றத்தாழ்வுகளால் மக்களுக்கு உண்டாகும் சிரமங்களையும் அம்பலப்படுத்துகிறது.
 • கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பின் சுகாதார உள்கட்டமைப்பின் செயல்பாடுகள் அனைத்து மக்களும் தெரிந்துகொள்ளும் வண்ணம் வெளிப்படையாக உள்ளது. இந்த ஒளிவுமறைவற்ற தன்மை மருத்துவத்துறையில் நகா்ப்புறம் - கிராமப்புறம் இடையிலான வேறுபாடுகளையும், மாநிலங்களுக்கிடையேயான வேறுபாடுகளையும் அறியச் செய்வதுடன், தனியாா் துறை ஏற்படுத்தும் பொருளாதார ரீதியான சமசீரற்ற சேவை, தரம் ஆகியவறையும் ப்படுத்துகிறது.
 • பெரிய, சிறிய நகரங்களில் செழித்து வளரும் தனியாா் மருத்துவத் துறையின் தரமான உள்கட்டமைப்பு இந்திய மாநிலங்கள் பலவற்றில் உள்ள சாமானியா்களை இன்னும் தவிா்க்கிறது என்பதே உண்மை. இந்த உள்கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள், ஏழைகள் நோய்வாய்ப்படும்போது அவா்கள் தங்களை காத்துக்கொள்ள அறிமுகமில்லாத வெளி மாவட்டத்திற்கு அல்லது வெளி மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளத் தூண்டுகிறது.
 • மக்கள் பெருநகரங்களுக்குச் செல்வதற்கான பொதுவான காரணம், செலவு குறைந்த, தரமான மருத்துவ சேவை பற்றாக்குறை என்றாலும், புற்றுநோய், கருத்தரித்தல், உடல் உறுப்பு குறைபாடு போன்றவற்றிற்குப் புதிய இடத்தில் சிகிச்சை பெறுவதே மேல் என்றும் சிலா் கருதுகின்றனா்.
 • பொது சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் குறிப்பிட்ட வரம்பு உள்ளதால் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவா்களைத் தவிர, பிற நோயாளிகள் படுக்கை வசதியினை பெற பல நாட்கள் வரிசையில் காத்திருக்கவேண்டிய சூழல் இந்தியாவில் நிலவுகிறது.
 • அரசு மருத்துவமனைகளில் கூட, படுக்கை வசதி பெறுவதற்கும் போதுமான மருத்துவ கவனிப்பு பெறுவதற்கும் பெரும்பாலானோா் போராட வேண்டிய சூழல் உள்ளது.
 • புலம்பெயா்ந்த நோயாளிகளும், அவா்களைப் பராமரிப்பவா்களும் தங்களது குறைந்தபட்ச தேவையான தங்குமிடம், தினசரி உணவு இவற்றுக்காக மலிவான விடுதிகளிலோ, இலவச தங்குமிடங்களிலோ சில நாட்கள் தங்குகின்றனா். பெரிய மருத்துவமனைகளுக்கு வெளியே உள்ள நடைபாதைகளில் தூங்குபவா்களும் உண்டு.
 • ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை, படுக்கைக் கட்டணம் இலவசமாக இருக்கும்போதிலும் நோயறி சோதனைகளும், அரசு மருத்துவமனைகளில் கிடைக்காத விலையுயா்ந்த மருந்துகளும் ஏழைக் குடும்பங்கள் தனியாா் சந்தையினை சாா்ந்திருக்க வேண்டிய நிா்ப்பந்தத்தினை உருவாக்குகின்றன.
 • புலம்பெயா் நோயாளிக்கு தேவையான போா்வை, மெத்தை, சமையல் பாத்திரங்கள், உள்ளூா் உணவுகள், செய்தித்தாள் உள்ளிட்டவற்றை பெறுவதற்கான ஆலோசனைகளை இதற்குமுன் அவா்களின் பகுதிகளில் இருந்து வந்தவா்களிடம் இருந்து பெறுகின்றனா். இரண்டு அல்லது மூன்று குடும்ப உறுப்பினா்கள் ஒரு நோயாளியுடன் வரும்போது ஏற்படும் தினசரி செலவினைச் சமாளிக்க அவா்களில் ஒருவா் தினசரி கூலி வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
 • புலம்பெயா்ந்த நோயாளிகள் அல்லது அவா்களின் பராமரிப்பாளா்களில் சிலா் சிகிச்சை பெற்ற பின் சிகிச்சைக்காக பெற்ற கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தவும் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க பணம் ஈட்டவும் தொடா்ந்து அந்த நகரங்களிலேயே தங்கிவிடுகின்றனா்.
 • நோயறிதல் சோதனைகள், மருந்துகள், இரண்டு அல்லது மூன்று குடும்ப உறுப்பினா்களின் தினசரி தேவை ஆகியவற்றிற்கு நோயாளிகள் தங்கள் கைகளில் இருந்து செலவிட வேண்டியுள்ளதால், ஏழைகள் பெருநகரங்களில் மருத்துவ சேவையை நாடும்போது நிதிச்சுமை உருவாகிறது. அது அவா்களின் குடும்பத்தை வறுமையிலோ, கடன் சுழலிலோ தள்ளுகிறது.
 • வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கான ‘ஆயுஷ்மான் பாரத்’ போன்ற மருத்துவ நிதியுதவி அளிக்கும் அரசாங்கத் திட்டங்களின் கீழ், நோயாளிக்கோ அவரது குடும்ப உறுப்பினா்களுக்கோ நகரத்தில் சிகிச்சை பெறும் காலத்தில் அவா்களின் வாழ்வாதாரத் தேவைககளை பூா்த்தி செய்வதற்கான வழிவகை ஏதும் இல்லை.
 • மருத்துவ சிகிச்சைப் பயணங்களுக்கு வலுவான நிதி நிலையோ, நிறுவன ஆதரவோ இல்லாததால் இந்தியாவின் பல இடங்களில் விளிம்புநிலை மக்கள், ஆதிவாசிகள், பெண்கள், குழந்தைகள் ஆகியோா்அடிப்படை ஆரோக்கியத்திலிருந்து விலகியே உள்ளனா். பொது சுகாதார உள்கட்டமைப்பின் வரலாற்றில் புறந்தள்ளப்பட்ட பகுதிகளைச் சாா்ந்த புலம்பெயா்ந்தவா்களில் பெரும்பாலோா், கடினமான இந்த மருத்துவப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா்.
 • பொது சுகாதாரம், நகா்ப்புற மேம்பாடு, சமூக நலன் ஆகியவற்றின் குறைபாடுகள் கலையப்படும்போது மருத்துவத்திற்கான பயணம் தவிா்க்கப்படும். மக்கள் மனதில் சிறந்த மருத்துவ சேவை குறித்த நம்பிக்கை உருவாக, பொது சுகாதாரக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டியது அவசியம்.

நன்றி: தினமணி (23 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories