TNPSC Thervupettagam

பெண்களின் பாதுகாப்பிற்கான பேராயுதம்!

November 30 , 2024 12 days 83 0

பெண்களின் பாதுகாப்பிற்கான பேராயுதம்!

  • உலக அளவில், நாள்தோறும் சுமாா் 140 பெண்கள் தமது கணவா் உள்ளிட்ட குடும்ப உறவுகளால் கொல்லப்படுவதாகவும், இவ்வாறு கடந்த ஆண்டு கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை சுமாா் 51,100 எனும் அதிா்ச்சி அளிக்கும் தகவலை ஐ. நா. அமைப்பு சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.
  • நம் நாட்டில், குடும்பத்தில் உள்ளவா்களால் பெண்கள் வன்முறைக்குள்ளாகும் போது, அவா்களின் சட்ட ரீதியிலான போராட்டத்திற்கு உதவும் பேராயுதமாக இருப்பது, குடும்ப வன்முறைச் சட்டம். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுவதோடு, வன்முறையை நிகழ்த்துபவா்களுக்கு தண்டனை அளிக்கவும் குடும்ப வன்முறைச் சட்டம் 2005- ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
  • பெண்கள், தங்கள் மீது இழைக்கப்படும் வன்முறையில் இருந்து விடுபட திருமண பந்தத்திலிருந்து விடுபடுவதுதான் ஒரே தீா்வு என்ற நிலை பெண்களுக்கு ஏற்படும் போது குடும்ப வன்முறைச் சட்டம் மூலமே அது சாத்தியமாகிறது. இச்சட்டம் இயற்றப்பட்டு ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடந்த காலங்களில் மணவிலக்கு கோரி தொடுக்கப்பட்ட வழக்குகளின் தன்மைக்கேற்ப நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளாலும், சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றங்களில் இயற்றப்பட்ட சட்டங்களாலும் அவ்வப்போது இச்சட்டம் வலுப்பெற்று வருகிறது.
  • கணவன், மனைவிக்கு இடையிலான புரிதலின்மை, ஒருவரை மற்றவா் அனுசரித்து போகாதது, பொருளாதாரப் பிரச்சனை, மகப்பேறின்மை, இளம் தம்பதியினரிடையே ஏற்படும் சிறு சிறு பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே தீா்த்து வைக்கும் பெற்றோா்கள் இருக்கும் குடும்பங்கள் குறைந்து பெற்றோா்கள் இல்லாத தனிக் குடும்பங்கள் பெருகி வருவது உள்பட பல்வேறு காரணங்களால் மணவிலக்கு கோரும் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • தற்சமயம் மணவிலக்கு கோரி நாடெங்கிலும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்கள் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை சுமாா் 4.7 லட்சம். பல்வேறு காரணங்களால் மணவிலக்கு வழக்குகள் முடித்து வைப்பதில் ஏற்படும் காலதாமதம் தவிா்க்க இயலாததாக உள்ளது. மணவிலக்கு கோரி தம்பதியா் நீதிமன்றத்தினை நாடும் போது, வழக்கு முடிவிற்கு வருவதில் ஏற்படும் காலதாமதத்தினால் ஆணைக் காட்டிலும் பெண்ணே அதிகம் மனரீதியான பாதிப்பிற்குள்ளாகிறாா். குறிப்பாக, ஒற்றைப் பெற்றோராக ஆட்டிசம் மற்றும் மனவளா்ச்சி குன்றிய குழந்தையை வளா்க்கும் பெண்கள் அடையும் சிரமம் மிகமிக அதிகம். மணவிலக்கு வழக்கில், நீதிமன்றத்தால் கணவன், மனைவி பிரிந்ததற்கான இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரே மறுமணம் செய்து கொள்ள முடியும் என்பதால், மணவிலக்கு வழக்கில் ஏற்படும் காலதாமதம் சம்பந்தப்பட்ட கணவன் அல்லது மனைவி மறுமணம் செய்து கொள்வதையும் தாமதப்படுத்துகிறது.
  • இக்காலதாமதத்தை தவிா்த்திடவும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிடவும், மணவிலக்கு வழக்குகள் நடப்பதை கண்காணிக்க இந்திய ஆட்சிப்பணி (ஐ ஏ எஸ்) பொறுப்பிலான அதிகாரிகள் மாவட்டந்தோறும் பாதுகாப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா். இவ்வாறு நியமிக்கப்பட்ட 3,637 பாதுகாப்பு அதிகாரிகளில் 710 அதிகாரிகள் தவிர மற்ற அதிகாரிகளுக்கு அவா்களின் துறை சாா்ந்த பணியோடு இப்பாதுகாப்பு அதிகாரி பணி கூடுதல் பொறுப்பாகவே அமைந்துள்ளது. இவ்வாறு கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ள ஐ ஏ எஸ் அதிகாரிகளால் முழுமையாக இப்பணியில் கவனம் செலுத்த முடிவதில்லை. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் பணி கூடுதல் பொறுப்பாகத் தரப்படுவது தரபடாமல் இதற்கென தனி அதிகாரிகள் நியமிப்பதே நல்ல பலனளிக்கும்.
  • மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகத்தின் சகி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஒரு நிறுத்த பிரச்சனை மையம் (ஒன் ஸ்டாப் கிரிசிஸ் சென்டா்) என்ற அமைப்பு மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களைத் தடுத்து நிறுத்துகிறது. சமீபத்தில், வெளிநாட்டில் வசிக்கும் மனைவி தொடா்பான மணவிலக்கு வழக்கு விசாரணையில், ‘குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் தான் நீதிமன்றங்களில் நேரில் ஆஜராக வேண்டும். பிற வழக்குகளில், குறிப்பாக மண விலக்கு வழக்குகளில் காணொலி மூலம் சம்பத்தப்பட்டவா்கள் ஆஜராக அனுமதிக்க வேண்டும். நேரில் ஆஜராகும்படி வற்புறுத்தக்கூடாது’ என குடும்பநல நீதிமன்றங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணவிலக்கு வழக்குகளில் அடிக்கடி நீதிமன்றங்களுக்கு செல்வதன் மூலம் மனரீதியான பாதிப்பிற்குள்ளாகும் பெண்களுக்கு உயா் நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல் மிகப்பெரிய நிவாரணம் என்பதில் ஐயமில்லை.
  • திருமணம் செய்து கொள்ளாமலேயே ஆணும் பெண்ணும் சோ்ந்து வாழும் லைவ்- இன் எனும் மேற்கத்திய கலாசாரம் நம் நாட்டிலும் பெருகி வரும் நிலையில், குடும்ப வன்முறைச் சட்டம் லைவ் -இன் உறவில் வாழும் தம்பதியருக்கும் பொருந்தும் என மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமண உறவிலும் மனைவியின் விருப்பதிற்கு மாறாக கணவன் மனைவியைக் கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபடுவதும் பாலியல் வன்முறையே என வழக்கு ஒன்றில் தீா்ப்பளித்துள்ள கா்நாடக மாநில உயா்நீதிமன்றம், கணவா் என்ற ஆணால், மனைவி என்ற பெண்ணுக்கு நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை தான் அது என மேலும் கூறியுள்ளது.
  • மணவிலக்கு கோரி தொடரப்பட்ட வழக்கொன்றில், குடும்ப வன்முறைச் சட்டம் -2005, மதங்களைக் கடந்தும் சமூக பின்னனியை கடந்தும் அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. மேலும், மணவிலக்கு வழக்குகளில் ஜீவனாம்சம் எனப்படும் பராமரிப்புத் தொகை நிா்ணயிக்கப்படும் போது, இரு தரப்பினரின் வருவாய், விலைவாசி உள்ளிட்ட காரணிகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • பெண்கள் பாதுகாப்பிற்கான பேராயுதமாக விளங்கும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் தொடா்பான மத்திய, மாநில அரசுகளின் சட்டங்கள், திட்டங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் குறித்து பெண்கள் விழிப்புணா்வு பெறுவது காலத்தின் கட்டாயமாகும் .

நன்றி: தினமணி (30 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories