TNPSC Thervupettagam

போருக்கு எதிரான பெண் குரல்கள்

April 7 , 2024 238 days 285 0
  • மகாபாரதத்தில் உள்ள 18 பர்வங்களில் ‘ஸ்திரீ பர்வம்’, போரின் இன்னொரு பக்கத்தை விவரிக்கிறது. குருக் ஷேத்திரப் போரில் தங்கள் உறவுகளைப் பறிகொடுத்த பெண்களின் துயரம் ‘ஸ்திரீ பர்வ’த்தில் பதிவாகியுள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டுஎழுதப்பட்ட நாடகமான ‘ஸ்திரீ பர்வம்’, குடியாட்சி நிலைத்துவிட்ட இக்காலத்திலும் நடைபெறும் போர்களையும் அழிவுகளையும் பெண்களின் தரப்பில் நின்று கேள்விக்கு உள்படுத்துகிறது.
  • நவீன நாடகத் துறையில் நன்கு அறியப்பட்ட நெறியாளுநர் அ.மங்கை. அவரது கதையாக்கம், இயக்கத்தில் இந்நாடகம் நடத்தப்பட்டது. 2006இலிருந்து மங்கை ‘மரப்பாச்சி’ என்கிற தன்னார்வக் குழுவை நடத்திவருகிறார். சமூகத்தில் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் போன்றோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாடகங்கள் மூலம் இக்குழு வெளிப்படுத்தி வருகிறது. வேளாண் அறிவியல் அறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மனைவியும் கல்வியாளருமான மீனா சுவாமிநாதன், 2022இல் காலமானார். அவரது நினைவாகச் சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை அலுவலக அரங்கில் ‘ஸ்திரீ பர்வம்’ நடத்தப்பட்டது.
  • மகாபாரதப் போரில் பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகிய இரண்டு தரப்புகளிலும் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்தன. கர்ணனின் மகன், அர்ஜுனனின் மகன் போன்ற சிறாரும் கொல்லப்பட்டனர். கர்ணனைப் பறிகொடுத்த குந்தி, தன் நூறு மகன்களையும் பறிகொடுத்த காந்தாரி முதலிய பெண்கள் போர்க்களத்துக்குச் செல்கின்றனர்.
  • சிதறிக் கிடக்கும் சடலங்களும் அதைத் தின்ன அலையும் நரிகளும் அவர்களை வரவேற்கின்றன. குறைந்தபட்ச மனிதநேயம்கூட இல்லாமல் ஈவிரக்கமின்றிப் போரை நடத்தியது எது, அதிகார வேட்கையால் நடைபெறும் சண்டையில் குடிமக்கள் ஏன் சாக வேண்டும், இத்தனை பேரைக் கொன்றுவிட்டு வென்றவர்கள் யாரை ஆளப்போகின்றனர் - இப்படி அப்பெண்களிடமிருந்து கேள்விகள் வெளிப்படுகின்றன.
  • அவர்கள் அழுவதைத் தாண்டிப் போரை நிறுத்த வேறு ஏதேனும் செய்யவில்லையா என்கிற கேள்விக்குக் குந்தியும் காந்தாரியுமே பதில் கூற வேண்டியிருக்கிறது. ரத்தமும் சதையுமாக இந்நாடகம் முன்வைக்கும் இந்த நிகழ்வு, கலையழகுடனும் சமூக அக்கறையுடனும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
  • கௌரவர் அணியைச் சேர்ந்த அஸ்வத்தாமன், இரவில் உறங்கிக்கொண்டிருந்த பாண்டவர் அணி வீரர்களைப் போர் விதிகளை மீறிக் கொன்ற நிகழ்வு, பார்வையாளர்களின் உள்ளங்களை அதிரவைக்கும்விதத்தில் நாடகத்தில் இடம்பெற்றது. நடிகர்கள் பேசுகிற வசனங்கள் நிகழ்காலத்துக்கும் பொருந்துவதாக இருந்தன. உலகம் மௌன சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் பல்வேறு வன்முறைகளையும் பார்வையாளர்கள் ‘ஸ்திரீ பர்வ’த்துடன் பொருத்திப் பார்க்க முடிந்தது. நடிகர்களில் பலர் இளந்தலைமுறையினர். அவர்களது நடிப்பில் அர்ப்பணிப்பு உணர்வு வெளிப்பட்டது.
  • நாடகத்தின் ஒரு பகுதியாக, அரங்கத்தின் பின்னணியில் தற்போதைய போர் குறித்த ஆவணப்படக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. காசா முனையில் நடக்கும் போரில் காயமுற்ற சிறுமி ஒருத்தி, ‘இங்கு நடப்பதெல்லாம் கனவா, நனவா? சொல்லுங்கள்’ என்று மீண்டும் மீண்டும் கேட்பதை பார்ப்பவர்களால் அவ்வளவு லேசில் கடந்துபோய்விட முடியாதது. இந்நாடகத்துக்காகவே ட்ராட்ஸ்கி மருது வரைந்த பிரத்யேக ஓவியங்கள் பின்னணியில் இடம்பெற்றுக் கதைகூறலுக்கு அழுத்தம் சேர்த்தன.
  • புல்லாங்குழல், பறை, உருமி போன்ற கருவிகள் பின்னணி இசையில் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டன. புதுவை ரத்தினதுரை, நுஹ்மான்,உக்ரைன் செயல்பாட்டாளர் யனா சரஹோவா, பாலஸ்தீனியக்கவிஞர் ரஃபேல் அலாரீர் ஆகியோரின் கவிதைகள், செ.மு.திருவேங்கடத்தின் கூத்துப்பாடல், ‘காம்ரேட் டாக்கீஸ்’ தினேஷின் ‘ராப்’ பாடல் ஆகியவை கருத்துக்கு வலுச் சேர்த்தன.
  • கூத்துக்கான இசையில் செல்லும் நாடகம், தேவையானபோது ‘ராப்’ இசையிலும் பயணிப்பது ரசிக்கத்தக்க கலவையாக அமைந்திருந்தது. எதிரும் புதிருமான உறவுநிலையில் உள்ள குந்தியும் காந்தாரியும் நீண்ட மௌனத்துக்குப் பின்னர் உரையாடத் தொடங்குகின்றனர்; முடிவில் அது விலகி, பகையும் போட்டியும் அற்ற உலகைக் காண விரும்பும் சக மனிதர்கள் என்கிற உணர்வுக்கு வருகின்றனர். பார்வையாளரிடம் சுமையை ஏற்றிவைப்பதுடன் நின்றுகொள்ளாமல், எதிர்காலம் குறித்த நம்பிக்கையைத் தக்கவைக்கும்வகையில் நாடகம் நிறைவு பெற்றது.

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories