TNPSC Thervupettagam

மருத்துவ வசதி பெரும் சவால்

September 21 , 2019 152 days 177 0
 • கடந்த ஜூன் மாதம் பிகார் மாநிலத்தின் முசாபர்பூரில் மூளைக் காய்ச்சல் நோய்க்கு அடுக்கடுக்காக 153 குழந்தைகள் பலியானது  நாட்டையே உலுக்கிய ஒரு  துயர நிகழ்வு.  இந்த சோகமான நிகழ்வைத் தொடர்ந்து, இப்படி பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பலனின்றி மடிந்து போவதற்கு என்ன காரணம், யார் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் போன்ற சர்ச்சைகள் எழும்பின.

மூளைக் காய்ச்சல் நோய்

 • ஒவ்வொர் ஆண்டும் கோடை மாதங்களில் மூளைக் காய்ச்சல் நோய் குழந்தைகளைத் தாக்குகிறது என்று தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அரசின் அலட்சியப் போக்கு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இறந்த குழந்தைகள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அந்தக் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடே அவர்களின் மரணத்துக்கு முக்கியக் காரணம் என்றும் தகவல்கள் வெளிவந்தன.
 • கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைக் கண்காணிக்க அங்கன்வாடி மையங்கள்  உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்கள் அமலில் இருந்தும் குழந்தைகள் இறப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாவது  மிகவும் வருந்தத்தக்க விஷயம். நாடு சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும்,  இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை நினைத்து நாம் வெட்கப்பட வேண்டும்.    

சுகாதாரத் துறை

 • நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சுகாதாரத் துறையில் எந்தவித முன்னேற்றமும் அடையவில்லை என்று கூறிவிடமுடியாது. உதாரணமாக, உலக சுகாதார அமைப்பு, ரோட்டரி, யுனிசெஃப் போன்றவற்றின் ஆதரவுடன் மத்திய அரசு எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக, குழந்தைகளைத் தாக்கிக்   கொண்டிருந்த போலியோ எனும் கொடிய நோயை நாட்டை விட்டு ஒழித்துவிட்டோம்.
 • ஆனால், அதே சமயத்தில் 2025-ம் ஆண்டுக்குள் காச நோயை ஒழித்துவிடுவோம் என்று அரசு அறிவித்திருந்தாலும், அதைச் சாதிப்பது அவ்வளவு எளிதில்லை என்று தெரிகிறது. உலகிலுள்ள காச நோயாளிகளில் கால் பங்கு பேர் நமது நாட்டில் தான் உள்ளனர்.
 • நாட்டின் சுகாதாரத் துறையின் வளர்ச்சி எல்லா மக்களையும் சென்றடையவில்லை என்பதும், மருத்துவ வசதிகளைப் பொருத்தவரை ஏழை-பணக்காரர்களிடையே, மாநிலங்களிடையே, கிராமம்-நகரங்களிடையே பெரும் இடைவெளி உள்ளது என்பதும் தற்போது நமது நாடு சந்திக்கும் மிகப் பெரிய சவால்கள்.

கிராமப் புறங்களில்....

 • கிராமப்புற மக்களின் அடிப்படை சுகாதாரத் தேவைகளைக் கவனிக்க நாடு முழுவதும், துணை சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், சமுதாய மையங்கள், மாவட்ட அளவில் அரசு பொது மருத்துவமனைகள் என்று அடுக்கடுக்காக மருத்துவ கட்டமைப்புகளை அரசு உருவாக்கியுள்ளது என்னவோ உண்மை. ஆனால், இந்த மையங்கள் சரியாகச் செயல்படாததனால் ஏழை மக்களும்கூட கையை விட்டுச் செலவழித்து தனியார் மருத்துவமனைகளில்தான்  சிகிச்சை பெற வேண்டியுள்ளது.
 • ஒரு வயதுக்குள் இறக்கும் சிசுக்களின் விகிதம் ஒரு நாட்டின் சுகாதார நிலையை எடுத்துக்காட்டும் குறியீடாகக் கருதப்படுகிறது. நமது நாட்டில், அதுவும் கடந்த பத்தாண்டுகளில்  இந்த விகிதம் படிப்படியாகக் குறைந்து கொண்டு வருவது என்னவோ உண்மை. 2006-ஆம் ஆண்டில், பிறக்கும் 1,000 குழந்தைகளில் 57 குழந்தைகள் ஒரு வயதுக்குள் இறந்து கொண்டிருந்தன.
 • இந்த விகிதம் 2017-ஆம் ஆண்டில் 33-ஆகக் குறைத்துள்ளது மகிழ்ச்சி தரும் செய்தி. ஆனால், நமது அண்டை நாடுகளான வங்கதேசம் (27), நேபாளம் (28), இலங்கை (8), சீனா (8) போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் நாம் இன்னமும் பின்தங்கியே உள்ளோம் என்பது புரியும்.
 • மேலும், மாநிலங்களுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டும் விதத்தில், சிசுக்களின் இறப்பு விகிதமும் மாநிலங்களிடையே பெரிதும் வேறுபடுகிறது.

புள்ளிவிவரம்

 • கேரளம் (10), கோவா (8),  தமிழ்நாடு (16) போன்ற மாநிலங்களில் இந்த விகிதம் வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடும் அளவுக்குக் குறைவாகவே உள்ளது.
 • ஆனால்,  மத்தியப் பிரதேசம் (47), அஸ்ஸாம் (44),  ஒடிஸா (41) போன்ற மாநிலங்களில் சிசுக்களின் இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, இந்த விகிதத்தில் நமது கிராமங்களுக்கும் (37), நகரங்களுக்குமிடையே (23) ஒரு பெரும் இடைவெளி உள்ளது.
 • நாடாளுமன்றத்தில் அண்மையில் அரசு வெளியிட்ட தகவலின்படி மருத்துவர்களின் எண்ணிக்கை நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் 3.8:1 என்ற விகிதத்தில் உள்ளது என்று  தெரியவருகிறது.
 • சரியான மருத்துவக் கல்வி பெற்றவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற முன்வருவதில்லை. அதனால் அவர்கள் போலி மருத்துவர்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. 

பாலினப் பாகுபாடுகள்

 • மருத்துவ சிகிச்சை பெறுவதில் பாலின பாகுபாடுகளும் உள்ளன.  தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பல ஊர்களிலிருந்து வருகிறார்கள் என்பது நாம் யாவரும் அறிந்ததே. அப்படி வரும் நோயாளிகளில் ஆண்-பெண் விகிதம் என்ன தெரியுமா? 2016 -ம்
 • ஆண்டு வந்த 23.8 லட்சம் நோயாளிகளில் 37 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 • நோய்கள் குறித்து  குறைவான விழிப்புணர்வு, நேரமின்மை, பணத் தட்டுப்பாடு, மகளிரின் உடல் நிலை குறித்து குடும்பத்தினரின் அலட்சியப்  போக்கு, குடும்பத்திற்காக பொருள் ஈட்டுபவர்களின் உடல் நலத்தின் மீது மட்டுமே அதிகம் அக்கறை செலுத்துவது போன்ற காரணங்களே பெண்களின் உடல்நலப் பிரச்னைகள் ஓரங்கட்டப்படுவதற்கான காரணங்கள்.    
 • மக்களின் கவனத்தை அதிகம் கவராத, ஆனால் அதே சமயம் பாதிக்கப்பட்டவர்கள்   மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் வாழ்க்கையையே புரட்டிப்போடும் உடல்நலப் பிரச்னை மரபணு சம்பந்தப்பட்ட சில அரிய நோய்கள்.  நமது நாட்டில் சுமார் 7 கோடி பேர் அரிய நோய்களினால் அவதிப்படுகிறார்கள் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகில் அரிய நோய்கள் சுமார் 7,000 வரையில் உள்ளன என்றும், நமது நாட்டில் 450 வகையான அபூர்வ நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.
 • சிக்கில் செல் அனீமியா,  ஹீமோபிலியா, தலசீமியா போன்ற ரத்தம் தொடர்பான நோய்கள், தசைநார் டிஸ்டிரபி, தசைநார் தேய்வு போன்ற உடல் உறுப்புகளைப் பாதிக்கும் நோய்கள், குழந்தைகளில்  நோய் எதிர்ப்புக் குறைபாடு என்று அரிய நோய்கள் பல வகைப்படுகின்றன.
 • அரிதான இப்படிப்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் படும் பாடு கொஞ்சநஞ்சமில்லை. முதலில் குழந்தைக்கு என்ன நோய் என்று கண்டுபிடிப்பதே பெரிய போராட்டம், அதற்குப் பிறகு அவர்களுக்கான மருந்துகள், சிறப்பு சேவைகள், உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்ட அல்லது உடல் ஊனமுற்ற இந்தக் குழந்தைகளை கவனித்துக்கொள்ள முழு நேர ஆள், சக்கர நாற்காலி என்று பெற்றோர்களுக்கு ஏக பணச் செலவு.

உதாரணம்

 • உதாரணமாக, லைசோசோமல் சேமிப்புக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆண்டு ஒன்றுக்கு ரூ.50-60 லட்சம் வரையில் செலவு செய்ய வேண்டும். அவர்களை கவனித்துக்கொள்ள முழு நேர நபர் தேவை.
 • பெரும்பாலான இந்த நோய்கள் மரபணு தொடர்புடையது என்பதனால், இப்படிப்பட்ட நோய்களைத் தடுக்கும் விதத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தக்க ஆலோசனை, சந்தேகம் எழுந்தால் தேவையான பரிசோதனை போன்ற வசதிகளும், விழிப்புணர்வும் நமது நாட்டில் அதுவும் குறிப்பாக கிராமப்புறங்களில் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.  
 • உலகம் முழுவதும் உள்ள ஒரு சிறிய சதவீதத்திலேயே பாதித்திருக்கும் அரிய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாள் அரிய நோய் விழிப்புணர்வு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
 • டெமாகிராஃபிக் டிவிடெண்ட் என்று சொல்லப்படும் மக்கள்தொகையின் பலனை அனுபவிக்கும் ஒரு காலகட்டத்துக்குள் நமது நாடு சென்ற ஆண்டு அடியெடுத்து வைத்துள்ளது.
 • இந்த காலகட்டத்தை, மொத்த மக்கள்தொகையில் உழைக்கும் வயதினரின் (15 - 64  வயது) விகிதம், அவர்களைச்  சார்ந்து வாழும் வயதினரின் (14  வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேலுள்ளவர்கள்) விகிதத்தைவிட அதிகரித்துக் கொண்டு வரும் காலகட்டம் என்று சொல்லலாம்.

பொருளாதார வளர்ச்சி

 • 2055-ஆம் ஆண்டு வரையில் அதாவது 37 ஆண்டுகளுக்கு தொடரப் போகும் இந்த காலகட்டத்தில், நாட்டில் கணிசமான பொருளாதார வளர்ச்சியைக் காணலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே, மக்கள்தொகையின் இப்படிப்பட்ட காலகட்டத்தை கடந்துவிட்ட ஜப்பான், சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகள்,  பல ஆண்டுகள் நாட்டின் மொத்த வருமானத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்டுள்ளனர்.
 • நமது நாட்டிலும், உழைக்கும் மக்கள்தொகையின் அதிகரிப்பினால் இரட்டை இலக்க வளர்ச்சியை அடைவதற்கான நல்ல வாய்ப்பு இது. ஆனால், அப்படி இரட்டை இலக்க வளர்ச்சியை நாம் அடைய வேண்டும் என்றால், உழைக்கும் மக்கள்தொகையின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டும் போதாது;
 • இளைஞர்களுக்கு நல்ல கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் பயிற்சி போன்றவை கிடைப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவர்களின் உடல் நலம் காப்பதும்.

நன்றி: தினமணி (21-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories