TNPSC Thervupettagam

மறுக்கப்படும் உரிமை : மறந்துபோன வரலாறு! - மக்களவை மகா யுத்தம்

April 8 , 2024 252 days 332 0
  • சமீபத்தில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அதை அனுப்பியிருந்தார். அந்தக் கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பதாகவும், சாதி அடிப்படையிலான ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்த 300 பேரும் தங்களுக்கே வாக்களிக்க வேண்டும் எனக் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தவறினால் ஊரைவிட்டே வெளியேற்றிவிடுவதாக அம்மக்களை அச்சுறுத்துவதாகவும், காவல் துறையினரோ அக்கட்சியினருக்கே ஆதரவாக இருப்பதாகவும் அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்தது.
  • அதே கிராமத்தில் வசிக்கும் இருளர் பழங்குடியினர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆண்ட சாதியாகத் தங்களைக் கருதுவோரின் அறியாமையின் வெளிப்பாடு இது. எப்போது, யாரால் அவர்களுக்கு வாக்குரிமை கிடைத்தது என்பதைத் தெரிந்துகொண்டால், அவர்கள் இப்படிச் செய்வார்களா?

வாக்குரிமை வந்த வழி:

  • புத்தர் காலத்தில் இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவியது. புத்தர் நிறுவிய சங்கத்திலும் அது நீண்ட காலம் நடைமுறையில் இருந்தது. பிறகு, வரலாற்றிலிருந்து முற்றிலுமாக இந்த நடைமுறை துடைத்தெறியப்பட்டது. சோழர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய குடவோலை முறை சிறிது காலமே நிலவினாலும் அனைவருக்கும் வாக்குரிமை என்பது அதில் கிடையாது. உயர்தட்டு வர்க்கத்தினரிடையே மட்டுமே சில இடங்களில் அது நிலவியது. அதற்குப் பிறகு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் நாடாளுமன்ற ஜனநாயகம், வாக்களிக்கும் உரிமை ஆகியவை தொடங்கின. இதில் பிரிட்டிஷ்காரர்களுக்கும் இந்தியர்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது.
  • பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடைமுறை சுமார் 900 ஆண்டுகள் பழமையானது. முதல் நாடாளுமன்றம் பொ.ஆ. (கி.பி.) 1236 நவம்பர் 1இல் பேரரசர் 3ஆம் ஹென்றியால் கூட்டப்பட்டது. பெயர்தான் நாடாளுமன்றமே தவிர, மன்னர் ஆட்சியின் ஒரு வடிவம்தான் அது. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், மன்னரவை நாடாளுமன்றம் என்கிற பெயரில் அப்போது கூட்டப்பட்டுச் சில விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
  • அதுமுதற்கொண்டு மன்னரின் முன்பு கூட்டப்படும் அவைகள் ஒவ்வொன்றும் நாடாளுமன்றமாகவே கருதப்பட்டன. அதற்கான உறுப்பினர்கள் அரசால் நியமிக்கப்பட்டுவந்தார்கள். 1695இல் பொதுத் தேர்தலில் விக்குகளும் (Whigs), டாரிக்களும் (Tories) தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் உருவானது. விக்குகள் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாகவும் டாரிக்கள் அரசை அல்லது திருச்சபையைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் 1495லேயே உருவாக்கப்பட்டுவிட்டார்கள்.
  • அதில் சொத்து வைத்திருக்கும் 21 வயது நிரம்பிய ஆண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது; இது படிப்படியாக வளர்ந்தது. 14ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கீழவை (Lower House) 1707ஆம் ஆண்டு மக்களவை (House of Common) என்று பெயர் சூட்டப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இந்த அவைகூட மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கியது. 1832ஆம் ஆண்டு
  • ஏற்பட்ட அரசியல் சீரமைப்பின்படி கிரேட் பிரிட்டன் குடியரசாக அறிவிக்கப்பட்டது. குடியரசின் தலைவராக மன்னர் இருந்தாலும் அவருக்குக் கீழ் பிரதமரும் நாடாளுமன்றமும் இயங்கும் வகையில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டது. ஆனால், வாக்குரிமை என்பதுஇன்னும் கூட கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்துவந்தது.
  • ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்ட 1832ஆம் ஆண்டு சட்டத்தில்கூட நிலம் உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். 1884 வரை ஒட்டுமொத்த ஆண்களில்கூட 60% பேர் மட்டுமே வாக்களிக்கும் தகுதி பெற்றிருந்தனர். 1918இல் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தத்தில் 21 வயது நிறைந்த அனைத்து ஆண்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டாலும் பெண்கள் வாக்குரிமை பெறாமலேயே இருந்தனர்.
  • 30 வயது நிரம்பிய பெண்கள் சொத்து வைத்திருந்தால் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. சொத்துரிமை பெரும்பாலும் ஆண்களிடமே இருந்ததால் பெரும்பாலான பெண்கள் வாக்களிக்கும் தகுதியை இழந்தனர். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1928இல் நடைபெற்ற அரசியல் சீர்திருத்தத்தில் 21 வயது நிரம்பிய அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது.
  • பொ.ஆ. 1236இல் நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டு சுமார் 700 ஆண்டுகள் கழித்துதான் அனைத்துப் பெண்களும் வாக்குரிமை பெற முடிந்தது. ஆண்களுக்குக்கூடப் படிப்படியாகத் தான் வாக்குரிமை வழங்கப்பட்டது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை உலகுக்கு அறிமுகப் படுத்திய பிரிட்டனுக்கு இந்நிலைமை என்றால் இந்தியாவில்?

அம்பேத்கரின் பங்களிப்பு:

  • 1887இல் இந்தியாவில் உள்ளாட்சித் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது; வாக்குரிமையும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மாகாணங்கள் மேலவை (provincial legislative councils), பேரரசாட்சி சட்ட மேலவைகளின் (imperial legislative) வாக்களிக்கும் முறை நடைமுறைக்கு வந்தாலும், ஏறக்குறைய பிரிட்டனின் நடைமுறைதான் இங்கும் பின்பற்றப் பட்டது.
  • அதனால், சொத்து படைத்தவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். 1921இல் சென்னையில் நடைபெற்ற தேர்தலில் சொத்து வைத்திருந்த சில பெண்கள் வாக்களித்தார்கள். பொதுவாகப் பார்த்தால், சமூகத்தின் 80%க்கும் மேலான மக்கள் - இடைநிலைச் சாதியினர், தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் ஆகியோர் அப்போது வாக்களிக்க முடியாது.
  • இந்நிலையில்தான் 1935இல் இந்தியச் சட்டத்துக்கான பணிகள் தொடங்கின. அதற்கெனக் கூட்டப்பட்ட வட்டமேசை மாநாடுகளில் பங்கெடுத்துக்கொண்ட டாக்டர் அம்பேத்கர், தொடக்கம் முதலே அனைவருக்குமான வாக்குரிமையை இறுதிவரை வலியுறுத்தினார்.
  • அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான அவரது வாதங்கள் பிரிட்டிஷ் பேரரசின் கவனத்தை ஈர்த்ததால், வட்டமேசை மாநாடுகள் முடிந்த பிறகும் சட்டத்தை இறுதிசெய்வதற்காக லண்டனுக்கு அவர் அழைக்கப்பட்டு, ஆலோசனைகளும் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்போதுகூட அவர் அனைவருக்குமான வாக்குரிமையை நியாயப்படுத்திப் பேசினார். அதன் விளைவாக, 21 வயது நிரம்பிய அனைவருக்குமான வாக்குரிமை 1935இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதிசெய்யப்பட்டது.
  • இதன் தொடர்ச்சியாக 1936-37இல் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் முதன்முறையாக உயர் சாதியினர், இடைச்சாதியினர் (பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்), தலித்துகள், பழங்குடியினர், பெண்கள், மதச் சிறுபான்மையினர் ஆகியோர் வாக்களித்தனர். இது அம்பேத்கரின் விடாப்பிடியான போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி.
  • அம்பேத்கரின் அந்தப் பங்களிப்புதான் 1950ஆம் ஆண்டுக்கான இந்திய அரசமைப்புச் சட்டத்தை எழுதுவதற்கான வாய்ப்பையும் உருவாக்கியது. பிரிட்டனில் அனைவருக்குமான வாக்குரிமை 1921ஆம் ஆண்டும், பெண்களுக்கான வாக்குரிமை 1928ஆம் ஆண்டும் கிடைத்தது. சரியாக 10 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் அனைவருக்குமான வாக்குரிமை 1937இல் உறுதிசெய்யப்பட்டது.

வரலாற்றுப் பார்வையின்மை:

  • வரலாற்றுக் கணக்குகளைக் கூட்டிப் பார்த்தால் பிரிட்டனைப் போல நீண்ட நெடிய போராட்டத்தினால் நமக்கு வாக்குரிமை கிடைக்கவில்லை. அறிவார்ந்த விவாதங்களின் மூலமாக மிகக் குறுகிய காலத்தில் அந்த உரிமையை நாம் எட்டிப்பிடித்தோம். ஆனால், இந்த வரலாற்றுச் செய்திகளை அறியாத காரணத்தினால் வாக்குரிமை என்பது ஏதோ தங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட தனி உரிமை என்று நினைக்கின்ற மனநிலை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடையே சில இடங்களில் ஏற்பட்டிருக்கின்றது.
  • தங்களின் உயர்சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்காக, ஜனநாயகம் வழங்கியுள்ள எல்லா மனிதர்களுக்குமான அடிப்படை உரிமையைத் தவறாகப் பயன்படுத்தலாம் என அவர்கள் நம்புகின்றனர்.
  • எளிய மக்கள் வாக்களிக்க முடியாத சூழலை இந்தக் காலத்திலும் உருவாக்க முடியும் என்றால், ஜனநாயகத்தின் மாண்புகள், அம்பேத்கர் உள்ளிட்ட பெரும் தலைவர்களின் பங்களிப்புகள் கேள்விக்குரியதாகிவிடுகின்றன. ஜனநாயகத்தின் மாண்புகளைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு வாக்காளரின் கடமை மட்டுமல்ல; காவல் துறை உள்பட அரசு நிர்வாகத்தின் அடிப்படைக் கடமையும்கூட.
  • மேற்கூறப்பட்ட கிராமம், ஒரு வகையில் நம் கண்ணெதிரே இருக்கும் சிறு சான்றுதான். எனினும், இந்தியாவின் எங்கோ மூலைமுடுக்குகளில் வாக்களிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் ஏராளமான எளிய மக்களுக்குமான குறியீடாக அதைக் கருதலாம். மக்கள் பாதுகாப்பான உணர்வோடும் ஜனநாயகத்தில் நாங்களும் பங்களிக்கின்றோம் என்கிற உணர்வோடும் வாக்களிக்க முன்வருவதற்கான சூழலை உருவாக்காத வரையில் ஜனநாயகம் முழுமை பெறாது.

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories