TNPSC Thervupettagam

மலைபோல் உயர்ந்து நிற்கும் முதுவர் பெண்கள்

April 7 , 2024 41 days 95 0
  • நவீன வசதிகள் பெருகி, உள்ளங்கைக்குள் உலகம் அடங்கிவிட்ட இந்நாளிலும் மனிதத் தொடர்புகள் அற்ற மலைக்காடுகளில் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மேற்கு மலைத் தொடரில் வாழும் ‘முதுவர்’ பழங்குடி மக்கள் பற்றிய 14 ஆண்டு கால ஆய்வில் நான் அறிந்துகொண்ட அனைத்துமே அரும்பெரும் பொக்கிஷங்கள்!
  • மேற்கு மலைத்தொடரில் உள்ள கரிமுட்டி, ஆட்டுமலை, பூச்சிகொட்டாம்பாறை, மேல் குறுமலை, மஞ்சம்பட்டி, வெள்ளிமுடி, வெள்ளக்கல், சங்கரன்குடி ஆகிய எட்டு மலைகளில் முதுவர் வாழ்கின்றனர். துணிவும் வீரமும் நிறைந்த முதுவர் பெண்கள் என்னை வியப்பில் ஆழ்த்தினர்.

அச்சமில்லாப் பெண்

  • அடர்வனம் நிரம்பிய மலையில் வனப் பாதுகாவலர் துணையுடன் நாங்கள் பயத்துடன் மலை ஏறிக்கொண்டிருக்க, தலையில் சுமையோடு முதுகில் ஒரு குழந்தை, கையில் ஒரு குழந்தையுமாக ஒரு பெண் வேகமாக எங்களைக் கடந்து மலையேறினார். உடுமலைப் பேட்டை சந்தைக்குச் சென்று பொருள்கள் வாங்கிச் செல்வதாகக் கூறினார். தனிப் பயணம் ஆபத்தானது என்பதால், விலங்குகள் தாக்கினால் என்ன செய்வார் என்று கேட்டேன். “தப்பிக்கப் போராடுவேன். இயலவில்லை எனில் மண்ணுள் மறைவதுதான்” என இயல்பாகக் கூறியபடியே வேகமாக ஏறி எங்கள் பார்வையிலிருந்து மறைந்தார்.

காவலுக்குக் கெட்டிக்காரர்கள்

  • எலும்பை உருக்கும் குளிரைக்கூட முதுவர் பெண்கள் இயல்பாக எதிர்கொள்கின்றனர். இரவு நேரத்தில் விலங்குகள் குடில்களையும் பயிர்களையும் சிதைக்காமல் இருக்க மரத்தின் உச்சியில் ‘அட்டாளி’ கட்டப்படுகிறது. அதில் ஏறுவதற்குச் சிறு கழிகளை மரத்தில் அடித்து வைத்துள்ளனர். ‘அட்டாளி’ காவலுக்கு ஆண்கள் ஒருவராகவும் பெண்கள் இருவராகவும் செல்கின்றனர். முதுவர் பெண்கள் இரவு நேரத்தில் அட்டாளியில் ஏறித் தகடுகளைத் தட்டி ஓசை எழுப்பிக் காவல் காக்கும் தைரியம் கொண்டவர்கள். ஆண்களுக்குச் சமமாக வேலை செய்பவர்கள். ‘அட்டாளி’ கட்டப்பட்ட மரத்தை யானைகள் கூட்டமாக வந்து முறித்துத் தள்ளிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன என்றனர்.

உணவுத் தேடல்

  • மலையிலிருந்து இறங்கி வரும்போதும் ஏறும்போதும் ஆண்கள் துணையுடன் பெண்கள் செயல்படுவது இல்லை. பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் வருகின்றனர். முதுவரின் பிரதான உணவு மூங்கில் அரிசி. 60 ஆண்டுகள் பழமையான மூங்கில் மரங்கள் முற்றி வெடித்துச் சிதறும்போது மூங்கில் நெல் வனத்தில் கொட்டிக் கிடக்கும். அதைத் தேடிக் கண்டுபிடித்துத் திரட்டி வரும் பணி பெண்களுடையது. யானையின் வாசத்தையும் கரடி, சிறுத்தையின் கால் தடத்தையும் நன்கு அறிந்திருக்கும் இப்பெண்கள் இருவர், மூவராகக் கையில் கத்தியுடன் வனத்துள் சென்று மூங்கில் நெல்லைத் திரட்டி வருகின்றனர்.
  • மாதவிடாயின்போதும் பிரசவத்தின்போதும் பெண்கள் தங்குவதற்கு ‘குளிவீடு’ என்னும் சிறு குடிலை அமைத்துள்ளனர். அதை இரண்டாகப் பிரித்து இரண்டு வாசல்கள் வைத்துள்ளனர். மாதவிடாய் பெண்கள் ஒருபுறமும் குழந்தை பெறும் பெண்கள் மறுபுறமும் தங்க வேண்டும். தன் பிரசவத்தைத் தானே பார்த்து, குழந்தை பெற்று, கையில் குழந்தையுடன் அவளே வெளியே வரவேண்டும். பிரசவத்தில் ஆபத்தெனில் அவள் எழுப்பும் ஓலம் கேட்டு முதிய பெண் ஒருவர் சென்று உதவுவார்.

மேம்பட்ட நாகரிகம்

  • முதுவர் வாழ்வில் பெண் அடிமைத்தனம் ஏதுமில்லை. ஆண்களுக்கு நிகராக வேலையைப் பிரித்துக்கொண்டு செய் கின்றனர். ஆண்கள் சந்திக்கும் அனைத்துச் சவால்களையும் ஆபத்துகளையும் பெண்களும் எதிர்கொள்கின்றனர். இங்கே பாலியல் அத்துமீறல்கள் இல்லை. அங்கே இயற்கைச் சீற்றமும் விலங்குகளால் ஏற்படும் இடரும் இயல்பானவை. ஆனால், நம்மைச் சுற்றி நடப்பது போன்று பாலியல் துன்புறுத்தல்கள் அங்கே இல்லை.
  • கைம்பெண்கள் என்கிற வழக்கமும் அங்கே இல்லை என்பது என்னை நெகிழ வைத்தது. கணவனை இழந்தபின் அந்தப் பெண்கள் விரும்பினால் மறுமணம் செய்து வைக்கின்றனர்.
  • பெண்ணைச் சக மனுஷியாக மதிக்கும் அந்த நாகரிக மனிதர்களுக்குக் கல்வி விழிப்புணர்வு அளித்து மறையூர், சாலக்குடி, வால்பாறை ஆகிய இடங்களில் உள்ள அரசு உறைவிடப் பள்ளிகளில் பிள்ளைகள் படிக்க வழிகாட்டி உதவிவருகிறோம். பெண் பிள்ளைகளையும் தற்போது உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கின்றனர். சீதேவி என்கிற பெண் முதுவர் மக்களுள் முதலாவதாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்கிறாள். மாவட்ட ஆட்சியராக ஆவது அவளது லட்சியம். அது கைகூடட்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories