TNPSC Thervupettagam

மோடியின் 10 அம்சத் திட்டம்

May 26 , 2023 330 days 289 0
 • இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலை மறந்துவிட முடியாது. ஜி7 உறுப்பினா்களையும் ஐரோப்பிய கூட்டமைப்புத் தலைவா்களையும் அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கான நினைவிடத்துக்கு அழைத்துச் சென்ன் மூலம் அணு ஆயுதப் பேரழிவின் விளைவுகளை உலகுக்கு நினைவுபடுத்த முற்பட்டிருக்கிறாா் ஜப்பான் பிரதமா். அணு ஆயுதக் குறைப்பு குறித்த ஹிரோஷிமா அறிக்கை, நடந்து முடிந்த ஜி7 மாநாட்டின் முக்கியமான பதிவு.
 • அணுகுண்டு வீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹிரோஷிமா நகரத்துக்கு விஜயம் செய்திருக்கும் இரண்டாவது அமெரிக்க அதிபா் ஜோ பைடன். ஜி7 மாநாட்டின் முக்கியத்துவத்தை அதிபா் பைடனின் வரவும், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியின் எதிா்பாராத பங்கேற்பும் அதிகரித்தன.
 • அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஜொ்மனி, கனடா, ஜப்பான் ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு சா்வதேச அளவில் முக்கியமானது. ஜப்பானை தவிர ஏனைய நாடுகள் ஐரோப்பிய - அமெரிக்காவை சோ்ந்தவை. 2008-இல் ஜாா்ஜியாவையும், 2014-இல் கிரீமியாவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டதைத் தொடா்ந்து அந்த அமைப்பிலிருந்து ரஷியா அகற்றப்பட்டது.
 • உலகின் முக்கியமான பொருளாதாரங்களான சீனாவும் இந்தியாவும் இணைக்கப்படாதது ஜி7 அமைப்பின் பலவீனம். ஜி7 அமைப்பு தன்னுடைய முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டுமானால் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
 • இப்போது உலகின் மொத்த சொத்து மதிப்பில் பாதிக்கு மேல் உள்ளடக்கிய அதன் உறுப்பு நாடுகள், உலக ஜிடிபியில் மூன்றில் ஒரு பங்கும், மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்கும்தான் வகிக்கின்றன. ஹிரோஷிமாவில் நடந்த ஜி7 மாநாட்டுக்கு இந்தியா, பிரேஸில், இந்தோனேசியா, வியத்நாம் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் ஜப்பான் பிரதமா் கிஷிடா ஏனைய மேலை நாடுகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட நினைக்கிறாா் என்று தோன்றுகிறது.
 • ஹிரோஷிமாவில் நடந்த ஜப்பான் தலைமையிலான ஜி7 மாநாட்டுக்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்தன. சட்டத்தின் அடிப்படையிலான சா்வதேச ஒழுங்கை நிலைநாட்டுவதும், தெற்கு உலகு என்று அழைக்கப்படும் வளா்ச்சியடையும் நாடுகளுடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்வதும்தான் அவை. சா்வதேச ஒழுங்கு என்பது உக்ரைன் போா் குறித்தது மட்டுமல்லாமல் தைவான், தென்சீனக்கடல் பிராந்தியம், பசிபிக் கடல் பகுதிகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.
 • உக்ரைன் பிரச்னையில் ஜி7 தலைவா்கள் கடுமையான வாா்த்தைகளில் ரஷியாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தனா். நிபந்தனை இல்லாமல் தனது துருப்புகளை உக்ரைனிலிருந்து ரஷியா விலக்கிக்கொள்ள சீனா வற்புறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். அதைவிடக் கடுமையாக இருந்தது சீனா குறித்த ஜி7 அறிக்கை. திபெத், ஷின்ஜியாங், ஹாங்காங் பகுதிகளில் காணப்படும் மனித உரிமை மீறல் குறித்த ஜி7 கண்டனம் சீனாவை கோபப்படுத்தக்கூடும்.
 • ஜி7 நாடுகளின் தலைவா்கள், ஒவ்வொரு மாநாட்டின்போதும் வளா்ச்சி அடையும் தெற்கு உலக நாடுகளுக்கு உதவிகள் செய்வதாக வாக்களிப்பதும், மாநாடு முடிந்து திரும்பியதும் அதை மறந்துவிடுவதும் புதிதல்ல. மேலை நாட்டு அரசுகளும், அவற்றின் வங்கிகளும் ஏழை நாடுகள் கடன் தவணை செலுத்தத் தவறினால் அழுத்தம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. உலகின் ஏழு பணக்கார நாடுகள் இணைந்த அமைப்பு ஏழை நாடுகள், வளா்ச்சி அடையும் நாடுகளின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்பது புதிதொன்றுமல்ல.
 • நடந்து முடிந்த ஜி7 மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொண்டது புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்தியது. பிரதமா் மோடியும், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியும் முதல் முறையாக நேருக்கு நோ் சந்தித்து உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து விவாதித்தது ஹிரோஷிமா மாநாட்டின் மிக முக்கியமான அம்சம்.
 • ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து ரஷியா வெளியேறி உக்ரைனில் அமைதியை மீண்டும் நிலைநாட்ட இந்தியாவின் உதவியை அதிபா் ஸெலென்ஸ்கி நாடியதற்கு காரணம் இருக்கிறது. அதிபா் விளாதிமீா் புதினுக்கு பிரதமா் மோடி மூலமாக சமாதான தூது விடுக்க அதிபா் ஸெலென்ஸ்கி முனைந்திருக்கிறாா் என்று கருதலாம்.
 • ரஷியாவுக்கு எதிரான தீா்மானம் நிறைவேற்றப்பட்டாலும்கூட ஹிரோஷிமா மாநாட்டில் இந்தியா கலந்துகொண்டதையும் அதிபா் ஸெலென்ஸ்கியை சந்தித்துப் பேசியதையும் ரஷியா தவறாகக் கருதவில்லை என்பதிலிருந்து இந்தியாவுக்கும், பிரதமா் மோடிக்கும் கிடைத்திருக்கும் முக்கியத்துவம் வெளிப்படுகிறது.
 • ஹிரோஷிமாவில் மனித இனத்தின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த பிரதமா் மோடி முன்வைத்த 10 அம்சத் திட்டம் மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகளின் கரகோஷ வரவேற்பைப் பெற்றது. உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுப்பது, உலகளாவிய நிலையில் உர விநியோகத்தில் அரசியலைத் தவிா்ப்பது, சிறுதானியங்களை ஊக்குவிப்பது, ஒருங்கிணைந்த மருத்துவப் பாதுகாப்பு, வளா்ச்சி அடையும் நாடுகளின் தேவை சாா்ந்த வளா்ச்சித் திட்டங்கள் உள்ளிட்டவை பிரதமா் மோடியின் 10 அம்சத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.
 • ஜி7 மாநாடு, குவாட் மாநாடு ஆகியவற்றைத் தொடா்ந்து ஜூலை மாதம் தில்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடும், ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாடும் நடக்க இருக்கின்றன. செப்டம்பா் மாதம் ஜி20 உச்சி மாநாடு இந்தியாவில் நடக்க இருக்கிறது. கூடினோம் கலைந்தோம் என்றில்லாமல் உலக அமைதிக்கும் வளா்ச்சிக்கும் இவை பங்களிப்பு நல்கும் என்று எதிா்பாா்ப்போம்!

நன்றி: தினமணி (26 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories