- இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவருவதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) வெளியிட்டிருக்கும் அறிக்கை. இந்தப் பிரச்சினையை அரசு தீவிரமாக அணுகவேண்டிய அவசியத் தையும் இந்த அறிக்கை உணர்த்தியிருக்கிறது.
- டெல்லியை மையமாகக் கொண்டு இயங்கிவரும் மனித வளர்ச்சிக்கான நிறுவனத்துடன் (The Institute for Human Development) இணைந்து, மார்ச் 26 இல் ஐஎல்ஓ வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை, வேலைவாய்ப்பின்மை பிரச்சினையின் பல்வேறு கோணங்களை அலசுகிறது.
- இளைஞர்களைப் பொறுத்தவரை 2000 - 2019 ஆண்டுகால இடைவெளியில் வேலைவாய்ப்பு அதிகரித்து வந்திருக்கிறது; கற்ற கல்விக்குத் தகுதியற்ற வேலை / குறைந்த ஊதியம் தரும் வேலை என்கிற அளவிலேனும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று கூறும் இந்த அறிக்கை, கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வேலைவாய்ப்பு குறைந்ததாகச் சுட்டிக்காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக வேலைவாய்ப்பின்மை என்பது இந்தியாவின் முக்கியப் பிரச்சினையாகவே தொடர்கிறது.
- இந்த அறிக்கையின்படி, வேலையற்ற இளைஞர்களில் இடைநிலை அல்லது உயர்கல்வி பெற்ற இளைஞர்களின் பங்கு 2000ஆம் ஆண்டில் 35.2%ஆக இருந்தது, 2022இல் 65.7%ஆக (கிட்டத்தட்ட இரு மடங்கு) அதிகரித்துள்ளது. ‘2022ஆம் ஆண்டுவாக்கில், வேலை கிடைக்காதவர்களில் இளைஞர்களின் எண்ணிக்கை 82.9%ஆக அதிகரித்திருக்கிறது.
- குறிப்பாக, வேலை கிடைக்கப்பெறாதவர்களில், படித்த இளைஞர்களின் எண்ணிக்கை 54.2%ஆக உயர்ந்திருக்கிறது. படித்த இளைஞர்களில் வேலை கிடைக்கப்பெறாதவர்களில் ஆண்களைவிட (62.2%) பெண்களே அதிகம் (76.7%)’ என்றும் இந்த அறிக்கை பதிவுசெய்கிறது. ‘இந்தியாவில் தொழிலாளர் பங்கேற்பு-வேலைவாய்ப்பு விகிதங்கள் மேம்பட்டிருந்தாலும், வேலைவாய்ப்பு நிலை மோசமாகவே இருக்கிறது’ என இந்த அறிக்கையை வெளியிட்ட தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
- எனினும், சமூக அல்லது பொருளாதாரப் பிரச்சினைகள் அனைத்திலும் அரசு தலையிட்டாக வேண்டும் என்ற தேவை இல்லை என்று அவர் தெரிவித்திருப்பது விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது. அரசியல் தலைவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பை அதிகரிப்போம்’ என்பது மிக முக்கியமானது.
- முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்கள் முதல், தங்கள் வாரிசுகளின் எதிர்காலம் குறித்துக் கவலைப்படும் பெற்றோர்கள் வரை பலரும் இந்த வாக்குறுதிக்கு மிகுந்த கவனம் செலுத்துவார்கள். 2023 அக்டோபரில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மிகவும் குறைந்திருப்பதாகக் கூறினார். எனினும், இந்தியாவில் படித்த இளைஞர்களும், நகர்ப்புறத்தைச் சேர்ந்த படித்த பெண்களும் வேலைவாய்ப்பின்மையால் தவித்துவருவதை இந்த அறிக்கை பட்டவர்த்தனமாக்கியிருக்கிறது.
- வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பொறுப்பைச் சந்தைப் பொருளாதாரத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் கூறியிருப்பதும் சரியல்ல. சந்தை முறையில் உற்பத்தியை அதிகரிக்க முடிந்தாலும், வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினையைக் குறைத்துவிட முடியாது என்பதே நிதர்சனம்.
- அரசின் பங்கேற்பும் முறையான திட்டமிடலும் இல்லாவிட்டால், இது பிரச்சினையாகவே தொடரும். சமூகப் பாதுகாப்புப் பலன்கள், வேலையிழப்புகளை மீட்டெடுப்பதற்கு முதலாளிகளை ஊக்குவிக்கும் வகையில் சுயசார்பு இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம் என்பன உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்திருக்கிறது.
- எனினும், இளைஞர்களின் எதிர்காலத்தையும், நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு - இளைஞர்களிடையே வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களில் அரசு முனைப்புக் காட்ட வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 04 – 2024)