TNPSC Thervupettagam

காந்தி பேசுகிறார்: சுயவிசாரணை

July 3 , 2019 2369 days 1401 0
  • எனக்குள்ள குறைபாடுகளை நான் நன்றாக அறிவேன். இதை நான் உணர்ந்துகொண்டிருப்பது ஒன்றே எனக்குள்ள பலம். என் வாழ்க்கையில் நான் செய்ய முடிந்திருப்பது எதுவாக இருந்தாலும், அது மற்றவற்றையெல்லாம்விட என் குறைபாட்டை நான் அறிந்துகொண்டிருப்பதன் அடிப்படையிலேயே செய்யப்பட்டிருக்கின்றன.
  • என் வாழ்நாளெல்லாம் என்னைக் குறித்துத் தவறாகக் கூறப்பட்டே வந்திருக்கிறது; இது எனக்குப் பழக்கப்பட்டுவிட்டது. இதுதான் ஒவ்வொரு பொதுஜன ஊழியனின் கதியும். இதை அவன் கஷ்டப்பட்டு சகித்துக்கொள்ளவே வேண்டியிருக்கிறது. தவறாகச் சொல்லப்படும் ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லித் தெளிவுபடுத்திக்கொண்டே இருப்பதென்றால், பிறகு வாழ்வே பெரும் சுமையாகிவிடும். மேற்கொண்டிருக்கும் லட்சியத்துக்குத் திருத்தம் கூறியாக வேண்டிய அவசியம் என்று இருந்தாலன்றி, மற்றபடி தவறாகச் சொல்லப்படுகிறவற்றுக்கெல்லாம் சமாதானம் சொல்லிக்கொண்டிருப்பதில்லை என்பது என் வாழ்க்கையில் நான் கொண்டிருக்கும் ஒரு நியதி. இந்த நியதி எவ்வளவோ நேரத்தை எனக்கு மிச்சப்படுத்தி, கவலையிலிருந்தும் என்னைக் காத்திருக்கிறது.
சத்தியம் அகிம்சை
  • என்னிடம் இருப்பதாக நான் சொல்லிக்கொள்ளும் ஒரே பெருமை, சத்தியமும் அகிம்சையுமே. தெய்வீக சக்தி எதுவும் என்னிடம் இருப்பதாக நான் எண்ணிக்கொள்ளவில்லை. அவை எனக்கு வேண்டியதுமில்லை. என் சகோதர மனிதரில் அதிக பலவீனமானவர் எந்தச் சதையினாலானவரோ அதே குற்றத்துக்குள்ளாக்கிவிடக்கூடிய சதையிலானவனே நானும். மற்றவர்களைப் போல நானும் தவறுகளைச் செய்துவிடக்கூடியவனே. என்னுடைய சேவைகளில் எத்தனையோ குறைபாடுகள் இருக்கின்றன. என்றாலும், அவற்றில் குற்றங்குறைகள் இருந்தும் இதுவரையில் ஆண்டவன் அவற்றை ஆசீர்வதித்து வந்திருக்கிறார். ஏனெனில், குற்றத்தை ஒப்புக்கொண்டுவிடுவது, குப்பையைத் தூரப் போக்கித் தரையை முன்பு இருந்ததைவிடச் சுத்தமாக்கும் துடைப்பத்தைப் போன்றது. தவறை ஒப்புக்கொண்டுவிடுவதால், அதிக பலம் பெறுவதாக உணர்கிறேன்.

நன்றி: இந்து தமிழ் திசை (03-07-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories