TNPSC Thervupettagam

சவுதி இளவரசர் வருகை: நன்மைகளும் ஏமாற்றங்களும்!

February 26 , 2019 1908 days 1187 0
  • சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானின் இந்திய வருகை, சற்றே பொருத்தமற்ற தருணத்தில் அமைந்திருந்தாலும் குறிப்பிடத்தக்க சில நன்மைகளும் நமக்குக் கிடைக்கக் காரணமாகியிருக்கிறது.
  • இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் சவுதி நட்பு பேணிவரும் நிலையில், புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இருநாள் பயணமாக பிப்ரவரி 19-ல் இளவரசர் முகம்மது பின் சல்மான் இந்தியாவுக்கு வந்தார்.
  • அதற்கு முன்னர் பாகிஸ்தானுக்குச் சென்றிருந்த அவர், பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்துவரும் நடவடிக்கைகளையும் பாராட்டிப் பேசியிருந்தார்.
  • உறுத்தலுக்கு முக்கியக் காரணம் இதுதான்!
  • சவுதி இளவரசரின் இந்தியப் பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறை கூட்டுறவு மேலும் உயர சில நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
  • இரு நாடுகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் ராணுவ வியூகப் பங்கேற்பு கவுன்சில் உட்பட பாதுகாப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
  • இந்தியாவின் அடித்தளக் கட்டமைப்புத் துறைகளில் 2,600 கோடி டாலர்கள் முதலீடு செய்ய விருப்பம் உள்ளதாக சவுதி அரசு தெரிவித்திருக்கிறது.
  • ஹஜ் யாத்திரைக்கு இந்தியாவிலிருந்து அனுமதிக்கப்படும் யாத்ரிகர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதாகவும் இளவரசர் அறிவித்திருக்கிறார்.
  • பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, சவுதி சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள 850 கைதிகளை விடுவிக்கவும் அவர் சம்மதித்தார்.
  • சவுதி இளவரசருக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்கும் வகையில் விமான நிலையத்துக்கே பிரதமர் மோடி சென்று கட்டித்தழுவி வரவேற்றார்.
  • இந்திய வருகைக்கு முன்னர் பாகிஸ்தான் சென்றிருந்த இளவரசர், பயங்கரவாதத்துக்கு எதிராக அந்நாடு எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பாராட்டியிருந்தார்.
  • பாகிஸ்தானுக்கு ஏற்கெனவே அறிவித்த 600 கோடி டாலர்களுடன் மேலும் 2,000 கோடி டாலர்கள் மதிப்புள்ள முதலீடுகளையும் அறிவித்திருந்தார்.
  • இந்நிலையில், பயங்கரவாதச் செயல்கள் தொடர்பாக இந்தியா – சவுதி அரேபியா இடையிலான கூட்டறிக்கை வாசகத்தில் பாகிஸ்தானைக் கண்டிக்கும் வகையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
  • பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக எந்த நாடும் கடைப்பிடிக்கக் கூடாது எனும் துணைப் பிரிவு சேர்க்கப்பட்டிருப்பது ஒரு ஆறுதல்.
  • இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினைகள் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் கூட்டறிக்கை அங்கீகரித்திருக்கிறது.
  • 2010-ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்திய-சவுதி உறவுகள் வலுப்பட்டன.
  • வியூகரீதியாக கூட்டு சேர்ந்து செயல்படும் அளவுக்கு ரியாத் பிரகடனம்கூட வெளியானது. பிறகு, சவுதி மன்னர் சல்மான் 2014-ல் இந்தியாவுக்கு வந்தார்.
  • பிரதமர் நரேந்திர மோடி 2016-ல் சவுதிக்குச் சென்றார். இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்பதை சவுதி ஏற்கும் என்ற எதிர்பார்ப்பு இந்தியாவுக்கு இருந்தது.
  • ஆனால், பாகிஸ்தானுடனான தனது உறவு இந்திய உறவை எந்த வகையிலும் பாதித்துவிடக் கூடாது என்பதில் சவுதி எச்சரிக்கையாகவே நடந்துவருகிறது.
  • ஆகவே, பாகிஸ்தான் விஷயத்தில் சவுதிக்கு அழுத்தம் தருவது இந்தியாவுக்குச் சாத்தியமில்லை.
  • பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துவதே உடனடியாகச் செய்ய வேண்டிய முக்கியப் பணி!

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories