TNPSC Thervupettagam

பந்திப்பூர் எச்சரிக்கை!

February 28 , 2019 1906 days 1218 0
  • பந்திப்பூர் வனப்பகுதியில் பரவியிருக்கும் காட்டுத் தீ கடந்த ஆறு நாள்களாக கட்டுக்கடங்காமல் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
  • இந்தியாவிலுள்ள தலைசிறந்த புலிகள் சரணாலயம் அமைந்திருக்கும் வனப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் காடுகள் சாம்பலாகியிருக்கின்றன.
  • காட்டிலுள்ள மரங்கள் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான பறவைகள், சிறு மிருகங்கள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்டவற்றின் குட்டிகள், ஏனைய விலங்குகள் என்று காட்டுத் தீயால் கபளீகரம் செய்யப்பட்டிருப்பவை ஏராளம் ஏராளம்.
  • தங்களது இருப்பிடங்களிலிருந்து இடம் பெயர்ந்து தப்பியிருக்கும் பறவைகளும் மிருகங்களும் அதிர்ஷ்டம் செய்தவை.
  • கடந்த வெள்ளிக்கிழமைதான் பந்திப்பூர் வனப்பகுதியில் காட்டுத் தீ பரவி வருவது தெரியவந்தது.
  • இந்திய வனக் கண்காணிப்புத் துறை, விண்கோள் தகவல்படி பந்திப்பூர் வனப்பகுதியில் காட்டுத் தீ பரவுவதை உணர்ந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு  மாநில வனத்துறைக்கு தகவல் தெரிவித்தது.
  • வனத்துறை சுதாரித்துக் கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குள் நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகள் தீக்கிரையாகி விட்டிருந்தன.
  • 247 ச.கி.மீ. பரப்புள்ள பந்திப்பூர் தேசிய பூங்காவும், புலிகள் சரணாலயமும் இந்தியாவின் மிகவும் முக்கியமான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி.
  • கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இங்கே 400-க்கும் அதிகமான புலிகள் இருப்பதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது.
  • இந்தியாவிலுள்ள பெரும்பாலான யானைகள் இந்த வனப் பகுதியில்தான் காணப்படுகின்றன.
  • அழிந்து வரும் பல விலங்கினங்கள் பந்திப்பூர் வனப்பகுதியில் இருப்பவை.
  • அதனால்தான் பந்திப்பூர்  வனப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீ சூழலியல்வாதிகளையும், வனவிலங்குப் பாதுகாவலர்களையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியிருக்கிறது.
  • கர்நாடகத்திலுள்ள பந்திப்பூர் தேசிய பூங்காவும், நாகர்ஹோலே தேசிய பூங்காவும், தமிழ்நாட்டிலுள்ள முதுமலை பகுதியையும், கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியையும் ஒட்டியிருப்பவை.
  • இந்தியாவின் மிகப் பெரிய வனப்பகுதியை உள்ளடக்கியவை. கடந்த சில நாள்களாகவே கடுமையான வெயில் காணப்பட்டதாலும், பலமான காற்று வீசுவதாலும் அசுர வேகத்தில் காட்டுத் தீ பரவி கடந்த ஆறு நாள்களில் 3,000-த்துக்கும் அதிகமான ஹெக்டேர் வனப்பகுதியை சாம்பலாக்கி இருக்கிறது.
  • தீயை அணைப்பதற்குப் போதுமான தண்ணீர் வசதி அந்தப் பகுதியில் இல்லாமல் இருந்ததும் அதற்கு ஒரு முக்கியமான காரணம்.
  • பந்திப்பூர் வனப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீ உருவானதற்கு தட்பவெட்ப நிலை மட்டுமே காரணமல்ல என்று தெரியவந்திருக்கிறது. வேண்டுமென்றே பழிவாங்கும் எண்ணத்துடன் பந்திப்பூர் வனப்பகுதி தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.
  • கர்நாடக வனத்துறையினர் ஆண்டுதோறும் கோடைக் காலத்திற்கு முன்பாக உள்ளூர்வாசிகளை தீ கண்காணிப்பு ஊழியர்களாக தற்காலிகப் பணிக்கு நியமிப்பது வழக்கம். பந்திப்பூர் வனத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வனத் தீ கண்காணிப்பாளர் என்று 10 பேர் நியமிக்கப்படுவர்.
  • அவர்களுக்கு வனத்துறை நாள்தோறும் ரூ.320 ஊதியம் வழங்கும். வனப் பகுதியில் தீ ஏற்பட்டால் உடனடியாக அது குறித்துத் தகவல் தெரிவிப்பதும், காட்டுத் தீயை அணைப்பதும்தான் அவர்கள் பணி.
  • இந்த ஆண்டு இன்னும் தீ கண்காணிப்பு  ஊழியர்கள் நியமிக்கப்படாததால், அவர்களில் சிலர் வேண்டுமென்றே அரசை எச்சரிப்பதற்காக மூட்டிய நெருப்புதான் இப்போது காட்டுத் தீயாகப் பரவி 3,000-த்துக்கும் அதிகமான ஹெக்டேர் வனப்பகுதி சாம்பலாகியிருக்கிறது.
  • ஆயிரக்கணக்கான விலங்குகளையும், பறவைகளையும், ஊர்வனவற்றையும், லட்சக்கணக்கான பூச்சிகளையும், விலைமதிப்பில்லாத மரங்களையும் சுட்டெரித்து சாம்பலாக்கி இருக்கிறது.
  • காட்டுத் தீக்குக் காரணம் எதுவாக இருந்தாலும் இப்போது ஏற்பட்டிருக்கும் இழப்பை மீட்டெடுக்க குறைந்தது கால் நூற்றாண்டு காலமாகும் என்பதுதான் வேதனையிலும் வேதனை.
  • இந்தியாவின் காடுகள் மிகப்பெரிய பொக்கிஷங்கள். சுயநலவாதிகள் ஆளுக்குஆள் அதிலிருந்து ஆதாயம் பெறத் துடிக்கிறார்கள். சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல், கனிம வளங்களைத் தோண்டி எடுத்தல், வனங்களை ஆக்கிரமித்துத் தோட்டங்களாக்குதல் என்று இந்தியாவின் வனச் செல்வங்கள் கொள்ளை போகின்றன.
  • ஆக்கிரமிப்பாளர்களையும் உண்மையான காட்டுவாசிகளாக இல்லாதவர்களையும் வெளியேற்ற உச்சநீதிமன்றம் முற்பட்டால், அரசியல் கட்சிகளும் ஆட்சியிலிருப்பவர்களும் அதிகாரிகளும் அந்தத் தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்கின்றனர்.
  • உண்மையான வனப்பகுதியினருக்கு அங்கே வசிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டுமானால், அதிகார வர்க்கம் அகற்றி நிறுத்தப்பட வேண்டும். அது நடக்கப்போவதில்லை, அதனால், வனங்கள் சூறையாடப்படுவதும் தடுக்கப்படப் போவதில்லை.
  • அன்றைய இந்திரா காந்தி அரசு கானுயிர் பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வந்தது.
  • ஆனால், அதே கட்சியைச் சேர்ந்த மன்மோகன் சிங் அரசு 35 ஆண்டுகளுக்குப் பிறகு வன உரிமைச் சட்டத்தை இயற்றியது.
  • இவை ஒன்றுக்கொன்று முரணானவையாக இருப்பதால் ஏற்பட்டிருக்கும் குழப்பம்தான் வனங்கள் சூறையாடப்படுவதற்கு மிக முக்கியமான காரணம்.
  • வனப் பாதுகாப்பைப் பொருத்தவரை, தற்காலிகத் தீர்வுகளை ஏற்படுத்த முற்படுகிறோமே தவிர, நிரந்தரத் தீர்வு காண யாரும் தயாராக இல்லை.
  • தேசிய வனவிலங்கு ஆணையம் என்கிற அமைப்பு கூடியே பல வருடங்கள் ஆகிவிட்டன.
  • இந்தப் பின்னணியில்தான் இப்போது பந்திப்பூரில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீ,  பேரழிவை ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
  • இன்றைய தலைமுறை மனித இனத்தை இயற்கை மன்னிக்காது!

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories