TNPSC Thervupettagam

5ஜி எப்படியிருக்கும்

October 3 , 2022 568 days 432 0
  • இந்தியா அடுத்ததாக ‘5ஜி’ யுகத்தில் அடியெடுத்து வைக்கிறது. முந்தைய தலைமுறைத் தொழில்நுட்பத்திலிருந்து ஐந்தாம் தலைமுறைத் தொழில்நுட்பம் எந்த வகையில் மேம்பட்டது? அது கொண்டிருக்கும் கட்டமைப்பு மற்றும் சேவைகள் வேறுபாடுகள் என்னென்ன? பார்ப்போம்!
  • செல்பேசி தொழில்நுட்பம் ஒவ்வொரு தசாப்தத்திலும் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுவருகிறது. அப்படி அடைந்துவந்திருக்கும் ஐந்தாம்கட்ட வளர்ச்சி இது. 

1ஜி நெட்வொர்க்

  • 1ஜி கட்டமைப்பு என்பது 1980களில் முதன்முதலாக செல்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோது செல்பேசிக் கட்டமைப்புக்காக ஏற்பட்ட தொழில்நுட்பம். இது ஒரு தொடரிசை (Analog) வகையைச் சேர்ந்தது.  ‘எஃப்டிஎம்ஏ’ (FDMA -Frequency Division Multiplexing) என்றும் ‘ஏஎம்பிஎஸ்’ (AMPS -Advanced Mobile Phone System) என்றும் இத்தொழில்நுட்பத்தைக் கூறுவார்கள். இந்தத் தொழில்நுட்பத்தின்படி நாம் செல்பேசி வழியாக மட்டுமே பேச முடியும். குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) போன்ற சேவைகள்கூட இந்தத் தொழில்நுட்பத்தில் கிடையாது.

2ஜி நெட்வொர்க்

  • 2ஜி கட்டமைப்பு என்பது 1990களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. எண்ணியல் (Digital) வகைமையைச் சேர்ந்தது. இது ‘டிடீஎம்ஏ’ (TDMA -Time Division Multiplexing) மற்றும் ‘சிடிஎம்ஏ’ (CDMA -Code Division Multiplexing) என்னும் தொழில்நுட்பத்தில் இயங்குவது. இதன் மூலம் செல்பேசியில் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளை செல்பேசியில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக குறுஞ்செய்தி, செல்பேசுபவர்களின் செல்பேசி எண் (Caller Id) போன்ற சேவைகளைப் பெறலாம். இந்தியாவில் 1990களின் மத்தியில் 2ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் செல்பேசி சேவை தொடங்கப்பட்டது.

2.5ஜி நெட்வொர்க்

  • 2.5ஜி தொழில்நுட்பத்தில் முதன்முதலாக தகவல் பெட்டகம் (Packet) என்ற கட்டமைப்பு சேர்க்கப்பட்டது. இதனால், செல்பேசி வழியாக இணையம் (E-mail, Internet) சேவைகளை வழங்க முடிந்தது.

3ஜி நெட்வொர்க்

  • 2.5ஜி தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் பெட்டகம் (Packet) கட்டமைப்பின் வேகம் காணொளி மற்றும் அகன்ற அலைவரிசை (Broadband) செயலிகளுக்குப் போதுமானதாக இல்லை. எனவே, இந்த 3ஜி தொழில்நுட்பத்தில் அகன்ற அலைவரிசை வேகம் அதிகரிக்கப்பட்டது. 3ஜி கட்டமைப்பு 2003 காலகட்டத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

4ஜி நெட்வொர்க்

  • 4ஜி கட்டமைப்பு தொழில்நுட்பம் 2011 காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முக்கிய அம்சம், அதிவேக அகன்ற அலைவரிசை சேவை (High Speed Mobile Broadband). அதேசமயம், குரல் (Voice) மற்றும் தரவு (Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்புதான்.

5ஜி நெட்வொர்க்

  • 5ஜி கட்டமைப்பு தொழில்நுட்பம் கீழ்க்கண்ட முக்கிய சேவைகளைக் கொடுப்பதற்காக வடிமைக்கப்பட்ட தொழில்நுட்பம்.
  • அதிவேக அகன்ற அலைவரிசை சேவை (Ultra High Speed Mobile Broadband, 1GPS to 20 GPS Speed), அவசர கால நெருக்கடியான சேவைகளை (Mission Critical Applications) மிகக் குறைந்த நேரத்தில் கொடுத்தல் (Less than 1 msec latency), ஒரு சிறிய இடத்திலிருக்கும் ஆயிரக்கணக்கான 5ஜி மற்றும் ஐஓடி (IoT -Internet of Things) சாதனங்களுக்கு சேவைகளை வழங்குதல் (High Density Connectivity).
  • இந்த 5ஜி அலைவரிசையானது, 3 முதல் 300 ஜிஹெச்ஸெட் (GHZ) அலைவரிசையில் சிடிஎம்ஏ (CDMA -Code Division Multiple Access) / பிடிஎம்ஏ (BDMA -Beam Division Multiple Access) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.
  • 4ஜி கட்டமைப்பு வரை செல்பேசி இணைப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் இயந்திரங்கள் ஒவ்வொரு செயலைச் செய்வதற்கும் இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கணினியில் இயங்கின. ஆனால், 5ஜி கட்டமைப்பில் செல்பேசி இணைப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் இயந்திரங்கள் கற்பனையான கணினி (Virtualization) தொழில்நுட்பத்தில் இயங்கும். இதனால் 5ஜி கட்டமைப்பை நிறுவுவதற்குத் தேவையான இயந்திரங்களை வாங்கும் செலவு (Capital Expenses) மற்றும் இந்த கட்டமைப்பைப் பராமரிப்பதற்கான செலவும் (Operational Expenses) குறைவு.
  • தற்போது தனித் தனியாக இயங்கிக்கொண்டிருக்கும் பல்வேறு கணினி கட்டமைப்புகளின் தரவுகள் (Data) அனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து 5ஜி மைய கட்டமைப்பின் (Core Network) மூலம் கொண்டுசெல்ல முடியும். இதனால், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செலவு அதிக அளவில் குறையும்.
  • 5ஜி கட்டமைப்பில் மிக முக்கியமான கட்டமைப்பு பங்கு (Network Sliceing) எனும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4வது தலைமுறைக் கட்டமைப்பு வரை ஒரு தகவல் பெட்டகம் (Data Packet) அதிமுக்கியமான தகவலைக் கொண்டுசெல்கிறதா  அல்லது சாதாரணமான தகவலைக் கொண்டுசெல்கிறதா என்பதைக் கண்டறிந்து முக்கியமான தகவலுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து தனிப் பாதையில் கொண்டுசெல்லும் வழி கிடையாது. ஆனால், 5ஜியில் கட்டமைப்பு பங்கு (Network Slicing) தொழில்நுட்பம் வழியாக மிக முக்கியமான தகவல் பெட்டகங்களைக் கண்டறிந்து அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள தனிப் பாதைகளில் எந்தவிதமான போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் கொண்டுசேர்க்க முடியும்.
  • ஓர் உதாரணமாக, மருத்துவர் ஒருவர் 5ஜியில் இயங்கும் தொலைதூர மருத்துவம் (Telemedicine) செயலி மூலம் தொலைதூரத்தில் அறுவை சிகிச்சை செய்யும் இயந்திர மனிதனுக்கு (Robotic Surgery) கொடுக்கும் தகவல் பெட்டகங்கள் (Data Packets) ஒருவர் பார்க்கும் யூட்யூப் வீடியோ தகவல் பெட்டகங்களைவிட அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தனிப் பாதையில் எவ்விதப் போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டுசெல்லப்படும்.

5ஜி சேவைகள்

  • 5ஜி கட்டமைப்பின் பயனாளர்களுக்குப் பல்வேறு புதிய சேவைகளைக் கொடுக்கப்போகிறது. இதனால், வருங்காலத்தில் நாம் அறிவியல் புனைவுப் படங்களில் பார்த்தது போன்ற வாழ்க்கைமுறையை இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் வாழப்போகிறோம். 5ஜி சேவைகளில் சிலவற்றைக் காண்போம்; ‘முழுமைப் படிம அழைப்பு’ (Hologram Call), ‘தொலைத்தூர மருத்துவம்’ (Telemedicine), ‘தானியங்கி ஊர்திகள்’ (Self Driving Vehicles), ‘பெருந்துயர் மீட்புப்பணி இயந்திர மனிதர்கள்’ (Disaster Recovery Robots), ‘அறிவுத்திறன் வீடு’ (Smart Home), ‘அறிவுத்திறன் நகரம்’ (Smart City), ‘அறிவுத்திறன் வேளாண்மை’ (Smart Agriculture), ‘அறிவுத்திறன் தொழிற்சாலைகள்’ (Smart Industry), ‘மெய்நிகர் உண்மை’ (Virtual Reality), ‘அதிகப்படுத்தப்பட்ட உண்மை’ (Augmented Reality)

நன்றி: அருஞ்சொல் (03 – 10 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories