TNPSC Thervupettagam

அகழாய்வுப் பணிகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்த அறிவிப்பு பற்றிய தலையங்கம்

March 3 , 2022 796 days 395 0
  • "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி' என்கிற தமிழர் நாகரிகம் குறித்த கருத்தை உறுதிப்படுத்துவதாக அமைகின்றன தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அகழாய்வுப் பணிகள்.
  • கீழடி வெளிப்படுத்தியிருக்கும் பல ஆச்சரியமான தரவுகள் உலக அளவில் வரலாற்று ஆய்வாளர்களை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கின்றன.
  • தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், அதுவும் தென் தமிழகத்தில் மிகத் தொன்மையான பழம்பெரும் நாகரிகம் ஒன்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது என்கிற பேருண்மை உறுதிப்பட்டிருக்கிறது.
  • கீழடி, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை உள்பட ஏழு இடங்களில் தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
  • எந்தவிதத் தொய்வும் இல்லாமல் அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டால்தான், புதிதாகக் கிடைக்கும் தரவுகள் முறையாக சேகரிக்கப்பட்டு, ஆராய்ச்சிகள் தொடர முடியும் என்பதால் முதல்வரின் முனைப்பும், தமிழக அரசின் தேர்ந்த முடிவும் வரவேற்புக்குரியவை.
  • ஏற்கெனவே தமிழகத்தின் நான்கு இடங்களில் அகழாய்வுப் பணிகள் வெவ்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.
  • சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழு கட்டங்களும், தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் இரண்டு கட்டங்களும், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் முதல் கட்டமாகவும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
  • கீழடியில் எட்டாம் கட்டமாகவும், சிவகளையில் மூன்றாம் கட்டமாகவும் அகழாய்வுப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
  • அகழாய்வுப் பணிகள் புதிய பல வரலாற்று உண்மைகளை வெளிச்சம் போடுகின்றன.
  • கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் தமிழக அரசின் தொல்லியல் துறை நடத்திவரும் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைத்திருக்கும் சான்றுகளும் அடையாளங்களும் ஆய்வாளர்களை தமிழகத்தின் தொன்மை குறித்து வியப்படைய வைத்திருக்கின்றன.

தமிழினத்தின் தொன்மை!

  •  கீழடியில் நடைபெற்று வரும் ஆய்வுப் பணிகள் வெளிப்படுத்தியிருக்கும் பேருண்மை, சாதாரணமானதல்ல.
  • "தமிழி' என்று அழைக்கப்படும் தமிழ் பிராமி எழுத்துகள், பண்டைத் தமிழர்களால் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டன.
  • பிராமி எழுத்துமுறை என்பது தெற்காசியாவில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து வழக்கில் இருப்பதாகத்தான் இதுவரை கருதப்பட்டு வந்தது. மெளரிய பேரரசின் சக்கரவர்த்தி அசோகர் கால கல்வெட்டுகள் பிராமி எழுத்துகளால் ஆனவை. அவற்றின் காலம் 250-232 கி.மு.
  • தமிழகத்திலுள்ள சிவகங்கை மாவட்டம் கீழடி, ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், திண்டுக்கல் மாவட்டம் பொருந்தாள், புதுவையிலுள்ள அரிக்கமேடு உள்ளிட்ட 79 இடங்களில் காணப்படும் 1,571 "தமிழி' கல்வெட்டுகள் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியிருக்கின்றன. ஏனென்றால், அவை அசோகர் காலத்துக்கு முற்பட்டவை.
  • 1882-இல் மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகிலுள்ள மாங்குளம் என்கிற இடத்தில் ராபர்ட் செவல் என்கிற ஆங்கிலேயர், பிராமி எழுத்துகள் குகையில் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்.
  • நீண்டகாலமாக அவை ப்ராகிருதம் மொழியிலானவை என்றுதான் கருதப்பட்டு வந்தது. 1924-இல் கே.வி. சுப்பிரமணிய ஐயர் என்கிற கல்வெட்டு ஆய்வாளர்தான் முதன்முதலில் அவை தமிழில் எழுதப்பட்ட பிராமி எழுத்துகள் என்று கண்டுபிடித்தார்.
  • ப்ராகிருத பிராமி வேறு, தமிழ் பிராமி வேறு என்பது அப்போதுதான் தெரிய வந்தது. தமிழ் பிராமியை "தமிழி' என்று அழைக்கத் தொடங்கினார்கள்.
  • பிராமி எழுத்துக்களின் தொடக்கம் குறித்த சர்ச்சை நீண்டநாள்களாகவே நிலவி வருகிறது. கல்வெட்டு ஆய்வாளர்களான ஐராவதம் மகாதேவன், சுப்பராயலு, நடன காசிநாதன், ராஜவேலு ஆகியோர் இதுகுறித்து பல ஆய்வுகளை நடத்தியிருக்கிறார்கள்.
  • பிராமி எழுத்துதான் இந்தியாவில் மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வழக்கிலுள்ள பெரும்பாலான மொழிகளின் எழுத்து வடிவத்துக்கு ஆதாரம் என்று கூறப்படுகிறது.
  • அசோகரின் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பிறகு இந்த எழுத்துகள் அவை ப்ராகிருத மொழியில் இருந்ததால் ப்ராகிருத பிராமி என்று அழைக்கப்பட்டன.
  • கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழி எழுத்துகளைக் கரிம பகுப்பாய்வின் மூலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டை சார்ந்தவை என்று ஆய்வாளர்கள் நிறுவ முற்பட்டனர்.
  • அதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இரண்டு கரிம மாதிரிகளின் பகுப்பாய்வு முடிவுகள் அமைந்திருக்கின்றன.
  • கொற்கையில் கிடைத்த பொருள்கள் அங்கே கி.மு. எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பாகவே துறைமுகம் இருந்ததைத் தெரிவிக்கின்றன.
  • இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தமிழர் நாகரிகம் என்பது உலகின் மிகப் பழைமையான நாகரிகம் என்பதும், "கார்பன் டேட்டிங்' எனப்படும் கரிமத் தொன்மை ஆய்வின் மூலம் தாமிரவருணி நாகரிகம் 3,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும் புதிய தெளிவுகள் பிறந்திருக்கின்றன.
  • தமிழர் நாகரிகத்தின் தொன்மையை நிர்ணயிக்கும் வகையிலான ஆய்வுகளுக்கு முன்னுரிமை வழங்கியிருக்கும் முன்னெடுப்புக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு நன்றி சொல்ல தமிழகம் கடமைப்பட்டிருக்கிறது.
  • எப்போதோ முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டிய முயற்சி. முதல்வராக மு.க. ஸ்டாலினின் வரவுக்கு இத்தனை காலம் காத்திருந்தது போலும்!

நன்றி: தினமணி (03 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories