TNPSC Thervupettagam

அசோகர் ஓர் எளிய அறிமுகம்

March 6 , 2022 804 days 465 0

அசோகரின் தம்மம்

  • தம்மம் கைகொள்வதற்குக் கடினமாக இருப்பதற்குக் காரணம் அதற்கான தடை உள்ளுக்குள் அமைந்திருப்பதுதான் என்று அறிவிக்கிறார் அசோகர். தன் சொந்த அனுபவத்திலிருந்து அவர் அறிந்த உண்மை அது. தம்மம் நம்மிடமிருந்து அடிப்படை மாற்றத்தை எதிர்பார்க்கிறது. மிக முக்கியமாக, தியாகத்தைக் கோரி நிற்கிறது.
  • இறைச்சியின் சுவையை மறுக்கும் துணிவுகொண்டவர்களால் மட்டுமே கொல்லாமையை உளப்பூர்வமாக ஏற்கமுடியும். வெறுப்பையும் பகையையும் முற்றாகக் களைந்தெடுக்க முன்வருபவர்களால் மட்டுமே சக உயிர்களை மெய்யான கருணையோடு அணுகமுடியும். ‘நீங்கள் எளியவர் என்றால் தம்மத்தை ஏற்பதும் எளிதாக இருக்கும். பெரிய மனிதர் என்றால் கூடுதலாகப் பாடுபடவேண்டும்’ என்கிறார் அசோகர். 
  • அசோகர் அவர் காலத்தின் செல்வாக்குமிக்க, பலமிக்க பெரிய மனிதர் என்பதால் அவருடைய மனப்போராட்டங்களும் பெரியவையாகவே இருக்கும். அசோகரின் கல்வெட்டுகளைக் காலவரிசைப்படுத்தி வாசிக்கும்போது படிப்படியாக அவர் தம்மத்தின் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே செல்வதையும் எது தம்மம் என்பதற்கான வரையறையைச் சிறிது, சிறிதாக அவர் வளர்த்துக்கொண்டே செல்வதையும் காணமுடிகிறது. 
  • எத்தகைய மனப்போராட்டங்களுக்கு மத்தியில் அவர் இதையெல்லாம் செய்தார் என்பதை ஒருபோதும் நாம் அறிந்துகொள்ள இயலாது. ஆனால், இறுதிவரை அவர் மனநிறைவு பெறவேயில்லை என்று சொல்லமுடியும். கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் பாரிய இடைவெளி விழுந்து கிடந்ததை அவர் அவ்வப்போது கவனித்துக்கொண்டே இருந்தார். கனவு விரிய, விரிய இடைவெளியும் பெருகிக்கொண்டே செல்வதைக் கண்டு நிச்சயம் அவர் வருந்தியிருக்கவேண்டும். ஆனால், அந்த வருத்தம் அவர் மேற்கொண்டு கனவு காண்பதைத் தடுத்து நிறுத்தியதாகவே தெரியவில்லை. 
  • என் ஆட்சிக்கு உட்பட்ட ‘அனைத்து இடங்களிலும் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் வாழவேண்டும்’ என்று 7ஆம் பெரும்பாறைக் கல்வெட்டில் சொல்கிறார் அசோகர். இங்கே அசோகர் உணர்த்துவது சமயப் பிரிவை. நாம் அனைவரும் ஒரே சமய நம்பிக்கையைப் பின்பற்றவேண்டும் என்று அவசியமில்லை.
  • நம் பார்வைகளில் முரண்பாடுகள் இருக்கலாம். நம் கடவுள்கள் மாறுபட்டவர்களாக இருக்கலாம். அதன் பொருள் நாம் தனித்தனி வளையங்களுக்குள் சுருங்கிக்கொள்ளவேண்டும் என்பதல்ல. முரண்பட்டவர்களாலும் அருகருகில் வாழமுடியும். ‘சுயகட்டுப்பாட்டோடும் தம்மத்தைக் கடைபிடித்தும்’ வாழமுடியுமானால் யாரும் யாரோடும் இணைந்து வாழமுடியும்; பூசல்களுக்கு இடமிருக்காது என்கிறார் அசோகர்.
  • அனைத்துப் பிரிவுகளும் ஓரிடத்தில் சேர்ந்து வாழவேண்டும் என்று சொல்லவில்லை அவர். எந்தவொரு பகுதியும் அது இன்னாரின் பகுதி என்று அறியப்படக் கூடாது என்பதால் ‘அனைத்து இடங்களிலும்’ அனைத்துப் பிரிவு மக்களும் வாழவேண்டும் என்கிறார். என் நிலத்தை ஏதேனும் ஒரு பெயரிட்டு அழைக்கவேண்டுமானால் அதை ‘வேறுபாடுகளின் நிலம்’ என்று அழைக்கலாம் என்பார் அசோகர். எங்கு சென்றாலும் அங்கு வேறுபாடுகளின் தொகுப்பைக் காணலாம். அந்தத் தொகுப்பில் ஒற்றுமை இருக்கும். அமைதி இருக்கும்.
  • அசோகரின் சொற்கள் இவை. ‘மன்னர் தேவனாம்பிய பியதசி (அசோகர்) எல்லாப் பிரிவுகளையும் சமமாக மதிக்கிறார். துறவிகளையும் குடும்பத்தினரையும் மதித்துப் போற்றுகிறார். பலவிதங்களில் அவர்களைக் கௌரவப்படுத்துகிறார். பரிசும் புகழும் அவருக்கு முக்கியமல்ல. எல்லாச் சமயங்களைச் சேர்ந்தவர்களிடமும் தம்மம் தழைக்கவேண்டும். தம்மம் வேர்கொள்ளவேண்டும் என்பதே அவர் விருப்பம். நாவடக்கம் முக்கியம். நாவை அடக்குவது எல்லாவற்றுக்கும் வேர் போன்றது. மற்றவர்களோடு பேசும்போது எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்’. 
  • இங்கே நாவடக்கத்தின்மீது குறிப்பாக அசோகர் ஏன் இவ்வளவு கவனம் செலுத்தவேண்டும்? எழுத்துப் பரவலாகாத காலகட்டம் என்பதால் அசோகர் கல்வெட்டுகளை மக்களிடம் வாசிக்க வைத்தார் என்று ஏற்கெனவே பார்த்தோம். கல்வெட்டுமேகூட, தேவனாம்பிய பியதசி இவ்வாறு பேசுகிறார் என்றே பெரும்பாலும் தொடங்குவதையும் பார்த்தோம். பேச்சின் இன்னொரு முகத்தையும் அசோகர் அறிந்து வைத்திருந்தார் என்பதையே மேலுள்ள வரிகள் நமக்குக் காட்டுகின்றன. பேசும்போது கவனமாக இருங்கள்.
  • உங்கள் சொற்களை எச்சரிக்கையோடு கையாளுங்கள் என்று மக்களிடம் அவர் விண்ணப்பித்துக்கொள்கிறார். எனில், மக்களை மலையுச்சிக்குக் கொண்டுசென்று கீழே உருட்டித்தள்ளும் சக்தி பேச்சுக்கு இருந்திருக்கவேண்டும். அல்லது வெறுப்பும் பகையும் ஏற்கெனவே மக்களை மலையுச்சிக்குக் கொண்டு சென்று நிறுத்தியிருந்த நிலையில், நாவை அடக்கத் தவறினால் நிலைமை விபரீதமாகிவிடும் என்று அசோகர் அஞ்சியிருக்கவேண்டும்.
  • கடவுள், சமயம், கோட்பாடு என்று மூலைக்கு மூலை பிரிந்து, கடுமையான வாதப்போர்களிலும் மோதல்களிலும் மக்கள் ஈடுபட்டுவந்திருப்பதைக் கண்டு அசோகர் கவலைகொண்டிருக்கவேண்டும். பிராமணரும் சிரமணரும் ஒன்று என்று அவர் வேண்டுமானால் கருதியிருக்கலாம். மக்கள் அனைவரும் அதே அளவுக்குத் தாராளமாக இருந்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது.
  • மன்னரின் மதம்தான் எங்களுடையது என்னும் பெருமித உணர்வு பௌத்தர்களிடம் இருந்திருக்கலாம். மன்னரின் மதமாக இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் வேதங்களை ஏற்பவர்கள் என்று பிராமணர்கள் வாதிட்டிருக்கலாம். கோட்பாட்டளவில் பௌத்தத்துக்கும் சமணத்துக்கும் இடையில் ஒற்றுமைகள் இருக்கலாம். அந்த ஒற்றுமை பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் இடையிலும் நிலவியாகவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. 
  • வேதங்களை ஏற்றவர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் திரண்டிருந்தனர் என்றும் சொல்ல முடியாது. விமரிசையான, விரிவான சடங்குகளில் ஈடுபட்டவர்களை, சடங்குகள் வேண்டியதில்லை என்று வாதிட்டவர்கள் எதிர்த்தனர். வேதக் கடவுள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்களோடு ‘கர்மா’தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது, கடவுள்கள் அல்லர் என்று நம்பியவர்கள் முரண்பட்டனர். 
  • வேதகாலத்துக்கு முந்தைய சமய, தத்துவ நம்பிக்கைகளை உயர்த்திப் பிடித்தவர்களும் இருந்தனர். அவர்கள் வேத நம்பிக்கைகளை ஏற்க மறுத்தனர். ரிக் வேதத்துக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை உபநிடத்தைப் போற்றியவர்கள் எதிர்த்தனர். குடும்பத்தினருக்கும் துறவு பூண்டவர்களுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டிருந்தது. புத்தர் எங்கிருந்தோ ஒரு புயல்போல் உள்ளே நுழைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
  • அதுவரை வலுவாக இருந்த மதிப்பீடுகளை, செல்வாக்குப் பெற்றிருந்த தத்துவப் பார்வைகளை, வழக்கத்திலிருந்த சடங்குகளைக் கூர்மையான கேள்விகளால் குத்தினார், குலைத்துப்போட்டார். எல்லாத் தத்துவப் பள்ளிகளோடும் பௌத்தர்கள் வாதிட்டனர். சமணமும் ஆசீவகமும் சார்வாகமும் இன்னபிற சிந்தனைகளும் துடிப்போடு கிளம்பின. மரபுகள் மேலதிக ஆவேசத்தோடு எதிர்க்கப்பட்டன. மரபாளர்கள் தங்களை மேலும் பலப்படுத்திக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். கடும் அனல் மூண்டது. 
  • பௌத்தம் அறத்தை முன்னிறுத்தியது. மனிதன் சக மனிதனோடும் பிற உயிர்களோடும்கொண்டிருந்த உறவைப் புதிய கண்களைக்கொண்டு பார்த்தது பௌத்தம். புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தவும் துடித்தது. அந்த மாற்றங்கள் எதிர்ப்புகளைச் சந்தித்தன. சத்திரியர்களால் அகிம்சையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்படியொன்று ஏன் தேவை என்பதை அவர்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. 
  • சமயம், தத்துவம், ஆன்மிகம் போன்ற தளங்களில் மட்டும்தாம் எதிர்ப்புகளும் மோதல்களும் நிகழ்ந்தன என்று சொல்ல முடியாது. போரை வாழ்வின் ஒரு பகுதியாகக்கொண்டவர்களை, போரால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்த்தனர். விலங்குகளைக் கவர்ந்து செல்லும் வழக்கம் கொண்டவர்களை மேய்ச்சல் நிலத்து மக்கள் எதிர்த்தனர்.
  • விலங்குகளைப் பலியிடும் வழக்கம் உச்சத்தைத் தொட்டது. போரில் வெற்றிபெறவேண்டும் என்பது தொடங்கி எண்ணற்ற சமயச் சடங்குகளை முன்னிட்டு பலவிதமான விலங்குகள் பலியிடப்பட்டன. கால்நடைகளோடு இணைந்து வாழ்ந்து, அவற்றிலிருந்து பலன் பெற்றுவந்தவர்கள் பலியிடும் சடங்குகள் இல்லாது போகவேண்டும் என்று விரும்பினர். 
  • ஒரு பிரிவின் உரிமை இன்னொரு பிரிவின் உரிமை மீறலாக இருந்தது. ஒரு பிரிவின் சுதந்திரம் இன்னொன்றால் அச்சுறுத்தப்பட்டது. ஒரு நம்பிக்கையை இன்னொன்று மூர்க்கமாக எதிர்கொண்டது. நம்பிக்கை நம்பிக்கையின்மையோடு உரசியது. போர் அமைதியையும் அமைதி போரையும் வெறுத்தது. ஒரு கடவுளை இன்னொன்றோடு மோதவிட்டனர். ஒரு தத்துவப் பள்ளி இன்னொன்றோடு பகை பாராட்டியது.
  • இவர்களில் சிலர் தங்களுக்குள் திரண்டு தம்மைவிட வலுவான ஒரு தத்துவத்தை, ஒரு கடவுளை, ஒரு கோட்பாட்டை எதிர்த்தனர். ஆதிக்கம் எதிர்க்கப்பட்டது. பெரியது சிறியதை நசுக்கிவிட விரும்பியது. சிறியது மேலும் மேலும் வளரவும் மேலும் மேலும் பலம்பெறவும் துடித்தது. நாம் ஏற்கெனவே பார்த்தபடி வனங்களில் வசித்துவந்த பழங்குடிகள் அசோகருக்கு நேரடியான அச்சுறுத்தலைத் தோற்றுவித்தனர். அவர்களைச் ‘சமூக ஒழுங்குக்குள்’ கொண்டுவருவதற்கு அரசு மேற்கொண்ட முயற்சிகள் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தன. முரண்களும் வேறுபாடுகளும் மோதல்களும் வனம், கிராமம், நகரம் என்று எல்லா இடங்களிலும் பரவியிருந்தன. 
  • எனவே சொற்களை எச்சரிக்கையோடு கையாளுங்கள் என்று அசோகர் மன்றாடினார். உங்களுக்கு உங்கள் கடவுள், உங்கள் கோட்பாடு, உங்கள் நம்பிக்கை பெரியதாக இருக்கலாம். அதை முன்னிறுத்தி இன்னொரு பிரிவினரோடு மோதாதீர்கள். உங்களிடமிருந்து மாறுபட்டுச் சிந்திக்கும் ஒரே காரணத்துக்காக அவர்களை இகழாதீர்கள். அவர்கள் சடங்குகளை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதற்காக அவர்களைத் தாக்காதீர்கள்.
  • அவர்கள் செயல்பாடுகள் உங்கள் மதிப்பீடுகளோடு ஒத்துப்போகவில்லை என்பதற்காக அவர்களை உங்கள் வாழ்விடத்திலிருந்து விரட்டாதீர்கள். உங்களோடு ஒத்துப்போகும் கூட்டத்தோடு மட்டும் சேர்ந்து வாழ்வதால் உங்கள் நம்பிக்கை மட்டுமே வலுவானது என்று தோன்றும். அப்படித் தோன்றும் போதே உங்கள் நம்பிக்கை தேக்கமடையவும் தொடங்கிவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள். நான், மற்றவர் எனும் பிரிவினை அபாயகரமானது. அப்படியொரு கோட்டை எங்கும் வரையாதீர்கள். அப்படியொரு கோடு வலுவடைவதை எங்கு கண்டாலும் அதைப் பாய்ந்துசென்று அழித்துத் துடையுங்கள்.
  • உங்களில் யார் பெரியவர், யார் சிறியவர் என்று நான் பார்க்கப் போவதில்லை. உங்கள் கோட்பாடுகளில் எது சரியானது, எது தவறானது என்று நான் தீர்ப்பளிக்கப் போவதில்லை. மன்னனாகிய நான் எல்லாப் பிரிவினரையும் சமமாக மதிக்கிறேன். எல்லாப் பிரிவுகளும் எனக்கு முக்கியமானவை. எல்லா நம்பிக்கைகளையும் நான் தொழுது வணங்குவேன். ஒருவரையும் இகழ மாட்டேன். ஒருவரையும் சொற்களால் தாக்க மாட்டேன். என் நம்பிக்கையை அல்லது நம்பிக்கையின்மையை எவர் மீதும் திணிக்க மாட்டேன். என் நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை என் நிர்வாகத்தில் குறுக்கிடாது பார்த்துக்கொள்வேன் என்று உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன். அதேபோல் நீங்களும்
  • எனக்கு உத்தரவாதம் அளியுங்கள். உங்கள் பெருமித உணர்வைக் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் சரி, தவறுகளை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கண்ணோட்டம் உங்களுடையது மட்டுமே. உங்கள் மதம் உங்களுடையது மட்டுமே. உங்கள் கடவுளை இன்னொருவர்மீது திணிக்காதீர்கள். முழுக் காட்டை அழிக்க ஒரு தீப்பொறி போதும். முழு நிலமும் அழிய ஒரு சொல் போதும்.
  • நம்மை மற்றவர்களிடமிருந்து எவையெல்லாம் வேறுபடுத்திக் காட்டுகின்றன என்று பார்க்காதீர்கள். நம்மை மற்றவர்களோடு எது இணைக்கிறது என்று தேடுங்கள். தேடினால், தம்மத்தை நீங்கள் அடையாளம் காணலாம். மனிதனைச் சக மனிதனோடும், மனிதனைப் பிற உயிர்களோடும், எல்லா உயிர்களையும் இந்த உலகோடும் தம்மம் இணைப்பதை நீங்கள் உணர்வீர்கள் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்கிறார் அசோகர். அனைவரும் அனைத்து இடங்களிலும் இணைந்து வாழ்வோம். அனைத்து இடங்களிலும் அமைதியை மலரச்செய்வோம். அனைத்து இடங்களிலும் தம்மம் தழைப்பதைக் காண்போம்.

அசோகரின் மதமும் மதச்சார்பின்மையும்

  • தன் சமயத்தைப் புகழ்ந்துகொள்வதையும் மற்றவர்களுடைய சமயங்கள்மீது பழி சுமத்துவதையும் ஒருவர் செய்யக் கூடாது’ என்று 12ஆம் பெரும்பாறைக் கல்வெட்டில் கேட்டுக்கொள்கிறார் அசோகர். 
  • என் சமயம் உயர்ந்தது என்பதிலிருந்துதானே பிற சமயங்கள் தாழ்வானவை என்னும் கருத்துக்கு நான் வந்துசேர்கிறேன். உங்கள் கோட்பாடுகளும் நம்பிக்கைகளும் கீழானவை என்பதன் பொருள் 
  • என் கோட்பாடும் நம்பிக்கையும் மேலானவை என்பதுதானே? உயர்வு என்றொன்று இருப்பதால்தானே தாழ்வு தோன்றுகிறது? சுயசமயப்பற்றுதான் பிற சமய வெறுப்பாகவும் வெளிப்படுகிறது. தற்பெருமை இகழ்ச்சியில் வந்துமுடிகிறது. சடங்குகளற்றது என் வாழ்க்கைமுறை என்று ஒரு சிரமணர் தன்னைப் புகழ்ந்துகொள்ளும்போது, சடங்குகளில் ஈடுபடுபவரை அவர் தன்னோடு ஒப்பிட்டு இகழ்கிறார். வேதம் உயர்ந்தது, நான் வேதத் தேர்ச்சி பெற்றவன் என்னும் அகந்தையே மரபுகளைக் கேள்வி கேட்பவர்கள்மீது பகைகொள்ளச்செய்கிறது. இகழ்தல்போல் புகழ்தலுக்கும் உன் நாவைப் பயன்படுத்தாதே என்கிறார் அசோகர்.
  • இதை அவர் பௌத்தத்துக்கும் சேர்த்தே சொல்கிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. மன்னரின் மதம்தான் எங்களுடையதும் என்னும் பெருமித உணர்வை பிக்குகளுக்கு அவர் இதன்மூலம் மறுக்கிறார். பிற சமயங்களைக் காட்டிலும் மேலானதாக பௌத்தத்தை நிறுவ வேண்டாம் என்று ஒரு பௌத்தராக அசோகர் தன் சமயத்தினரிடம் கேட்டுக்கொள்கிறார். பிராமணப் பெருமிதம் வேண்டாம். பௌத்தப் பெருமிதம் வேண்டாம். துறவுதான் மேலானது என்று சொல்ல வேண்டாம். குடும்ப வாழ்வே உயர்ந்தது என்று பீற்றிக்கொள்ள வேண்டாம். புகழ்வதை நிறுத்தினால் இகழ்வதும் நிற்கும். 
  • இரண்டுமே அறமல்ல என்பதால்தான் புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டையும் ஒரே தளத்தில் அசோகர் கொண்டுவந்து நிறுத்துகிறார். ஒரு சமயத்தின்மீது நாம் பற்று வைத்திருக்கும்போது நம்மால் நடுநிலையோடு இன்னொரு சமயத்தை அணுக இயலாமல் போகிறது. இந்த இயலாமைதான் இகழ்ச்சியாக வெளிப்படுகிறது. நாம் எந்தச் சமயத்தைச் சார்ந்திருக்கிறோமோ அதையும் நம்மால் நடுநிலையோடு அணுக முடிவதில்லை. காரணம் சுயசமயப்பற்று நம்மைச் சிந்திக்க விடாமல் தடுத்துவிடுகிறது. சமயப்பற்று எனும் நாணயத்தின் இன்னொரு பக்கம்தான் சமயக் காழ்ப்பு. ஒன்றில்லாமல் இன்னொன்று இருப்பதில்லை என்கிறார் அசோகர்.
  • இகழ்ச்சியைக் கைவிடுவதைக் காட்டிலும் சவாலானது புகழ்ச்சியைக் கைவிடுவது. உங்கள் சமயத்தை உயர்த்திச் சொல்லவேண்டிய அவசியம் உங்களுக்கு நேரலாம். சூழலால் உந்தப்பட்டு பெருமைபாட ஆரம்பித்துவிடாதீர்கள், பொறுமையாக இருங்கள் என்கிறார் அசோகர்.
  • அப்படியே சில காரணங்களால் உங்கள் சமயத்தை உயர்த்திச் சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால், அப்போது உங்கள் சமயத்தோடு சேர்த்துப் பிற சமயங்களையும் உயர்த்திப் பேசுங்கள்’ என்கிறார் அசோகர். இதன்படி, பௌத்தத்தின் சிறப்புகளைப் பேசியே தீரவேண்டிய நிலை ஒரு பிக்குவுக்கு ஏற்படுமானால் அவர் புத்தரோடு வேதக் கடவுள்களையும் சேர்த்துப் பேசவேண்டும். ஒரு பிராமணர் வேதக் கடவுள்களோடு புத்தரையும் மகாவீரரையும் இன்னபிறரையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு செய்வது கடினம் என்று அவர் கருதினால், தற்புகழ்ச்சியை மொத்தமாகக் கைவிட்டுவிடலாம்.
  • இல்லை, அனைத்துச் சமயங்களையும் உள்ளடக்கிப் பேசுகிறேன் என்று ஒருவர் துணிவாரானால் அவர் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய செய்தி ஒன்றுண்டு. எந்தவொரு சமயத்தையும் கூடுதல் குறைச்சலின்றிப் புகழுங்கள்.
  • இதையெல்லாம் செய்யத் தவறினால் என்ன ஆகும் என்பதையும் அசோகர் விவரிக்கிறார். தன் சமயத்தை மட்டும் புகழ்ந்து பிறவற்றை இகழ்பவர், தன் சமயத்தைச் சிறப்பாகக் காட்டுவதற்காகப் பிறவற்றைத் தாழ்த்தியும் தாக்கியும் பேசுபவர், ‘தன் சமயத்துக்கு மிகப்பெரும் அழிவை ஏற்படுத்துகிறார்’ என்கிறார் அசோகர். மற்றவர்களின் குறைகளிலிருந்துதான் உங்கள் சமயத்தின் நிறையை நீங்கள் வாதிட்டு நிறுவமுடியுமென்றால் அப்படியொரு வாதத்தை நீங்கள் முன்னெடுக்கவேண்டிய அவசியமே இல்லை.
  • சிரமணர்களைத் தூற்றுவதன்மூலம் வேதமரபை உயர்த்திவிடலாம் என்று ஒரு பிராமணர் கருதினால் அவர் சிரமணர்களின் நம்பிக்கையை அல்ல, தன் சமயத்தைத்தான் காயப்படுத்துகிறார். மற்றவர்களுக்காகக்கூட இல்லை; உங்கள் சமயம் முக்கியம் என்று நீங்கள் கருதினால், உங்கள் கடவுள்களை நீங்கள் மதித்தால், உங்கள் நம்பிக்கைகள் தழைக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நாவை அடக்குங்கள் என்று நுட்பமாக வாதிடுகிறார் அசோகர். 
  • பேசுவதற்கு மாற்று என்ன? கேட்பது என்கிறார் அசோகர். ‘எல்லாப் பிரிவினரும் மற்ற பிரிவுகளின் தம்மத்தைக் கேட்டறிந்துகொள்ளவேண்டும். அவற்றின் உண்மையான சாரத்தை அறிந்துகொள்ளவேண்டும்.’
  • உங்கள் சமயம் குறித்து எவ்வாறு ஆர்வத்தோடு அறிந்துகொண்டீர்களோ அதேபோல் பிற சமயங்களையும் அறிந்துகொள்ளுங்கள். அவர்களுடைய கோட்பாடு என்னவென்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் நம்பிக்கை என்னவென்று கேளுங்கள்.
  • அவர்கள் ஆன்மாவை ஏற்கிறார்களா, நிராகரிக்கிறார்களா? கடவுள்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார் என்கிறார்களா அல்லது கர்மவினையே அனைத்தையும் இயக்குகிறது என்கிறார்களா? அவர்களுடைய வழிபாட்டுமுறை என்ன? அவர்களுடைய சமயத் தலைவர்கள் எவ்வாறு பேசுகிறார்கள்? பேசுபவர்கள் அனைவரும் கேட்பவர்களாக மாறுங்கள். நிறையக் கற்றுக்கொள்வீர்கள் என்கிறார் அசோகர். திறந்த மனதோடு எல்லாச் சமயங்களின் சாரத்தையும் உங்களால் உள்வாங்கிக்கொள்ள முடியுமென்றால் அதன்பின் நீங்கள் இயல்பாகவே தற்புகழ்ச்சியையும் பிற சமயக் காழ்ப்பையும் கைவிட்டுவிடுவீர்கள்.
  • புத்தர் தம்மத்தைப் போதித்தார். பிராமணர்களுக்குத் தர்மம் இருக்கிறது. சமணம், ஆசீவகம், சார்வாகம் என்று எல்லாப் பிரிவினரும் ஏதோ ஒரு வகையான தர்மத்தைப் பின்பற்றுகிறார்கள், மதிக்கிறார்கள். அவர்களுடைய தர்மங்களையெல்லாம் நாமும் கற்றுக்கொள்வோம் என்கிறார் அசோகர்.
  • பிற சமயங்களை நெருங்கிச்சென்று நீங்கள் அறிந்துகொண்டால் அதன்பின் அவர்களோடு பகை பாராட்டமாட்டீர்கள். அது அவர்களுக்கு நன்மை அளிக்கும். பிற நம்பிக்கைகளைத் தெரிந்துகொண்டால் உங்கள் நம்பிக்கை பலம்பெறும். அது உங்கள் சமயத்துக்கும் நன்மையையே அளிக்கும். புரிதல் பெருகி, பகை மறையும்போது தம்மம் தவிர்க்கவியலாதபடி எங்கும் பரவத் தொடங்கிவிடும். இதுதான் அசோகரின் எதிர்பார்ப்பு. 
  • தன் சமயத்தையல்ல, எல்லாச் சமயங்களையும் காக்க விரும்பியிருக்கிறார் அசோகர். தன் சமயத்தின் நலனையல்ல, எல்லாச் சமயங்களின் நலன்கள்மீதும் சம அளவில் அக்கறை செலுத்தியிருக்கிறார். அதையே மற்றவர்களும் பின்பற்றவேண்டும் என்று விரும்பியிருக்கிறார். சமயத் தூய்மையையல்ல, சமயக் கலப்பை முன்மொழிகிறார். சமயக் கோட்பாடுகள் கொண்டும் கொடுத்தும் உறவுகொள்ளவேண்டும் என்கிறார்.
  • சமூக நல்லிணக்கத்தைத் தனது இலக்காக வரித்துக்கொண்டிருக்கிறார். சிந்தனைகள் தடையற்றுப் பரவவேண்டும். கருத்துபோல் மாற்றுக் கருத்துகளும் விவாதிக்கப்படவேண்டும் என்கிறார். தன் கொள்கையை ஒருவர் எங்கும் எடுத்துச் சென்று பரப்பலாம். ஆனால், அப்படிப் பரப்பும்போது எதைப் பேசவேண்டும், எதைப் பேசக் கூடாது என்று வரையறை செய்கிறார். ஒருவரும் அவர் நம்பிக்கை காரணமாக சொல்லாலோ செயலாலோ தாக்கப்படக் கூடாது என்கிறார்.
  • அதிகாரத்தில் உள்ள மதம் அதிகாரமற்ற மதத்துக்குச் சமமாக அங்கீகரிக்கப்படவேண்டும். பெரும்பான்மை மதம் எந்த விதத்திலும் சிறுபான்மை மதத்தைவிட உயர்ந்தது அல்ல என்று வலியுறுத்துகிறார். பகையை, வன்முறையை, வெறுப்புக் குற்றங்களை ஒழித்து சமூக நல்லிணக்கத்தை அடைவது குறித்துக் கனவு காண்கிறார்.
  • அசோகர் கண்ட கனவுகளில் மிகவும் அசாதாரணமான கனவென்று இதனை அழைக்கமுடியும். இரண்டாயிரத்துச் சொச்சம் ஆண்டுகளுக்குப் பிறகும் நிலைமை பெரிதாக மாறிவிடவில்லை என்பதைக் கணக்கில் கொண்டு அவர் கல்வெட்டுகளை மறுவாசிப்பு செய்யும்போது பண்டைய இந்தியாவில் வாழ்ந்த ஓர் அதிநவீன மனிதராகவே அசோகர் நமக்கு வெளிப்படுகிறார்.
  • தன் காலத்துப் பூசல்களிலிருந்தும் முரண்பாடுகளிலிருந்தும் மயக்கங்களிலிருந்தும் விடுபடுவதற்கான ஆற்றல் அவரிடம் இருந்தது. அந்த ஆற்றலை அவர் தன் மக்களோடும் பகிர்ந்துகொள்ள விரும்பினார். நம்மைப் பிடித்திழுக்கும் தளைகளிலிருந்து நாம் அனைவரும் ஒரு சமூகமாக, ஒரே சமூகமாக கைகோத்து ஒன்றுபோல் விடுபடுவோம் என்று முழங்குகிறார் அசோகர். ஒரே கனவை நாம் அனைவரும் பகிர்ந்துகொள்ளும்போதுதான் ஒவ்வொருவருக்கும் மீட்சி சாத்தியப்படும் என்கிறார் அசோகர். 
  • இன்று நாம் பேசிக்கொண்டிருக்கும் மதச் சகிப்புத்தன்மையின் ஆதிவடிவத்தை அசோகரின் குரலில் தெளிவாக அடையாளம் காணமுடிகிறது என்கிறார் நயன்ஜோத் லாஹிரி. அசோகரின் குரல் என்பது சகிப்புத்தன்மையின் குரல் என்கிறார் ரொமிலா தாப்பர். அசோகர் முன்மொழிந்த சகிப்புத்தன்மை நவீனமானது மட்டுமல்ல தனித்துவமானதும்கூட என்கிறார் ராஜீவ் பார்கவா. மூன்று வகையான சகிப்புத்தன்மையை வரலாற்றில் காண்கிறோம். செல்வாக்கும் பலமும் மிக்க ஒரு பெரிய மதம் தனக்கருகில் வாழும் சிறிய மதத்தைத் தொடர்ந்து வாழ அனுமதிப்பது முதல் வகை சகிப்புத்தன்மை.
  • பெரிய மதம் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் சிறிய மதத்தின் சுதந்தரத்தைத் தடுக்கலாம். எப்போது வேண்டுமானாலும் சிறிய மதத்தின் நம்பிக்கைக்குள், சடங்குக்குள் தலையிடலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல் சிறிய மதத்தை அது சகித்துக்கொள்கிறது. எனவே அமைதி நிலவுகிறது.
  • இரு பெரும் மதங்கள் அருகருகில் வாழ்கின்றன. இரண்டும் சமபலம்கொண்டவை. இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை. இருந்தாலும் ஒன்று இன்னொன்றைச் சீண்டாமல் ஒதுங்கி நிற்கிறது. இரண்டும் ஒன்றையொன்று சகித்துக்கொள்கின்றன. இது இரண்டாவது வகை சகிப்புத்தன்மை. மூன்றாவது வகை சகிப்புத்தன்மை, வாழு, வாழ விடு. உன் மதத்தை நான் வெறுக்கிறேன். உன் சடங்குகளும் கோட்பாடுகளும் ஏற்கவே இயலாதவை.
  • ஆனாலும் நான் உன்னோடு மோதிக்கொண்டிருக்க விரும்பவில்லை. என் நேரத்தையோ செல்வத்தையோ உன்னோடு மோதி வீணாக்க நான் தயாராக இல்லை. என் வழியில் குறுக்கிடாதவரை, என்னோடு மோதாதவரை உன்னைச் சகித்துக்கொள்வேன். 
  • முதல் எடுத்துக்காட்டில், பெரிய மதம் சிறிய மதத்தைக் கருணையோடு நடத்துகிறது. எனவே மத மோதல் தவிர்க்கப்படுகிறது. இரண்டாவதிலும் மோதல் நிகழ்வதில்லை. ஏனென்றால் சமபலம்கொண்ட இரு மதங்களும் ஒன்றையொன்று கண்டு அஞ்சுகின்றன. மோதல் வெடித்தால் அது இருவரையும் பாதிக்கும் என்பதை இரு தரப்பும் உணர்ந்திருக்கின்றன. மூன்றாவது வகையில் இருவரும் ஒருவரையொருவர் வெறுக்கின்றனர் என்றாலும் சண்டையிடும் ஆர்வம் இருவருக்கும் இல்லை. எனவே அமைதி நீடிக்கிறது. அசோகரின் அணுகுமுறை இந்த மூன்றும் அல்ல என்கிறார் பார்கவா. 
  • அசோகரின் சகிப்புத்தன்மையை அவ்வாறு பெயரிட்டு அழைப்பதேகூடச் சரியாக இருக்காது. ஏனென்றால் அவர் மாற்றுச் சமயத்தினரைச் சகித்துக்கொள்ளவே சொல்லவில்லை என்கிறார் பார்கவா. பெரிய மதத்தோடு மோதாதே, அது உன்னை அழித்துவிடும் என்று அவர் சிறிய மதத்துக்கு அறிவுரை சொல்லவில்லை. சிறிய மதம் பாவம், அதை விட்டுவிடு என்று அவர் பெரிய மதத்தை விட்டுக்கொடுக்கச் சொல்லவில்லை. நீங்கள் இருவரும் சண்டையிட்டால் இருவரும்தான் அழிவீர்கள், எனவே அமைதியாக இருங்கள் என்று யாரிடமும் எச்சரிக்கவும் இல்லை அவர். 
  • எல்லாச் சமயங்களும் சமமானவை என்பதால் எல்லாவற்றுக்கும் இங்கே இடமுண்டு, அதற்கான உரிமையும் உண்டு என்கிறார் அசோகர். வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை அசோகர். வேற்றுமையில் மட்டும்தான் முழுமையைக் காணமுடியும் என்கிறார் அவர். அச்சமும் கருணையும் தற்காலிகமான அமைதியை மட்டுமே ஏற்படுத்தும் என்பது அவருக்குத் தெரியும்.
  • நீடித்த அமைதி வேண்டுமானால் மாற்று மதங்களை நீங்கள் வெறுமனே சகித்துக்கொள்ளக் கூடாது. அவற்றை விருப்பத்தோடு உங்களுக்குள் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்கிறார் அசோகர். நீயும் வாழ்ந்துகொள் என்று மேலிருந்து குனிந்து பார்த்து இன்னொரு மதத்திடம் சொல்லாதீர்கள். மேலிருந்து இறங்கிவந்து அவர்களோடு சமமாக உரையாடுங்கள். அப்போது இருவரும் ஒரே தளம், இருவருமே ஒரே உயரம் என்பது இருவருக்கும் புரியும் என்கிறார் அசோகர். 
  • மாற்று நம்பிக்கைகளும் இருக்கட்டும் என்று சொல்லாதீர்கள். எனக்கொரு நம்பிக்கை இருப்பதுபோல் என் அருகில் இருக்கும் மனிதனுக்கு இன்னொரு வகை நம்பிக்கை இருக்கிறது. அதை நான் எப்படி எதிர்க்க வேண்டியதில்லையோ அவ்வாறே அனுமதிக்கவும் வேண்டியதில்லை. என் அனுமதியும் எதிர்ப்பும் சார்ந்து அந்த நம்பிக்கை உயிர் வாழவில்லை என்பதை நான் உணர்கிறேன். அது ஒரு சுதந்தர உயிர். அவ்வாறு இருப்பதற்கான எல்லா உரிமைகளையும் எல்லா நியாயங்களையும் அதுகொண்டிருக்கிறது.
  • என்னுடைய மதம் எனக்கொரு பார்வையை அளிப்பதுபோல் அவர் மதம் அவருக்கொரு பார்வையை அளிக்கிறது. இன்னொருவருக்கு இன்னொரு பார்வை. இவையெல்லாம் துண்டு, துண்டாகச் சிதறிக்கிடக்கவேண்டியவை அல்ல. அவை தொகுக்கப்படவேண்டும். புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஒன்றாக்கப்பட வேண்டும். அப்போதுதான் முழுமையான தரிசனம் கிடைக்கும். வேற்றுமை இயல்பானது. நம் ஒவ்வொருவருக்கும் பலனளிக்கக்கூடியது. நம் ஒவ்வொருவரையும் நிறைவுசெய்வது. இயற்கையானது. கடவுள்கள் அனைவருக்கும் விருப்பமானது. உயிர்கள் அனைத்துக்கும் பொதுவானது. எனவே அதுவே தம்மம்.

நன்றி: அருஞ்சொல் (06 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories