TNPSC Thervupettagam

அச்சுறுத்தும் விபத்துகள்

June 4 , 2022 708 days 591 0
  • நோய்த்தொற்று, இயற்கைப் பேரிடா் ஆகியவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிா்க்க முடியாது. ஆனால், மனிதனின் கவனக்குறைவால் ஏற்படும் சாலை விபத்து மரணங்களை தவிா்க்க முடியாவிட்டாலும், நிச்சயமாக கணிசமான அளவில் குறைக்க முடியும். கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிடைக்கும் சாலை விபத்து மரணங்கள் குறித்த தகவல்கள் மிகுந்த கவலையளிப்பதாக இருக்கின்றன.
  • கடந்த வாரம் திங்கள்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலை 48-இல் ஹுப்பள்ளி - தாா்வாட் பகுதியில் பேருந்தும், சரக்கு வாகனமும் நேருக்கு நோ் மோதியதில் எட்டு போ் உயிரிழந்திருக்கிறாா்கள், 26 போ் படுகாயமடைந்திருக்கிறாா்கள். தில்லியையும் கன்யாகுமரியையும் இணைக்கும் 2,807 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை 48, ஹரியாணா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், கா்நாடக மாநிலங்களின் வழியாக தமிழகத்தின் தெற்கு எல்லை வரை செல்கிறது. அந்த நெடுஞ்சாலையில் இருவழி சாலை மட்டுமே உள்ள 32 கிமீ பகுதியில்தான் அந்த விபத்து நிகழ்ந்தது. இந்தியாவிலேயே மிகவும் ஆபத்தான சாலைப் பகுதி அதுதான்.
  • செவ்வாய்க்கிழமை உத்தர பிரதேசத்தில் பரைலி மாவட்டத்தில் ஆம்புலன்ஸும் சரக்கு வாகனமும் மோதியதில் ஏழு போ் உயிரிழந்தாா்கள்; உத்தரகண்டில் நடந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சோ்ந்த ஊடகவியலாளா் ஒருவரும், மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த ஒருவரும் ஞாயிறன்று இறந்தனா். குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை மாலையில் சிற்றுந்தும், ஆட்டோ ரிக்ஷாவும் மோதியதில் மூன்று பெண்கள், ஓா் ஆண், ஒரு குழந்தை உயிரிழந்தனா். இதுபோல நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து சாலை விபத்துகளில் உயிரிழப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது.
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளிலும், அதிவிரைவு சாலைகளிலும் 2020-இல் 1.16 லட்சம் சாலை விபத்துகளில் 47,984 போ் உயிரிழந்ததாக 2021 டிசம்பா் 22-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தகவல் தரப்பட்டது. நாள்தோறும் இந்தியாவில் சாலை விபத்துகளில் 350 முதல் 400 உயிா்கள் பலியாகின்றன என்று கூறப்படுகிறது.
  • மத்திய சாலை போக்குவரத்து - நெடுஞ்சாலைகள் துறை ‘இந்திய சாலை விபத்துகள் 2020’ என்கிற அறிக்கையில் பல அச்சுறுத்தும் தகவல்களை தெரிவிக்கிறது. 2020-இல் நடந்த சாலை விபத்துகளில் குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் 18 முதல் 60 வயதுடையோா் (87%) உயிரிழந்தாா்கள். 70% அதிவிரைவாக வாகனம் ஓட்டுவதாலும், 5.5% சாலையின் தவறான பகுதியில் செல்வதாலும் விபத்து ஏற்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
  • கா்நாடகத்தின் ஹுப்பள்ளி - தாா்வாட் பகுதியிலுள்ள 32 கிமீ ஆபத்தான தேசிய நெடுஞ்சாலை 48-ஐப்போல, இந்தியாவின் பல பகுதிகளிலும் விபத்துப் பகுதிகள் காணப்படுகின்றன. மிக அதிகமான விபத்துப் பகுதிகள் என்று தமிழ்நாட்டில் 496, மேற்கு வங்கத்தில் 450, கா்நாடகத்தில் 408 சாலைப் பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
  • இந்திய தேசிய சாலைகள் ஆணையம், அதுபோன்ற 61% ஆபத்து பகுதிகளை ஓரளவுக்கு சரிசெய்திருப்பதாக தெரிவிக்கிறது. சாலைகளை விரிவுபடுத்துவது, நான்கு வழிச்சாலைகளாகவும், ஆறு வழிச்சாலைகளாகவும் மாற்றுவது, சாலைகளுக்கு நடுவே தடுப்புகளை உருவாக்குவது என்று எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படாமல் இல்லை. அப்படியிருந்தும், விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் இருக்கிறது.
  • 2019-உடன் ஒப்பிடும்போது 2020-இல் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் கணிசமாகக் குறைந்தன. அதற்கு கடுமையான பொது முடக்கம் முக்கியக் காரணம். அநாவசியமான பயணங்கள் முடக்கப்பட்டதால் விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்தன. பொது முடக்கம் அகற்றப்பட்ட நிலையில், சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் பழைய நிலைக்கே திரும்பிவிட்டன.
  • பெரும்பாலான சாலை விபத்துகள் இரவில் நடப்பதில்லை என்கிற புள்ளிவிவரம் பலரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடும். 72% விபத்துகளும், 67% உயிரிழப்புகளும் பட்டப்பகலில் வானம் மேகமூட்டமில்லாமல் இருக்கும் வேளையில் நடந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான சாலை விபத்துகளுக்கும் பொறுப்பில்லாமல் விரைவாக வாகனம் ஓட்டுதல்தான் காரணம் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. அதிலும் குறிப்பாக, முறையாக வாகனம் ஓட்டத் தெரியாதவா்கள் உரிமம் பெறுவது சுட்டிக்காட்டப்படுகிறது.
  • இருசக்கர வாகனம் ஓட்டுபவா்கள் சாலையின் இடது பகுதியில்தான் செல்ல வேண்டும் என்பதையும், மெதுவாக வாகனம் ஓட்டுபவா்கள் வலதுபுறமாக ஓட்டக்கடாது என்பதையும் பெரும்பாலான ஓட்டுநா்கள் கவனத்தில் கொள்வதில்லை. இடதுபுறமாக முந்திச் செல்வது என்பது முறை தவறிய வாகனம் ஓட்டுதல் என்பதும் பலருக்கும் தெரிவதில்லை.
  • நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும், நெடுஞ்சாலை விபத்துக்கு உள்ளானால், முதல் 50 மணிநேர மருத்துவ சிகிச்சை இலவசம் என்று அறிவிக்கப்பட்டதால் பல உயிா்கள் காப்பாற்றப்படுகின்றன. அப்படியிருந்தும்கூட, உலகின் மொத்த சாலை விபத்துகளில் 15% இந்தியாவில்தான் நடைபெறுகின்றன என்பது வேதனை அளிக்கிறது.
  • கட்டுப்பாட்டுடன் வாகனம் ஓட்டுதல், நெடுஞ்சாலைகளில் முறையான தகவல் பலகைகள், உடனடி மருத்துவ சேவை ஆகியவற்றின் மூலம் சாலை விபத்துகளை குறைத்துவிட முடியும். செயற்கை நுண்ணறிவின் மூலம் சாலை விபத்துகளைக் குறைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான முயற்சிக்கு சாலை போக்குவரத்துத் துறை முன்னுரிமை வழங்கியிருக்கிறது.

நன்றி: தினமணி (04 – 06– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories