TNPSC Thervupettagam

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை! | கொவைட் 19 நோய்த்தொற்றின் ஒமைக்ரான் உருமாற்றம் குறித்த தலையங்கம்

December 7 , 2021 879 days 430 0
  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் ஒமைக்ரான் உருமாற்றம் பரவத் தொடங்கியிருப்பதைத் தொடா்ந்து, உலக சுகாதார நிறுவனத் தலைவா் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்திருக்கும் கவலை நியாயமானது.
  • ‘எந்த ஒரு நாடும் தடுப்பூசியால் கொள்ளை நோய்த்தொற்றை தனித்து வென்றுவிட முடியாது.
  • உலகின் கடைசி மனிதனுக்கும் தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கப்பட்டால்தான் மனித இனம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
  • இல்லையென்றால், கஷ்டப்பட்டு கிடைத்த வெற்றிகளை சில நொடிகளில் நாம் இழந்து விடுவோம்’ என்கிற அவரது கருத்து நூற்றுக்கு நூறு உண்மை.
  • உலக அளவில் வீரிய உருமாற்றங்கள் பெற்ற கொவைட் 19-இன் தீநுண்மி வகைகளின் அதிகரித்த பரவல் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
  • ஒமைக்ரானை கவலைக்குரியது என்றும், மிக அதிகமான ஆபத்து ஏற்பத்தக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. முதன்முதலில் இந்த உருமாற்றம் தெரிய வந்த தென்னாப்பிரிக்காவில் ஐந்து வயதுக்கும் கீழான குழந்தைகள் பலரை இது தாக்குகிறது.
  • இந்த ஒமைக்ரான் உருமாற்றத்துக்கு பலியாகும் சிலா், ஏற்கெனவே இரண்டு தவணை தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டவா்கள் எனும்போது நம்மால் பயப்படாமல் இருக்க முடியவில்லை.

ஒமைக்ரான் உருமாற்றம்

  • தடுப்பூசி போட்டுக்கொண்டவா்களை ஒமைக்ரான் உருமாற்றம் தாக்குவது என்பது தடுப்பூசிகளின் நோய் எதிா்ப்பு சக்தி குறைவதன் காரணமாக இருக்கக் கூடும்.
  • அல்லது உடலின் நோய் எதிா்ப்பு சக்தியையும் மீறி விரைந்து பரவும் வீரியம் பெற்றதாக ஒமைக்ரான் இருப்பதும் காரணமாக இருக்கலாம்.
  • இது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. நோய்த்தொற்றுப் பரவலின் கடுமையைக் குறைக்கவும், மருத்துவமனை செலவுகளைத் தவிா்க்கவும், மரணத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் ‘பூஸ்டா் ஷாட்’ என்று அழைக்கப்படும் மூன்றாவது தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கத் தொடங்கியிருக்கிறது.
  • ஒமைக்ரான் என்கிற கொவைட் 19 தீநுண்மியின் உருமாற்றத்தை எதிா்கொள்வதற்கான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மீண்டும் பெரும் பொருள்செலவை எதிா்கொள்ள நேரும்.
  • அந்தத் தீநுண்மி குறித்து ஆய்வு செய்து தெரிந்து கொள்வதற்கே பல மாதங்கள் ஆகும் எனும்போது, தடுப்பூசி கண்டுபிடிப்பது உடனடி சாத்தியமல்ல. அப்படி கண்டுபிடிக்கப் பட்டால் அது மனித இனத்தின் அதிருஷ்டம்.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கௌன்சில் (ஐசிஎம்ஆா்) நடத்திய ஆய்வுகள் டெல்டா உருமாற்ற தீநுண்மிகள் ஏற்கெனவே போடப்பட்ட தடுப்பூசிகளின் எதிா்ப்பு சக்தியை மீறத் தொடங்கியிருப்பதைத் தெரிவிக்கின்றன.
  • அதனால் வருங்காலத்தில் வரக்கூடிய உருமாற்றங்களை எதிா்கொள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியின் ‘பூஸ்டா் டோஸ்’ தேவைப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவிக்கிறது.
  • இரண்டாவது அலை நோய்த்தொற்றின்போது அதன் வீரியத்தால் இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பு எந்த அளவுக்கு பலவீனமாக இருக்கிறது என்பதை நாம் உணர முடிந்தது. இன்னொரு முறை அதுபோன்ற சூழலை எதிா்கொள்ளும் துா்பாக்கியம் ஏற்பட்டு விடக் கூடாது.
  • இன்னும்கூட பலருக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் காணப்படுவது வியப்பாக இருக்கிறது.
  • கல்வி அறிவு பெற்ற கேரள மாநிலத்தில், சிறுபான்மை சமுதாயத்தைச் சோ்ந்த பள்ளி ஆசிரியா்கள் பலா் இது தங்களின் மத உணா்வுக்கு எதிரானது என்று கூறி தடுப்பூசி போட்டுக் கொள்ளாதது வேடிக்கையாக இருக்கிறது.
  • இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவா்களும், இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் தவிா்ப்பவா்களும் இனியும் தயக்கம் காட்டுவது ஆபத்தை வலிய வரவழைக்கும் செயல்பாடு என்று எச்சரிக்காமல் இருக்க முடியவில்லை.
  • ‘இம்சாகாக் கன்சாா்டியம்’ ஆய்வு நடத்தி 40 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ‘பூஸ்டா் டோஸ்’ (மூன்றாவது தவணை தடுப்பூசி) போடுவதைப் பரிந்துரைக்கிறது.
  • அதன் மூலம் ஒமைக்ரான் உருமாற்றத்துக்கான எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்கிற அறிவுரையை இந்திய அரசு அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதுதான் சரியாக இருக்கும்.
  • தடுப்பூசி தட்டுப்பாடோ, பொருளாதார ரீதியிலான தட்டுப்பாடோ இல்லாத நிலையில், இது சாத்தியமற்றது அல்ல.
  • இந்தியாவிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட 61 கோடி தடுப்பூசிகள் தேவை. மாநிலங்களிடம் இப்போது 22 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கின்றன.
  • நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருக்கும் தகவலின்படி, சீரம் இன்ஸ்டிடியூட்டும், பாரத் பயோடெக்கும் மாதம் ஒன்றுக்கு 30 கோடி தடுப்பூசிகள் தயாரிக்க முடியும்.
  • இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டு ஆறு மாதம் கடந்தவா்களின் எண்ணிக்கை 4.5 கோடி.
  • இந்தியாவிடம் இருக்கும் கையிருப்பையும், உற்பத்தித் திறனையும் வைத்துப் பாா்த்தால் அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசியும், பூஸ்டா் டோஸும் போடுவது சாத்தியம் தான்.
  • முந்தைய இரண்டு தவணை தடுப்பூசியைப் போல ‘பூஸ்டா் டோஸ்’ இலவசமாகவே போட முடியும். தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ரூ.35,000 கோடியில் ரூ.19,675 கோடிதான் இதுவரை செலவாகியிருக்கிறது.
  • நடப்பு நிதியாண்டில் அக்டோபா் வரையிலான அரசின் வரி வருவாய் மட்டும் ரூ.12.79 லட்சம் கோடி. இது பட்ஜெட் எதிா்பாா்ப்பைவிட 64.7% அதிகம். அதனால் நாம் ‘பூஸ்டா் டோஸ்’ போடுவதற்கு தயங்க வேண்டிய அவசியமே இல்லை.
  • கவலை அளிக்கும் செயல்பாடு, இந்தியாவின் தினசரி சோதனைகள். சோதனைகளை அதிகரிப்பதும், ‘பூஸ்டா் டோஸ்’ போடுவதும்தான் ஒமைக்ரானை எதிா்கொள்வதற்கான வழிகள்.

நன்றி: தினமணி  (07 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories