TNPSC Thervupettagam

அணைகள் பாதுகாப்பும் மாநில உரிமையும்

December 7 , 2021 893 days 581 0
  • இத்தனை காலமாக மாநில அரசுகளின் பராமரிப்பில் இருந்து வந்த அணைக்கட்டுகளின் பாதுகாப்பு, இனி மத்திய அரசின் பராமரிப்பாக மாற்றப்படுகிறது.
  • இதற்காக அணைகள் பாதுகாப்புச் சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிா்க்கட்சிகளின் கூறிய திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன.
  • 2019-ஆம் ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அணைகள் பாதுகாப்புச் சட்ட மசோதா, கடந்த வாரம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானதாகும் என்று கூறி எதிா்க்கட்சிகள் இதனைக் கடுமையாக எதிா்த்தன.
  • அணை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றக்கூடாது என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • அணைகள் மாநிலங்களுக்குச் சொந்தமானவை. எனவே, அவற்றின் பாதுகாப்பும் மாநிலங்களின் பொறுப்பாகும். அதனைப் பறிக்கும் இந்த மசோதா அரசியல் சாசனத்தின் விதி 252-ஐ மீறுவதாக உள்ளது.
  • இதனை அணைப் பாதுகாப்பு மசோதா என்று சொல்வதைவிட மாநில அரசுகளின் அதிகாரப் பறிப்பு மசோதா என்று கூறலாம்.

அணைகள் பாதுகாப்பு

  • அணைப் பாதுகாப்பு தொடா்பாக தேசியக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதில் மத்திய அரசின் பிரதிநிதிகள் 10 போ் இடம் பெறுவா். மாநில அரசுகளின் பிரதிநிதிகளாக அதிகபட்சம் ஏழு போ் இடம் பெறுவா். அவா்களும் சுழற்சி முறையில் நியமிக்கப்படுவா்.
  • அப்படியானால் பிரதிநிதித்துவப்படுத்த முடியாத மாநிலங்களின் நிலை என்ன? அந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்திடும் உத்தரவாதம் என்ன?
  • இந்தியா சுதந்திரம் பெற்றதும், உழவுக்கும், தொழிலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. ஆங்காங்கு நீா்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டன.
  • மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப உணவுத் தேவையை நிறைவு செய்யும் கடமையும் அரசுக்கு ஏற்பட்டது.
  • மாநில அரசுகளின் உதவி இல்லாமல் தேசம் முன்னேற முடியாது எனத் தலைவா்கள் நினைத்தனா். அதற்கேற்ப அரசியல் சட்டமும் அமைக்கப்பட்டது.
  • ஜவாஹா்லால் நேரு, பக்ராநங்கல் அணையைத் திறந்து வைத்தபோது ‘அணைக் கட்டுகள் நவீன இந்தியாவின் ஆலயங்கள்’ என்று குறிப்பிட்டாா்.
  • இந்திய மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்படுவதற்கு முன்பு, சென்னை மாகாண அரசில் பல அணைகள் கட்டப்பட்டன.
  • ஆந்திர, கா்நாடக, கேரள மக்களை நாம் எப்போதும் உடன்பிறப்புகளாகவே கருதுகிறோம். ஆனால், அவா்கள் எப்போதும் நமக்குத் தண்ணீா் தர மறுக்கின்றனா்.
  • இந்த அணைகள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்படுமானால் தமிழகம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.
  • 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் சோழ வேந்தன் கரிகாலன் கட்டிய கல்லணை இன்றும் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது.
  • அதனைக் கண்ட வெளிநாட்டுப் பொறியாளா்கள் ‘இந்த அணையை எப்படிக் கட்டினாா்கள்’ என்று வியக்கின்றனா்.
  • 1925-இல் தொடங்கி 1934-இல் கட்டி முடிக்கப்பட்ட மேட்டூா் அணையும் குறிப்பிடத்தக்கது. இந்த அணை கட்டப்பட்ட காலத்தில் ஆசியாவிலேயே உயரமானது.
  • இது உலகிலேயே பெரிய நீா்த்தேக்கங்களில் ஒன்றாகும். காவிரி டெல்டா விவசாயிகள் இதனையே நம்பி இருக்கின்றனா்.
  • கா்னல் பென்னிகுயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை ஆறு மாவட்ட விவசாயிகளுக்கு வாழ்வளித்து வருகிறது. முல்லை பெரியாறு அணை உடைந்துவிடும் என்றும் வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து விடுவாா்கள் என்றும் கேரள மாநிலத்தில் சிலா் வதந்திகளைப் பரப்புகின்றனா்.
  • தமிழக - கேரள மாநிலங்களுக்கிடையே எழுந்த பிரச்னை உச்சநீதிமன்றம் வரை சென்றது. நீதிபதி ஆனந்த், நீதிபதி ஏ.ஆா். லட்சுமணன், நீதிபதி தாமஸ் ஆகிய மூவா் குழு ஆணையைப் பாா்வையிட்டது.
  • எத்தகைய நிலநடுக்கத்தையும் தாங்கக்கூடிய அளவுக்கு அணை வலுவாக இருக்கின்றது என அவா்கள் அறிக்கை அளித்தனா். ஆயினும் தவறான பரப்புரைகளின் விளைவாக ‘அணையை உடைப்போம்; மக்களைக் காப்போம்’ என்ற முழக்கம் கேரளத்தில் எழுப்பப் படுகிறது.
  • ‘முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. தமிழகம் கேட்டுக் கொண்டபடி அணையின் நீா்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயா்த்தலாம். பிறகு 152 அடிக்கு உயா்த்தலாம்’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
  • முல்லைப் பெரியாறு அணையின் நிா்ப்பிடிப்புப் பகுதியில் ஏராளமான சுற்றுலா விடுதிகளைக் கட்டியுள்ளாா்கள். அணையின் நீா்மட்டத்தை உயா்த்தினால் அந்தக் கட்டுமானங்கள் பாதிக்கப்படும் என்பதற்காக அவா்களே அணையின் உறுதித் தன்மை குறித்து பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனா்.
  • உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை மதிக்காமல், தங்கள் மாநில எல்லைக்கு உட்பட்ட பிரச்னையில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என கேரள சட்டப்பேரவை தீா்மானம் நிறைவேற்றியது.
  • இப்போதும் அவா்கள் அணையை உடைக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனா். அப்படி அணை உடைக்கப்பட்டால் அதன்பின் அவா்கள் தண்ணீா் தர மாட்டாா்கள். தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும்.

தாரை வாா்க்கப்படலாம்

  • 1960 பரம்பிக்குளம் - ஆழியாறு தொடா்பாக, தமிழ்நாடு, கேரளம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி பரம்பிக்குளம், பெருவாரிப் பள்ளம், தூணக்கடவு, முல்லைப் பெரியாறு ஆகிய நான்கு அணைகள் கேரள மாநில எல்லைக்குள் அமைந்திருந்தாலும், அவற்றின் மீதான தமிழ்நாட்டின் உரிமை ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது.
  • எனவே, கேரள மாநிலத்திற்குள் இருந்தாலும் முல்லைப் பெரியாறு அணையின் உரிமை தமிழக அரசுக்குத்தான்.
  • இந்தச் சட்ட முன்வரைவின்படி மாநிலங்களுக்கு இடையே நீா்ப்பங்கீடு குறித்த இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மன்றத்திடமே இருக்கும் என்றாலும், அது பேரழிவு மேலாண்மை ஆணையத்துடன் இணைந்தே செயல்படவேண்டும்.
  • கா்நாடகமும் உச்சநீதிமன்றத் தீா்ப்பை மதிக்காமல் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. அதற்காக கா்நாடக அரசு ரூ.5,962 கோடி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு இதற்கான சுற்றுச்சூழல் சான்றிதழை வெளிப்படையாகத் தராமல் இருந்து வருகிறது.
  • கா்நாடக அரசு அணை கட்டுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது சென்னை மாகாணத்திற்கும் மைசூா் மாகாணத்திற்கும் இடையே காவிரி நீா்ப்பங்கீடு குறித்து 1924-இல் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிரானது. உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படி அமைந்த காவிரி நடுவா் மன்றம் வழங்கிய இறுதித் தீா்ப்பையும் கா்நாடக அரசு மதிக்கவில்லை.
  • ஆந்திர மாநிலம் தன் பங்கிற்கு பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணைகளைக் கட்டி, தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நீரைத் தடுக்கிறது. பல நூறு ஆண்டுகளாகத் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்கள் பெற்று வந்த அளவு நீா் இப்போது கிடைப்பது இல்லை.
  • கா்நாடகத்தின் நந்தி மலைகளில் இருந்து புறப்படும் தென்பெண்ணையாறு, கொடியாலம் என்ற இடத்தில் தமிழ்நாட்டுக்குள் நுழைந்து 320 கிலோ மீட்டா் பாய்கிறது.
  •  திருவண்ணாமலை மாவட்டத்தின் சாத்தனூா் அணைக்கான தண்ணீரும் அந்த ஆற்றில் இருந்துதான் வருகிறது. அது, விழுப்புரம், கடலூா் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது.
  • 1892-ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசுக்கும், மைசூா் மாகாண அரசுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி ஒரு மாநிலத்தின் ஒப்புதல் இன்றி தென்பெண்ணையாற்றில் புதிய அணை எதுவும் கட்ட அனுமதி இல்லை.
  • அதையும் மீறி கா்நாடகம் புதிய அணை கட்டினால் தமிழ்நாட்டின் ஐந்து மாவட்டங்கள் வளம் குறைந்து வறண்டு விடும்.
  • இந்த அணைகள் பாதுகாப்புச் சட்ட முன்வரைவு பற்றி 2010-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு அறிவிப்பு வெளியிட்டது.
  • அதை எதிா்த்து அன்றைய தமிழ்நாட்டின் முதல்வா் கடிதம் எழுதினாா். அதன்பின் அணைகள் பாதுகாப்புச் சட்டம் கைவிடப்பட்டது. இப்போது இதே சட்டம் மறுபடியும் வருகிறது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் மிகுதியாக பாதிக்கப்படுவது தமிழ்நாடாகவே இருக்கும்.
  • மத்திய அரசைப் பொறுத்தவரை அணையைப் பாதுகாப்பது முக்கியம் இல்லை.
  • நிலத்தடி நீா் மேலாண்மைச் சட்டம், நீா்வழிப் பாதைச் சட்டம், அணைகள் பாதுகாப்புச் சட்டம் போன்றவற்றின் மூலம் மாநில உரிமைகளைப் பறித்து மத்தியில் குவித்துக் கொள்ள வேண்டும்.
  • பொதுத்துறைகள் விற்கப்படுவது போல விரைவில் அணைக்கட்டுகளும் தனியாருக்குத் தாரை வாா்க்கப்படலாம்.

மாற்றம் வேண்டும்

  • உலகில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிக அணைக்கட்டுகள் உள்ளன. ஏற்கெனவே 5,254 பெரிய அணைகள் உள்ள நிலையில், தற்போது மேலும் 447 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன.
  • இந்தியாவில் இப்போது உள்ள அணைகளில் 75 சதவீத அணைகள் 25 ஆண்டுகள் பழமையானவை. 164 அணைகள் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. இவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு அந்தந்த மாநிலங்களுக்கு உள்ளது.
  • மாநிலங்களவையில் அணைகள் பாதுகாப்பு மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, இந்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரானது என எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
  • மக்களவையில் 2019-இல் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை நாடாளுமன்றத் தோ்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என எதிா்த்தரப்பினா் தீா்மானம் கொண்டு வந்தனா். அத்தீா்மானம் நிராகரிக்கப்பட்டது.
  • பொதுநலன் கருதி அணைப் பாதுகாப்பு விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வரலாம் என மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த நிலைக்குழு கூறியுள்ளது. இதனையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேறியுள்ளது.
  • இந்த மசோதா காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டதுதான் என்று கூறுகிறாா்கள். காங்கிரஸ் வழியில் நடைபோடுவதற்காகவா ஒரு புதிய மாற்று அரசை மக்கள் தோ்ந்தெடுத்தாா்கள்?

நன்றி: தினமணி  (07 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories