TNPSC Thervupettagam

அண்ணலின் மனமாற்றம்!

September 22 , 2021 969 days 809 0
  • ஒட்டுமொத்த உலகையே உளமார நேசித்தவர் அண்ணல் காந்தியடிகள். இந்திய தேசத்தின் தந்தையாக, வழிகாட்டியாக வலம் வந்தவர் அவர். ஆனாலும் தன் நெஞ்சத்தில் தமிழ்நாட்டுக்கான தனி இடத்தை ஒதுக்கி வைத்தவர்.
  • தமிழ்நாட்டில் பிறக்கவில்லையே என்று ஏங்கியவர். தமிழ் மொழியை நேசித்தவர். தனக்குத் தமிழ் கற்பிக்க ஆசிரமத்தில் ஒரு தமிழ் ஆசிரியரை அமர்த்தியிருந்தவர்.
  • வழக்குரைஞர் பணிக்காக தென்னாப்பிரிக்கா சென்ற காந்தி, தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர் உரிமைக்காகப் போராடும் போராளியாக உருவெடுப்பதற்கு முதல் படிக்கல் போட்டுத் தந்தவர் பாலசுந்தரம் என்ற ஏழைக் கூலித் தொழிலாளியான ஒரு தமிழரே.
  • அங்கு அண்ணல் நடத்திய அகிம்சை வழியிலான உரிமைப் போரில் உயிர் நீத்த தியாகிகளின் முதல் வரிசையில் நிற்கும் தில்லையாடி வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகியோரும் தமிழர்களே.
  • அண்ணல் காந்தியின் அரசியல் வாரிசு பண்டித ஜவாஹர்லால் நேரு என்பது அனைவரும் அறிந்ததே.
  • அவரைத் தவிர்த்து, அண்ணலின் பொருளாதாரக் கொள்கைக்கான வாரிசு டாக்டர் ஜே.சி. குமரப்பா, ஆதாரக் கல்விக்கு வாரிசு அரியநாயகம், மதுவிலக்குக் கொள்கையில் வாரிசாக விளங்கியவர் மூதறிஞர் ராஜாஜி, உலகெங்கும் உத்தமர் காந்தியின் சித்தாந்தங்களைப் பரப்புவதில் முன் நின்ற தத்துவமேதை டாக்டர் இராதாகிருஷ்ணன், காந்தி காட்டிய வழியில் எளிமைக்கும் நேர்மைக்கும் இலக்கணமாக விளங்கிய பெருந்தலைவர் காமராஜர், அரசுக்கும் அண்ணலுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் தடங்கல் ஏற்பட்டபோது தன் சாதுரியமான தலையீட்டால் அதனைத் தகர்த்து, வெற்றிபெற உதவிய சீனிவாச சாஸ்திரி, காந்தியடிகளின் ஒத்துழையாமைக் கொள்கையை ஏற்றுக் கொண்ட நாகபுரி காங்கிரஸýக்கு தலைமை தாங்கிய சேலம் விஜயராகவாச்சாரியார், "பாழ்பட்டு நின்ற பாரததேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி' எனப் பாடிப் புகழ்ந்த மகாகவி பாரதியார்- இப்படி அண்ணலை வாழ்த்தியவர்கள், அவர் வழி நடந்தவர்கள், துணை நின்று தோள் கொடுத்தவர்கள் என தமிழர்களின் பட்டியல் நீளும்.
  • "மகாத்மா' என்று அனைத்து மக்களாலும் அண்ணல் கொண்டாடப்படுவதற்கு முன்னதாகவே, தமிழ் மக்கள் அவரை மகானாகவே தரிசித்தார்கள். அவர் சொல்லே அவர்களுக்கு வேதமானது.
  • அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளமெனத் திரண்டனர். கதர் வளர்ச்சி, ஹரிஜன சேவை எல்லாவற்றுக்கும் நிதியை அள்ளிக் கொடுத்தார்கள் தமிழ் மக்கள்.
  • உண்மையும் ஒழுக்கமும் உடையவர்கள், தேசபக்தியும் தெய்வபக்தியும் கொண்டவர்கள் தமிழ் மக்கள். அவர்கள் அண்ணலைப் போற்றியதில் வியப்பு எதுவும் இல்லை. இந்த தமிழ் மண்தான், காந்திஜியின் விடைதெரியாத வினாக்களுக்கு விடை தந்திருக்கிறது; தீர்க்கமான முடிவுகள் எடுக்க திசைகாட்டியாக அமைந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க சில முடிவுகளை அண்ணல் எடுப்பதற்கான தளமாக அமைந்தது இந்தத் தமிழ் மண்ணே.
  • ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான தனது பொது வாழ்க்கையில் அண்ணல் காந்தி இருபது முறை தமிழகத்திற்குப் பயணித்திருக்கிறார். அவற்றில் ஐந்தாவது முறையாக தமிழ் மண்ணில் தடம் பதித்தது 1919-மார்ச் மாதத்தில்.
  • அப்பொழுது தேசம் முழுவதற்கும் பொதுவான ஒரு போராட்டம் தொடங்குவது பற்றி, எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழம்பிய மன நிலையில் இருந்தார் அவர். சகாக்களுடன் நடத்திய உரையாடலிலும் அவரது வினாவுக்கு விடை கிடைக்கவில்லை.
  • அன்று இரவு சென்னையில் கஸ்தூரிரங்க ஐயங்கார் இல்லத்தில் தங்கினார். மறுநாள் அதிகாலை தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையே ஒரு எண்ணம் "பளிச்'சென்று மனதில் பதிந்தது. "அது ஓர் கனவாகவே எனக்குத் தெரிந்தது. அந்தக் கனவே எனது போராட்டத்திற்கு வழியாக மலர்ந்தது' என்று அதனைக் குறிப்பிடுகிறார் அண்ணல்.
  • "நான் அறிவிப்பது ஒரு புனிதமான போராட்டம். அன்று இந்திய மக்கள் அனைவரும் ஹர்த்தால் (வேலை நிறுத்தம்) செய்ய வேண்டும். உண்ணா நோன்பு இருக்க வேண்டும். பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். தேசத்தின் செயல்பாடு ஒரு நாள் முழுமையாக ஸ்தம்பித்து விட வேண்டும்; ஆட்சியினர் நம் ஒற்றுமையை, ஆன்ம பலத்தைக் கண்டு மனமாற்றம் அடைய வேண்டும்' என்று 23-3-1919 அன்று அறிக்கை வெளியிட்டார் அண்ணல் காந்தி. இவ்வாறு அவரது போராட்ட வினாவுக்கு விடை பிறந்தது தமிழ் மண்ணில்.

நூற்றாண்டு நிறைவு

  • சென்னை மாநிலக் கல்லூரி விக்டோரியா விடுதி மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று 16-2-1916 அன்று மாணவர்களைச் சந்தித்தார் மகாத்மா.
  • அவர்களின் உற்சாகத்தைக் கண்டவர், மாணவர்களைத் தனது நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தலாம் என்ற முடிவுக்கு வருகிறார். இது நடந்ததும் தமிழ் மண்ணில்தான்.
  • தேசம் விடுதலைபெறப்போகிறது என்பதன் அறிகுறியாக, இந்தியாவிற்கு வந்த "பிரிட்டன் பாராளுமன்ற தூதுக்குழு' அண்ணலை சந்தித்து, இரண்டு நாள் (1946 ஜனவரி 23, 24) விவாதித்து விளக்கங்கள் பெற்று முடிவு எடுக்க வழிகோலியது சென்னை மாநகரில், இந்தத் தமிழ் மண்ணில்தான்.
  • 27-4-1915 அன்று சென்னை ஒய்எம்சிஏ திடலில் அண்ணலுக்கு மாணவர் சங்கம் அளித்த வரவேற்பில் "தேசப்பிதாவே! நீங்கள் காட்டும் வழி நடக்க நாங்கள் தயார்' என்று சூளுரைத்தந்தவர்கள் தமிழக மாணவர்கள். ஆகவே அண்ணலை "தேசப்பிதா' என முதலில் ஏற்றுக் கொண்டதும் இந்தத் தமிழ் மண்ணே.
  • இவை அனைத்துக்கும் மேலாக, அந்த மனிதப் புனிதரின் புகழுக்கு மணி மகுடம் சூட்டிய வரலாற்று நிகழ்வும் தமிழகத்தின் மதுரை மாநகரில்தான் நிகழ்ந்தது.
  • 21-9-1921 அன்று முற்பகலில் திருச்சியிலிருந்து போட்மெயில் ரயிலில் மதுரைக்குப் பயணிக்கிறார் பாபுஜி. மதுரைக்கு மகாத்மா வருவது இது இரண்டாம் முறை. மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான் என்று அனைத்து ரயில் நிலையங்களிலும் அண்ணலைக் காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. காந்தி அவர்களை மகிழ்வோடு சந்தித்து, சிலரிடம் பேசவும் செய்கிறார்.
  • அண்ணல் அவர்களிடம் "சுதேசிக்கு மாறாமல் சுதந்திரம் வருமா? நீங்கள் எவரும் ஏன் கதர் உடை அணியவில்லை' என்று கேட்கிறார். அதற்கு அவர்கள், "கதர் துணி கடையில் கிடைப்பதில்லை; அப்படியே கிடைத்தாலும், விலை அதிகம்; நாங்களோ ஏழைகள்.
  • எங்களால் எப்படி கதர் அணிய முடியும்' என்று கூறுகிறார்கள். அதைக் கேட்டு திகைத்துப் போனார் தேசத்தந்தை.
  • ரயில் சோழவந்தானைத் தாண்டுகிறது. ஒட்டிய வயிறு, இடுப்பு முதல் முழங்கால் வரை இறுக்கிக்கட்டிய நான்கு முழ வேட்டி, வெயிலின் கொடுமையைத் தாங்க தலையில் சுற்றியிருக்கும் இரண்டு முழத் துண்டு - இந்த அரைகுறை ஆடையுடன் வயலில் உழுகிறான் ஒரு விவசாயி.
  • அந்த ஆடை அவன் உடலை மறைத்த பாகத்தை விட, மறைக்காத பகுதியே அதிகம். அதனைக் கண்டு கண்கலங்குகிறார் கருணாமூர்த்தி.
  • மதுரை ரயில் நிலைய எதிர்த்திசையில் கூடிய மக்கள் பத்தாயிரம் பேர் இருப்பார்களாம்; மதுரைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்தவர்களோ சுமார் 50 ஆயிரம் பேராம். மகாத்மாவை தரிசித்ததில் மக்களுக்கு மகிழ்ச்சிப்பெருக்கு. ஆனால் அந்த மகாத்மாவின் மனமோ குழப்பத்தில்.
  • அன்று இரவு மதுரை மேலமாசி வீதியிலுள்ள 251-ஏ கதவிலக்கம் உள்ள வீட்டில் தங்குகிறார். அது அண்ணலின் நண்பர் ராம்ஜி கல்யாண்ஜியின் வீடு.
  • அன்று இரவு முழுவதும் அண்ணலுக்குத் தூக்கம் வரவில்லை. "கதர் வாங்க எங்களிடம் காசு இல்லை' என்ற ஏழை மக்களின் குரல் அவர் செவியில் ஒலிக்கிறது.
  • அரை நிர்வாண உடையில் உழுது கொண்டிருக்கும் விவசாயியின் உருவம் மனக்கண்ணில் தோன்றுகிறது. அவருக்கு எப்படித் தூக்கம் வரும்?
  • "சட்டம் பயிலும்போது லண்டனில் கோட்டும் சூட்டும் அணிந்தேன். வழக்குரைஞனாக தென்னாப்பிரிக்காவில் பணிபுரிந்த போது, வழக்குரைஞர் உடையோடு தலையில் தொப்பியும் அணிந்தேன்.
  • 1915-இல் இந்தியா திரும்பிய போது, குஜராத்தி உடையில் ஒரு இந்தியனாகக் கால் பதித்தேன். அந்த உடையையே இன்றும் தொடர்கிறேன். ஆனால், என் சகோதரர்கள் தமிழகத்தில் தரித்திரர்களாக அல்லல்படுகிறார்கள்.
  • அவர்களுக்கு மத்தியில் நான் மட்டும் வேட்டியும் சட்டையும் தலைப்பாகையும் துப்பட்டாவும் அணிந்து ஊர்வலமாக வருவது நியாயமாகுமா?' என்று அண்ணலின் அந்தராத்மா சொல்லியிருக்க வேண்டும். அதன் பின்பே ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கிறார் அவர்.
  • மறுநாள் (22.9.1921) காலையில் துயில் எழுகிறார்; பிரார்த்தனையை முடிக்கிறார். தன் அருகில் இருந்த விருதுநகர் பழனிக்குமார் பிள்ளை என்ற தேசியத் தொண்டரை அழைக்கிறார்.
  • தன் பையிலிருந்த நான்கு முழ வேட்டியை எடுத்து, அதனை ஒரு புறத்தில் பிடிக்கச் சொல்லி, தானே அதனை மடித்துக் கட்டுகிறார். உடம்பை ஒரு மேல் துண்டால் போர்த்திக் கொள்கிறார்.
  • முழங்காலுக்கு மேல் கட்டிய நான்கு முழ வேட்டியோடும் உடம்பைப் போர்த்திய இரண்டு முழத்துண்டோடும், முதல் மாடியில் இருந்த பால்கனியில் நின்று கொண்டு மதுரை மக்களுக்குக் காட்சி தருகிறார் காந்திஜி.
  • அதன்பின் அருகிலிருந்த ஒரு திறந்தவெளியில் கூடியிருந்த மக்களிடையே உரையாற்றுகிறார். அந்த இடம் இன்றும் "காந்தி பொட்டல்' என்று அழைக்கப்படுகிறது. அங்கு காந்திஜிக்கு நின்ற நிலையில் ஓர் சிலையும் உள்ளது.
  • இவ்வாறு மதுரையில் மாறிய நான்கு முழ வேட்டி, இரண்டு முழத் துண்டோடுதான் பின்னர் அவர் வைஸ்ராய்களையும், பிரிட்டன் பேரரசரையும், பெரிய சர்வாதிகாரிகளையும் சந்தித்துப் பேசி இருக்கிறார். "அரை நிர்வாணப் பக்கிரி' என்று சர்ச்சில் கேலி பேசிய போதும் அதனைப் புறந்தள்ளினார் மகாத்மா.
  • மகாத்மாவின் மன உறுதிக்கும், தியாகத்திற்கும் அடையாளமாக விளங்கும் உடைமாற்ற நிகழ்ச்சி நடந்து இன்றோடு ஒரு நூற்றாண்டு நிறைவடைகிறது.
  • அந்த வரலாற்று நிகழ்வு நடந்த "251-ஏ மேலமாசி வீதி' வீடு மதுரையில் இன்றும் உள்ளது. அதன் கீழ்த்தளத்தில் ஒரு கதர் கடை உள்ளது. முதல் தளத்தில் காந்திஜியின் சிலையும் புகைப்படங்களும் உள்ளன.
  • "அண்ணல் அமர்ந்த இடமெல்லாம் ஆலயமாகும்' என்று கவிதை நயத்தோடு சொன்னார் பண்டித ஜவாஹர்லால் நேரு.
  • நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய அத்தகைய ஆலயங்களில் ஒன்றுதான் மதுரை மேலமாசி 251-ஏ வீடு. அவ்வீட்டை அரசு பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும். இதுவே தமிழக காந்தியவாதிகளின் கனிவான வேண்டுகோள்.
  • இன்று, மதுரையில் காந்தி அரையாடைக்கு மாறிய நூற்றாண்டு நிறைவு.

நன்றி: தினமணி  (22 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories