TNPSC Thervupettagam

அண்ணல் வழி நடப்போம்

August 15 , 2022 641 days 555 0
  • இந்தியா தனது 76-ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடி மகிழ்கிறது. இந்தியா எவரும் கண்டு வியக்கத்தக்க நாடு. பல பரிமாணங்களை உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்டது. நிலப்பரப்பளவில் உலகில் ஏழாவது பெரிய பகுதி (32.87 லட்சம் ச.கி.மீ). மக்கள்தொகையில் இரண்டாம் இடம் வகிப்பது (138 கோடி). 7,516 கி.மீ நீள கடற்கரையைத் தழுவியது.
  • வடக்கிலிருந்து தெற்கு முனை வரை 3,214 கி.மீ நீளமும், கிழக்கு மேற்காக 2,933 கி.மீ அகலமும் கொண்டது.
  • இந்தியாவின் திசைகளிலும் எல்லைக் கோடுகளைத் தழுவி நிற்பதோ ஏழு நாடுகள் (ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா, பூடான், நேபாளம், மியான்மர், வங்கதேசம், இலங்கை). இங்கு பேச்சுவழக்கில் உள்ள மொத்த மொழிகள் 1,652. அவற்றில் அரசால் அங்கீகரிக்கப்பட்டவை 22. இந்தியாவில் ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், பெüத்தம், ஜைனம், சீக்கியம், ஜொராஷ்ட்ரியம், பார்சி என பல்வகை மதத்தினர் உள்ளனர்; நூற்றுக்கும் மேற்பட்ட ஜாதிப்பிரிவுகளும் உண்டு.
  • மிதவாதிகள், தீவிரவாதிகள், ஜனநாயகவாதிகள், மதவாதிகள், மதச்சார்பற்றோர், மதபோதகர்கள், துறவிகள், கம்யூனிஸ்டுகள், காந்தியவாதிகள் என்ற அனைத்து வகை சிந்தனாவாதிகளும் இங்கு உண்டு.
  • உயர்ந்த மலைகள், தாழ்ந்த பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், வற்றாத நதிகள், வறண்ட நிலங்கள், வளம் கொழிக்கும் பகுதிகள், காடுகள் என அனைத்து வகை நிலப்பகுதிகளும் இங்கே உண்டு.
  • இந்தியாவில் கோடீஸ்வரர்களும் உண்டு; பசிக்கொடுமையால் மாள்வோரும் உண்டு. அறிவுலக மேதைகளும் உண்டு; படிப்பு வாசனையே இல்லாதவர்களும் உண்டு. இங்கே சொர்க்கமும் உண்டு; நரகமும் உண்டு. இந்தியாவில் எல்லாம் உண்டு; இங்கு இல்லாதது எதுவும் இல்லை. உண்மையில் இந்தியா உலகின் அனைத்துப் பரிமாணங்களையும் உள்ளடக்கிய ஒரு சிறு உலகமே.
  • இத்தனை பேதங்களையும், வேறுபாடுகளையும் உள்ளடக்கிய தேசம் ஒன்றாக இருக்க முடியுமா? என்ற கேள்விக்கு "முடியும்' என்று விடை கூறுகிறார் பண்டித ஜவாஹர்லால் நேரு தனது "இந்தியாவைக் கண்டேன்' எனும் நூலில். மேலும், "ஆயிரம் பேதங்கள் இருந்தாலும், நான் ஒரு இந்தியன் என்ற உறுதியான இழையே இந்தியாவை இணைக்கிறது. இது பூகோள ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது' என்றும் கூறுகிறார் அவர்.
  • இந்தியாவைத் தொடர்ந்து விடுதலை பெற்ற பல நாடுகள் ராணுவ ஆட்சிமுறையையோதனிமனித சர்வாதிகார ஆட்சிமுறையையோ தேர்ந்தெடுத்தன. ஆனால் இந்தியாவோ மக்களாட்சி முறையை, நாடாளுமன்ற ஜனநாயக முறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியது. இந்தியாவில் மக்களாட்சி முறை நிலைக்குமா என்ற கேள்வி ஆரம்பத்திலேயே எழுப்பப்பட்டது.
  • விடுதலை பெற்ற ஆறு மாதங்களுக்குள்ளாக தேசப்பிதா காந்தி அடிகள், துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார். தேசப்பிதாவின் பாதுகாப்பையே உறுதி செய்ய முடியாதவர்கள், தேசத்தை எப்படிப் பாதுகாக்கப் போகிறார்கள் என்ற கேள்வி அப்போது எழுந்தது. ஆனால் அண்ணலின் மறைவு, இந்தியர்களிடையே ஒற்றுமை உணர்வை ஓங்கச் செய்தது; மகாத்மாவின் மரணத்திற்குப் பின்பு இந்தியா மதச்சண்டையால் மடிந்து விடாமல், மீண்டும் எழுந்து நின்றது.
  • காந்திஜி, தான் வாழும் காலத்தில் தேசத்துக்கு வழிகாட்டினார்; மரணத்திற்குப் பின்பு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ஒற்றுமை உணர்வைத் தந்தார்.
  • நேருஜியின் தலைமையில் தேசம் நிமிர்ந்து நடந்தது. ஆனால் 1962-இல் சீனா, இந்தியாவின் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்தியது. அதனால் மனமொடிந்து போனார் நேருஜி; நிலை குலைந்து போனது தேசம். ஆனாலும் மீண்டும் எழுந்து நின்றது இந்தியா!
  • 1964-இல் நேருஜியும் மறைந்தார். அவரோடு மக்களாட்சி முறை மறைந்துவிடும்; பதவிச் சண்டையால் பாரதம் சிதறிவிடும்; ராணுவ ஆட்சி தலைதூக்கலாம் என கணித்தவர்கள் உண்டு. அவர்கள் கணிப்பைப் பொய்யாகியது இந்த தேசம்.  நேருவின் இடத்தை, எளிமைக்கும் உறுதிக்கும் பெயர் பெற்ற லால் பகதூர் சாஸ்திரி நிரப்பினார். இரண்டாண்டுக்குள்ளாக அவரும் மறைந்தார்.
  • மூத்த தலைவர்கள் கூடிப் பேசினார்கள். நேருவின் மகள் இந்திரா காந்தியை பிரதமர் பதவியில் அமர்த்தினார்கள். அவர், பாகிஸ்தானுடன் போர் தொடுத்து வங்காள தேசம் உருவாக வழிவகுத்தார். "இந்தியாவின் துர்கை' என்று பெயர் பெற்றார். ஆனால் அவரது தேர்தல் செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • வெகுண்டெழுந்த இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். அரசியல் தலைவர்கள் சிறைபட்டார்கள்; அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதால் அனைவரும் எதிர்த்தனர். இந்தியாவில் இத்துடன் ஜனநாயகம் முடிந்தது என்றார்கள். ஆனால் இந்திரா காந்தி எவரும் எதிர்பாராத வகையில் அவசர நிலையை நீக்கினார். தேர்தலை அறிவித்தார். மீண்டும் இந்தியா மக்களாட்சிப் பாதையில் நடைபோடத் தொடங்கியது.
  • 1984-இல் இந்திரா காந்தியின் படுகொலை, 1991-இல் ராஜீவ் காந்தியின் படுகொலை. இருவரும் தீவிரவாதத்திற்கு பலியான பின்பு இனி எப்படி பிழைக்கும் ஜனநாயகம் என்ற கேள்வி மீண்டும் எழுந்தது.
  • தேசத்திற்கு சோதனை நேரும் போதெல்லாம், அந்த சோதனையை தீர்க்க தரிசனத்துடனும் தேச பக்தியுடனும் மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள். இந்திய தேசத்தில் இதுவரை 14 பிரதமர்கள் பதவி வகித்திருக்கிறார்கள். முதல் பிரதமரான பண்டித நேருவில் தொடங்கி இன்றைய பிரதமரான நரேந்திர மோடி வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வித்தியாசமானவரே.
  • ஒவ்வொருவரும் சித்தாந்தத்தில், சிந்தனையில், செயல்பாட்டில், அணுகுமுறையில் வேறுபடலாம். ஆனால் அரசியல் அமைப்புச் சட்ட நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் எவரும் வேறுபட்டதில்லை.
  • 1971-இல் பாகிஸ்தானோடு போர் நடைபெறும் முன்பு பிரதமர் இந்திரா காந்தி வங்கதேச விடுதலைக்காக வெளிநாடு சென்றிருந்தார். அப்பொழுது அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர் பக்ருதீன் அலி அகமது என்ற இஸ்லாமியர். வங்கதேசப் போரின்போது விமானப் படைக்குத் தலைமை தாங்கிய தளபதி லத்தீப் என்ற பெயர் தாங்கிய இஸ்லாமியர்.
  • தரைப்படையைத் தலைமை தாங்கி நடத்திய ஜெனரல் மானெக்ஷா ஒரு பார்சி.
  • வங்கதேசத்துக்குள் புகுந்து படை நடத்தி வெற்றி கண்டவர் ஜக்ஜித் சிங் அரோரா, ஒரு சீக்கியர். போருக்குப் பின்னால் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றவர் ஜேக்கப் என்ற பெயர் தாங்கிய கிறிஸ்தவர். இது இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கும் மதச்சார்பின்மைக்கும் ஒரு எடுத்துக்காட்டு.
  • அண்ணல் காந்தி காட்டிய வழியில் தேசம் பயணிக்கிறது என்பது பொதுவான நம்பிக்கை. ஆனாலும் "கரோனா பெருந்தொற்று காலமான 2020-இல், 857 மதவிரோத வன்முறைகள் நடந்துள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 96 % அதிகமாகும். இது கவலைக்கும் கண்டனத்திற்கும் உரியதல்லவா' எனக் கேட்கிறார் தில்லி பத்திரிகையாளர் சீமா இஷ்டி. ஆனாலும் சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள் நமக்கு நம்பிக்கையைத் தருகின்றன.
  • முதலாவது, குஜராத் மாநிலம், வட்காம் வட்டத்தில் தல்வாமா என்ற சிறு கிராமம். அங்கு வாழ்பவர்களில் பெரும்பான்மையினர் இஸ்லாமியர்களே. அவ்வூருக்கு அருகில் 1,200 ஆண்டுகள் பழைமையான "வீர்மகராஜ் கோயில்' ஒன்று உள்ளதாம்.
  • அங்கு வாழும் ஹிந்துக்கள், ரம்ஜான் நோன்பு காலத்தில் தல்வாமா கிராம இஸ்லாமிய மக்களை வேண்டி விரும்பி அழைத்து வந்து, ஹிந்து கோயிலுக்குள் ரம்ஜான் விரதத்தை முறித்துக் கொள்ளச் செய்தார்கள். அவ்விரதத்தில் ஹிந்துக்களும் பங்கேற்றார்களாம்.
  • இரண்டாவது, தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி. களத்தூர் என்ற கிராமத்தில் ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் வாழ்கின்றனர். ஆனால் ஹிந்துக்களின் திருவிழாவின்போது, சுவாமியின் தேர் ஊர்வலம் இஸ்லாமியர்கள் தெரு வழியாகச் செல்வதற்கு முன்பெல்லாம் அனுமதிக்கப்படுவதில்லையாம். அது போலவே, ஹிந்துக்களும் மசூதிக்குள் நுழைய மாட்டார்களாம்.
  • ஆனால் சமீபத்தில் முஸ்லிம்கள் கொண்டாடிய "சந்தனக் கூடு' திருவிழாவில் ஹிந்துக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அதன் பின்னர் நடந்த ஹிந்துக்களின் சுவாமி தேர் உலாவில் இஸ்லாமியரும் பங்கேற்க, அவர்களின் தெருவழியே மேளதாளத்துடன் சென்றதாம்.
  • தமிழகத்தின் கடைக்கோடி கிராமமான களத்தூரிலும் கூட சமய நல்லிணக்கம் மலர்கிறதே; மகாத்மாவின் கனவு நனவாகிறதே!
  • 1947 செப்டம்பர் மாதம் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் அண்ணல் காந்தி, "மகாபாரத போர் நடைபெற்ற காலத்தில் கூட பாண்டவர்கள் பாதுகாப்பாக இருந்தார்களாம். அதே போல் இந்திய தேசத்தில் இஸ்லாமியர்கள் அச்சம் ஏதுமின்றி பாதுகாப்புடன் வாழ வழிவகுக்க வேண்டியது எனது கடமை மட்டுமல்ல, ஒவ்வொரு ஹிந்துவின் கடமையும் ஆகும்' என்று கூறினார்.
  • அண்ணல் காந்தி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஒருநாள், தனது பிரார்த்தனைக் கூட்டத்தில் "இறைவா! எங்கள் இதயம் வறண்டு போகும்போது, அன்பையும் இரக்கத்தையும் மழையாகப் பொழிவாயாக! இருள் சூழும்போது, ஒளிக்கீற்றாக வருவாயாக! என் மக்கள் இணைந்து வாழ வழிகாட்டு! இந்த வரத்தை நீ அருள்வாய் என்ற நம்பிக்கையோடு நான் மடிய விரும்புகிறேன்' என்றார்.
  • அண்ணலின் நம்பிக்கை பொய்க்கவில்லை. அவர் காட்டிய வழியில் தேசம் 75 ஆண்டுகள் ஒற்றுமை உணர்வுடன் நடைபோட்டு, வளர்ச்சிப் பாதையில் பயணித்து, இன்று உலகுக்கே வழிகாட்டும் நாடாக விளங்குகிறது.
  • சத்தியம், அகிம்சை, சமத்துவம், சகோதரத்துவம், சமயச்சார்பின்மையைக் கைக்கொள்வோம். எல்லாரும் எல்லாமும் பெறும் வரை ஓயாது உழைப்போம்! மகான் காந்தியை நாம் மறக்கவில்லை என்பதை நிலைநிறுத்துவோம். அண்ணல் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணிப்போம். இதனையே இப்புனித நாளில் சபதமாக ஏற்போம்!

நன்றி: தினமணி (15 – 08 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories