TNPSC Thervupettagam

அநாமத்தாக ரூ.50,000 கோடி!

August 26 , 2021 996 days 542 0
  • வங்கிகளில் ரூ.24,356 கோடியும், காப்பீட்டு நிறுவனங்களில் ரூ.24,586 கோடியும் உரிமை கோரப்படாமல் இருப்பதாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்திருக்கிறார் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கராட்.
  • வங்கிகளிலும் காப்பீட்டு நிறுவனங்களிலும் உரிமை கோரப்படாமல் ரூ.50,000 கோடிக்கும் அதிகமான தொகை இருக்கிறது என்கிற தகவல் ஆச்சரியப்படுத்தவும் இல்லை; அதிர்ச்சியளிக்கவும் இல்லை. இதற்கு வாடிக்கையாளர்கள் மட்டுமே காரணமல்ல என்பதை எடுத்தியம்பாமல் இருக்க முடியவில்லை.
  • நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்திருக்கும் பதிலின்படி பார்த்தால், ஏறத்தாழ எட்டு கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகளில் ரூ.24,356 கோடி காணப்படுகிறது. அதில் மிக அதிகமான அளவு பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அரசு வங்கிகளில்தான் காணப் படுகிறது.
  • பாரத ஸ்டேட் வங்கியில் 1.3 கோடி கணக்குகளும், ஏனைய அரசு வங்கிகளில் 5.5 கோடி கணக்குகளும் வரவு - செலவு இல்லாமல் முடங்கிவிட்டன.
  • அவற்றிலிருக்கும் பணத்தை பெறுவதற்கோ, உரிமை கோருவதற்கோ யாரும் முன் வராததால், அவை வங்கிகளிடமே இருக்கின்றன.
  • தனியார் வங்கிகளிலும், வெளிநாட்டு வங்கிகளிலும், கிராமப்புற வங்கிகளிலும் உரிமை கோரப் படாத கணக்குகள் இருக்கின்றன என்றாலும் அவை பெரிய அளவிலானவை அல்ல.
  • வங்கிகளைப் பொருத்தவரை உரிமை கோரப்படாத வங்கிக் கணக்குகளுக்கு மிக முக்கியமான காரணம் வாடிக்கையாளர்கள் பணி நிமித்தம் இடமாற்றம் பெறுவதுதான். ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு பணி இடமாற்றம் பெறும்போது அதிகமாக பரிவர்த்தனை வைத்துக்கொண்டிக்கும் வங்கிக் கணக்குகளை மட்டும்தான் பலரும் கருத்தில் கொள்கிறார்கள்.
  • இன்றைய நிலையில், எந்த ஊரிலிருக்கும் கணக்கையும் தாங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகிலுள்ள வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் வசதி இருந்தும்கூட, பலரும் அதற்காக நேரம் செலவிடுவதில்லை.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எல்லா கணக்குகளிலும் சிறிது பணத்தை போட்டு வைத்திருக்கிறார்கள். அவை அனைத்தையும் கோரிப் பெறுவதில்லை.

உரிமை கோரப்படாத பணம்

  • பல சேமிப்பு வங்கிக் கணக்குகள், வைப்புக் கணக்குகள் ஆகியவற்றில் வாரிசுதாரரை பதிவு செய்து வைப்பதில்லை. அப்படியே பதிவு செய்து வைத்திருந்தாலும், வாரிசுதாரர்கள் வங்கிக்குப் போய் ஆவணங்களைத் தாக்கல் செய்து வங்கியிலிருக்கும் பணத்துக்கு உரிமை கோர முயல்வதில்லை. அதனால் வங்கியில் உரிமை கோரப்படாத பணம் தேங்கிக் கிடக்கிறது.
  • வாடிக்கையாளர்களையும் வாரிசுதாரர்களையும் அடையாளம் கண்டு அவர்களது வைப்பு நிதி அல்லது செயல்படாத கணக்குகள் பற்றி தெரிவித்து, பிரச்னைக்கு முடிவு காண வேண்டுமென்று இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது என்றாலும் கூட எந்தவொரு வங்கியும் அதில் கவனம் செலுத்துவதில்லை.
  • காப்பீட்டு நிறுவனங்களைப் பொருத்தவரை உரிமை கோரப்படாத பணம் என்பது புதிதொன்றுமல்ல. காப்பீட்டுதாரர்களோ அவர்களது குடும்பத்தினரோ காப்பீட்டு நிறுவனத்தை அணுகி முதிர்வுத் தொகையைக் கோராமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
  • ஆர்வ மிகுதியாலும், காப்பீட்டு முகவர்களின் வற்புறுத்தலாலும் காப்பீடு செய்ய முனையும் பலரும் தொடர்ந்து அதில் கவனம் செலுத்தாமல், தங்களது தவணைகளை தவற விடுகின்றனர்.
  • காப்பீட்டு நிறுவனங்கள் அவ்வப்போது முகாம்கள் நடத்தி தடைப்பட்ட காப்பீடுகளை புதுப்பிக்கின்றன என்றாலும்கூட, பாதியில் முடங்கிக் கிடக்கும் காப்பீடுகள் ஏராளம்.
  • ஆயுள் காப்பீட்டைப் பொருத்தவரை காப்பீட்டு ஆவணத்தை பத்திரப்படுத்தாததால் வாரிசுதாரர்கள் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதுண்டு. பல குடும்ப உறுப்பினர்களுக்கு மறைந்த குடும்பத் தலைவர் ஆயுள் காப்பீடு செய்திருப்பது தெரியாமல் இருப்பதும் உண்டு.
  • ஆவணம் தொலைந்துவிடுவது, காப்பீட்டில் இணைந்தவர் முதிர்வு தேதி குறித்த விவரம் தெரியாமல் இருப்பது, காப்பீட்டு முகவருடனோ, நிறுவனத்துடனோ தொடர்பு இல்லாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் உரிமை கோராமல் காப்பீடு செய்த பணம் நிறுவனங்களிடம் இருந்துவிடுகிறது.
  • அரசுடைமையாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களில் மட்டும் ஏறத்தாழ ரூ.20,000 கோடிக்கும் அதிகமான பணம் கோரப்படாமல் இருக்கிறது.
  • தனியார் காப்பீட்டுத் துறையில் ரூ.2,964 கோடியும், வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களில் ரூ.612 கோடியும் உரியவர்கள் அணுகாததால் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்காமல் வைத்திருக்கின்றன.
  • காப்பீட்டு நிறுவனங்கள் கோரும் எல்லா ஆவணங்களையும் வழங்க முடியாமலும், தங்களுக்குச் சேர வேண்டிய காப்பீட்டுத் தொகைக்காக நேரம் செலவழித்து காப்பீட்டு நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளாமலும் இருப்பதால் வழங்கப்படாத காப்பீட்டுத் தொகையும் இதில் அடக்கம்.
  • வங்கிகள் தங்களிடமுள்ள கோரப்படாத பணத்தை வங்கி சேவை குறித்த வாடிக்கையாளர்களின் புரிதலை அதிகரிப்பதற்கு பயன்படுத்த வேண்டுமென்றும், செயல்படாத கணக்குகள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டுமென்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருக்கிறது.
  • அதேபோல, காப்பீட்டு நிறுவனங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கோராத காப்பீட்டுத் தொகையை, மூத்த குடிமக்களின் நலவாழ்வு நிதியாக மாற்றி அவர்களுக்கான திட்டங்களைத் தீட்ட வேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கிறது. அதை நடைமுறைப் படுத்துகிறார்களா என்பது தெரியவில்லை.
  • வங்கிகளையும் காப்பீட்டு நிறுவனங்களையும் தனியார்மயமாக்க அரசு நினைக்கிறதே, அப்படியானால் உரிமை கோரப்படாத பல கோடி ரூபாய் என்ன ஆகும்? தனியார் துறைக்கு அநாமத்து வரவா?

நன்றி: தினமணி  (26 - 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories