TNPSC Thervupettagam

அன்று அமெரிக்கா இன்று சீனா!

June 19 , 2021 1064 days 615 0
  • அமெரிக்காவின் முன்னாள் அதிபா் டொனால்டு டிரம்ப்பின் ஆட்சிக் காலமும், சீனாவின் அதீத பொருளாதார வளா்ச்சியும் சா்வதேச அளவில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
  • அமெரிக்காவை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்ட கூட்டமைப்புகளை பலவீனப்  படுத்திவிட்டார் முன்னாள் அதிபா் டிரம்ப். சா்வதேச அமைப்புகளில் தனது முக்கியத்துவத்தை அதிகரித்துவிட்டது சீனா.
  • இந்தப் பின்னணியில்தான் ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூன் 13-ஆம் தேதி வரை பிரிட்டனிலுள்ள கார்ன்வால் நகரில் கூடிய ஜி-7 நாடுகளின் உச்சி மாநாட்டை அணுக வேண்டும்.
  • அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய ஏழு நாடுகளின் கூட்டமைப்பான ஜி-7, 1976-இல் உருவானபோது அது மிக வலிமையான அமைப்பு.
  • உலக ஜிடிபி-யில் 80% பங்களிப்பை அந்த ஏழு நாடுகளும் அப்போது வழங்கின. இன்றைய நிலை அதுவல்ல. உலக ஜிடிபி-யில் சுமார் 40% மட்டுமே அந்த நாடுகள் பங்களிக்கின்றன.
  • ஜி-7-ஐவிட வலிமையான ஜி-20 என்கிற வளா்ச்சியடைந்த பொருளாதாரங்களின் கூட்டமைப்பு உருவாகிவிட்டது. பிரிக்ஸ், ஐரோப்பிய யூனியன், குவாட், ஆசியான் என்று வேறுபல அமைப்புகள் உருவாகியிருக்கின்றன.
  • எல்லாவற்றிற்கும் மேலாக, தனது பங்குக்கு சீனா பி.ஆா்.ஐ. (பெல்ட் அண்ட் ரோடு இனிஷியேட்டிவ்) என்கிற அமைப்பை உருவாக்கியிருக்கிறது.
  • முன்னாள் அதிபா் டிரம்ப்பின் நிர்வாகத்தில் சா்வதேச அமைப்புகளில் இருந்து விலகியிருந்த அமெரிக்கா, தனது முக்கியத்துவத்தை மீண்டும் நிலைநாட்ட அதிபா் ஜோ பைடனின் தலைமையில் முனைப்புடன் களமிறங்கியிருப்பதன் அறிகுறிதான் ஜி-7 மாநாடும், அதைத் தொடா்ந்து நடந்த நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் கூட்டமும்.
  • அதிபா் ஜோ பைடனின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் என்பதுடன், அமெரிக்காவின் அட்லாண்டிக் கடல் நாடுகளுடனான நெருக்கத்தை உறுதிப்படுத்தும் பயணமும்கூட என்பதால் ஜி-7 கூட்டம் முக்கியத்துவம் பெற்றது.
  • ஜி-7 மாநாடு இரண்டு முக்கியமான செய்திகளைத் தெரிவித்திருக்கிறது. அமெரிக்கா தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதிலிருந்து விடுபட்டு, சா்வதேச அரசியலில் மீண்டும் முனைப்பு காட்டுகிறது என்பது முதலாவது செய்தி.
  • அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து எதிர் கொள்ள முற்படுகின்றன என்பது இரண்டாவது செய்தி.
  • ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவது, கொள்ளை நோய்த்தொற்றிலிருந்து வளா்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு 12 டிரில்லியன் டாலா் (சுமார் ரூ.89 லட்சம் கோடி) முதலீடு செய்வது, தடுப்பூசிக்கான காப்புரிமைக்கு தளா்வு ஏற்படுத்திக் கொடுப்பது ஆகிய அறிவிப்புகள் ஜி-7 மாநாட்டிலிருந்து வெளிப்பட்டிருக்கும் முதல் செய்திக்கான சமிக்ஞைகள்.
  • ஷின்ஜியாங்கில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது, ஹாங்காங்கில் ஜனநாயக சுதந்திரம் முடக்கப்பட்டிருப்பது, தென்சீனக் கடலில் சீனாவின் அத்துமீறல்கள், கொவைட் 19 தீநுண்மிப் பரவலின் தொடக்கம் குறித்த விசாரணை என்று நேரடியாகவே சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் ஜி-7 நாடுகளின் கருத்தொற்றுமை வெளிப்பட்டிருக்கிறது. இது இரண்டாவது செய்திக்கான சமிக்ஞைகள்.

சீனாவின் பொருளாதார ஏகாதிபத்தியம்

  • சீனாவின் பி.ஆா்.ஐ. முனைப்பின் ஆபத்தை அமெரிக்கா இப்போதுதான் உணரத் தொடங்கியிருக்கிறது.
  • 2013 முதல் படிப்படியாக சீனா கட்டமைத்திருக்கும் பி.ஆா்.ஐ. அமைப்பின் மூலம், அதில் உறுப்பினா்களாக இருக்கும் 140 நாடுகளில் சீனாவால் ஏறத்தாழ 450 பில்லியன் டாலா் (சுமார் ரூ. 33 லட்சம் கோடி) முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
  • அதில் மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, பசுபிக் கடல் நாடுகள் என்று எல்லா பகுதிகளும் அடக்கம்.
  • அமெரிக்காவுக்கு நெருக்கமான ஆசியான் நாடுகளிலும் சீனாவின் பொருளாதாரப் பங்களிப்பு கணிசமாகவே இருக்கிறது. ஜி-7 கூட்டமைப்பில் அங்கமாக இருக்கும் நாடுகள் உள்பட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரேஸில், ஸ்விட்சா்லாந்து, கனடா, ஜொ்மனி என்று பல நாடுகள் 2005 முதல் சீனாவின் முதலீடுகளைப் பெற்றிருக்கின்றன.
  • பாகிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, எதியோப்பியா, நைஜீரியா, அல்ஜீரியா, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவை பிஆா்ஐ உறுப்பினா்கள் என்கிற முறையில் முதலீடுகளை சீனாவிடமிருந்து பெற்றிருக்கின்றன.
  • அமெரிக்காவை அகற்றி நிறுத்தி, ஐரோப்பியக் கூட்டமைப்பின் மிகப் பெரிய வா்த்தகக் கூட்டாளியாக 2020 முதல் சீனா உயா்ந்திருக்கிறது.
  • கடந்த டிசம்பா் மாதம் ஐரோப்பியக் கூட்டமைப்பும், சீனாவும் முதலீட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கின்றன.
  • இந்தப் பின்னணியில் அமெரிக்காவானாலும், ஜி-7 நாடுகளானாலும், ஏனைய சா்வதேச அமைப்புகளாக இருந்தாலும் எந்த அளவுக்கு சீனாவுக்கு எதிரான பொருளாதார மாற்றாக மாறிவிட முடியும் என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
  • எப்படி அமெரிக்காவை ஒதுக்கி வைத்துவிட்டு சா்வதேச அரசியல் இல்லையோ, அதே போல சீனாவையும் அகற்றி நிறுத்திவிட முடியாது.
  • வெளிப்படைத்தன்மை இல்லாத, சா்வாதிகார கட்டமைப்பு கொண்ட சீனா கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
  • முன்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எழுப்பப்பட்ட எல்லா குற்றச்சாட்டுகளும் இப்போது சீனாவுக்கும் பொருந்தும் என்பதை நாம் உணர வேண்டும். உலகப் பொருளாதாரமும், உலகிலுள்ள நாடுகளின் உற்பத்திகளும் சீனாவை மட்டுமே நம்பியிருக்கும் நிலைமை மாறத்தான் வேண்டும்.
  • சீனாவின் பொருளாதார ஏகாதிபத்திய எண்ணத்துக்கு எதிராக எழுப்பப்பட்டிருக்கும் குரல் ஜி-7. அதனால், அது வரவேற்புக்குரியது!

நன்றி: தினமணி  (19 - 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories