TNPSC Thervupettagam

அப்பாவுவின் யோசனை இந்திய ஜனநாயகத்துக்கு முக்கியமானது

November 22 , 2021 909 days 452 0
  • சிம்லாவில் நடந்த ஆட்சிமன்றத் தலைவர்கள் மாநாட்டில் அய்யாவு பேசியிருப்பதானது, தேசிய அளவில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
  • “சட்டப்பேரவையில் நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்” என்று இந்த மாநாட்டில் பேசினார் அப்பாவு.
  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அதிகாரத்தை வலுப்படுத்துவதோடு, ஆட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்கச்செய்யும் ஒரு யோசனை இது.
  • இமாச்சல பிரதேச தலைநகரம் சிம்லாவில், மூன்று நாட்களுக்கு நடந்த ஆட்சிமன்றத் தலைவர்கள் மாநாட்டில், பல முக்கியமான யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
  • இருவருடைய பேச்சுகள் மிகுந்த கவனம் அளிக்கத் தக்கவையாக இருந்தன. முதலாமாவர், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு. இரண்டாமவர் இமாச்சலப் பிரதேசத்தின் எதிர்க் கட்சித் தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி.
  • இந்தியாவில் ஆட்சிமன்றங்கள் உருவாக்கப்பட்டு, அதன் தலைவர்கள் பங்கேற்கும் முதல் மாநாடு 1921-ல் சிம்லாவில் நடைபெற்றது.
  • அந்த வகையில் இப்போதைய 2021 சிம்லா மாநாடு நூற்றாண்டின் நிகழ்வு எனும் சிறப்பைப் பெறுகிறது. பிரதமர் மோடி இந்நிகழ்வைக் காணொளி வழியாக தொடக்கிவைத்தார்.
  • “நாட்டின் சட்டப்பேரவைகள் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளைத் தொழில்நுட்பரீதியாக ஒரே தளத்தின் கீழ் கொண்டுவருவதும், இவற்றின் நிர்வாகங்கள் ஒன்றோடு ஒன்று தமக்கான விஷயங்களைக் கொடுத்துப் பெறும் பரிவர்த்தனைகள் வளர்த்தெடுக்கப்படுவதும் முக்கியம்” எனும் விஷயத்தோடு மோடியின் பேச்சு முடிந்தது.

ஜனநாயக அமைப்பாக மாறும்!

  • மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றார் மு.அப்பாவு. “சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்புதல் அளிக்காமல், திருப்பி அனுப்புகின்றனர்.
  • குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டிய மசோதாக்களைப் பல மாதங்களுக்கு இப்படி நிறுத்திவைப்பதன் மூலமாக, மறைமுகமாக மக்களை ஆட்சிசெய்ய ஆளுநர்கள் முயற்சிக்கின்றனர்.
  • எனவே, சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவு எடுக்க அவர்களுக்குக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும். அதேபோல, ஒரு சட்ட மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு மாநில அரசுகள் அனுப்பினால், சில சமயங்களில் குடியரசுத் தலைவர் அதை மாநில அரசுகளுக்கே திருப்பி அனுப்புவது உண்டு.
  • இப்படித் திருப்பி அனுப்பும்போது அதற்கான காரணங்களைக் குடியரசுத் தலைவர் தெரிவிப்பதில்லை. குறைந்தபட்ச காரணத்தையாவது அவர் தெரிவித்தால்தான், சட்டப்பேரவை அதுகுறித்து மறுபரிசீலிக்க முடியும்; மக்களுக்கும் இதுபற்றி தெரிவிக்கப்படுவது அவசியம்.
  • ஆகையால், சட்டப்பேரவையால் அனுப்பப்பட்ட ஒரு மசோதா நிராகரிக்கப்படுகிறது என்றால், ஏன் நிராகரிக்கப்படுகிறது என்பது தெரிவிக்கப்பட வேண்டும்” என்று பேசினார் அப்பாவு.
  • மாநாட்டில் முகேஷ் அக்னிஹோத்ரி பேசியதும் அடுத்து கவனிக்கக் கூடியதாக இருந்தது. சட்டப்பேரவைத் தலைவர் பாத்திரத்தையும், அவர்களுக்கான பொறுப்புகள் மற்றும் அதிகாரங்களைத் தீர்க்கமாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி அவர் பேசினார்.
  • “சட்டப்பேரவைத் தலைவர்கள் அரசியல் கட்சிகளிலிருந்தே வருகிறார்கள். சந்தேகம் இல்லை. ஆனால், அவையின் தலைவர்களாக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே ஜனநாயகத்துக்கு அழகு.
  • அவைத் தலைவர்கள் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி இருந்த காலம் ஒன்று இருந்தது. இப்போது அது மாறுகிறது.
  • மாநிலங்களில் நெறிமுறைகள் உடைபடுகின்றன. பதவியின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். இதற்கேற்ப சட்ட வழிமுறைகளில் மாற்றம் தேவை” என்று பேசினார் முகேஷ் அக்னிஹோத்ரி.
  • சட்டப்பேரவைகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை அதற்குரிய கண்ணியத்துடன் கையாளுவதன் வாயிலாகவே பேரவைத் தலைவர்கள் தார்மிகரீதியாக உத்தரவாதப் படுத்திக் கொள்ள முடியும்.
  • சமீப காலமாக சட்டப்பேரவைத் தலைவர்களின் முடிவுகளில் நீதிமன்றங்களின் தலையீடுகள் அதிகரித்துவருவது விரும்பத்தக்க போக்கு இல்லை.
  • சட்டப்பேரவைத் தலைவர்கள் முரண்பட்ட முடிவுகளை எடுப்பதை அடிப்படையாகக் கொண்டே நீதிமன்ற நடவடிக்கைகள் தமக்கான நியாயத்தை உருவாக்கிக்கொள்கின்றன.
  • அரசியல் கட்சித் தலைவர்களின் பிடிமானத்திலிருந்து சட்டப்பேரவைத் தலைவர்களை விடுவிக்கும் அமைப்பு முறை இங்கே இல்லை. அதற்கான தேவையை அக்னி ஹோத்ரி சரியாகவே கோடிட்டுக் காட்டினார்.
  • இந்தியாவில் சட்டப்பேரவைகளின் அதிகாரத்துக்குக் கீழ் வரும் விஷயங்கள் குறைவு. அமெரிக்கா, சுவிஸ் போன்ற கூட்டாட்சிகளில் மாநில அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை இந்தியச் சமூகம் உற்றுநோக்குவதும், உலகின் போக்குக்கேற்ப இந்தியாவிலும் அதிகாரப்பரவலாக்கலை வளர்த்தெடுப்பதும் காலத்தின் தேவைகள். துரதிருஷ்டவசமாக இந்தியாவில் மாநிலங்களின் அதிகார எல்லைகள் நாளுக்கு நாள் சுருக்கப் படுகின்றன.
  • இப்படியான சுருக்க எல்லைக்குட்பட்ட அதிகாரங்களிலும் ஆளுநர்கள் அல்லது குடியரசுத் தலைவர்கள் வழியே ஒன்றிய அரசு தலையிடுவதானது அராஜகம்.
  • ஜனநாயகத்தில் உச்ச அதிகாரம் படைத்தவர்கள் மக்கள். அவர்கள் வாக்களித்துதான் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • அப்படியிருக்க மக்கள் பிரதிநிதிகளால் நிறைவேற்றப்படும் சட்டத்துக்கோ, தீர்மானத்துக்கோ முறையான காரணம் இன்றி மேற்கொள்ளப்படும் தாமதம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே கருத வேண்டியிருக்கிறது. இதைத் தயக்கமின்றி அப்பாவு சுட்டிக் காட்டியிருக்கிறார்.
  • மாநாடு தொடர்பில் செய்தி வெளியிட்ட பல ஊடகங்களும் பிரதமரின் பேச்சுக்கே முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அக்னிஹோத்ரி பேச்சையேனும் சில ஊடகங்களில் ஓரிரு வரிகளேனும் இடம்பெற்றன.
  • தமிழ்நாட்டு ஊடகங்கள் நீங்கலாக அப்பாவுவின் பேச்சு எங்கும் கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அப்பாவுவின் பேச்சு தேசிய அளவிலான விவாதம் ஆக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • ஆளுநர் பதவி முற்றிலுமாகவே சம்பிரதாய பதவியாக உருமாற்றப்படுவது இந்திய ஜனநாயகத்துக்கு நல்லது.
  • இத்தகு மாநாடுகளில் பேசப்படும் இப்படியான கருத்துகள் வெறும் செய்திகளாகக் கடக்கப் படாமல், நாடாளுமன்ற ஜனநாயகத்தை வளர்த்தெடுப்பதற்குப் பரிசீலிக்கப்படும் யோசனைகளாகவும் கருத்தில் கொள்ளப்பட்டு மாற்றங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
  • அப்போதுதான் இந்தக் குறைக்கூட்டாட்சியின் ஒவ்வோர் அங்கமும் முழு அதிகாரம் பெறும் ஜனநாயக அமைப்பாக மாறும்!

நன்றி: அருஞ்சொல் (22 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories