TNPSC Thervupettagam

அமைதியை நாடும் இந்திய அணுகுமுறை

March 14 , 2022 797 days 412 0
  • நான்கு மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிபெற்றதை அடுத்து, கட்சித் தொண்டர்களுக்கிடையே பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் போர் குறித்துப் பேசும்போது, எப்போதும் அமைதியின் பக்கமே இந்தியா நிற்கிறது என்று குறிப்பிட்டிருப்பதோடு, அனைத்துச் சிக்கல்களும் பேச்சுவார்த்தைகளின் மூலமாகத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.
  • போருடன் தொடர்புடைய இரு நாடுகளுமே இந்தியாவுடன் பொருளாதாரம், பாதுகாப்பு, உயர்கல்வி, அரசியல் தொடர்புகளைக் கொண்டவையாக அமைந்துள்ளன என்பதையும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
  • உக்ரைன் விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்துவரும் நடுநிலைமைக்குப் பின்னால், வெளியுறவுத் துறையின் தீர்க்கமான பார்வையும் உள்ளடங்கியுள்ளது.
  • உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைக் கண்டித்து, ஐக்கிய நாடுகள் பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, வாக்கெடுப்பிலிருந்து விலகிநின்ற 35 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
  • உக்ரைன் போர் தொடர்பாக ஐநா பொது அவையைக் கூட்ட வேண்டும் என்ற பாதுகாப்பு அவையின் வாக்கெடுப்பிலும் இந்தியா கலந்துகொள்ளவில்லை.
  • போர் நடவடிக்கைக்கு எதிராகக் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றுவதிலிருந்து இந்தியா விலகிநின்றதற்குத் தனிப்பட்ட முறையில் அது எதிர்கொண்டிருந்த சவால்களே முக்கியமான காரணம்.
  • ஆயிரக்கணக்கான மாணவர்கள் போர்ப் பதற்றம் நிறைந்த பகுதிகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நிலையில், இந்தியாவின் ஒரே நோக்கம் அம்மாணவர்கள் பாதுகாப்புடன் நாடு திரும்ப வேண்டும் என்பதாகவே இருந்தது.
  • மாணவர்களைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ரஷ்ய மொழி பேசும் வெளியுறவுத் துறை அதிகாரிகளை ஈடுபடுத்தியதோடு சூழலுக்கேற்ப உடனடி முடிவுகளை எடுக்க வசதியாக வெளியுறவு இணைச்செயலர் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.
  • இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில், அயலுறவுத் துறை சார்ந்து எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் எதிர்க் கட்சிகளின் விமர்சனத்தையும் சந்தித்தாக வேண்டும்.
  • உக்ரைன் மீதான குண்டுவீச்சுத் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவை வற்புறுத்துமாறு காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டதோடு, இந்தியா தனது வாய்ப்பேச்சு சமாதானங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் விமர்சித்தனர்.
  • அந்த வாய்ப்பேச்சுகள் அவ்வளவு எளிதானவையும் அல்ல. ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இருவரோடும் ஒரே நாளில் அடுத்தடுத்து இந்தியப் பிரதமரால் தொலைபேசி வழியாக உரையாட முடிகிறது என்பதும் அமைதி குறித்த விருப்பத்தை அவர்களிடம் வெளிப்படுத்த முடிகிறது என்பதும் வெளியுறவுத் துறையில் இந்தியாவின் நேர்த்தியான அணுகுமுறை.
  • ஆனால், போரில் ஈடுபட்டுள்ள இரு நாடுகளுடன் பாகிஸ்தானும்கூட இதேபோன்ற அணுகுமுறையையே கையாள்கிறது.
  • உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என்று கோரிவரும் நிலையில், இந்தியாவின் பாதுகாப்பு ஆயத்தநிலை குறித்து உயர்மட்டக் குழுக் கூட்டத்தை நேற்று நடத்தி முடித்துள்ளார் பிரதமர் மோடி.
  • வெளியுறவு விவகாரங்களில் இந்தியா தனது ஒவ்வொரு அடியையும் கவனத்தோடு எடுத்து வைக்க வேண்டியிருப்பது தெளிவாகிறது.

நன்றி: தி இந்து (14 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories