TNPSC Thervupettagam

அரசின் தனி கவனிப்புக்குரிய சிறப்புக் குடும்பம்

March 17 , 2024 59 days 121 0
  • ஜாக்ரிதி சந்திரா பெயரில் 2024 மார்ச் 1 அன்றுதி இந்துஆங்கில நாளிதழில் இந்தச் செய்தி பிரசுரமானது, ‘அனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக (குஜராத்) ஜாம்நகர் விமான நிலையம் சர்வதேச அந்தஸ்து பெறுகிறதுஎன்று. இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜாம்நகர் விமான நிலையம்பத்து நாள்களுக்கு மட்டும்’ (பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை) ‘சர்வதேச நிலையமாகக் கருதப்பட்டு விமானப் போக்குவரத்துச் சேவைகள் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
  • செல்வாக்கு மிக்க உலக மாந்தர்களான பில் கேட்ஸ், மார்க் ஸுக்கர்பெர்க், ரிஹானா, இவாங்கா டிரம்ப் - இன்னும் பல நாடுகளின் முன்னாள் பிரதமர்கள் ஆகியோரை ஜாம்நகர் நிகழ்ச்சிக்கு வரவேற்க இந்த அறிவிப்பு செய்யப்பட்டது. மிகப் பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானிநிதா இணையரின் கடைக்கோடி வாரிசான அனந்துக்கு நடைபெறவிருக்கும் திருமணத்துக்கு முன்னோடியாக, பிரமுகர்களின் ஆசியையும் வாழ்த்தையும் பெற இந்தச் சடங்கு நிகழ்த்தப்பட்டது.
  • ஒன்றிய அரசின் சுகாதாரம், நிதி, உள்துறை ஆகிய அமைச்சகங்கள், பிரமுகர்கள் எளிதாக வந்து செல்வதற்கேற்ப விமான நிலையத்தில் சுங்கம், குடியேற்றம், சுகாதார ஆய்வுகளுக்கான தனிப்பிரிவு ஆகியவற்றை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுத்தன.

செய்தியும் விமர்சனங்களும்

  • ஜாக்ரிதி சந்திராவின் இந்தச் சிறப்புச் செய்தியையும் அது தொடர்பாக வாசகர்கள் பலர் தெரிவித்த விமர்சனங்களையும் சேர்த்தே வாசித்தேன். இந்த ஏற்பாட்டுக்கு ஆதரவாகவும் - எதிர்ப்பாகவும் தெரிவித்திருந்த கருத்துகள் எதிர்பார்த்தபடியே எதிரெதிர் முகாம்களிலிருந்து வந்திருந்தன.
  • அம்பானிகளுக்கு வழங்கப்பட்டவழக்கத்துக்கு மாறானஇந்தச் சலுகைகளை ஆதரித்து ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ‘கிரிக்கெட் போட்டிக்கு வந்திருந்த பாகிஸ்தானிய வீரர்களை வரவேற்க 2011இல் காங்கிரஸ் அரசும் இப்படிச் சண்டீகர் விமான நிலையத்துக்குத் தாற்காலிக சர்வதேச அந்தஸ்து தந்ததைப் பலர் சுட்டிக்காட்டி இருந்தனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்பதற்காக அவர்களுக்குச் சலுகை வழங்கப்பட்டது, அது தனிப்பட்ட நிகழ்ச்சி அல்ல என்று எதிராளிகள் அதற்குப் பதில் அளித்தனர்.
  • அம்பானிகள், ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு தருகின்றனர், நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தவர்களுக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பும் அளிக்க, விமான நிலையத்துக்குச் சிறப்பு அந்தஸ்து தருவது அவசியம் என்று ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் வாதிட்டனர். அரசின் இந்தச் செயலால் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்ததாகவே எதிர்ப்பாளர்கள் பலர் குறிப்பிட்டிருந்தனர்.
  • இந்தியாவில் அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் வாழ்க்கை, சொர்க்கத்தில் இருப்பதைப் போல இருக்கிறது, மற்ற இந்தியர்களுக்கோ இது நரகமாகவே தொடர்கிறதுஎன்று ஒருவர் பதிவுசெய்திருந்தார். ‘நாம்தான் இப்போது புதிய ரஷ்யா (ஜார் மன்னர் காலத்தைப் போல), செல்வாக்கு மிக்க தனிநபர்கள் அதிகமாகிவிட்டனர்என்றொரு பதிவு. ‘உலகமே ஒரு குடும்பம் என்ற கருத்தை (வசுதெய்வ குடும்பகம்) “நான் - எனது பணக்கார நண்பர்கள் - அவர்களுடைய குடும்பங்கள் சேர்ந்ததுதான் ஒரே குடும்பம்என்று இனி மாற்றிக்கொள்ள வேண்டியதுதான்என்று இன்னொரு பதிவு.
  • ஓர் இளம் விடலை, தன்னுடைய சொந்த உயிரியல் பூங்காவை (வனவிலங்குகள் காட்சி சாலை) உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்துவந்த அரிய இனங்களுக்குக் காட்டுவதற்காக ஜாம்நகர் விமான நிலையத்தின் அந்தஸ்து மாற்றப்பட்டதுஎன்று இன்னொரு பதிவு. முகபடாம் அணிந்த யானையுடன் இவாங்கா டிரம்ப் இருந்த புகைப்படக் காட்சி, இந்தக் கருத்துக்கு வலுசேர்ப்பதாக இருந்தது.

சட்டத் திருத்தம் யாருக்கானது

  • இதில்சொந்த உயிரியல் பூங்காஎன்று வாசகர் குறிப்பிட்டிருந்ததுராதாகிருஷ்ணர் ஆலய யானைகள் நல்வாழ்வு அறக்கட்டளைஎன்ற அம்பானிகளுடைய தனி அமைப்பைக் குறிப்பது. ராணுவ விமான நிலையத்தைப் பன்னாட்டு விமான நிலையம் என தாற்காலிகமாக அறிவித்த அருவருப்பைவிட மோசமானது மதச்சார்பற்ற ஓர் ஊழலை - மத அமைப்பாக மாற்றி அறிவித்தது. இப்படி அம்பானிகள் தனியாக வனவிலங்குகளுக்கான காப்பகம் நடத்த உதவியாக இருப்பது 2021இல் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்துக்கு ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட திருத்தமாகும்.
  • யானைகளைப் போன்ற அழிந்துவரும் அரிய வனவிலங்குகளை காடுகளில் பிடித்து, தங்களுடைய தனியார் காப்பகங்களுக்கு வாகனங்களில் எடுத்துவந்து பராமரிக்க இந்தத் திருத்தம் உதவுகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலரும் எழுத்தாளருமான பிரேர்ணா சிங் பிந்த்ரா இந்தத் திருத்தம் குறித்து அப்போதே எச்சரித்தார். “வனவிலங்கு பாதுகாப்புச் சட்டமானது அரிய விலங்குகளைக் காடுகளில் வைத்துப் பராமரிப்பதற்காக இயற்றப்பட்டது. அதில் திருத்தம் செய்வதால், காடுகளில் வாழும் யானை போன்ற உயிரினத்தை மீட்டு, காப்பாற்றி, வளர்க்க தங்கள் தனி இடங்களுக்குக் கொண்டுசெல்லலாம் என்கிற சட்டத் திருத்தம் நாளடைவில் வணிகநோக்கில் இவற்றைக் கடத்தவும் விற்கவுமே பயன்படும் அளவுக்குக் குறைபாடு நிறைந்ததுஎன்று எச்சரித்தார்.
  • பாதுகாக்கப்பட்ட அரிய விலங்கான யானையை, வாங்கி விற்கும் பண்டமாக மாற்றக்கூடிய இந்தத் திருத்தம், வனவிலங்கு சட்டத்தின் நோக்கத்துக்கு முரணாக இருக்கிறது என்றார். இச்சட்ட திருத்தத்தால் ஏற்படக்கூடிய கடுமையான முரண்பாட்டைச் சரிசெய்தாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
  • அதிகாரத்தில் யார் இருக்கிறார்கள், அவர்கள் யாருக்கு உதவி செய்யக் கடமைப்பட்டவர்கள் என்பதைப் பார்க்கும்போது, சட்டத் திருத்தத்தில் ஏற்பட்ட ஓட்டை அடைக்கப்படாமலேயே விடப்பட்டது தெரிகிறது. இந்தத் திருத்தத்தின் விளைவுகள் நாம் அப்பட்டமாகப் பார்க்கும் வகையில் வெளிவரத் தொடங்கிவிட்டன. 2022 ஜூன் மாதம்நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்நாளிதழில் வெளியான ஒரு செய்தி, ஒரே மாதத்தில் போலிச் சான்றுகள் மூலம் அசாமிலிருந்து மட்டும் எட்டு முறை யானைகளைப் பிடித்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன அவற்றில் ஏழு, ஜாம்நகரில் இருக்கும் அம்பானிகளின் அறக்கட்டளை நிறுவனத்துக்கு யானைகளைக் கொண்டுசெல்வதற்கான முயற்சிகள் என்கிறது.

யானைகளும் வடகிழக்கும்

  • இந்த எட்டு முயற்சிகள் என்பது பின்னால் திரளப்போகும் பெருவெள்ளத்தின் சிறுதுளி மட்டுமே. அனந்த் அம்பானி 2024 பிப்ரவரியில் அளித்த பேட்டியில், தங்களுடைய ‘ராதாகிருஷ்ணா ஆலய யானைகள் நல்வாழ்வு அறக்கட்டளை’ மட்டும் காடுகளிலிருந்து மீட்கப்பட்ட இருநூறுகளுக்கும் மேற்பட்ட யானைகளைப் பராமரிக்கிறது என்று பெருமைப்பட்டார்.
  • மோடி ஆதரவு ஊடகங்கள் இதை அப்படியே பிரசுரித்தன. ‘நார்த்ஈஸ்ட் நவ்’ என்ற இணையதளம் மட்டும் இதன் பின்னாலிருக்கும் உண்மைகளை அம்பலப்படுத்தியது. அருணாசல பிரதேசம், அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலிருந்து இந்த யானைகள் பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டன என்று கூறியது. காடுகளில் சட்ட விரோதமாக பிடிக்கப்பட்ட இந்த யானைகள் இடைத்தரகர்கள் மூலம் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன.
  • பிராணிகள் நலனில் அக்கறையுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனத்திடமிருந்து இது தொடர்பாக வந்த ஒரு கடிதத்தையும் ‘நார்த்ஈஸ்ட் நவ்’ (வடகிழக்கு இன்று) இணையதளம் வெளியிட்டது. பசுமையான, வளமான, உண்பதற்கு உணவும் நீரும் மிகுந்த, இதமான தட்பவெப்பம் மிக்க (அருணாசல பிரதேசம் உள்ளிட்ட) காடுகளிலிருந்து 3,400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, வறண்ட – யானைகள் உயிர் வாழ்வதற்கான சூழலும் தட்பவெப்பமும் சிறிதும் இல்லாத, ஜாம்நகருக்குக் கொண்டுசெல்லப்பட்டு வளர்ப்பது மிகப் பெரிய கொடுமை என்று கடிதம் சுட்டிக்காட்டியது.
  • மரச்சட்டங்களால் ஆன பெரிய கூண்டுகளில் அடைக்கப்படும் இந்த இளம் யானைக் குட்டிகள், இடையில் யாரும் தடுத்து நிறுத்திவிடக் கூடாது என்ற அச்சத்தில் ஒரே மூச்சில் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து லாரிகளில் வைத்து பிஹாருக்கு ஓட்டி வரப்படுகின்றன. பிறகு அங்கிருந்து குஜராத்தின் மேற்கில் உள்ள ஜாம்நகருக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. மொத்தப் பயண நாள்கள் 19. இந்தக் கடிதத்தின் நோக்கமே, காடுகளில் யானைகளைப் பிடித்து அவற்றைத் தனியார் அறக்கட்டளையின் பராமரிப்பு மையங்களுக்கு (காப்பகங்கள்!) விற்றுவிடும் சட்ட விரோத யானை மீட்புகளை அம்பலப்படுத்துவதுதான்.
  • காடுகளில் ஏதோ காரணங்களுக்காக கூட்டத்திலிருந்து தனித்துவிடப்படும் யானை அடிபட்டோ நோய்வாய்ப்பட்டோ தவிக்கும்போது, அதை மீட்டு சிகிச்சை அளித்து பராமரிப்பது நல்ல நடவடிக்கைதான், அதை நூற்றுக்கணக்கான யானைகளுக்குச் செய்வதாகக் கூறி அவற்றின் வாழிடத்திலிருந்து அன்னியமான இடங்களுக்குக் கூட்டிச் செல்வது, முந்தைய காலங்களிலிருந்த யானை வேட்டையை மீண்டும் புதுப்பிக்கும் மாற்று உத்திதான் என்று பிராணிகள் நல ஆர்வலர் சுட்டிக்காட்டினார். “சிறுவர்கள் ஆர்வமிகுதியால் தபால் தலைகளைச் சேகரிப்பதைப் போலத்தான் இப்படி, காடுகளில் இயற்கையாக வளர வேண்டிய யானைகளைப் பிடித்துவந்து பட்டியில் அடைப்பதும்” என்கிறார் சூழலியாளர் ரவி செல்லம்.

அம்பானிகள் முன்னுள்ள கேள்விகள்

  • அம்பானிகளும் அவர்களை அரசுக்கு உள்ளிருந்தும் – வெளியிலிருந்தும் ஆதரிப்பவர்களும் மூன்று கேள்விகளுக்குக் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் என்று அறிவியலாளர்களும் சூழலியல் ஆதரவாளர்களும் கோருகின்றனர். 
  • காடுகளில் இயற்கையான சூழலில் மரங்கள் - செடி கொடிகள் - புதர்கள் என்கிற சூழலில் வாழ வேண்டிய யானைகளை ஏன் வானிலையில் வறண்ட, தொழிலகங்கள் மிகுந்த ஜாம்நகர் பகுதிக்குக் கொண்டுவர வேண்டும்? 
  • இரண்டாவது, காடுகளிலிருக்கும் யானைகளை மீட்டுப் பராமரிக்க அரசுக்கு இணையான அமைப்பு முறையை ஏன் கையாள வேண்டும்? 
  • யானைகளைக் காப்பதில்தான் உண்மையில் ஆர்வம் என்றால் ஏன் அந்தந்த மாநிலங்களிலேயே உள்ள வனத் துறையினருடன் இணைந்து அந்தந்தப் பகுதிகளிலேயே வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழத் தேவையான வசதிகளைச் செய்துதரக் கூடாது?
  • இவையெல்லாம் முக்கியமான கேள்விகள், ஆனால் அம்பானிகளோ அவர்களுடைய அரசியல் புரவலர்களோ இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்றுகூட கவலைப்படமாட்டார்கள்.

தொழிலதிபர்கள் அப்போதும் இப்போதும்

  • நான் இளைஞனாக இருந்தபோது அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்களை இடதுசாரி விமர்சகர்கள் ‘டாடா-பிர்லா (ஆதரவு) சர்க்கார்’ என்று கேலியாகக் குறிப்பிடுவார்கள்.
  • ஜே.ஆர்.டி.டாடாவோ, கன்ஷியாம் தாஸ் பிர்லாவோ மிகுந்த செல்வாக்குடன் இருந்த 1950கள் 1960களில்கூட தங்களுடைய தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள ஊர்களின் விமான நிலையங்களுக்குத் தாற்காலிகமாகக்கூட சர்வதேச அந்தஸ்து கொடுங்கள் என்று குடும்பத் திருமணங்களுக்கு – அதிலும் திருமணத்துக்கு முந்தைய சடங்குக்கு – ஜவாஹர்லால் நேருவையோ இந்திரா காந்தியையோ கேட்க வேண்டும் என்றுகூட நினைத்திருக்கமாட்டார்கள். குடும்ப உயிரியல் பூங்காவுக்காக வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தையே திருத்தும் அளவுக்கு அரசை வலியுறுத்தும் செல்வாக்கு அவர்களுக்கு நிச்சயம் இருந்திருக்காது.
  • இப்போது எல்லாமே வித்தியாசமாக மாறிவிட்டது. “எல்லாத் தொழிலதிபர்களும் சமமான வாய்ப்புள்ள களத்தில் போட்டியிட வேண்டும் என்ற பழைய சிந்தனைகளுக்கு மாறாக, மிகவும் களங்கப்படுத்தப்பட்டுவிட்ட முதலாளியம் புதிய முறைகளில் போட்டியிட்டு வளர அரசு களத்தை மாற்றிவிட்டது” என்று அரசு ஆதரவுப் பொருளியல் நிபுணர் அர்விந்த் சுப்ரமணியன் கூறுவது முக்கியத்துவம் வாய்ந்தது.
  • அரசின் 2ஏ மாதிரியால் அம்பானி – அதானி என்ற இரண்டு தொழில் குடும்பங்கள் அபாரமான வளர்ச்சி கண்டுள்ளன; கடல் துறைமுகங்கள், விமான நிலையங்கள், தூய்மையான – கரிப்புகை கிளப்பும் எரிபொருள் உற்பத்தித் துறை (பெட்ரோலிய எண்ணெய் – நிலவாயு), பெட்ரோ ரசாயனங்கள், தொலைத் தகவல்தொடர்பு ஆகிய துறைகளில் இவ்விரு நிறுவனங்களும் வல்லாதிக்க நிலைமைக்கு உயர்ந்துவிட்டன.
  • எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருமே தங்களுடைய கவனங்களையும் விமர்சனங்களையும் அம்பானியின் தொழில் குழுமத்தை நோக்கியே திருப்பியுள்ளனர். வனவிலங்கு காப்புச் சட்டத்தையே தங்களுக்கு சாதகமாக வளைக்கக்கூடிய செல்வாக்கு அம்பானிகளுக்கு இருக்கிறது. தொழில் – வியாபாரமாக இருந்தாலும், குடும்ப நலனாக இருந்தாலும் அதானி – அம்பானிகளுக்கு மோடி அரசின் உத்தரவாதம் (கியாரண்டி) தொடர்கிறது என்பதே உண்மை.

நன்றி: அருஞ்சொல் (17 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories