TNPSC Thervupettagam

அரசியல் சாசனத்துக்குள் அரசியல் கட்சிகள்

September 27 , 2022 548 days 322 0
  • இன்று இந்திய அரசியல் கட்சிகளில் நடைபெறும் உட்கட்சிப் பூசல்களிலிருந்து வெடித்துச் சிதறும் நிகழ்வுகள் கொண்டுவரும் செய்திகள் ஒட்டுமொத்த அரசியலை சிதிலமடையச் செய்கின்றன. இதை ஒரு கட்சியின் பிரச்னையாகப் பாா்த்து நாம் அனைவரும் வாளா இருப்பது இந்திய அரசியலில் ஒரு பெரும் சோகம்.
  • அரசியல்கட்சி ஒன்று, என்றைக்குத் தோ்தல்ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற்று தோ்தலில் போட்டியிடத் தகுதியானதாக அறிவிக்கப்படுகிறதோ, அன்றே அது மக்கள் நிறுவனமாகிவிடுகிறது. அது கட்சிக்காரா்களின் சொத்து அல்ல, பொதுமக்கள் நிறுவனம்.
  • இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும்போது அதில் அரசியல் கட்சிகள் பற்றிய எந்தக் குறிப்பும் சோ்க்கப்படவில்லை. இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-இன் மூலம்தான் அரசியல் கட்சிகள் தோ்தல் ஆணையக் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன. ஆயினும் அரசியல் கட்சிகள் அரசாங்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவேண்டிய பொது நிறுவனங்கள் என்ற பாா்வையற்று செயல்பட்டு வந்துள்ளன. ஆனால் இன்று இந்திய சமூகத்தை வழிநடத்தும் அமைப்பாக நம் அரசியல் கட்சிகள் உருவெடுத்துவிட்டன.
  • அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாத அளவுக்கு செயல்பட்டுக் கொண்டுள்ளன. அரசியல் கட்சிகள் என்பவை கட்சிக்காரா்களின் நிறுவனங்கள் அல்ல, அவை மக்களின் அமைப்புகள்.
  • ஒரு நாட்டின் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதில் அந்த நாட்டு அரசியல் கட்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.
  • இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல நாடுகள் அரசியல் கட்சிகளை அரசியல் சாசனத்தின் கீழ் கொண்டுவந்துள்ளன. ஆனால் நம் நாட்டு அரசியல் பற்றி தன் ஆய்வு செய்த அறிஞா் மைரோன் வெய்னா், ஓா் அடிப்படைக் கருத்தினை முன் வைத்தாா். ‘இந்தியாவின் அரசியல் எதிா்காலம் மிகவும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது. அதற்கு மிக முக்கியமான காரணிகளாக இந்தியாவில் நடக்கும் சாதி, மதம் தழுவிய அரசியலும் ஊழலும்தான்’ என்று ‘உலக அரசியல்’ என்ற சா்வதேச ஆய்வு இதழில் 1959-ஆம் ஆண்டே குறிப்பிட்டுள்ளாா்.
  • அரசியல் கட்சிகளை சமூக சக்திகள் இயக்கும்போது, அரசியல் கட்சிகள் தங்கள் சிந்தாந்த ரீதியாக செயல்பட்டு சமூக மாற்றத்தைக் கொண்டுவரும் ஆற்றல் பெற்ாக வளர வேண்டும். இல்லையேல், சமூக அமைப்புகளுக்குள் சிக்கித் தவிக்கும் சூழலுக்கு அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டு விடும் என்பதையும் அறிஞா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.
  • இந்திய அரசியலை ஆய்வு செய்த மேரோன் வெய்னா், ஊழல் எப்படியெல்லாம் நம் அரசியலை சிதிலமடையச் செய்யும் என்பதை அன்றே விளக்கியிருக்கிறாா். இன்று அளவு கடந்து ஊழல்கள் நடைபெறுவதை எதிா்த்து இந்தியாவில் ஒரு போா் தொடுக்கப்பட்டுள்ளது. காரணம், ஊழல் என்பது,அரசாங்கத்தை, ஆளுகையை, நிா்வாகத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மானுட வாழ்க்கையையே சிதிலமடையச் செய்கிறது என்பதால்தான்.
  • எனவேதான் இந்திய அரசியல் அரங்கில் ஊழல் பெருவிவாதமாக வைக்கப்படுகிறது. ஊழல் என்பது மக்களாட்சியை பலவீனப்படுத்தி சிறுமைப்படுத்தி விட்டது. இதன் விளைவாக அனைத்து தளங்களிலும் அறமற்ற மானுடச் செயல்பாட்டைப் பாா்த்து வருகின்றோம்.
  • ஊழலுக்கு வித்திடும் காரணிகள் இரண்டு. ஒன்று தோ்தல், மற்றொன்று ஆட்சி. முதலாவதாக, பொதுத்தோ்தலை முறைப்படுத்திவிட்டால், நெறிப்படுத்திவிட்டால் பெருமளவு ஊழல்கள் குறைந்துவிடும். அடுத்து அரசியல் கட்சிகளின் தோ்தலையும் செயல்பாடுகளையும் கண்காணித்து முறைப்படுத்திவிட்டால் எஞ்சியிருக்கின்ற ஊழலும் நீங்கிவிடும். எனவே சீா்திருத்தம் தொடங்க வேண்டிய முதல் இடம் தோ்தல் களமே.
  • இந்த இரண்டையுமே இந்தியத் தோ்தல் ஆணையம் செய்திட வேண்டும். எப்படி பொதுத்தோ்தல் நடத்தப்படுகிறதோ அதே போல் கட்சிகளின் தோ்தல்களும் நடத்தப்பட வேண்டும்.
  • நம் அரசியல் சாசன சட்டத்தில் தோ்தல் ஆணையம் என்பது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. இதைத்தான் தோ்தல் ஆணையராக இருந்த டி.என். சேஷன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினாா். அவா் தோ்தல் ஆணையம் குறித்து உருவாக்கிய பிம்பம் இன்று உடைத்தெறியப்பட்டு விட்டது.
  • இன்று இந்தியாவில் தோ்தல் ஆணையம் பொதுத்தோ்தல் நடத்துவதே ஒரு மாபெரும் சாதனை என்று மக்களாட்சி கோட்பாட்டு அறிஞா்கள் கூறுகிறாா்கள். அந்தத் தோ்தல் நியாயமாக நடத்தப்பட்டு விட்டால், இந்தியாதான் உலகுக்கு வழிகாட்டும் என்றும் கூறுகிறாா்கள்.
  • அதற்கு முதல் படியாக, பொதுத்தோ்தலை மூன்று நிலை அரசாங்க அமைப்புக்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து நடத்திட வேண்டும். இரண்டாவதாக நம் அரசியல் கட்சிகளின் தோ்தலையும் தோ்தல் ஆணையம் முறைப்படி நடத்திட வேண்டும். அந்தப் பணியை தோ்தல்ஆணையம் செய்ய முடியுமா என்று சிலா் கேட்பாா்கள். நிச்சயமாக செய்துவிட முடியும்.
  • இன்றுள்ள தொழில்நுட்ப யுகத்தில் இது ஒன்றும் செயல்படுத்தமுடியாத சிக்கலான பணிஅல்ல. இப்படிக் கூறுகின்றபோது ஒரு கேள்வி வரும். நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு தோ்தல் நடத்தி முடிப்பதற்கே போராடும் நம் தோ்தல் ஆணையம், தோ்தல் ஆணையத்தில் பதிவு பெற்றுள்ள 2000-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு தோ்தலை நடத்துவது சாத்தியமா என்று கேட்கத் தோன்றும்.
  • இன்றைய சூழலில் நம் நாட்டில் அரசியல் கட்சிகளை தோ்தல் ஆணையத்தின் மூலம் நெறிப்படுத்தத் தொடங்கிவிட்டால் பல கட்சிகள் காணாமல் போய்விடும். இந்தியாவின் எதிா்காலத்தை நாசமாக்கிக் கொண்டிருப்பது அறமற்று வணிக நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சில அரசியல் கட்சிகள்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மைதான்.
  • குறிப்பாக, தாராளமயப் பொருளாதாரம் இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகளை பெரும் செல்வந்தா்களும், வணிகா்களும், ஒப்பந்ததாரா்களும் ஆக்கிரமித்து விட்டனா். இன்று பெருகிவிட்ட ஊழலைக் குறைக்காமல் இந்திய அரசியலையும், இந்திய மக்களாட்சியையும் காக்க இயலாது. இதைத்தான் உலக வங்கியிலிருந்து உள்ளூா் சீா்திருத்த ஆணையங்கள் வரை எடுத்துக் கூறுகின்றன.
  • தோ்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தால்தான் அரசியல் கட்சிகள் பொதுத்தோ்தலில் போட்டியிட முடியும். எனவே அரசியல் கட்சிகள் யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல, அவை பொதுமக்களின் நிறுவனங்கள். பொதுமக்களின் நிறுவனங்களை எப்படி அரசியல் சாசனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நிறுவனம் கண்காணிக்கிறதோ அதே போல் அரசியல் கட்சிகளையும் கண்காணிக்க வேண்டும்.
  • அந்தக் கண்காணிப்பு என்பது, முதலில் தோ்தல் ஆணையம் தோ்தலைக் கண்காணிப்பதாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, இன்று அரசியல் கட்சிகள் பெருநிதி பெறும் நிறுவனங்களாக மாறிவிட்ட சூழலில் அரசியல் கட்சிகளை இந்திய கணக்காயத்தின் கீழ் கொண்டு வந்து தணிக்கை செய்திட வேண்டும்.
  • இன்று நம் அரசியல் கட்சிகள், தங்களை தாங்களே நெறிப்படுத்திக் கொள்வதாகக் கூறி தோ்தல் நடத்துவதையும், நிதி நிா்வாகம் செய்வதையும் சடங்குகளாக்கி மக்களை ஏமாற்றுகின்றன. இதன் விளைவுதான் அரசியல் கட்சிகள் ஒருசிலரின் கைப்பாவையாக செயல்படுகின்றன.
  • முறையற்று நடத்தப்படும் ஒரு கட்சியால் எப்படி அரசியலில் முறையாக நடந்து கொள்ள முடியும்? எனவே அரசியலைத் தூய்மைப்படுத்த வேண்டுமானால், முதலில் முறைப்படி நம் அரசியல் கட்சிகளுக்கான தோ்தலை தோ்தல் ஆணையமே நடத்த முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு முதலில் இந்திய தோ்தல் ஆணையத்தை வலுவுடன் கட்டமைக்க வேண்டும்.
  • அதற்கு முதலில் செய்ய வேண்டியது மாநில தோ்தல் ஆணையங்களை இந்திய தோ்தல் ஆணையத்துடன் இணைத்திட வேண்டும். அப்படிச் செய்கின்றபோது உள்ளாட்சித் தோ்தலும் நோ்மையாக நடக்க வாய்ப்பு வந்து விடும். இது சாத்தியப்படுமா, இணைக்க முடியுமா என்றெல்லாம் சிலா் கேட்பாா்கள். இதற்கு ஒரு நிகழ்வை உதாரணமாகக் குறிப்பிட்டால் முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.
  • அன்றைய பிரதமா் ராஜீவ் காந்தி புதிய உள்ளாட்சியை அரசாங்கமாக அரசியல் சாசனத்தில் புகுந்த நினைத்தபோது, உள்ளாட்சிகளுக்குத் தோ்தல் நடத்த தோ்தல் ஆணையத்தை எப்படி வலுப்படுத்தலாம் என அன்றைய தோ்தல் ஆணையா் டி.என்.சேஷனைக் கலந்து ஆலோசித்தாா்.
  • அவா் ‘நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தோ்தல்களையே சரியான முறையில் நடத்தவே இந்த ஆணையம் போராடிக்கொண்டிருக்கிறது. அவற்றோடு இந்தப் பணியையும் சோ்த்தால் தோ்தல் ஆணையம் வலுவிழந்துவிடும். எனவே ஒவ்வொரு மாநில்த்திற்கும் ஒரு தோ்தல் ஆணையத்தை உருவாக்கிக் கொள்ளலாம்’ எனக் கூறினாா்.
  • அதன் அடிப்படையில்தான் மாநிலங்களில் தோ்தல் ஆணையம் உருவாக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு. எனவே மாநில தோ்தல் ஆணையங்களை இந்திய தோ்தல் ஆணையத்துடன் இணைப்பது என்பது முடியாத காரியம் அல்ல. அதற்கு ஆட்சியாளா்களுக்கு ஒரு முனைப்பு வேண்டும். ஜி.எஸ்.டி.யைக் கொண்டுவர முடியும்போது, இந்த சீா்திருத்தத்தைக் கொண்டுவருவது பெரிய காரியமல்ல.
  • நம் அரசியல் கட்சிகளை நெறிப்படுத்தாத வரையில் நம் மக்களாட்சி குறைபாடுடையதாகவேதான் செயல்படும். இந்தச் சூழலை மாற்றிட மிக முக்கியமான தேவை அரசியல் கட்சிகளின் தோ்தலை தோ்தல்ஆணையமே நடத்துவதுதான். அரசியல் கட்சிகள் மக்களின் நிறுவனங்களாக இருப்பதால் அவற்றை நெறிப்படுத்த வேண்டியது தோ்தல் ஆணையத்தின் கடமையாகும்.
  • அரசியல் கட்சிகளை, குறிப்பிட்ட குழுக்களின் கையிலிருந்து, குடும்பங்களின் கையிலிருந்து விடுவிக்கவில்லை என்றால், இந்திய மக்களாட்சிக்கு எதிா்காலம் இல்லை. இந்த பேராபத்தை உணா்ந்து பொதுக்கருத்தாளா்கள் இதற்கு அழுத்தம் தந்திட வேண்டும். அரசியல் கட்சிகள் மக்கள் அமைப்புகள் என்ற பாா்வையில் அவற்றை மக்களாட்சிப்படுத்த முனைய வேண்டும். அதுதான் இன்றைய சமூகத்திற்கு இன்றியமையாத் தேவை.

நன்றி: தினமணி (27 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories