TNPSC Thervupettagam

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் ஏன் இத்தனை குழப்பங்கள்?

September 20 , 2021 971 days 536 0
  • நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் வேலைவாய்ப்பு தொடர்பிலான முக்கிய அறிவிப்புகளில் அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப் படும் என்பதும் ஒன்றாகும்.
  • அரசுப் பணிகளுக்கான பொதுப் போட்டியிலும், தத்தம் வகுப்பினருக்குள்ளான பொதுப் பிரிவிலும் இடம்பெறும்பட்சத்தில், பெண்களின் பிரதிநிதித்துவம் 50%-ஐத் தாண்டுவதற்கான வாய்ப்புள்ளது என்ற வகையில் சமூக மாற்றங்களுக்கு வித்திடக்கூடிய அறிவிப்பு இது.
  • கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெருந்தொற்று முன்னெச்சரிக்கை காரணமாகத் தேர்வாணையத் தேர்வுகள் நடத்தப்படாததால், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வயது உச்ச வரம்பை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாகக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டு, அரசாணையும்கூட வெளியிடப்பட்டுள்ளது.
  • மத்திய அரசுப் பணிகளுக்கான சிவில் சர்வீஸ், எஸ்எஸ்சி தேர்வுகளைப் போல டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்துவதில்லை.
  • லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் குரூப் 1, 2, 4 தேர்வுகளே குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படாததுடன் சில துறைகளில் ஒன்றிரண்டு பணியிடங்களுக்காக நடத்தப்படும் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை.
  • கடந்த அதிமுக ஆட்சியில், கரோனா காலத்துக்கு முந்தைய ஆண்டுகளிலேயே எதிர்பார்க்கப்பட்ட பல தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் வயது உச்ச வரம்பு நீட்டித்திருப்பது போதுமானதல்ல.
  • டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் அறிவிப்பு, அனைத்து அரசுப் பணிகளுக்கும் தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்படும் என்பது.
  • தமிழறியாத ஒருவர் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்குத் தடையாக இது அமையும் என்று காரணம் கூறப்பட்டுள்ளது. குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழிப் பாடம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் பொதுஅறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி இன்னும் தேர்வு நடத்தப்படாத நிலையில், மீண்டும் ஒரு மாற்றம் வருமோ என்ற குழப்பத்துக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
  • முதல்நிலைத் தேர்வில் மொழிப் பாடங்களில் மதிப்பெண் பெறுவது எளிதானதாகவும் பொது அறிவுப் பாடங்களில் மதிப்பெண் பெறுவது கடினமானதாகவும் உள்ளதாலேயே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
  • முதன்மைத் தேர்வில் தமிழில் விண்ணப்பங்கள் எழுதும் திறன், மொழிபெயர்ப்புத் திறன் ஆகியவற்றைச் சோதிக்கும் வகையில் வினாத்தாள் முறையும் மாற்றப்பட்டது. எனவே, இது குறித்த தெளிவான அறிவிப்புகளையும் மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
  • கரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், நீதிமன்றப் பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வை நீதித் துறை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது.
  • ஆனால், இன்னமும்கூட குரூப் 2, 4 போன்ற பெரும் எண்ணிக்கையிலான பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சியால் அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.
  • இ-சேவை மையங்கள் வழியாகச் சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பது குறித்தும் மாணவர்களிடம் அதிருப்தி நிலவுகிறது.
  • இத்தகைய குறைபாடுகளைக் களைவதோடு, உத்தேசத் தேர்வுக் கால அட்டவணையையும் டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிட வேண்டும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பு.

நன்றி: இந்து தமிழ் திசை (20 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories