TNPSC Thervupettagam

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏழரை சதவீத இடஒதுக்கீடு: அதிமுகவை விஞ்சும் திமுக!

August 27 , 2021 982 days 466 0
  • அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொழிற்கல்விப் படிப்புகளில் ஏழரை சதவீத சிறப்பு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவு, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேறியிருப்பது வரவேற்கத்தக்கது.
  • ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையின்படி இந்தச் சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டுள்ளது.
  • பொறியியல், விவசாயம், மீன்வளம் மற்றும் சட்டம் ஆகிய படிப்புகளுக்கு இந்த இடஒதுக்கீடு பொருந்தும். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இந்தச் சட்ட முன்வடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
  • கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின்போது நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவ இளநிலைப் படிப்புகளில் ஏழரை சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்குச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிமுக தொடங்கிவைக்க... திமுக அதை இன்னும் விரிவுபடுத்தியிருக்கிறது. அரசியல் கருத்துநிலைகளில் மாறுபட்டு நின்றாலும் இடஒதுக்கீடு சார்ந்து திமுகவும் அதிமுகவும் ஒன்றுக்கொன்று இயைந்து செல்கின்றன என்பதற்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு இது.
  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதத்துக்குக் குறையாமல் சிறப்பு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று நீதிபதி முருகேசன் கமிட்டி பரிந்துரைத்திருந்தாலும், அதைவிடவும் குறைவாகவே இந்த இடஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்த நீதிபதி கலையரசன் தலைமையிலான கமிட்டியும் 10 சதவீதத்தையே பரிந்துரைத்திருந்தது.
  • எனினும், திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே ஏழரை சதவீதத்தையே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டு அளவாகத் தீர்மானித்துக்கொண்டுள்ளன. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த இட ஒதுக்கீட்டால் பயன்பெற முடியாத சூழலும் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டுவருகிறது.
  • மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்த பிறகு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிலையும் அரசுப் பள்ளிகளின் நிலையைப் போலத்தான் கவலைக்குரியதாக இருந்துவருகிறது.
  • அரசுப் பள்ளிகள் என்றாலே அது தனியார் பள்ளிகளைக் காட்டிலும் ஏன் தரம் குறைந்ததாகவோ வசதிகள் குறைந்ததாகவோ இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.
  • கரோனா ஏற்படுத்திய கடுமையான பொருளாதாரப் பாதிப்புகளுக்குப் பிறகு, அரசுப் பள்ளிகளை நோக்கி வரும் மாணவர்களின் எண்ணிக்கை நடப்புக் கல்வியாண்டில் அதிகரித்துள்ளது. எனவே, ஆசிரியர் - மாணவர் விகிதம் வழக்கத்தைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.
  • ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயது 60 வரையிலும் நீட்டிக்கப்பட்டிருப்பதால் நடப்புக் கல்வியாண்டைச் சமாளிக்கலாம். ஆனால், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • போதுமான நிதி ஒதுக்கீட்டுக்கு வாய்ப்பில்லாத நிலையில், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களை முடுக்கிவிட்டுப் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (27 - 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories