TNPSC Thervupettagam

அரபிக் கடலில் நீலத் திமிங்கிலத்தின் பாடல்கள்

August 31 , 2021 991 days 553 0
  • அரபிக் கடலில் உள்ள லட்சத் தீவுகளைச் சுற்றிய கடல் பகுதிகளில் நீலத் திமிங்கிலங்கள் பாடும் பாடல்களை முதல் முறையாக ஆராய்ச்சியாளர்கள் பதிவுசெய்துள்ளனர்.
  • எரிமலைக் குழம்பிலிருந்து உருவான தீவுக்கூட்டங்கள் இருக்கும் இப்பகுதியில், நீலத் திமிங்கிலங்கள் இருப்பது அக்கடல் பகுதியின் உயிர் வளத்தைக் காண்பிப்பதாக உள்ளது.
  • ஆண்டின் சில மாதங்களில் பேருயிர்களான நீலத் திமிங்கிலங்கள் இங்கிருந்து இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற இடமாக இந்தக் கடல்பகுதி உள்ளது முக்கியமான செய்தி.
  • 2019-ம் ஆண்டின் உஷ்ணமான ஒரு பிற்பகலில், கடல் பாலூட்டிகளை ஆராய்ச்சி செய்பவரான திவ்யா பணிக்கர், முதல் முறையாக ஆழ்கடல் ஒலிப்பதிவுக் கருவிகள் வழியாக, நீலத் திமிங்கிலங்களின் முனகல் பாடல்களைக் கேட்டபோது சிலிர்த்துப்போனார்.
  • தனது ஆய்வு அனுபவத்தில் திமிங்கிலங்களின் பாடல்களைக் கேட்டது மிக முக்கியமான ஓர் அனுபவம் என்று விவரிக்கும் திவ்யா, அரபிக் கடலில் உள்ள லட்சத்தீவு பகுதியில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட முதல் ஆவணம் இது என்கிறார்.
  • இரண்டு நீலத் திமிங்கிலங்கள் ஒரே நேரத்தில் பாடியதாக இருக்கலாம் என்று ஊகிக்கிறார். ``மூன்று ஸ்வரங்கள், மூன்று ஸ்தாயிகளில் ஒலிவீச்சின் அளவு முப்பது ஹெர்ட்ஸ்க்கும் நூறு ஹெர்ட்ஸ்க்கும் இடையில் அந்தப் பாடல் உள்ளது.
  • ரூஸ்டர் மீன்களின் கூவல் சத்தத்துக்கு நடுவே மிகக் குறைந்த ஒலியைக் கொண்ட நீலத் திமிங்கிலங்களின் பாடலைக் கேட்பது வேடிக்கையான அனுபவமாக இருந்தது” என்கிறார் திவ்யா பணிக்கர்.

சூழலை காப்பது

  • 2018 முதல் 2020 வரை ஒலிப்பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில், தென்மேற்குப் பருவக் காற்றுக்குச் சற்று முன்னர் ஏப்ரல், மே மாதங்களில் நீலத் திமிங்கிலங்கள் லட்சத்தீவுகள் இருக்கும் கடல் பகுதியில் தென்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
  • நீலத் திமிங்கிலங்கள் இங்கு காணப்படுவது உறுதிசெய்யப்பட்டாலும் இங்கேயே இருந்து இரையெடுத்துத் தங்கியிருக்கிறது என்பதையோ, வெறுமனே இந்தப் பகுதியைக் கடந்து செல்வதையோ இன்னும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்கிறார் திவ்யா பணிக்கர்.
  • அடுத்த சில ஆண்டுகளில் நீலத் திமிங்கிலங்களை வீடியோ வழியாக அவற்றின் இரையெடுக்கும் முறையையும் நடத்தைகளையும் பதிவுசெய்யும் திட்டங்கள் உள்ளன.
  • மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்கலங்களை மாற்றி, தரவுகளைச் சேமித்து, ஒலிப்பதிவுக் கருவிகள் கிட்டத்தட்ட 13 மாதங்களுக்குக் கடலடியில் செயல்பட்டிருக்கின்றன.
  • அரபிக் கடலில் மிகப் பெரிய சுற்றுலா மையமாகவும், உள்கட்டுமானரீதியில் விரிவாக்கத்துக்கும் தயாராகிவரும் லட்சத்தீவுகள் இருக்கும் கடல் பகுதி எவ்வளவு உயிர் வளத்தோடு இருக்கிறது என்பதைத்தான் இந்த நீலத் திமிங்கிலங்களின் வருகை தெரியப் படுத்துகிறது.
  • எந்த வளர்ச்சித் திட்டங்களும் உள்கட்டுமானப் பணிகளும் பவளப் பாறைகள், காயல், தீவு மற்றும் வளமான கடல்பகுதியின் நலத்துடன் சேர்ந்து ஆலோசிக்கப்பட வேண்டியது அவசியம்.
  • சூழலியல் நிபுணர்களைக் கலந்தாலோசித்தும், கடல்வாழ் உயிர்களின் வளத்தைப் பாதிக்காமலும் இந்த உள்கட்டுமானப் பணிகளைச் செய்ய வேண்டும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
  • நீலத் திமிங்கிலங்களின் பாடல்கள் ஆண் திமிங்கிலம், பெண் திமிங்கிலத்தை இனப்பெருக்கத்துக்கு அழைப்பதற்காக வெளிப்படுத்தப்படுபவை என்கிறார் கடல்சார் பாலூட்டிகள் நிபுணரான திபான சுடாரியா.
  • உணவு தேடுவதற்கும், தொடர்புகொள்வதற்கும் ஒலியைத் திமிங்கிலங்களும் ஓங்கில்களும் (டால்பின்கள்) கடல்பன்றிகளும் பயன்படுத்துகின்றன.
  • கடலில் ஒலி, காற்றைவிட வேகமாகப் பயணிக்கிறதாம். ஒளி குறைவான இடத்துக்குப் பழகி, ஒலியைக் காண்பதற்கான வழியாகப் பயன்படுத்துவதற்குக் கடற்பாலூட்டிகள் கச்சிதமாகப் பழகியுள்ளன.
  • நீலத் திமிங்கிலங்கள் வெளியிடும் முனகல்களை வைத்து இந்தப் பாலூட்டிகளின் அடையாளம் பற்றிய குறிப்புகளை விஞ்ஞானிகள் தருகின்றனர்.
  • பிக்மி வகை நீலத் திமிங்கிலங்கள் இவை என்கின்றனர். லட்சத்தீவு பகுதிகளில் ஒலிப்பதிவில் கேட்ட பாடல்களின் அதே ஒழுங்கில் 1980-ல் இலங்கை கடல் பகுதியில் பதிவு செய்யப்பட்ட நீலத் திமிங்கிலங்களின் பாடல்களும் ஒத்திருக்கின்றன.
  • பொதுவாக, நீலத் திமிங்கிலங்கள் எழுப்பும் பாடல்கள் ஒரே விதமான முறைமையில் இருக்குமாம். ஆனால், லட்சத்தீவு பகுதியில் பதிவுசெய்யப்பட்ட சில ஒலிப்பதிவுகளில் பாடலின் கடைசிப் பகுதியை மட்டும் அந்த நீலத் திமிங்கிலங்கள் விட்டுவிடுவது மர்மமாகவே உள்ளது என்கிறார் திவ்யா பணிக்கர்.
  • இந்தப் பாடல் வகை வடக்கு இந்தியப் பெருங்கடலின் நீலத் திமிங்கிலப் பாடல் என்றே குறிக்கப்படுகிறது.
  • கடலுக்குள் முக்குளிப்பவர்களைக் கொண்டு பவளப்பாறைகளின் திட்டுக்களில் ஆழ்கடலில் ஒலிப்பதிவுக் கருவிகள் பதிக்கப்படுகின்றன.
  • தற்போதைய ஆராய்ச்சி அறிக்கையின்படி, இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பு சராசரிக்கும் அதிகமாகச் சீக்கிரமே வெப்பமடைவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • வர்த்தகரீதியாக நீலத் திமிங்கிலங்களை வேட்டையாடியதால் கிட்டத்தட்ட கடந்த நூற்றாண்டில் அழித்தொழிக்கப்பட்ட நீலத் திமிங்கிலங்கள் சூழலியல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாகச் சமீப காலத்தில்தான் மீண்டும் செழித்துத் தழைத்து வருகின்றன. பருவநிலை மாற்றமும் நீலத் திமிங்கிலங்களின் இருப்பை அச்சுறுத்தும் இன்னொரு காரணியாக விளங்குகிறது.
  • பருவமழைக் காலங்களில் ஏற்பட்ட மாறுதல்களும், அடிக்கடி நிகழும் சூறாவளிகளும் நீலத் திமிங்கிலங்களின் உயிர் வளத்தைப் பாதிப்பதாகவும் விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
  • கடலின் உயிர் வளத்தைப் பாதிக்காமல் மீன்பிடிக்க உதவும் பைகேட்ச் ரிடக்சன் கருவிகளைப் படகுகளில் கட்டாயமாகப் பொருத்துவதை நடைமுறைப்படுத்துவதன் மூலம் லட்சத்தீவுகள் கடல் பகுதியின் உயிர் வளத்தைப் பாதுகாக்க முடியும்.
  • இதன் மூலம் ஓங்கில்கள், ஆமைகள், சிறிய திமிங்கிலங்கள் தேவையில்லாமல் பிடிக்கப் பட்டுப் பாதிப்புக்கு உள்ளாகாது.
  • அத்துடன் அதிக ஒலியை ஏற்படுத்தும் கப்பல்கள், கலங்களின் சத்தத்தையும் குறைப்பது நீலத் திமிங்கிலங்களின் பாடல்களை எப்போதைக்குமாகக் காப்பாற்றுவதாக இருக்கும். அவற்றின் பாடல்களைக் காப்பதென்பது சூழலையும் காப்பதே ஆகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (31 - 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories