TNPSC Thervupettagam

அறிவியல் தினம்

February 26 , 2023 447 days 302 0

நம்ம ஊரு விஞ்ஞானி

  • மக்கள் விஞ்ஞானி’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் கோவை ‘ஜி.டி.நாயுடு அருங்காட்சியக’த்தில் வைத்திருக்கிறார்கள். அவர் சேகரித்த நூற்றுக்கும் அதிகமான கார்களை வைத்து, ‘விண்டேஜ் கார் மியூசியம்’ ஒன்றும் அருகிலேயே இருக்கிறது.
  • இன்றைய தகவல்தொடர்பு வசதிகள் இல்லாத 75 ஆண்டுகளுக்கு முன்னர், ஜி.டி.நாயுடுவின் கண்டு பிடிப்புகளைப் பார்த்து மேற்குலகம் வியந்திருக்கிறது! நோபல் பரிசுபெற்ற சி.வி.ராமன், “அவரது சாதனைகளைப் பற்றி எழுத எனக்குத் திறமை போதாது!” என்று வியந்திருக்கிறார்.
  • கோவையில் உள்ள கலங்கல் கிராமத்தில் 1893 மார்ச் 23இல் பிறந்தார் ஜி.டி.நாயடு. பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி, அப்பாவுடன் வயலில் வேலை செய்தார். தமிழ்ப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினார். வாசிப்பு அவரது அறிவை விசாலமாக்கியது.
  • இந்த நேரத்தில் ஓர் ஆங்கிலேய அதிகாரி ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளைப் பார்த்தார். விலங்குகளைப் பூட்டாமல் ஓடிய அந்த வண்டிதான் அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. உணவகம் ஒன்றில் வேலை செய்து, அந்தப் பணத்தில் மோட்டார் சைக்கிளை வாங்கி, அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்தார். பின் மீண்டும் இணைத்து ஓட்டிப் பார்த்தார்.
  • பேருந்துப் போக்குவரத்து நிறுவனம் நடத்திய ஆங்கிலேய தொழிலதிபரான ராபர்ட் ஸ்டேன்ஸ் கம்பெனியில் சேர்ந்து, அவரது அன்புக்குப் பாத்திரமானார் ஜி.டி.நாயுடு. அவரிடம் ஆங்கிலத்தில் உரையாடவும் கற்றுக்கொண்டார். 1921இல் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் இடையே ஓடிக்கொண்டிருந்த தனது பேருந்து ஒன்றை ஜி.டி.நாயுடுவுக்கு விற்றார் ஸ்டேன்ஸ். 1933இல் ‘யுனைடெட் மோட்டார் டிரான்ஸ்போர்ட்’ என்கிற சுதேசிப் போக்குவரத்து நிறுவனம் உருவானது. 280 பேருந்துகளை அந்நிறுவனம் இயக்கியது! தொழிலதிபராக நாயுடுவின் புகழ் டெல்லி வரை பரவியது.
  • தனது போக்குவரத்துச் சேவையை மேலும் தரமாக வழங்கவும் பல்வேறு தொழில்களில் கிளை பரப்பவும் ஜி.டி.நாயுடு, வெளிநாடுகளுக்குச் சென்றார். பெல்ஜியம் சென்றபோது, அங்கே வாங்கிய பொம்மை காரிலிருந்த சிறு மின் மோட்டாரைத் தனியே பிரித்தெடுத்து, உலகின் முதல் ‘எலெக்ட்ரிக் ரேஸர்’ உருவாக்கினார். அதற்குக் காப்புரிமையும் பெற்று, பல நாடுகளிலிருந்து மூலப் பொருள்களை இறக்குமதி செய்து, தரமான முறையில் ‘எலெக்ட்ரிக் ரேஸர்’களை உற்பத்தி செய்தார். ரசந்த் (Rasant) என்கிற பெயரைச் சூட்டி, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, விற்பனையிலும் சாதனை படைத்தார்.
  • இரண்டாம் உலகப் போரின்போது மைக்கா கொண்டு தயாரிக்கப்பட்ட பேட்டரிகளையும் கார்பன் ரெசிஸ்டர்களையும் தயாரித்து ஆங்கிலேய ராணுவத்துக்கு விநியோகம் செய்தார். கோவையின் மற்றொரு சுதேசி தொழிலதிபரான ‘டெக்ஸ்டூல்’ பாலசுந்தரத்தின் கூட்டுறவுடன் மின் மோட்டார்களைத் தயாரித்தார். மின் மோட்டார் மட்டுமல்ல; ஐந்து பாண்ட் அலைவரிசைகள் கொண்ட வானொலிப் பெட்டிகள், சுவர்க் கடிகாரம், ஆரஞ்சு பிழியும் இயந்திரம், உருளைக் கிழங்கு தோல் சீவும் இயந்திரம், லேத் இயந்திரங்கள், மினி கார், அதிக வலிமையான டயர்கள் என 150க்கும் அதிகமான கண்டுபிடிப்புகளைத் தந்திருக்கிறார்!

இந்திய அறிவியலின் தூதர்கள்

  • இந்தியாவில் மாணவர்களுக்கும் சாதாரணர்களுக்கும் அறிவியலை எடுத்துச் செல்லும் முயற்சியில் இடையறாது இயங்கியவர்கள்: பேராசிரியர் யஷ்பால், இந்திய வான்இயற்பியலாளர் ஜெயந்த் நாரலீகர், எளிய முறை அறிவியல் கருவிகளைப் பிரபலப்படுத்திய அரவிந்த் குப்தா.
  • தூர்தர்ஷன் அலைவரிசையில் பேராசிரியர் யஷ்பால் வழங்கிய ‘டர்னிங் பாயின்ட்’ என்கிற வாராந்திர அறிவியல் நிகழ்ச்சியும், ‘சயின்ஸ் ஃபார் ஆல்’ நிகழ்ச்சியும் புகழ்பெற்றவை. 1990களில் பெரிய வசதிகள் இல்லாத காலத்தில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிகள், மக்களிடையே அறிவியலை நெருக்கமாக எடுத்துச்சென்றன. இன்றைக்கு எத்தனையோ வசதிகள் பெருகிவிட்டபோதும்கூட, அறிவியலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்ச்சிகள் அதிகரிக்கவில்லை.
  • அவரைத் தொடர்ந்து அறிவியல் ஆர்வத்தைத் தட்டியெழுப்பும் பல நூல்களை மாணவர்களுக்கும் சாதாரணர்களுக்கும் ஜெயந்த் நாரலீகர் எழுதினார். மாணவர்களைச் சந்தித்து அறிவியல் உரையாற்றுவதை வழக்கமாகக்கொண்டிருந்த அவர், அந்த நிகழ்ச்சிகளில் மாணவர்களிடம் ஆளுக்கு ஓர் அறிவியல் கேள்வியை எழுதி அனுப்பச் சொல்வார். அடுத்த நிகழ்ச்சியில் அதற்குப் பதில் சொல்வார். அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க இது ஒரு புதுமையான வழி. அவர் எழுதி நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள ‘A Journey Through The Universe’ – வான்இயற்பியல் குறித்த பிரபலமான அறிமுகப் புத்தகம்.
  • எளிய பொருள்களைக் கொண்டு அறிவியல் கோட்பாடுகளை விளக்கும் பொம்மைகளைச் செய்யும் வழிமுறைகளை நாடு முழுக்கப் பிரபலப்படுத்தியவர் அறிவியலாளர் அரவிந்த் குப்தா. இவர் நடத்திவரும் இணையதளத்தில் (https://www.arvindguptatoys.com/) குழந்தைகளும் பெரியவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய பல நூறு நூல்கள் இலவசமாகப் படிக்கக் கிடைக்கின்றன. அறிவியல் துறைகள் பற்றி மட்டுமல்லாமல், தற்போது அச்சில் இல்லாத, நம் நாட்டில் வாங்க முடியாத பல்வேறு புத்தகங்கள் இந்தத் தளத்தில் அறிவை பரப்பும் நோக்கத்துடன் பதிவேற்றப்பட்டுள்ளன.

உலக நலனுக்கான உலக அறிவியல்

  • இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் இந்தியர், சர்.சி.வி.ராமன் என்றழைக்கப்படும் சந்திரசேகர வெங்கட்ராமன். அவர் நோபல் பரிசைப் பெறுவதற்குக் காரணமாக அமைந்த ‘ராமன் விளைவு’ என்னும் கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்ட நாளே இந்தியாவில் தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
  • திருச்சி திருவானைக்காவில் பிறந்த சி.வி.ராமன், விசாகப்பட்டினத்தில் பள்ளிக் கல்வியை நிறைவுசெய்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரி யராகப் பணியாற்றத் தொடங்கினார். அதோடு, அந்நகரில் செயல்பட்டுவந்த இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் தன் இயற்பியல் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 1928இல் ‘ஒளி புகக்கூடிய ஓர் ஊடகத்தின் வழியாகப் பாயும் ஒளியின் அலைநீளம் ஏன் மாறுகிறது’ என்பதை விளக்கினார். இது அவரது கண்டுபிடிப்பாக அங்கீகரிக்கப்பட்டு, ‘ராமன் விளைவு’ என்று அழைக்கப்படுகிறது. இதற்காக 1930இல் சி.வி.ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • பிப்ரவரி 28 அன்றுதான் ‘ராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்டது என்பதால், அந்த நாளை தேசிய அறிவியல் நாளாக 1986இல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தேசிய மன்றம் (National Council for Science and Technology) அறிவித்தது. இதன்படி 1987முதல் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28 அன்று தேசிய அறிவியல் நாளை இந்திய அரசு கொண்டாடிவருகிறது.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான தேசிய மன்றம் அறிவியலை மக்களிடையே பரப்புவதற்காக உருவாக்கப் பட்டது. 

நன்றி: தி இந்து (26 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories