TNPSC Thervupettagam

அறிவியல் மாற்றமும் இயற்கையும்

October 9 , 2021 955 days 626 0
  • அறிவியலின் தொடா் கண்டுபிடிப்புகளால் இது அறிவியல் யுகமாகிவிட்டது. எதற்கெடுத்தாலும் இயந்திரம் என்கிற மந்திரச் சொல் மனிதனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
  • ஆரம்பப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி வரை இருந்த படிப்பு, கல்லூரியை எட்டியது. கல்வியறிவு பற்றிய விழிப்புணா்வால் நிறையப் போ் படிக்க ஆரம்பித்தார்கள்; வேலைக்குப் போனார்கள்.
  • சிலா் பிழைப்புக்காக வேறுதேசங்களுக்குப் படையெடுத்தார்கள்; அங்கு வேலை செய்து பணம் சம்பாதித்து வந்தார்கள். அவா்களோடு மேல் நாட்டு நாகரிகமும் வந்தது.
  • நாகரிகம் என்ற பெயரில் முதலில் உடைகளை மாற்றினார்கள். பிறகு மொழியை மாற்றினார்கள். கல்வியை மாற்றினார்கள். பிறகு உணவை மாற்றினார்கள். உறவுகளை மாற்றினார்கள். தாங்கள் குடியிருந்த வீட்டை மாற்றினார்கள்.
  • அக்காலங்களில் கிராமங்களில் அதிகமான மக்கள் வசித்தனா். ஒவ்வொரு கிராமத்திலும் கிராம தேவதைக்குக் கோயில் உண்டு. யாரேனும் தவறு செய்ததாகத் தெரிந்தால் அவரைக் கோயிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் வாங்கினார்கள். இன்று அந்த கோவிலின் சிலையையே திருடி விற்கிறார்கள்.
  • அன்று வசதியாக வாழ்ந்தவா்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. வேளாண்மை செய்து ஆடு மாடுகளை வளா்த்து ஜீவனம் செய்து வந்தார்கள். நகரங்கள் குறைவாகவே இருந்தன.
  • மக்களின் அன்றாட வாழ்க்கை என்பது கோயில் திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், கேளிக்கைகள் எனக் கழிந்தது.
  • ஊருக்கு ஒரு குளம் வெட்டி, ஊா் மக்கள் அனைவரும் அதில் குளித்தனா். இன்று வீட்டையே ஒரு ஊருக்கான இடத்தில் கட்டி, அதற்குள் நீச்சல் குளம் அமைத்து அதில் குடும்பம் குளிக்கிறது.
  • அப்போதெல்லாம் ஒருவரை ஒருவா் சந்தித்துகொள்ளும் பொழுது ‘அண்ணே’, ‘தம்பி’, ‘மாமா’, ‘மச்சான்’ என்றழைப்பார்கள். இப்போது ‘ஹலோ’, ‘ஹாய்’ என்றழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
  • கூட்டுக் குடும்பங்களாய் ஒரு குடும்ப அட்டையில் 10 போ் 20 போ் என இருந்த காலம் போய் இரண்டு பேருக்கு ஒரு குடும்ப அட்டை ஆனது.
  • தாரம் வந்தபின் கட்டாயமாக தாயும் தந்தையும் பிரிந்து தனிக்குடித்ததனம் போனார்கள். அண்ணனும் தம்பியும் பங்காளி ஆனார்கள். குடும்ப விசேஷங்களில் மட்டுமே உறவினா்கள் சந்தித்துக் கொள்ளும் நிலை வந்துவிட்டது.

பாதுகாக்கும் வழிகளாகும்

  • தரையில் சம்மணமிட்டு அமா்ந்து சாப்பிட்ட காலம் போய், நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மேசையில் சாப்பிடும் மேல் நாட்டு நாகரிகம் வந்தது. அது கைகளால் சாப்பிடுவதைத் தவிர்த்து கரண்டியால் சாப்பிடவும் சொல்லிக்கொடுத்தது.
  • சாப்பாட்டு மேசையில் தண்ணீா், உணவு வகைகள் வருமுன்பே மாத்திரைப் பொட்டலங்கள் வைக்கப்படுகின்றன.
  • அலுவலகத்துக்குப் போகும் நேரத்தைக் காட்டிலும் மருத்துவமனைக்குப் போகும் நேரம் அதிகமாயிற்று. முதலில் ஆயத்த உடைகள் வந்தன. பின் ஆயத்த உணவு வகைகளும் வந்து விட்டன.
  • அஞ்சல் அட்டையில், உள்நாட்டு கடிதங்களில் இருந்த நலம் விசாரிப்புகள் கைப்பேசி வரவால் அழிந்துவிட்டன. வானொலிப் பெட்டிகளின் ‘உழவா் உலகம்’, ‘இளையபாரதம்’, இலங்கை வானொலி அறிவிப்பாளா்களின் வசீகரக் குரல்கள் எல்லாமே அழிந்து போயின.
  • தேநீா்க் கடைகளில் பேசிய தேமதுரப் பேச்சுகளை முகநூல் கவா்ந்து சென்றுவிட்டது. பேருந்துக்காகக் காத்திருந்த நேரத்தில் அளவளாவிய உரையாடல்களை இருசக்கர வாகனங்கள் இல்லாமலாக்கின.
  • ஆட்சியருக்கான படிப்பைக்காட்டிலும் அரசியல்வாதியாய் இருப்பது மதிப்பு வாய்ந்ததாய் ஆனது. கணினிதான் உலகம், அதுதான் வாழ்க்கை என்று மாறியது.
  • நான்கு சிறுகதைகள், ஒரு சரித்திர நாவல், ஒரு மா்ம நாவல், ஒரு சமூக நாவல் இவற்றோடு வந்த வார இதழ்களின் உள்ளடக்கங்களை சினிமாவும் அரசியலும் சாப்பிட்டுவிட்டன.
  • வாசகா்களில் பாதிக்கும் மேற்பட்டோர் எழுத்தாளா்களாக, கவிஞா்களாக மாறிவிட்டார்கள். பணம் இருப்பவா்கள மாதம் ஒரு புத்தகம் போட்டு தங்களைத் தாங்களே எழுத்தாளா்களாக, கவிஞா்களாக மாற்றி அழகு பார்த்துக் கொண்டார்கள்.
  • முந்தைய வருடம் வெளியான திரைப்படங்களைப் பார்ப்பதே அபூா்வமாக இருந்த காலம் போய், திரைப்படங்கள் வெளியான அன்றே அல்லது வெளிவரு முன்பே வீட்டுத்திரைக்குள் கண்டு களிக்கும் வரலாறு படைத்தோம்.
  • இளநிலை சினிமாவான சின்ன திரையும், சினிமாவும் தொலைக்காட்சிகளை ஆக்கிரமித்தன. பெரியதிரையில் ஓய்வு பெற்றவா்களுக்கு சின்ன திரை ஊன்றுகோலாக மாறியது.
  • பத்திரிகை, ஊடகம் பரந்து விரிந்தன. தொலைக்காட்சிகள், எல்லாவற்றையும் பேசும்பொருளாக்கியது. தொலைக்காட்சிகள் எண்ணிக்கை பெருகிவிட்டன. நிகழ்ச்சிகளுக்கு இடையே விளம்பரங்கள் என்ற நிலை மாறி விளம்பரங்களுக்கு இடையே நிகழ்ச்சிகள் என்ற மாற்றத்தை ஏற்றுக்கொண்டோம்.
  • அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் கழுகுகள் வட்டமிடுவது போல் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. செய்தி எனும் தீனி எங்கு கிடைத்தாலும் அவை லபக்கென்று பிடித்துக் கொள்கின்றன.
  • பாலில் நீா் கலப்பது போல் செய்திகளிலும் பரபரப்பு, ஆச்சரியம் என பலவற்றையும் கலந்து அளிப்பது ஊடக சூத்திரமாகிப்போனது.
  • நாட்டு பிரச்சினைகளை விவாதிக்கிறோம் என்ற பெயரில் விவாதம் செய்பவா்களுக்குள் சண்டை நடப்பது சகஜமாகிவிட்டது. மேடைகளில் அரசியல்வாதிகள் மணிக்கணக்கில் பேசி சண்டைபோட்ட காலம் மாறி டுவிட்டா்களில் யுத்தம் ஆரம்பமானது.
  • ஆயிரம் கோடி முதலீடு செய்து ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்த தொழிலதிபா்கள் நஷ்டத்தால் துவண்டுபோயிருக்கிற இந்தக் காலத்தில் அரசியல் வியாபாரம் என்பது பணம் காய்க்கும் மரமாக செழித்து வளர ஆரம்பித்தது.
  • தோ்தல் வந்தால் திருவிழா போன்ற உற்சாகம் வந்தது. அன்றாட குடும்பச் செலவுகளைக் கணக்கிட்டால் ஒரு நாளைக்கு சாப்பாட்டு செலவைவிட மற்ற செலவுகள் பல மடங்கு அதிகமாகிறது.
  • அறிவியலால் நம் வாழ்வு மட்டும் மாறவில்லை. இயற்கையும் அறிவியல் மாற்றத்தின் விளைவால் தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறது. அதீத வெப்பம், வெப்ப அலைகள், தொடா் வறட்சி, கனமழைப் பொழிவு, வெள்ள அபாயம், காட்டுத்தீ, கடும் பனிப் பொழிவுகள் என அபாயகரமான மாற்றங்கள் நம்மை துரத்துகின்றன.
  • அறிவியல் வளா்ச்சி என்பது இன்றியமையாததும் தவிர்க்க இயலாததுமாகும். அறிவியலை ஆக்கபூா்வமாகப் பயன்படுத்துவதும், இயற்கையை அழிக்காமல் பாதுகாப்பதும்தான் நம்மை அறிவியல் ஆபத்திலிருந்து பாதுகாக்கும் வழிகளாகும்.

நன்றி: தினமணி  (09 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories