TNPSC Thervupettagam

அறி​வு‌ம் தொழி‌ல்​நு‌ட்​ப​மு‌ம்

September 19 , 2022 586 days 461 0
  • ஒரு விஞ்ஞானி 1,093 கண்டுபிடிப்புகளைச் செய்து அவை அனைத்திற்கும் காப்புரிமை  பெற்றிருக்கிறார் என்ற செய்தியை வாசித்தறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். அவரது கண்டுபிடிப்புகள் எதுவும் சாதாரணமானது அல்ல. மின்சார பல்பு முதல் திரைப்படம் வரை மிகப் பெரிய கண்டுபிடிப்புகள் இதில் அடங்கும்.
  • அவர் எப்படி அதை சாதித்தார் தெரியுமா? தன்னுடைய அறிவு, அனுபவம் மட்டுமல்லாமல் அடுத்தவர் அறிவுடன் கூடிய அனுபவத்தையும் முழுமையாகப் பயன்படுத்தினார். ஒரு பொருள் பற்றிய ஆய்வில் ஈடுபடுவதற்கு முன் அப்பொருள் பற்றி அதுவரை வெளியான எல்லா நூல்களையும் படித்து விடுவார்.
  • அதுமட்டுமல்லாமல் பிறர் கண்டுபிடித்து நின்றுவிட்ட இடத்திலிருந்து தன் ஆராய்ச்சியைத் தொடங்குவார். இதனால் அவர்கள் செய்திருந்த தவறுகளைச் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்தது. அவர்களது பல வருட அனுபவங்களின் பயனை அவர் எடுத்துக் கொண்டதால் தான் இத்தனை மகத்தான சாதனைகளை தன் வாழ்நாளில் அவரால் நிகழ்த்த முடிந்தது.
  • பிறரின் அனுபவங்களைப் பயன்படுத்துவது அறிவியல் ஆய்வுக்கு மட்டுமல்ல, அனைத்துக்கும் பொருந்தும். ஒரு கதை நினைவுக்கு வருகிறது.   குறிப்பிட்ட ஓர் இடத்தில் புதையல் இருப்பதாக யாருடைய வாய் மொழியையோ கேட்ட ஒரு மனிதன் பல நாள் பாடுபட்டு அந்த இடத்தில் நிலத்தைத் தோண்டினான்.
  • ஒரு மாத காலம் போராடி 40 அடி ஆழம் தோண்டினான். பின் அவன் மனம் சோர்ந்தான். நிச்சயமில்லாத ஒரு விஷயத்தில் ஏன் நாம் சிரமப்பட வேண்டும் என்று எண்ணி, தோண்டுவதை அன்றோடு நிறுத்தி விட்டுச் சென்றுவிட்டான். 
  • சில நாட்களுக்குப் பிறகு அந்த வழியே சென்ற மற்றொருவனின் கண்களில் இந்த நிலம் தட்டுப்பட, அவன் முதலாமவன் விட்டுச் சென்ற இடத்திலிருந்து நிலத்தை இன்னும் ஆழமாக தோண்டத் தொடங்கினான். 50 அடி ஆழத்திலேயே அவனுக்குப் புதையல் கிடைத்தது.  நம்பிக்கையோ, அதிர்ஷ்டமோ இக்கதையின் பேசுபொருள் அல்ல. பிறரது பணியின் பங்களிப்பு நம் பணியுடன் இணையும்போது ஏற்படும் முன்னேற்றமே இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
  • ஒரு தந்தையானவர் தான் அனுபவத்தில் கண்ட வியாபார நுணுக்கத்தை தனக்குப் பின் வியாபார பொறுப்பை ஏற்க வரும் தன் மகனுக்கு சொல்லிக் கொடுப்பார் இல்லையா அதுபோலத்தான். தாம் கற்ற, கேட்ட, அறிந்த, தெளிந்த, கணித்த கூறுகளை மனிதன் புத்தகங்களாக எழுதி குவித்து வைத்துள்ளான். புத்தகங்களிலிருந்து பெறும் அனுபவங்களை நம் வாழ்வில் பயன்படுத்துவது கூட இந்த வகைதான்.
  • பிறருடைய பணத்தை எப்படி நான் ஏற்பதில்லையோ அதேபோல பிறருடைய அறிவையும் நான் பயன்படுத்துவதில்லை என்று இருப்போரும் உண்டு. வீடு கட்ட நல்ல திட்டமொன்றை சொன்ன உறவினரின் கூற்றை வேண்டுமென்றே நிராகரித்தார் நண்பர் ஒருவர்.
  • பிறரின் அறிவுரையும் ஆலோசனையும் எனக்குத் தேவையில்லைஅனைத்தையும் நானே பார்த்துக் கொள்வேன் என்ற மனநிலைதான் காரணம். உறவினரின் வழிகாட்டலைப் புறக்கணித்ததால் கால விரயமும் பண விரயமும் ஏற்பட்டதை உணர்ந்து நொந்தார் நண்பர்.
  • இப்படி வலிய வந்து அறிவுரை சொல்பவர் உயர்ந்தவர் இல்லை.  அவர்கள் சொல்லும் திட்டங்களை நாம் செயல்படுத்துவதால் நாம் கீழ் நிலையில் இருப்பதாக அர்த்தமும் இல்லை. பரஸ்பரம் ஒரு கருத்து பரிமாற்றம், அவ்வளவே! அதில் பெரும் மனத் திருப்தியும் கிடைக்கிறது.
  • நம்முடைய வேலையைச் செய்ய ஊழியர்கள் பலரை நியமித்து பணிகளை பிரித்துத் தருகிறோம். இது எப்படி இயல்பானதோ அப்படி இயல்பானதுதான் பிறர் அறிவையும் அனுபவத்தையும் நாம் பெறுவதும்.
  • "மெய், வாய், கண், மூக்கு, செவி என்று புலன்களின் வழியாக அறிந்த வகையில் அறிவு ஐந்து; புலன்களால் உற்று அறிந்தவற்றையெல்லாம் மனத்தினுள் வாங்கிக் கொண்ட வகையில் அறிவு ஆறு; வாங்கிக் கொண்டவற்றையெல்லாம் வகைப்படுத்தித் தொகுத்து, உணர்ந்துகொண்ட வகையில் அறிவு ஏழு; கல்வியுடன் சேர்ந்து பெற்ற அறிவு எட்டு; கல்வி அனுபவத்துடன் ஒன்பது; இறையருளைப் பற்றும் அறிவு பத்து' என பத்து வகையான அறிவுகளைப் பற்றி பேசுகிறது  திருமூலரின் "திருமந்திரம்'.
  • ஆனால் இன்றைய நவீன காலத்தில் இவற்றையெல்லாம் தாண்டி  நாம் பலவற்றை பலரிடமிருந்து பெற்று நம் அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள முனைய வேண்டியதாய் உள்ளது.
  • ஆசிரியர் ஒருவர், தன் மாணவனுக்கு தனக்கு தெரிந்த அத்தனை விஷயங்களையும் அவனது தேவைக்கேற்ப வழங்குகிறார். தன்னுடைய ஐம்பதாவது வயதில் தான் கற்றதைக் கூட 15 வயது மாணவனுக்கு விளக்குகிறார். ஆசிரியர்களைத் தவிர வேறு  யாருக்கும் நம்மிடம் நின்று பேசவோ அறிவுரை சொல்லவோ இன்று நேரம் கிடையாது. பந்தயக் குதிரைகளின் மீதேறி ஓடுவதுபோல் அவரவர் ஒவ்வொரு திசையில் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
  • ஆசிரியருக்கு அடுத்து மாணவனுக்கு தனிப்பட்ட முறையில் அறிவு தானம் வழங்கி அவனை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல யாரும் இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படி இருப்பவர்களும் நமக்கு பொருந்தும்படியாக நம் அலைவரிசைக்கு ஒத்துப் போகும் வண்ணம் இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். 
  • ஒரு சமயம் ஒரு கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். அங்கு வந்திருந்த பெரியவர்கள் உயரிய கருத்துக்களை எடுத்துரைத்த வண்ணம் இருந்தனர். கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்து, இத்தகைய சிறந்த கருத்துகளை தாங்கள் எப்படி பெற்றீர்கள்? அதை நாங்களும் பெற எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று வேண்டினார்.
  • அதற்கு அந்தப் பெரியவர், "நான் பல வருடங்கள் செலவழித்து இதைக் கற்றேன். நீங்களும் உங்கள் சொந்த முயற்சியில் தேடித் தேடி கற்று முன்னேறுங்கள்' என்று கூறிச் சென்றார். இந்த உலகமே இப்படித்தான். தான் அரும்பாடுபட்டு பெற்றதை பிறர் சுலபமாக பெறுவதை பலர் விரும்புவதில்லை.  இதனால்தான் நாம் மனிதர்களை காட்டிலும் தொழில்நுட்பத்தை அதிகம் கைக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அது இந்த நவீன காலத்தில் ஏற்புடையதாகவும் இருக்கிறது.
  • முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்று சில தினங்களுக்கு முன் தன் புதிய தயாரிப்பை சந்தையில் அறிமுகப்படுத்தியது. அறிமுகமான சில மணி நேரத்திற்குள்ளாகவே அதை விலை கொடுத்து வாங்க ஒரு கூட்டமே அலைமோதுகிறது. ஏனென்றால் இதே உளவியல்தான். மனிதர்களிடையே, நட்பு வட்டத்தினரிடையே, உறவுகளிடையே பிறர் அறிவை பயன்படுத்த இங்கு ஒரு இடைவெளி விழுந்துவிட்டதால் மனிதன் தொழில்நுட்பத்தை அதிக அளவு பயன்படுத்தத் தொடங்கிவிட்டான்.
  • தனக்கென்று நம்பகமானவர்களை வைத்துக் கொள்ள அவனுக்கு தொழில்நுட்பம்   சுலபமாகக் கைகொடுக்கிறது. கேட்டதை வழங்கும் காமதேனுவைப் போல அவன் தேடுவனவற்றையும் அவனுக்கு தேவைப்படும் அனைத்தையும் தன் தகவல் சுரங்கத்திலிருந்து வாரி வழங்குகிறது. எட்டாம் அறிவான தகவல் தொழில்நுட்பத்தின் அறிவையும் மனிதன் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால் அவன் பல விஷயங்களில் தன்னம்பிக்கை உடையனவாக இருக்கிறான்.
  • ஒரு தாய், தன் குழந்தைக்கு உடல் நலமாக இருக்கும்போது திட உணவையும் காய்ச்சலாக இருக்கும்போது கஞ்சியையும் கொடுப்பாள். அவளுக்குத் தெரியும் தன் குழந்தைக்கு எந்தெந்த காலத்தில் என்னென்ன தரவேண்டும் என்பது. பிள்ளைகளுக்கு எப்படி தாய் பார்த்து பார்த்து சமைத்து கொடுப்பாளோ அதே போன்ற பங்களிப்பை செய்ய வந்துவிட்டது "ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்' எனும் செயற்கை நுண்ணறிவு.
  • இணையம் 3.0 }வின் சாராம்சமே அதுதான். இந்த செயல்திறன் அறிவாற்றல், நமக்கு என்ன தேவையோ அதனைப் பார்த்து பார்த்து அறிந்து சேவையாற்றும். நம்முடைய உதவியாளர் நம்மிடம்  கடமைக்காக வேலை செய்யாமல் தாயன்புடன் நமக்கு சேவையாற்றுவது போல. இப்படி அறிவுசார்ந்த விஷயத்தில் தகவல் தொழில்நுட்பம் உடன் வருவதால்  ஒவ்வொரு தனிநபரின் அறிவார்ந்த பலமும் கூடுகிறது.
  • இந்த நவீன யுகத்தில் தொழில்நுட்பம் வழி பெறப்படும் அறிவு மிளிர்ந்து அது எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்கும் பயன்படும் விதமாக முன்னேற்றம் அடைந்துள்ளது. 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

  • எனும் திருவள்ளுவரின் கூற்றுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தின் வழி பெற்றாலும் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து தெளிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
  • மனித சக்தி எல்லையில்லாதது. அது தொழில்நுட்ப அறிவுடன் இணையும்போது அந்த எல்லையின் பரப்பு இன்னும் இன்னும் விரிவடைந்துகொண்டே போகிறது. ஒரு விஞ்ஞானியின் மூளையில் பொதிந்திருக்கும் பொக்கிஷமான தரவுகள் அனைத்தையும் சிந்தாமல் சிதறாமல் அவருக்குப்பின் அடுத்தவர் மூளைக்குள் மடைமாற்றும் ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
  • சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற பாரதியின் கூற்றும் இக்கருத்துக்குப் பொருந்துவதாய் இருக்கிறது. ஆக, பிறரது அறிவையும் ஆலோசனைகளையும் பயன்படுத்தி முன்னேறுவது வெகு இயல்புதான்அது அனைத்துத் துறைகளிலும் உள்ளதுதான் என்பதை மனத்தில் இருத்தி முன்னேறுவோம்.

நன்றி: தினமணி (19 – 09 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories