TNPSC Thervupettagam

அலை அலையாய் சோதனை

April 19 , 2021 1109 days 537 0
  • மும்பை, தில்லியைத் தொடர்ந்து தமிழகத்திலும் அதிதீவிரமாகப் பரவிவரும் கொவைட் 19 தீநுண்மித் தொற்றைக் கட்டுப்படுத்த நாளை முதல் இரவு நேர ஊரடங்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம், பொது - தனியார் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள் என்று நோய்த்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர பல முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
  • பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
  • நேற்றைய நிலையில் இந்தியாவில் 2,61,500 புதிய பாதிப்புகளும், 1,501 உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. இதுவரை மொத்தம் 1,47,88,109 பாதிப்புகளும், 1,77,150 உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.
  • தினசரி 1% அளவில் புதிய பாதிப்புகளும், 7% அளவில் நோயின் கடுமையும் அதிகரித்து வருகிறது என்பதிலிருந்து எந்த அளவுக்கு மோசமாக கொள்ளை நோய்த்தொற்று பரவி வருகிறது என்பது தெரிகிறது.
  • 2020-இல் நாளொன்றுக்கு 15,000 பாதிப்பிலிருந்து உச்சகட்ட பாதிப்பான நாளொன்றுக்கு 97,000-ஐ எட்டுவதற்கு மூன்று மாதங்கள் (90 நாள்கள்) பிடித்தன.
  • அதுவே இரண்டாவது அலையில், நாளொன்றுக்கு 1 லட்சம் பாதிப்பிலிருந்து 2 லட்சம் பாதிப்பாக அதிகரிக்க பத்தே நாள்தான் தேவைப்பட்டிருக்கிறது.
  • இரண்டாம் அலை நோய்த்தொற்று என்று சாதாரணமாக சொல்லிவிட்டாலும்கூட, இதன் பின்னணியில் இருக்கும் பல நுணுக்கமான மாற்றங்கள் அச்சப்பட வைக்கின்றன. நோய்த்தொற்றுக் கிருமியின் உருமாற்றம் பல்வேறு வகையிலானதாக தெரியவந்திருக்கிறது.
  • தென்னாப்பிரிக்க உருமாற்றம் அதிவேகமாக பரவுவதுடன், குழந்தைகள் மத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது; பிரிட்டிஷ் உருமாற்றம் ஏனைய கொவைட் 19 கிருமிகளைவிட 70% வேகமாக பரவக்கூடியது; பிரேசில் உருமாற்ற தீநுண்மி ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் பாதிக்கிறது; பெங்களூரில் சில குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கொவைட் 19 தொற்று, கலிபோர்னியா தீநுண்மி உருமாற்றத்தை ஒத்திருப்பதாகத் தெரியவந்திருக்கிறது - இதையெல்லாம் பார்க்கும்போது கொவைட் 19-இன் பல்வேறு தீநுண்மி உருமாற்றங்கள் இந்தியாவில் நுழைந்திருப்பது தெரிகிறது.

இரண்டாவது அலை

  • இரண்டாவது அலை என்பது எப்போதுமே முதல் அலையைவிட கடுமையானது. 1918-இல் உலகை தாக்கிய ஸ்பானீஷ் ஃபுளூ தீநுண்மியின் முதல் அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
  • அதுவே ஓராண்டு கழிந்து 1919-இல் உருமாற்றம் அடைந்த தீநுண்மியாக பரவியபோது கொள்ளை நோய்த்தொற்றாகப் பேரழிவை ஏற்படுத்தியது. இரண்டாவது அலை ஸ்பானீஷ் ஃபுளூ இந்தியாவில் மட்டும் சுமார் இரண்டு கோடி பேரின் உயிரிழப்புக்குக் காரணமானது.
  • 1918-இல் ஸ்பானீஷ் ஃபுளூ தீநுண்மியைப் போலவே 2019-இல் கொவைட் 19 தீநுண்மி உருவானபோதே பலரும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உலகம் எதிர்கொண்ட அனுபவத்தைச் சுட்டிக்காட்டி எச்சரித்தனர்.
  • 2021-இல் நாம் எதிர்கொள்ளும் கொவைட் 19-இன் இரண்டாவது அலை அதை உறுதிப்படுத்துகிறது. தீநுண்மிகளுக்கு உருமாற்றம் என்பது இயல்பு. உருமாறும்போது வீரியம் அதிகரிப்பது இயற்கை. அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
  • இந்தியா மட்டுமல்லாமல் உலகில் வேறு பல நாடுகளிலும் நோய்த்தொற்றுப் பரவல் எதிர்பாராத அளவில் அதிகரித்து வருகிறது. முந்தைய நிலையிலிருந்து மாறுபட்டு வீரியம் அதிகரித்த நிலையில், கொவைட் 19 சர்வதேச அளவில் பரவிக் கொண்டிருக்கிறது.
  • பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து ஆகிய நாடுகளில் பயணத் தடைகளும், பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
  • சர்வதேசப் பயணம் அனுமதிக்கப்பட்டதால்தான் பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட தீநுண்மி உருமாற்றங்கள் பரவி வருகின்றன என்கிற உண்மையை உலகம் தாமதமாக உணர்ந்து கொண்டிருக்கிறது.
  • இந்தியாவில் அதிகரித்து வரும் இரண்டாவது அலை நாடு தழுவிய அளவில் மிகப் பெரிய மருத்துவ நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
  • தேவையான அளவில் அவசர சிகிச்சை படுக்கைகள் இல்லை என்பது மட்டுமல்ல, வென்டிலேட்டர்கள், பிராண வாயு சிலிண்டர்கள், ரெம்டிசிவிர் போன்ற மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
  • கடந்த முறை முதல் அலையை எதிர்கொண்டதுபோல இரண்டாவது அலையை எதிர்கொள்ள முடியாமல் எல்லா மாநில அரசுகளும் திணறுகின்றன.
  • முதல் அலையின் தாக்கம் குறைந்ததைத் தொடர்ந்து அரசு தரப்பிலும், மருத்துவத் துறையினர் தரப்பிலும் ஏற்பட்ட மெத்தனத்தால் கொவைட் 19-ஐ எதிர்கொள்ள உருவாக்கி வைத்திருந்த கட்டமைப்பு வசதிகள் அகற்றப்பட்டுவிட்டன என்பதுதான் அதற்குக் காரணம்.
  • இஸ்ரேலில் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதைத் தொடர்ந்து பாதிப்புகள் மிகக் கணிசமாகக் குறைந்துவிட்டிருக்கிறது.
  • குறைந்தது 65% முதல் 70% மக்கள்தொகையினர் பாதிப்புக்கு உள்ளாக வேண்டும்; அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதன் மூலம்தான் பொது எதிர்ப்பு சக்தி உருவாக முடியும்.
  • தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துவது, தடுப்பூசி மருந்து உற்பத்தியை அதிகரிப்பது, சோதனைகளை அதிகரித்து குணப்படுத்துவது என அரசு போர்க்கால நடவடிக்கையில் இறங்காமல் தீநுண்மி தாக்குதலில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற முடியாது.
  • இல்லையென்றால், அமெரிக்காவைப் போல மிக மோசமான மூன்றாவது அலையை சந்தித்து ஸ்பானீஷ் ஃபுளூ கொள்ளைநோயைப் போல கோடிக்கணக்கானவர்களை நாம் பலிகொடுக்க வேண்டி வரும்.

நன்றி: தினமணி  (19 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories