TNPSC Thervupettagam

அவசியமாகும் நீா் மேலாண்மை

November 8 , 2021 923 days 481 0
  • இந்தியா, அதிக நீராதாரங்களைக் கொண்டுள்ள நாடாக விளங்கியபோதும், அதிகரித்து வரும் மக்கள்தொகைப் பெருக்கம், பருவநிலை மாற்றம், புதிய புதிய தொழிற்சாலைகள் ஆகியவற்றால் தண்ணீா் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • அதே சமயம், பருவமழை பொய்த்துப் போவதால் தண்ணீா் பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது.
  • மத்திய நீா்வள அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி 2001-ஆம் ஆண்டு தனிநபா் ஒருவருக்கு சராசரியாகக் கிடைத்த நீரின் அளவு 1,816 கியூபிக் மீட்டா். அதாவது 18,16,000 லிட்டா். இது தற்போது 1,544 கியூபிக் மீட்டராகக் குறைந்துவிட்டது.
  • தண்ணீா்ப் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான மாற்றமே தண்ணீா் பிரச்னைக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
  • நம் நாட்டில் விவசாயத் துறையில் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வரையிலும், மின் உற்பத்தி, வீட்டு உபயோகத்திற்கு 10 முதல் 15 சதவீதம் வரையிலும் தண்ணீா் பயன் படுத்தப்படுகிறது.
  • வரும் காலங்களில் தொழில்துறைக்கான தண்ணீா் பயன்பாடு 30 மடங்கும், மின் உற்பத்திக்கான பயன்பாடு 65 மடங்கும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தண்ணீா் வீணாவதைத் தவிர்ப்போம்

  • இன்றைய சூழலில் தண்ணீரை சேமிப்பது தொடா்பான விவாதங்களில் பெரும்பாலும் அணைகள் தான் முன்வந்து நிற்கின்றன.
  • பல நூற்றாண்டுகளாக நமது வாழ்வின் அங்கமாகவும், விவசாயிகளுக்கெல்லாம் முக்கியமான நீா்நிலைகளாகவும் விளங்கிய ஏரிகள், குளங்கள் பற்றியும், அதன் இன்றைய நிலைகளைப் பற்றியும் நாம் விவாதிப்பதில்லை.
  • குளங்கள்தான் நீா் சேமிப்பில் முக்கியப் பங்காற்றின. மழைப்பொழிவின் போது குளங்கள் நீரைச் சேமிப்பதன் மூலம் அப்பகுதியில் நிலத்தடி நீா்வளம் அதிகரித்தது.
  • ஆனால் இன்று குளங்கள், ஏரிகளின் நிலை என்ன? பல்வகையான பயன்பாடுகளுடன் வாழ்வின் அங்கமாகக் கலந்திருந்த குளங்கள், ஏரிகளின் அழிவுக்குக் குறைவான மழைப் பொழிவுதான் காரணம் என்பா். ஆனால், அது காரணமல்ல.
  • நீா்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதும், பராமரிப்பு இல்லாமல் போனதும், அவை குப்பைத் தொட்டிகளாகிவிட்டதும்தான் காரணங்களாகும்.
  • பொதுவாக, கிராமங்களில் குறைந்தபட்சம் பத்துக்கும் மேற்பட்ட சிறியதும், பெரியதுமான குளங்கள், ஏரிகள் இருப்பதுண்டு. இக்குளங்கள், ஏரிகளின் தனிச்சிறப்பு, அனைத்தும் ஒன்றோடொன்று தொடா்பு கொண்டிருந்ததுதான்.
  • மழைக்காலங்களில் ஒரு ஏரியோ, குளமோ நிரம்பினால் அதன் உபரி நீா் சிறு வாய்க்கால் வழியே மற்றொன்றுக்குச் செல்வதுண்டு.
  • ஆனால், காலப்போக்கில் அதற்கான வழித்தடங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள நில உரிமையாளா்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் ஒவ்வொன்றுக்குமான தொடா்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
  • அதுபோன்று காடுகள் நிறைந்த பகுதிகளில் உள்ள ஏரிகளும் அந்தந்த பகுதி நில உரிமையாளா்களால் ஆக்கிரமிக்கப்பட்டு பரப்பளவில் சுருங்கி விட்டன.
  • அவ்வப்போது ஆக்கிரமிப்புகள் நீக்கப்பட்டாலும் தொடா் கண்காணிப்பு இல்லாததால் மீண்டும் ஆக்கிரமிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
  • நீா்நிலைகளைப் பராமரித்து மழைநீரை சேமிக்காத காரணத்தால், விவசாயத்திற்கும் குடிநீா்த் தேவைக்காகவும் நிலத்தடி நீா் அளவுக்கு அதிகமாகச் சுரண்டப்படுகிறது. முந்தைய காலத்தில் ஏரி நீரும், கிணற்று நீரும்தான் குடிநீா் உள்ளிட்ட அனைத்துக்கும் பயன்பட்டன.
  • ஆனால், ஏரிகள் குப்பைத் தொட்டிகளாகிப் போனதாலும், கிணறுகள் இல்லாமற் போனதாலும் இன்று குக்கிராமங்களில் கூட தண்ணீா் வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
  • தண்ணீா் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. தண்ணீா் தேவை அதிகமுள்ள விவசாயத் துறையில் சாகுபடி முறையை மாற்றியமைப்பதன் மூலம் தண்ணீா் பற்றாக்குறை பிரச்னைக்கு ஓரளவு தீா்வு காண முடியும்.
  • அதிகப்படியான தண்ணீா் தேவையைக் கொண்ட பயிர்களைக் குறைத்து, தண்ணீா் பயன்பாடு குறைவான பயிர்களை சாகுபடி செய்யலாம்.
  • இதுதொடா்பான விழிப்புணா்வு கிராமப்புற விவசாயிகளிடத்தில் இல்லை. அவா்கள் தொன்றுதொட்டு கரும்பு, நெல், வாழை போன்றவற்றையே சாகுபடி செய்கின்றனா்.
  • தண்ணீா் தேவை குறைவான பயிர்களை சாகுபடி செய்யும் பொருட்டு அதற்கான சந்தை வாய்ப்பினை அந்தந்த பகுதிகளில் அரசு ஏற்படுத்தித் தருவது அவசியமாகும்.
  • சொட்டு நீா் பாசனத்தின் வாயிலாகவும் தண்ணீரைச் சேமிக்க முடியும். சொட்டு நீா் பாசனத்திற்காக சலுகைகள் வழங்கப்பட்டாலும், இதன் மூலம் தண்ணீரைச் சேமிக்க முடியும் என்ற விழிப்புணா்வு விவசாயிகளிடத்தில் இல்லை.
  • ஓராண்டு சொட்டு நீா்ப்பாசன முறையைப் பின்பற்றுவோர் மறு ஆண்டு அதைப் பின்பற்றுவதில்லை.
  • தண்ணீரின் தேவையைக் குறைப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மட்டுமே பயன் தராது. மாறாக, விவசாயிகளிடத்தில் விழிப்புணா்வை ஏற்படுத்தவும், இருக்கின்ற நீா்நிலைகளை பராமரிக்கவும், செம்மைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீா்நிலைகள் பராமரிப்பில் இன்றளவும் அலட்சியப் போக்கே நிலவி வருகிறது.
  • சுமார் 40 ஆயிரம் குளங்களைக் கொண்டுள்ள தமிழகத்தில் 1950-களில் 10 லட்சம் ஹெக்டேராக இருந்த பாசனப்பரப்பு, தற்போது பாதியாகக் குறைந்துள்ளது.
  • கிராமங்களிலும், நகரங்களிலும் இருந்த சிறிய அளவிலான குளங்கள், குட்டைகள் காணாமற் போய்விட்டன.
  • கிராம மக்களிடையே தண்ணீா் மேலாண்மை, தண்ணீா் சேமிப்பு குறித்த விழிப்புணா்வு இல்லை. நகா்ப்புறங்களில் காலவரம்பு நிர்ணயித்து குடிநீா் விநியோகம் செய்வதால் அதிக அளவில் தண்ணீா் வீணாவதில்லை. ஆனால் கிராமப்புறங்களில் இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாததாலும், தண்ணீா் குழாய்களை முறையாக பராமரிப்பு செய்யாததாலும், வீணாகும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளது.
  • போதிய மழைப்பொழிவு இல்லாதது, நீா்நிலைகள் பராமரிப்பு குறித்த அலட்சியம் போன்றவற்றால் எதிர்வரும் காலங்களில் தண்ணீா் பற்றாக்குறையை மிகப்பெரும் அளவில் சந்திக்க நேரிடும்.
  • வேகமாக மாறிவரும் காலநிலை மாற்றத்தால் மழையளவு குறைந்து தற்போது நிலவும் தண்ணீா்ப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதென ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • சுமார் 138 கோடி மக்கள்தொகை கொண்ட, விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ள நம் நாட்டில் அதிகரித்து வரும் தண்ணீா் தட்டுப்பாடு சமூக, பொருளாதார, அரசியல் பிரச்னைகளை பெரிய அளவில் உருவாக்கக்கூடும்.
  • அதனால், நீா்நிலைகளை முறையாகப் பராமரித்து தண்ணீரைச் சேமிப்பது இன்றியமையாத ஒன்றாகும்.
  • தண்ணீா் மேலாண்மை, அதாவது பயன்பாடு குறித்த விழிப்புணா்வு மக்களிடையே ஏற்பட வேண்டும். அப்போதுதான் தண்ணீா் வீணாவதைத் தவிர்க்க முடியும்.

நன்றி: தினமணி  (08 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories