TNPSC Thervupettagam

ஆஃப்கனிலிருந்து வெளியேறும் பைடன் முடிவை வரலாறு நியாயப்படுத்தும்

October 1 , 2021 960 days 413 0
  • ஆஃப்கனிலிருந்து அமெரிக்கப் படையினரைத் திரும்பப் பெற்று இரு தசாப்தப் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததுதான் சிறந்த முடிவு என்று அதிபர் ஜோ பைடன் கூறியிருப்பது சரியானது. அமெரிக்காவின் வெளியேற்றம் முன்கூட்டித் திட்டமிடப்பட்டது என்றாலும், இந்த வெளியேற்றத்தின் விளைவுகள் அமெரிக்கா கணித்ததைப் போல அமையவில்லை.
  • ஆஃப்கனின் ராணுவத்தில் சுமார் 3 லட்சம் வீரர்கள் இருந்த நிலையில், சுமார் 75 ஆயிரம் வீரர்களை மட்டுமே கொண்ட தலிபான் படையை ஆஃப்கன் அரசால் சமாளிக்க முடியும் என்று அமெரிக்கா நம்பியது; தேவைப்படும்போது உதவிகளை வழங்குவதாகவும் ஆஃப்கன் அதிபர் அஷ்ரஃப் கனியிடமும் இது தொடர்பில் முன்னதாக அமெரிக்க அதிபர் பைடன் பேசியிருந்தார். நடப்பில்
  • இது தலைகீழானது. பெரிய எதிர்ப்பு ஏதும் இல்லாமல் தலிபான் படைகளிடம் சரணடைந்தார்கள் ராணுவத்தினர். காபூல் நகரம் நோக்கி தலிபான்கள் முன்னகர்ந்தபோது அதிபர் கனி வெளிநாட்டுக்குத் தப்பினார். அமெரிக்கா முழுமையாக வெளியேறுவதவற்கு முன்னரே தலிபான்கள் கைகளுக்குள் ஆஃப்கன் வந்திருந்தது. அமெரிக்கர்கள் மத்தியில் இது கடும் அதிர்ச்சியை உருவாக்கியது. 
  • அப்படியென்றால், இவ்வளவு நாட்களாக அமெரிக்கத் துருப்புகளும் அரசும் அங்கே எதை உருவாக்கின என்ற கேள்வி பெரும் விவாதம் ஆனது. முன்னாள் அதிபரும் எதிர்க்கட்சித் தலைவருமான ட்ரம்ப் கடுமையாக பைடன் நிர்வாகத்தைச் சாடியிருக்கிறார். அதையொட்டிதான் தன்னுடைய முடிவை பைடன் நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார்.
  • போரைத் தொடங்கிவிடுவது எளிது; முடிப்பது கடினம். வரலாற்றின் போக்கு எப்போதும் திட்டமிடாத கணங்களிலிருந்தே புறப்படுகிறது. பைடன் கூறியிருக்கிறபடி, இந்தப் போரை எப்படி, எப்போது முடிவுக்குக் கொண்டுவருவது என்ற பிரச்சினையை எதிர்கொண்ட நான்காவது அதிபர் அவர். எப்படியோ போரை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறார் என்பதே முக்கியம். இந்தப் போரை மையமாகக் கொண்டு உருவான போர்ப் பொருளாதாரம், ராணுவ ஊழல்கள், அதன் பயனாளிகள் எப்படி அமெரிக்க  மக்களின் பணத்தைச் சூறையாடியிருக்கிறார்கள் என்ற விசாரணைக்கும் பைடன் கையோடு உத்தரவிட வேண்டும்.
  • தன்னுடைய உரையில், “ஆஃப்கனில் இருபது ஆண்டுப் போருக்குப் பின்னர், மற்றொரு தலைமுறை அமெரிக்க மகன்களையும் மகள்களையும் அங்கு போருக்கு அனுப்ப நான் விரும்பவில்லை. இதுவரை 2 டிரில்லியன் டாலரைச் செலவிட்டுள்ளோம்; நாள் ஒன்றுக்கு 300 மில்லியன் டாலர் வீதம் 20 ஆண்டுகளுக்குச் செலவிடப்பட்டுள்ளதாக பிரௌன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மதிப்பிடுகிறார்கள்.
  • அமெரிக்க மக்களின் தேசிய நலனுக்கு எந்த வகையிலும் உதவாத இந்தப் போரை இனியும் தொடர்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?” என்று  கேள்வி எழுப்பியிருக்கிறார் பைடன். அவர் குறிப்பிட்டிருக்கும் ஒரு சொற்றொடர் மிகுந்த கவனத்துக்கு உரியது: “போர்களால் புதிய நாடுகளை உருவாக்கும் யுகம் முடிந்துவிட்டது!  அமெரிக்காவின் இந்த முடிவு தொடர்பில் கருத்துத் தெரிவித்திருக்கும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின், “ஆஃப்கனில் அமெரிக்கா சாதித்தது பூஜ்ஜியம். வெளியிலிருந்து ஒன்றைக் கொண்டுவருவது ஆஃப்கனில் இயலாத காரியம் என்று கூறியிருக்கிறார். இரண்டுமே அனுபவம் கற்பித்திருக்கும் பாடங்கள்.
  • வரலாற்றில் பல போர்களுக்கும் பொருந்தும் நியாயம் ஆஃப்கன் போருக்கும் பொருந்தும்; அமெரிக்கா தவிர்த்திருக்க வேண்டிய போர் இது. நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலும், அதை முன்னின்று செயல்படுத்திய அல்-காய்தாவுக்கு ஆஃப்கன் நிலத்தை ஒரு களமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்த அன்றைய தலிபான்களின் அரசும் இந்தப் போரை நோக்கிச் செல்ல அமெரிக்காவுக்குக் காரணங்களாக அமைந்தன.
  • போரில் இரட்டை இலக்குகளுடன் செயல்பட்டது அமெரிக்கா. அல்-காய்தாவை ஒடுக்கி, ஒசாமா பின்லேடனின் கதையை முடிப்பது அதன் முதல் இலக்காக இருந்தது. தலிபான்களை ஒடுக்கி ஆஃப்கனில் ஒரு ஸ்திரமான ஜனநாயக அரசை நிறுவுவது இரண்டாவது இலக்காக இருந்தது. முதல் இலக்கில் கணிசமான வெற்றியை அமெரிக்கா அடைந்தது என்றே சொல்ல வேண்டும். இரண்டாவது இலக்கில் தோற்றிருக்கிறது.
  • ஆயினும், இருபதாண்டுகள் போர் ஏற்படுத்தியிருக்கும் இழப்புகளும் துயரங்களும் தாக்கங்களும் மாற்றங்களும் லேசானவை கிடையாது. ஆஃப்கனுடைய எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் இந்த இருபதாண்டுகள் முக்கியப் பங்காற்றும். அதேபோல, வல்லாதிக்க நாடுகள் இனியும் போரை எளிமையான விளையாட்டாகக் கருதிட முடியாது என்ற புரிதலையும் ஆஃப்கன் போர் அவர்களுக்குத் தரும்.
  • பல இனக்குழுக்களும் முட்டிமோதும் ஆஃப்கன் தனக்கான புதிய பாதையை ஓர் அக்னிப்பரிட்சையின் வாயிலாகவே உருவாக்கிக்கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. சிறு குழு என்றாலும், புதிய அரசில் தங்களுக்கான பிரதிநிதித்துவம் கேட்டு, பெண்கள் குழு ஒன்று ஆஃப்கனில் நடத்தியிருக்கும் ஆர்ப்பாட்டம் கவனம் ஈர்க்கிறது.
  • மாறிவரும் புதிய சூழல்களுக்கு ஏற்ற வகையில், எல்லோரையும் அரவணைக்கும் நெகிழ்வுத்தன்மையினராக தலிபான்கள் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும் அல்லது தலிபான்களைக் கடந்து வெல்லும் ஒரு ஜனநாயக அமைப்பை ஆஃப்கன் சமூகம் கண்டடைய வேண்டும். ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மேலிருந்து எந்த நாடும் பெற முடியாது. ஆஃப்கன் மக்களுக்கு நல்லதே நடக்கட்டும்!

நன்றி: அருஞ்சொல் (01 – 10 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories