TNPSC Thervupettagam

ஆசிஷ் ஜா பிஹாரின் சமீபத்திய கௌரவம்

April 10 , 2022 749 days 392 0
  • இந்தியாவில் பிறந்து அல்லது இந்தியாவிலிருந்து குடியேறிய பெற்றோருக்குப் பிறந்து, அமெரிக்காவில் உயர் கல்வி பயின்று, பின்னர் அந்த நாட்டின் முக்கியப் பொறுப்பிலும் அமரும் வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறார் ஆசிஷ் ஜா. அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் அந்நாட்டில் கோவிட் பெருந்தொற்றுநோய் தொடர்பாக அரசும் மக்களும் பின்பற்ற  வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளுக்கான தலைமை மருத்துவ ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய கதை சுவாரஸ்யமான ஒன்று என்பதோடு, உத்வேகம் அளிக்கும் ஒன்றும்கூட.

பிஹாரிலிருந்து வாஷிங்டன்

  • அமெரிக்காவில் ஜா முதலில் பட்டம் பெற்றது பொருளாதாரத் துறையில் என்றால் நம்ப முடிகிறதா? அப்படித்தான் பிஹாரிலிருந்து வாஷிங்டன் சென்றதும் நடந்தது.
  • பிஹாரின் பர்சௌலியா மாவட்டத்தில் 1970இல் பிறந்த ஜா 1979இல் கனடாவுக்குப் பெற்றோரால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து அமெரிக்கா  சென்றது அவருடைய குடும்பம். ஜா 1983இல் அமெரிக்கவாசியானார். ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் 1997இல் எம்.டி. பட்டம் பெற்றார். பிறகு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு முடித்தார்.
  • 2004இல் ஹார்வர்ட் டி.எச். சான் பொது சுகாதாரக் கல்வி நிறுவனத்திடமிருந்து மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றார். எபோலா தொற்றுநோய் தொடர்பாக முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உலக அளவில் பேசப்பட்டார். 2014இல் அந்த நோயைக் கட்டுப்படுத்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் எடுத்த நடவடிக்கைகளுக்கு உத்திகளை வகுத்துத் தந்தார்.
  • பொது சுகாதாரத்தை எப்படி மேம்படுத்தலாம் என்று இருநூறுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் ஜா. சுகாதாரம் தொடர்பான தேசியக் கொள்கைகளில் எவை முக்கியம் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். கோவிட் தொற்று நோயின் ஒவ்வொரு கட்டத்திலும் அதைப் பற்றிய தகவல்களைக் கூறுவதுடன் ஆலோசனைகளையும் வழங்கினார். அவர் கையாண்ட தரவுகளால் கேட்போர் நம்பிக்கை அடைந்தனர். அவரை அரசு, மருத்துவத் துறை, சாமானியர்கள் என்று அனைவருக்குமான நம்பகமான நிபுணர் எனப் பாராட்டினர். அவருடைய பேட்டிகளையேகூட வழிகாட்டியாகக் கொண்டனர்.

கரோனாவை எதிர்கொள்ளும் வழி

  • கரோனாவை எதிர்கொள்ள பொது முடக்கம் ஒரு வழிமுறை என்று முதலில் அறிவித்தவர்களில் ஒருவர் ஜா. இதுதான் அமெரிக்கர்களை ஜாவின் குரலைக் கவனிக்க வைக்கச் செய்தது.
  • 2020இல் கோவிட்-19 பெரும் பாதிப்பை உண்டாக்கியபோது பல நாடுகளில் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். ஆயிரக்கணக்கில் மருத்துவமனைகளுக்கு அழைத்துவரப்படும் நோயாளிகளைப் படுக்க வைக்கக்கூட இடமில்லாமல் பணக்கார நாடுகளே திணறின. மருத்துவமனைக்கு வந்தவர்களைக் காப்பாற்ற தடுப்பூசிகளோ மருந்துகளோ எளிதான வழிமுறைகளோ இல்லாமல் மருத்துவத் துறை ஸ்தம்பித்தது. கண்ணுக்குத் தெரியாத கிருமியின் கோரத் தாண்டவம் பரவும் விதமும்  வேகமும் அனைவரையுமே கலவரப்படுத்தின.
  • ஹார்வர்ட் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஜாவின் ஆலோசனை ஒருநாள் காலை, அமெரிக்கத் தேசிய தொலைக்காட்சிகளில் ஒளிரப்பானபோது மக்களும் அரசும் ஆழ்ந்து கவனித்தனர். இப்போது இரண்டு வாரங்கள் பொது முடக்கத்தைக் கையாண்டு நாடு முழுவதிலும் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதுடன் இதன் தன்மை, தீவிரம், பரவும் விதம் ஆகியவற்றைக் கண்காணிப்போம். அதைவிட்டால் மேலும் ஒரு வாரம் காத்திருந்து, பிறகு நிலைமை மிக பயங்கரமாக முற்றிய பிறகு வேறு வழியே இல்லாமல் இந்த நடவடிக்கைக்கே மீண்டும் திரும்புவோம் என்றார். அதாவது பொது முடக்கம்தான் உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்பதை வலியுறுத்தினார்.
  • கோவிட் பெருந்தொற்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோரைப் பலி கொடுத்துவிட்டது அமெரிக்கா. ஆனால், இப்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கோவிட் நோய்த்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அமெரிக்கர்களில் நான்கில் மூன்று பங்கினர் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியையாவது போட்டுக்கொண்டுவிட்டனர்.
  • ஜாவுக்கு பொது மருத்துவத் துறையில் இருபதாண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் இருக்கிறது. நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மட்டுமல்ல, கொள்கைகளையும் வகுக்கக்கூடிய நிபுணத்துவம் உள்ளவர். எனக்குத் தெரிந்த உண்மைகளை மறைக்காமல் சொல்வேன். நோய் பற்றி எனக்குத் தெரியாததை மற்றவர்களிடமிருந்தும் ஆய்வுகளிலிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்வேன் என்று அடக்கத்துடன் அவர் பேசுவது அமெரிக்கர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. வெறும் தகவல்களாகச் சொல்லாமல் புள்ளிவிவரங்களுடன் கூடிய தரவுகளையும் சொல்லி அவர் பேசுவது மிகவும் விரும்பப்படுகிறது.

அனைவருக்குமானவர்

  • கோவிட் நோய் எப்படி அமெரிக்காவையும் உலகையும் பாதிக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவில், இரண்டு முறை பேச அழைக்கப்பட்டார் ஜா. கோவிட் இனி நம் வாழ்வை அதிகமாக ஆக்கிரமிக்காது, நாம் பிற நோய்களுக்குப் பெற்றதைப் போல இதற்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெற்றுவிட்டோம் எனக் கூறி மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தினார்.
  • இந்த நோய் உலக அளவிலானது ஏதோ ஒரு நாடோ, ஒரு கண்டமோ நடவடிக்கை எடுத்துப் பயனில்லை. அதேபோலதடுப்பூசிகளும் மருந்துகளும் அனைவருக்கும் வழங்கப்பட்டால்தான் நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார். தன்னை ஒருங்கிணைப்பாளராக நியமித்த அதிபர் ஜோ பைடனுக்கு நன்றியைத் தெரிவித்த ஜா, என்ன தெரியுமோ அதைக் கூறுகிறேன், எது தெரியவில்லையோ அதையும் உங்களிடம் விளக்குகிறேன் என்று அடக்கத்துடன் கூறினார்.
  • ஜாவின் நியமனம் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களைத் தாண்டி பிஹாரில் பெரும் உத்வேகத்தை உண்டாக்கியிருக்கிறது. சமீப காலமாக பிஹாரிகள் கல்வியில் முதலீடு செய்வது அதிகரித்துவருவதோடு, போட்டித் தேர்வுகளுக்காக எல்லை கடந்து செல்வதும் பிஹார் மாணவர்கள் இடையே ஒரு போக்காக உருவெடுத்துவருகிறது. அந்த வகையில், வாழ்க்கையில் கல்வி எப்படியான மாற்றத்தை உண்டாக்கும் என்பதற்கும், நல்ல கல்வி நோக்கிச் செல்ல ஒரு குடும்பமே எப்படி உழைக்க வேண்டியிருக்கிறது; எவ்வளவு தூரம் பயணப்படத் தயாராக வேண்டும் என்பதற்கு ஜா ஓர் உதாரணம் என்று பேசுகிறார்கள். அந்த வகையில் ஜா முன்னுதாரணமாக மட்டும் அல்லாது, பிஹாரின் சமீபத்திய கௌரவமாகவும் ஆகியிருக்கிறார்.

நன்றி: அருஞ்சொல் (10 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories