TNPSC Thervupettagam

ஆட்சிப் பணிகளில் தமிழர்கள் குறைய என்ன காரணம்?

June 8 , 2022 703 days 449 0
  • குடிமைப் பணித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. வெற்றி பெற்றவர்களின் படங்களும் நேர்காணல்களும் வெளியாகின்றன. இவர்களில் பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்தக் கடுமையான தேர்வுகளை நேரிட்டு, இப்போது அதைத் தாண்டிக் குதித்திருப்பவர்கள். இந்த முறை பூர்வாங்கத் தேர்வுகள் 2021 அக்டோபர் மாதத்தில் நடந்தன. பிரதான தேர்வுகள் 2022 ஜனவரி மாதத்திலும், மூன்றாம் கட்டமாக நேர்முகத் தேர்வு ஏப்ரல் - மே மாதங்களிலும் நடந்தன.
  • இந்த மூன்று கட்ட வடிகட்டலுக்குப் பிறகு தேர்வான இந்தப் போட்டியாளர்கள் இனி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் ஆவார்கள். அடுத்த முப்பதாண்டுகளில் அரசு இயந்திரத்தின் பிரதான பற்சக்கரங்களாக இயங்குவார்கள்; கொள்கைகளை வகுப்பார்கள்; அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பார்கள்.
  • இவர்களைப் பிரதமரும் தமிழக முதல்வரும் பாராட்டினார்கள். பிரதமரின் பாராட்டு நாடெங்கிலும் இருந்து தேர்வான 685 போட்டியாளர்களைப் போய்ச் சேர்ந்தது. முதல்வரின் பாராட்டு 27 பேரைத்தான் சென்றடைந்தது. அதாவது தமிழகத்திலிருந்து தேர்வானவர்கள் 27 பேர்தான். இத்தனைக்கும் முதற்கட்ட பூர்வாங்கத் தேர்வுகளைத் தமிழகத்திலிருந்து எழுதியவர்களின் எண்ணிக்கை 30,000க்கும் மேல். நேர்முகத் தேர்வு வரை வந்தவர்கள் 685 பேர். தேர்வானவர்கள், 27 பேர் மட்டுமே (தேர்ச்சி விகிதம்: 4%).

வீழ்ச்சியும் காரணங்களும்

  • கடந்த சில ஆண்டுகளாகவே குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தமிழகத்திலிருந்து தேர்வாகிறவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருகிறது. 2013ஆம் ஆண்டு தேர்வானவர்களின் எண்ணிக்கை 150 ஆக இருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் தேர்வானவர்களின் எண்ணிக்கையும் நேர்முகத் தேர்வில் போட்டியிட்டவர்களின் எண்ணிக்கையும் இப்படியானது:
  • 2014இல் தேர்வானவர்கள் 118 பேர், (நேர்முகம் கண்டவர்கள் 1126 பேர், தேர்ச்சி விகிதம்: 10.5%), 2015இல் 82 தேர்வானவர்கள் (நேர்முகம் கண்டவர்கள் 1078 பேர், 7.6%), 2016இல் 78பேர் (நேர்முகம் கண்டவர்கள் 1099 பேர், தேர்ச்சி விகிதம்: 7%). அதேபோல், 2017இல் தேர்வானவர்கள் 42 பேர் (நேர்முகம் கண்டவர்கள் 999 பேர், தேர்ச்சி விகிதம்: 4.2%), 2018இல் தேர்வானவர்கள் 45 பேர் (நேர்முகம் கண்டவர்கள் 759 பேர், தேர்ச்சி விகிதம்: 5.9%).
  • மேலும் 2019இல் தேர்வானவர்கள் 60 பேர் (நேர்முகம் கண்டவர்கள் 829 பேர், தேர்ச்சி விகிதம்: 7.2%), 2020இல் தேர்வானவர்கள் 45 பேர் (நேர்முகம் கண்டவர்கள் 780 பேர், தேர்ச்சி விகிதம்: 5.8%). கடைசியாக 2021இல் தேர்வானவர்கள் 27 பேர் (நேர்முகம் கண்டவர்கள் 685 பேர், தேர்ச்சி விகிதம்: 4%) ஆகச் சிறுத்துவிட்டது. கடந்த பத்தாண்டுகளில் மிகக் குறைந்த தேர்ச்சி விகிதம் இதுதான்.
  • குடிமைப் பணி அலுவலர்களின் குழுமம் ஒன்று இந்த வீழ்ச்சியைக் குறித்து விவாதித்தது. இந்த அலுவலர்கள் வீழ்ச்சிக்குப் பிரதானமாக நான்கு காரணங்களை முன் வைக்கிறார்கள்.
  • முதலாவதாக, நல்ல ஊதியம் பெறக்கூடிய தனியார் துறை வேலைகளையே இக்கால இளைஞர்கள் பெரிதும் விரும்புகின்றனர். அரசுப் பணிகளில் அவர்களுக்கு ஆர்வம் குறைவாக இருக்கிறது. மேலும் குடிமைப் பணிக்காக ஐந்தாறு ஆண்டுகள் மெனக்கெட வேண்டியிருக்கிறது. அதற்கான பொறுமையும் அர்ப்பணிப்பும் உழைப்பும் பலரிடமும் இருபதில்லை.
  • அடுத்ததாக, பல இளைஞர்களின் கல்வி மேலோட்டமாக இருக்கிறது. அது விரிவும் ஆழமும் கூடியதாக இல்லை.
  • மூன்றாவதாக, கலைத் துறை தமிழக மாணவர்களின் கடைசித் தேர்வாக இருக்கிறது. குடிமைப் பணித் தேர்வில் தெரிவாகிறவர்களில் கணிசமானோர் வரலாறு, அரசியல், இலக்கியம் முதலான கலைத் துறை மாணவர்களாக இருக்கிறார்கள்.
  • அலுவலர் குழுமத்தின் பட்டியலில் நான்காவதாக இடம்பெறும் காரணம் இது.  பல இளைஞர்களுக்கு வாசிப்பதிலும், அதை உள்வாங்கிக்கொள்வதிலும், பின் அதைக் கேட்டாரைப் பிணிக்கும் வண்ணம் எடுத்துரைப்பதிலும் போதாமை உள்ளது.
  • முதல் மூன்று காரணங்கள் நமது கல்வித் திட்டம் தொடர்பானவை. மருத்துவம், பொறியியல், மேலாண்மை, வணிகம் முதலான துறைகளின் மீது பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இருக்கும் மோகம் கலைத் துறைப் படிப்புகளின் மீது இருப்பதில்லை. தவிர, கல்வியானது இன்றைய மதிப்பில் வேலை வாங்கித்தரும் ஒரு கருவியாகச் சுருங்கிப் போய்விட்டது. ஆகவே கசடறக் கற்க வேண்டும் என்கிற ஆர்வம் இருப்பதில்லை.
  • மேலும், அரசுப் பணிகள் வாயிலாக மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்ள முடியும். குறிப்பாக குடிமைப் பணிகள் அதிகாரத்தை மட்டுமல்ல, மக்கள் சேவைக்கான வாய்ப்பையும் வழங்குகின்றன. இதற்கு சமூக அக்கறையுள்ள தலைமுறை உருவாக வேண்டும். மேலே கண்ட புள்ளிவிவரங்கள் ஆழமான கல்வியைப் பயிற்றுவிப்பதிலும், கலைத் துறைப் படிப்புகளின் மேன்மையை உணர்த்துவதிலும், சமூக அக்கறை மிக்க இளைஞர்களை உருவாக்குவதிலும் நாம் பின்தங்கி இருக்கிறோம் என்பதை உணர்த்துகின்றன.
  • இவை நமது கல்வித் துறை சார்ந்த பிரச்சினைகள். இவற்றை அரசும் கல்வியாளர்களும் கவனமாகக் கையாள வேண்டும்.

எண்ணும் எழுத்தும்

  • அலுவலர்களின் பட்டியலில் நான்காவதாக இடம்பெறும் காரணம் மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன். அது மொழி தொடர்பானது. அலுவலர்களின் கருத்தை சங்கர் ஐ.ஏ.எஸ் கல்விக் கழகத்தின் தலைவர் எஸ்.சந்துரு வேறு வார்த்தைகளில் சொல்கிறார்: “நமது குடிமைப் பணித் தேர்வர்கள் தமிழ் ஆங்கிலம் எனும் இரண்டு மொழிகளிலும் திறன் குறைந்தவர்களாக இருக்கிறார்கள்.”
  • நமது இளைஞர்கள் ஏன் அப்படி ஆனார்கள்? இதற்கான விடை மொழியைக் குறித்த நமது தவறான புரிதலில் இருக்கிறது. மொழிக் கல்வியைக் குறித்த நமது அறியாமையிலும் அலட்சியத்திலும் இருக்கிறது.
  • எண்ணையும் எழுத்தையும் இரு கண்களாகப் போற்றியது தமிழ்ச் சமூகம். அது வரலாறு. காலப் போக்கில் எண்ணில் வெண்ணையையும் எழுத்தில் சுண்ணாம்பையும் வைத்ததும் நம் சமூகமே தான். அதாவது பள்ளிகளில் கணிதப் பாடங்களும் அறிவியல் பாடங்களும் பெறும் முக்கியத்துவத்தை மொழிப் பாடங்களும் வரலாற்றுப் பாடங்களும் பெறுவதில்லை.
  • இந்த நிலையே உயர் கல்வியிலும் தொடர்கிறது. “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தொழில்நுட்பக் கல்விக்கும் மருத்துவக் கல்விக்கும் தரப்படும் முக்கியத்துவம் சமூக அறிவியலுக்கு இல்லை. மதிப்பெண் குறைந்த மாணவர்கள் படிக்கும் பாடமாக வரலாற்றை மாற்றிவிட்டார்கள்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி.
  • நம்மிடையே இன்னொரு அறியாமையும் நிலவுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், வணிகம், மேலாண்மை முதலான துறைகளுக்கு மொழி ஆளுமை அவசியமில்லை என்று நம்மில் பலர் கருதுகிறார்கள். வரலாறு, இலக்கியம், சமூகம், அரசியல் முதலான கலைத் துறைகளுக்குத்தான் மொழிக்கல்வி தேவை என்பதான கருத்தியல் பொதுப்புத்தியில் உறைந்திருக்கிறது.

பலவீனம் அறிந்த சீனர்கள்

  • என் சொந்த அனுபவம் ஒன்று இதற்கு எடுத்துக்காட்டாக அமையும். 2009ஆம் ஆண்டு நான் ஹாங்காங்கில் ஒரு பொறியியல் ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றினேன். அப்போது அந்த நிறுவனத்தில், வாரம் ஒருநாள் மதிய உணவு வேளையில் மூத்த பொறியாளர் ஒருவர், இளம் பொறியாளர்களுக்குத் தாங்கள் பணியாற்றும் திட்டங்களில் உள்ள சிறப்பான, நூதனமான பொறியியல் அம்சங்களைப் பற்றிப் பேச வேண்டும். உரை நடக்கும்போதே உணவும் நடந்தேறிவிடும்.
  • என் முறை வந்தது. நான் ஒரு சின்ன மாற்றம் செய்தேன். நான் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்த திட்டப் பணியைக் குறித்துப் பேசுவில்லை. ஹாங்காங்கில் பொறியியல் அப்படி ஒன்றும் கிராக்கியுள்ள துறையல்ல. கணிதத்திலும் இயற்பியலிலும் பொறியியலிலும் ஆர்வமுள்ளவர்கள்தான் பொறியியல் படிக்க வருவார்கள். தவிர, ஹாங்காங் பல்கலைக்கழகங்கள் உலகத் தரமானவை. ஆகவே இந்த இளம் சீனப் பொறியாளர்களின் பொறியியல் அறிவு சிறப்பாக இருக்கும். ஆனால், அவர்கள் ஆங்கிலத்தைப் பற்றி அப்படிச் சொல்லுவதற்கு இல்லை.
  • நான் பணியாற்றும் துறையில் படம் வரைவது, கணக்கீடுகள் போடுவது மட்டுமில்லை, எழுதுகிற வேலையும் கணிசமாக உண்டு. தொழில்நுட்ப அறிக்கைகள், ஒப்பந்தங்கள், பொருட்களின், வேலையின் தரம் எப்படியிருக்க வேண்டும் என்கிற விவரக் குறிப்புகள் போன்றவற்றை எழுத வேண்டும். மேலும் அரசுத் துறைகளுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும், சேவை நிறுவனங்களுக்கும், சகாக்களுக்கும் ஏராளமான கடிதங்களும் மின்னஞ்சல்களும் எழுத வேண்டும். ஹாங்காங் மக்கள் சீன மொழியில்தான் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள், படிக்கிறார்கள். எல்லா மென்பொருள்களும் நிரல்களும் சீன மொழியிலேயே கிடைக்கின்றன. எண்களைக்கூடச் சீன மொழியில்தான் எழுதுவார்கள்; சொல்லுவார்கள்.
  • எனினும் ஹாங்காங் பொறியியல் துறையில் அலுவல் மொழி ஆங்கிலமாகத்தான் இருந்துவருகிறது. இந்த எழுத்து வேலையில் சீன இளைஞர்களின் ஆங்கிலம் சிலாக்கியமானதாக இருந்ததில்லை. ஆகவே இந்தப் பொறியியல் தொடர்பான அறிக்கைகளிலும், கடிதங்களிலும், விவரக்குறிப்புகளிலும் என்னென்ன கூறுகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும், எப்படி அவற்றை அலுவல்ரீதியான ஆங்கிலத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று பேசினேன்.
  • நான் எதிர்பார்க்கவே இல்லை. அதற்குப் பெரிய வரவேற்பிருந்தது. அந்த இளைஞர்கள் அடுத்தடுத்த வாரங்களில், குறிப்பிட்ட சூழலில் எழுதப்படும் கடிதம் எப்படி இருக்க வேண்டும், அறிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதுபோல பயிற்சி எடுத்துக்கொண்டு எழுதினார்கள்.

தன் வலி அறியாத் தமிழர்கள்

  • இது நடந்து சில மாதங்களில் எனக்குப் பணி மாறுதல் வந்தது. சென்னையில் ஒரு திட்டப் பணிக்கு மாற்றப்பட்டேன். ஹாங்காங் இளைஞர்கள் சொல்லுவார்கள், ‘இந்தியர்கள் ஆங்கிலத்தில் விற்பன்னர்கள்’ என்று. நானும் அதுகாறும் அப்படித்தான் நம்பிவந்தேன். ஆனால், அது அப்படியில்லை என்பது சென்னைக்கு வந்த சில நாட்களிலேயே புரிந்தது. இந்திய இளம் பொறியாளர்களின் ஆங்கிலமும் மெச்சிக்கொள்ளும்படியாக இல்லை. என்னிடத்தில் ஹாங்காங்கில் நான் நிகழ்த்திய உரைக் குறிப்புகள், சைலைடுகள் எல்லாம் இருந்தன.
  • ஒருநாள் மாலை வேளையில் அந்த உரையை நிகழ்த்தலாம் எனக் கருதி, அறிவிப்பையும் வெளியிட்டேன். சென்னையில் எனக்கு வேறு விதமான ஆச்சரியம் காத்திருந்தது. மிகக் குறைவான இளைஞர்களே உரையைக் கேட்க வந்திருந்தனர். இரண்டொரு நாட்களுக்குப் பிறகு சாவதானமாக, நிகழ்ச்சிக்கு வராத சில பேரிடம் “ஏன் வரவில்லை?” என்று கேட்டேன். “கடிதம் எழுதுவதற்கு என்ன சார் பயிற்சி வேண்டும்? நீங்கள் ஹாங்காங்கின் பிரம்மாண்டமான திட்டப் பணிகளைப் பற்றிப் பேசுங்கள், வருகிறோம்” என்றார்கள். அந்தப் பதில் எனக்கு இரண்டு செய்திகளை உணர்த்தின.
  • முதலாவதாக, சீன இளைஞர்களுக்கு தங்களது ஆங்கிலம் குறைபாடு உடையது என்று தெரிந்திருக்கிறது. தமிழக இளைஞர்களின் ஆங்கிலமும் குறைபாடு உடையதுதான். ஆனால், கெடுவாய்ப்பாக தங்களது குறை அவர்களுக்குத் தெரியவில்லை. பாரதியின் வரிகளில் சொல்வதென்றால் ‘ஆங்கிலம் அறிகிலார் -- அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்.’
  • அடுத்ததாக, இப்போது தமிழகத்தில் படிக்கிற இளைஞர்களில் கணிசமானோர் தமிழ்ப் பயிற்று மொழியில் படிப்பதில்லை. மட்டுமல்ல, தமிழை ஒரு பாடமாகக்கூடப் படிக்காதவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் முதல் பாடமாக பிரெஞ்சு, அல்லது ஜெர்மென் அல்லது சமஸ்கிருதம் அல்லது உருது என்று ஏதேனும் ஒரு மொழியைப் படிக்கிறார்கள். கேட்டால் நிறைய மதிப்பெண் வாங்கலாம் என்கிறார்கள்.
  • இந்த நிலைமை 2006க்குப் பின்னால் ஓரளவிற்கு மாறியது. 2006ஆம் ஆண்டு முதல் மாநிலக் கல்விமுறை செயல்படுத்தப்படும் பள்ளிகளில் படிப்படியாகத் தமிழ்க் கல்வியைக் கட்டாயமாக அமலாக்கியது தமிழக அரசு. இதன் பலனாக, அதற்கடுத்த பத்தாண்டுகளில், அதாவது 2016 முதல் தமிழகமெங்கும் மாநிலக் கல்விமுறையில் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய பிள்ளைகளில் பலர் தமிழில் ஒரு தேர்வேனும் எழுதினார்கள். இப்போதும் பத்தாம் வகுப்பிற்குப் பிறகு தமிழ் கட்டாயம் இல்லை. ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் இயங்கும் எல்லா சிபிஎஸ்இ பள்ளிகளிலும் அப்போதும் இப்போதும் தமிழ் கட்டாயமில்லை.
  • ஹாங்காங் இளம் பொறியாளர்கள் தங்களது தாய்மொழியான சீன மொழியில் சிந்தித்து, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் சிந்தனையில் தெளிவு இருக்கிறது. மொழி மாற்றத்தில்தான் குறை இருக்கிறது. அதைப் பயிற்சி மூலம் அவர்கள் மேம்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால், தமிழக இளம் பொறியாளர்களுக்கு, அல்லது அவர்களில் பலருக்கு, தாய்மொழியில் சிந்திக்க முடிவதில்லை, ஆங்கிலத்திலும் சிந்திக்க முடிவதில்லை. அதனால், அவர்களால் தங்களைச் சிறப்பாக வெளிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

தங்கிலீஷ்

  • எழுத்தாளர் ஷாஜகான் சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்ட சம்பவம் இது. அவர் ஒரு கல்வி அறக்கட்டளை நடத்திவருகிறார். அந்த அறக்கட்டளை, ஒரு மாணவிக்குத் தட்டச்சு பயில்வதற்கான கட்டணத்தைச் செலுத்தி உதவியது. அந்த மாணவி தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் தட்டச்சு பயின்றார், தேர்வெழுதினார், தேறிவிட்டார். அதை ஷாஜாகனுக்கு வாட்ஸப் மூலம் இப்படி அனுப்பியிருக்கிறார்: “Typing clear pannittan sir!”
  • அடுத்து அவரிடமிருந்து இன்னொரு செய்தியும் வருகிறது: “Tamil and English typing clear pannittan. Thank u so much for ur help!”
  • அதாவது, மாணவி தங்கிலீஷில் சொல்வது “பண்ணிட்டான்”, உண்மையில் அது ‘பண்ணிட்டேன்’. நமது மாணவர்களின் மொழியின் மீதான அக்கறையும் பயன்பாடும் எந்த அளவில் இருக்கின்றன என்பதற்கு இது ஒரு சோற்றுப் பதம்.

மொழி ஆளுமை

  • நான், 2009இல் தொட்டுணர்ந்த மொழி ஆளுமைக் குறைபாடு இன்று விஷ விருட்சமாக வளர்ந்திருக்கிறது. இந்தக் குறைபாடு அவர்களது குடிமைப் பணித் தேர்வுகளுக்கு மட்டும் தடையாக அமையவில்லை. அது அவர்களது அன்றாட வாழ்வில், தொழிலில், செம்மையாகப் பேசவும் எழுதவும் தடையாக நிற்கிறது. 
  • தமிழ்ப் பயிற்றுமொழியில் படிப்பது வெகுவாகக் குறைந்திருப்பதும் குடிமைப் பணித் தேர்வுகளின் முடிவில் பிரதிபலிக்கின்றன. 2014இல் தமிழில் தேர்வெழுதித் தேர்வானவர்களின் எண்ணிக்கை 8ஆக இருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 2015-7, 2016-5, 2017-5, 2018-1, 2019-2, 2020-2 எனக் குறைந்தன.
  • தாய்மொழிக் கல்வியின் சிறப்பை உலகெங்கும் உள்ள கல்வியாளர்கள் வலியுறுத்திய வண்ணம் இருக்கிறார்கள். ஏனோ, அது நம் காதுகளில் விழுவதேயில்லை. தமிழ்ப் பயிற்றுமொழியில் படிப்பதை ஊக்குவித்தால் கணிசமான மாணவர்களால் இந்தத் தேர்வுகளைத் தமிழில் எழுத முடியும். அப்போது வெற்றி விகிதமும் மிகும்.
  • நமது பெற்றோர்களின் கண்களை ஆங்கில மோகம் மறைத்திருக்கிறது. ஆனால், நாட்டு மொழியாகவும் வீட்டு மொழியாகவும் தமிழ் பேசப்படும் ஒரு மண்ணில், தமது பிள்ளைகளால் தமிழின் உதவியின்றி ஆங்கிலம் கற்க முடியாது என்பதை அவர்கள் உணரவில்லை. விளைவாக, நமது பிள்ளைகளின் மொழி ஆளுமை தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் குறைபாடு உடையதாக இருக்கிறது. மேலதிகமாக, அறிவியல் கல்வி போதுமானது, அதற்கு மொழி ஆளுமை அவசியமில்லை என்கிற அறியாமையும் சமூகத்தில் நிலவுகிறது. இந்நிலை மாற வேண்டும்.
  • முதற்கட்டமாகத் தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிள்ளைகள் அனைவரும், தமிழை ஒரு கட்டாயப் பாடமாகப் படிக்க வழிவகை செய்ய வேண்டும். அடுத்து, ஆங்கில மொழியையும் முறையாகப் பயிற்றுவிக்க வேண்டும். மொழியின் மேன்மை கலைப் படிப்புகளுக்கு மட்டுமில்லை, அறிவியல் படிப்புகளுக்கும் அவசியம் என்பதை நிலைநிறுத்த வேண்டும். ஆகவே, மொழிக் கல்விக்குத் தகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
  • மொழி ஆளுமை என்பது ஒவ்வொருவருக்கும் உரையாடவும், உறவாடவும், தொழில் செய்யவும் அவசியமானது. இந்தப் புரிதல் கல்விப்புலத்தில் வந்துவிட்டால் குடிமைப் பணித் தேர்வுகளிலும் தமிழ் மாணவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெறுவார்கள். நம் பிள்ளைகளில், கல்வியில் சிறந்தவர்கள் ஆட்சிப் பணிகளில் கணிசமான எண்ணிக்கையில் இடம்பெறுவார்கள். அப்போது அரசு இயந்திரத்தை இயக்குகிற பற்சக்கரங்களில் கணிசமான தமிழ்ச் சக்கரங்களும் இருக்கும்.

நன்றி: அருஞ்சொல் (08 – 06 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories