TNPSC Thervupettagam

ஆர்ஜென்டினாவின் ஆன்ம பலம் லியனல் மெஸ்ஸி

November 27 , 2022 487 days 309 0
  • ஆர்ஜென்டினா நாட்டை உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களின் உற்பத்திக்கூடம் என்றுகூட சொல்லலாம்.  அந்த அளவுக்கு மணிமணியான கால்பந்து வீரர்களை பெற்றெடுத்த நாடு இது.
  • உலகப்புகழ்  பெற்ற ஆர்ஜென்டினா நாட்டு கால்பந்து வீரர் ஒருவரின் பெயரைச் சொல்லச் சொன்னால் உடனே நீங்கள் ‘டியகோ மாரடோனா’ என்பீர்கள்.
  • ஆனால், மாரடோனாவுக்கு முன்பே அல்பிரடோ டி ஸ்டீபனோ, ரேய்மண்டோ ஒர்சி, லுசித்தோ மோன்டி போன்ற அசகாய சூரர்களை அள்ளித்தந்த நாடு ஆர்ஜென்டினா. அல்பிரடோ டி ஸ்டீபனோவைப் பொறுத்தவரை ஐரோப்பிய கால்பந்தாட்டத்தின் போக்கையே மாற்றியமைத்த ஜாம்பவான் அவர். ஆனால், கடைசியாகச் சொன்ன மூன்று வீரர்களில் யாருமே ஆர்ஜென்டினா அணிக்காக ஆடியதில்லை என்பதுதான் துயரம்.
  • கால்பந்தாட்டத்தில், ஆர்ஜென்டினா பெற்றெடுத்த அருந்தவப்புதல்வர்களில், நம்காலத்து நாயகர் லியனல் மெஸ்சி. ஆர்ஜென்டினா நாட்டின் ரொசாரியோ நகரத்தில் பிறந்தவர் இவர். 
  • மெஸ்சியுடன் இணைந்து இப்போது கால்பந்தாட்டத்தில் களம் கண்டு வரும் ஏஞ்சல் டி மரியாவின் பிறப்பிடமும் இந்த ரொசாரியோ நகரம்தான். காரே போன்ற கால்பந்து வீரரை பெற்றெடுத்த நகரமும் அதுதான். 
  • ரொசாரியோ நகரத்தில் பிறந்த இன்னொரு பிரபலத்தின் பெயரைக் கேட்டால் அப்படியே மலைத்துப்போவீர்கள். அவர் புரட்சிப் போராளியான எர்னஸ்டே சே குவேரா.
  • ஒருமுறை மெஸ்சிக்கு ஒருவர் இப்படி புகழாரம் சூட்டினார்.
  • வாழ்க்கையில் நானும் எத்தனையோ கால்பந்தாட்ட வீரர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், பந்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு செல்வதில் மெஸ்சியைப் போல ஒருவரை நான் பார்த்ததே இல்லை’ 
  • மெஸ்சியை இப்படி வாயாற புகழ்ந்தவர் வேறு யாருமில்லை. அதே ஆர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவரும், கால்பந்தாட்டத்தின் கடவுளாகக் கருதப்படுபவருமான மாரடோனாதான் அப்படி புகழ்ந்தவர். 
  • லியனல் மெஸ்சி.  ஏழு முறை பாலன் தோர் (தங்கப்பந்து) விருது வென்றவர். 3 முறை ஐரோப்பிய தங்க காலணி, 3 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதுகளைப் பெற்றவர். சிறந்த ஃபிபா வீரர் விருது உள்பட இன்னும் அவர் பெற்ற விருதுகள் ஏராளம். 
  • மெஸ்சிக்கு உள்ள மிகப்பெரிய பெருமை, அவரது பெயரில் இன்னும் சில மெஸ்சிகள் இருப்பதுதான். அந்த மெஸ்சிகளில் ஒருவர் ‘ஆல்பைன் மெஸ்சி’ என அழைக்கப்படும் சர்தான் சாக்கிரி. இந்த சாக்கிரி, முன்னாள் யூகோஸ்லாவிய நாட்டின் கொசோவா பகுதியில் பிறந்தவர். சுவிட்சர்லாந்து அணிக்காக தற்போது ஆடிவரும் இந்த வீரர், ‘அல்பைன் பகுதியின் மெஸ்சி‘ என அழைக்கப்படுகிறார்.
  • மெஸ்சியின் பெயரால் நின்றுலவும் இன்னொரு வீரர், ஈரான் நாட்டின் மெஸ்சி என்று அழைக்கப்படும் சர்தார் அஸ்மவுன். இந்த 2022 உலகக்கோப்பைப்போட்டியில் தன் பெயரில் உலவும் இந்த இரண்டு மெஸ்சிகளையும் ஒருவேளை உண்மையான மெஸ்சி ஆடுகளத்தில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இது உலக அளவில் வேறு எந்த கால்பந்தாட்ட வீரருக்கும் வாய்க்காத பெருமை. 
  • மெஸ்சி, 2006ஆம் ஆண்டில் இருந்தே உலகக்கோப்பை போட்டிகளில் ஆடி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் 2022 கத்தார் உலகக்கோப்பை போட்டி, மெஸ்சியின் ஐந்தாவது உலகக்கோப்பைப் போட்டி. இந்த ஐந்து உலகக் கோப்பைகளிலும், மொத்தம் 20 போட்டிகளில் மெஸ்சி ஆடியிருக்கிறார். அவர் அடித்த மொத்த கோல்கள் ஏழு. 2006ஆம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் செர்பியா அணிக்கு எதிராக மெஸ்சி முதல் கோலை அடித்தபோது அவரது வயது வெறும் 18. 166 பன்னாட்டுப் போட்டிகளில் மெஸ்சி அடித்த மொத்த கோல்கள் 92. 
  • 2022 கத்தார் உலகக்கோப்பை போட்டி, மெஸ்சியின் ஐந்தாவது போட்டி மட்டுமல்ல, அவரது இறுதி உலகக்கோப்பைப் போட்டியும் இதுதான்.
  • (ஆர்ஜென்டினாவின் தலைசிறந்த மற்றொரு வீரரான ஏஞ்சல் டி மரியாவின், இறுதி உலகக் கோப்பைப் போட்டியும் இதுதான். 2008 ஒலிம்பிக் கால்பந்தாட்டப் போட்டியில் டி மரியா அடித்த கோலால்தான் ஆர்ஜென்டினா அணி தங்கம் வென்றது).
  • மெஸ்சி தலைமையிலான ஆர்ஜென்டினா அணி, நடப்பு 2022 உலகக் கோப்பைப் போட்டிகளில் மிகுந்த நம்பிக்கையுடன் கால்பதித்தது. காரணம், கடந்த ஆண்டு நடந்த கோபா அமெரிக்கா போட்டியில், கோப்பையைக் கைப்பற்றிய நாடு ஆர்ஜென்டினா. அந்தப் போட்டியில் பிரேசிலை வென்று ஆர்ஜென்டினா வாகை சூடியது. அதுபோல இந்த ஆண்டு நடந்த ஃபினலிசிமா போட்டியில் இத்தாலியை வீழ்த்தி ஆர்ஜென்டினா மணிமுடியை வென்றிருந்தது.
  • அது மட்டுமல்ல, தொடர்ச்சியாக 35 போட்டிகளில், விடாமல் வெற்றிக் கனியை சுவைத்த அணி ஆர்ஜென்டினா அணி. அற்புதமான இந்த அணிதான் உலகக் கோப்பைத் தொடக்கப் போட்டி ஒன்றில் சௌதி அரேபியாவிடம், 2-1 என அதிர்ச்சித் தோல்வி கண்டது. 
  • சௌதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில் மெஸ்சி, பெனால்டி முறையில் ஒரு கோல் அடித்தார். அந்த கோல், உலகக் கோப்பைப் போட்டிகளில் மெஸ்சி அடித்த 7ஆவது கோல்.
  • இந்த ஆரம்பத் தோல்வி அதிர்ச்சி அளித்தாலும், நேற்றிரவு மெக்சிகோவுடன் நடந்த போட்டியில் ஆர்ஜென்டினா அணியும், மெஸ்சியும் தங்களை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.
  • நேற்றைய போட்டியில் 2-0 என மெக்சிகோவை வென்றது ஆர்ஜென்டினா. அந்தப் போட்டியில் மெஸ்சி அடித்த கோல் ஓர் அருமையான கோல் இந்த கோல் மூலம், உலகக்கோப்பைப் போட்டிகளில் மாரடோனா அடித்திருந்த 8 கோல்களை மெஸ்சி சமன் செய்திருக்கிறார். நல்வாய்ப்பு அமைந்தால், முன்னாள் ஆர்ஜென்டினா வீரரான கேப்ரியேல் பாட்டிஸ்டூட்டாவின் 10 கோல் உலகக் கோப்பைபோட்டி சாதனையையும் மெஸ்சி இந்தமுறை சமன் செய்யலாம் அல்லது அதை முறியடிக்கவும்கூட செய்யலாம்.
  • ஆர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியனல் ஸ்கேலானி. தனது அணியை அடுத்தடுத்த  மோதல்களுக்காக அவர் தயார்ப்படுத்தி வருகிறார். மெஸ்சியின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதத்தில் அணியை அவர் கட்டமைத்திருப்பது ுறிப்பிடத்தக்கது.
  • 1978 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்ற நாடு ஆர்ஜென்டினா. அதன்பிறகு உலகக்கோப்பை போட்டிகள் எதிலும் ஆர்ஜென்டினா அணி சோபிக்கவில்லை. இந்த நிலையில், 2022 உலகக்கோப்பைப் போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்கி உள்ளது ஆர்ஜென்டினா.
  • தங்கள் அணியின் நட்சத்திர நாயகனுக்கு உலகக் கோப்பை வெற்றியுடன் பிரியாவிடை தரும் ஆவலில் இருக்கிறார்கள் ஆர்ஜென்டினா வீரர்கள். நீண்டகாலமாக ஆர்ஜென்டினா உலகக்கோப்பையை வெல்லாத நிலையில், இந்த 36 ஆண்டுகால தாகம் இந்தமுறை தணியும் என்று கருதுகிறார்கள் ஆர்ஜென்டினா கால்பந்து ரசிகர்கள்.  காரணம் இல்லாமல் இல்லை. இந்த உலகக்கோப்பைப் போட்டியில் பிரேசில், பெல்ஜியம் அணிகளுக்கு அடுத்தபடியாக, ஃபிபா அமைப்பின் தரவரிசைப் பட்டியலில், 3ஆவது இடத்தில் இருக்கும் அணி ஆர்ஜென்டினா அணிதான்.
  • ஆர்ஜென்டைனா அணியின் பலமே அதன் தற்காப்புதான். 4-3-3 அல்லது 4-2-3-1 என்ற வடிவமைப்புடன் ஆட்டத்தை எதிர்கொள்ளும் அணி ஆர்ஜென்டினா. அணியின் நட்சத்திர வீரர்கள் 4 பேர் காயத்துடன் இருக்கும் நிலையில், எமிலியானோ மார்ட்டினெஸ் போன்ற தலைசிறந்த கோல்கீப்பர், ஏஞ்சல் டி மரியா, லாட்டரோ மார்ட்டினெஸ், நிகோலஸ் ஒடோமெண்டி, கிறிஸ்டியன் ரொமிரோ, லிசாண்ட்ரோ மார்ட்டினெஸ் போன்ற வீரர்களுடன் களமிறங்கி வருகிறது ஆர்ஜென்டினா அணி. 
  • அணியின் தலைவராக இருக்கும் லியனல் மெஸ்சி என்ற பெயர், அந்த அணிக்கு மிகப்பெரிய ஆன்ம பலம். பூரிப்பூட்டும் ஒரு புத்துணர்வு. 
  • லியனல் மெஸ்சி அண்மையில் ஒரு நேர்காணல் அளித்திருந்தார். அதில், ‘உலகக் கோப்பையில் எளிதான போட்டி, எளிதான அணி என்று எதுவுமே இல்லை. உலகக்கோப்பையில் கடந்தகாலம் எல்லாம் உதவி புரியாது. இங்கே நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் வரலாறு. அதைத்தான் மக்களும் எதிர்பார்ப்பார்கள்’ என்றிருக்கிறார். அது உண்மைதானே?
  • தனது இறுதி உலகக்கோப்பைப் போட்டியில் ஆடி வருகிறார் லியனல் மெஸ்சி. அவரது தலைமையில் ஆர்ஜென்டினா அணி இந்த முறை உலகக் கோப்பையை ஏந்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

நன்றி: தினமணி (27 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories