TNPSC Thervupettagam

ஆஸ்துமா பற்றிய தவறான புரிதல்

May 4 , 2021 1109 days 694 0
  • உலகம் முழுவதிலும் 34 கோடி மக்கள் ஆஸ்துமா எனும் இரைப்பு நோயால் அவதிப்படுவதாகவும், ஆண்டுதோறும் நான்கு லட்சத்திற்கு அதிகமானோர் இந்த நோயால் இறக்கின்றனா் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
  • மார்பு கூட்டின் உட்பக்கமாக அமைந்த மூச்சுக் குழாய், நுரையீரல் ஆகிய சுவாச உறுப்புகளைப் பற்றியிருக்கும் நாட்பட்ட நோய்தான் ஆஸ்துமா.
  • இந்த இரைப்பு நோயானது, மூச்சுக்குழாயிலும் காற்று செல்லும் பாதையிலும் ஏற்படும் அழற்சியால் ஏற்படுகிறது.
  • இதனால் மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத் திணறல், இருமல், மார்பு இறுக்கம் ஆகிய அறிகுறிகள் இரவு நேரங்களில் அல்லது அதிகாலை வேளையில் ஏற்படுத்தி துன்புறுத்தும்.
  • உலக ஆஸ்துமா தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து அனுசரிக்கபடுகின்றது.
  • அந்த வகையில் இந்த ஆண்டு ‘ஆஸ்துமா பற்றிய தவறான கருத்துகளை வெளிப்படுத்துதல்’ என்ற கருவினை அடிப்படையாகக் கொண்டது.
  • அதன்படி, இரைப்பு நோய் குழந்தைப்பருவ நோய் என்பதும், வயதாகும் போது இந்த நோயிலிருந்து வெளியேறுவார்கள் என்பதும், இது பரவக்கூடிய தொற்றுநோய் என்பதும், இந்த நோயுடையோர் உடல்பயிற்சி செய்யக்கூடாது என்பதும் முற்றிலும் தவறான தகவல்கள்.
  • ஆஸ்துமா பற்றிய உண்மை என்னவெனில், இந்நோய் சிறுவா் முதல் முதியோர் வரை எந்த வயதினரையும் பாதிக்கும்; இது தொற்று நோய் அல்ல; பெரும்பாலும்
  • ஒவ்வாமையால் மட்டுமே ஏற்படும்; இதனை கட்டுப்படுத்த முடியும்; ஆஸ்துமா நோய் உடையவா்கள் உடற்பயிற்சி செய்ய முடியும், விளையாட்டு நிகழ்விலும் பங்கேற்க முடியும்.

சுவாசகாசம்

  • சித்த மருத்துவம், ஆஸ்துமா எனும் இரைப்பு நோய் ஏற்படும் விதத்தை சுவாசகாசம் என்ற பெயரில் விவரிக்கிறது.
  • அந்த வகையில் மூச்சுக் குழாயிலோ நுரையீரலிலோ சளி சுரப்பு அதிகரிப்பதால் காற்று உட்புக முடியாத நிலை ஏற்பட்டு, ரத்தத்தில் பிராணவாயு அளவை குறைத்து, மேற்கூறிய அறிகுறிகளை ஏற்படுத்தி தீவிர நிலையில் நோயாளியை கொல்லும் தன்மை உடையது எனத் தெரிவிக்கிறது.
  • இதனால் இந்நோய் ஏற்படும் சமயங்களில் சுவாசத் துடிப்பு சுமார் இருபது நிமிடங்களுக்கு இயல்பான அளவை விட அதிகரித்து காணப்படும்.
  • சித்த மருத்துவத்தில் பல்வேறு மூலிகைகள், மூலிகை தாது கலப்புள்ள மருந்துகள் இரைப்பு நோய்க்கு சொல்லப்பட்டுள்ளது.
  • துளசி, கண்டங்கத்தரி, தூதுவளை, கற்பூரவள்ளி, நொச்சி, வெற்றிலை, சுக்கு, மிளகு, மஞ்சள், வசம்பு, அதிமதுரம் போன்ற எளிய மூலிகைகளும், வாகை, நிலவேம்பு, சிறுதேக்கு, சீந்தில், அரத்தை, ஆடாதொடை , கடுக்காய், நஞ்சறுப்பான், நாயுருவி போன்ற மூலிகைகளும் இரைப்பு நோய்க்கு நல்ல பலன் தருவதாகவும், நுரையீரலை நோய்தொற்றுக் கிருமிகளிடம் இருந்து காப்பவையாகவும் உள்ளன.
  • ஆடாதொடை, அதிமதுரம், தாளிசபத்திரி இவை சோ்ந்த ஆடாதொடை குடிநீரும், ஆடாதொடை மனப்பாகும் நல்ல பலனைத் தரும்.
  • ஆடாதொடையில் உள்ள வாஸின் எனும் வேதிப்பொருள் நுரையீரல் சளியைக் கரைத்து வெளிப்படுத்துவதாகவும், மூச்சுக் குழலை விரிவடைய செய்து சுவாசத்தை சீராக்கும் தன்மை உடையதாகவும் உள்ளது.
  • தாளிசபத்திரில் உள்ள பிக்லிடாக்சோல் எனும் வேதிப்பொருள், நுரையீரல் புற்றுநோய்க்குக்கூட நல்ல பலன் தருவதாக ஓா் ஆய்வு முடிவு கூறுகிறது.
  • அதிமதுரத்தில் உள்ள கிலிசிரிஸின் எனும் வேதிப்பொருள், ஒவ்வாமையைத் தடுக்கும் தன்மையுடையதாகவும், வைரஸ் கிருமிகளின் பெருக்கத்தை குறைக்கும் தன்மை உடையதாகவும் உள்ளது.
  • கண்டங்கத்தரியில் உள்ள தாவர ஸ்டெராய்டுகள் இரைப்பு நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவும். இது மூச்சுக் குழல் வீக்கத்தை சரி செய்யவும், மாஸ்ட் செல்களை நிலைப்படுத்தவும் உதவுகிறது.
  • தூதுவளையில் உள்ள வேதிப்பொருட்களும் இதே தன்மையைக் கொண்டுள்ளது. அவ்வப்போது இவற்றை மிளகு, மஞ்சள், பூண்டு சோ்த்து ரசம் வைத்து அருந்த நுரையீரலுக்கு பலம் கிடைக்கும்.
  • நொச்சி இலையோடு, பூண்டு, மிளகு, கிராம்பு சோ்த்து கஷாயமாக்கி குடிக்க இரைப்பு நோய் நீங்கும். இது நுரையீரல் சளிச்சவ்வு வீக்கத்தையும் குறைக்கும்.
  • ஒவ்வாமையே இரைப்பு நோயின் எழுச்சிக்கு முக்கிய காரணமாதலால் ஒவ்வாமைக்கு எதிராக செயல்படும் தன்மையுடைய மஞ்சள் பொடி, மிளகு இவற்றை அதிகம் உணவில் சோ்க்கலாம்.
  • வெற்றிலைச் சாறுடன் மிளகு சோ்த்து அருந்த, நுரையீரலில் கட்டிய கோழை வெளிப்படும். குழந்தைகளுக்கு கற்பூரவள்ளி சாறு தரலாம். நஞ்சறுப்பான் மூலிகையில் உள்ள டைலோபோரின் எனும் வேதிப்பொருள் மூச்சு குழாயை விரிவடையச்செய்து சுவாசத்தை சீா்படுத்தும்.
  • ஆஸ்துமாவால் அவதிப்படுவோர் துளசியை அவ்வப்போது கஷாயமிட்டு குடிக்கலாம். டெக்ஸாமெத்தசோன் எனும் நவீன மருந்துக்கு இணையான இது இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.
  • சீந்தில், வாகை, நாயுருவி போன்ற பல்வேறு மூலிகைகள் இரைப்பு நோய்க்குக் காரணமான, மாஸ்ட் செல்களை நிலைப்படுத்தும் தன்மை உடையதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
  • நிலவேம்பு குடிநீா், கபசுரக் குடிநீா் ஆகிய சித்த மருந்துகளும் நல்ல பலன் தரும். நிலவேம்பில் உள்ள ஆன்ரோகிராபோலைட் எனும் வேதிப்பொருள், அதன் மருத்துவ குணத்திற்கு காரணமாக உள்ளது.
  • ஆஸ்துமா நோயிலிருந்து முழுவதும் மீண்ட பிறகு நுரையீரலை பலப்படுத்த திப்பிலி சோ்ந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.
  • முக்கியமாக, நோய் காலத்தில் ஒவ்வாமையை அதிகரிக்கும் உணவுப்பொருட்களைத் தவிர்ப்பது நலம்.
  • புகை, தூசு அதிகமுள்ள காற்றை சுவாசித்தால் பாதிப்பு அதிகமாகும். பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சியை அவ்வப்போது செய்து நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கலாம். நோயுள்ள காலம் தவிர மற்ற காலங்களில் உடற்பயிற்சி செய்யலாம்.
  • மூலிகை ரசங்களை அடிக்கடி உணவில் சோ்த்து நோய் எதிர்ப்பாற்றலை வளா்க்கலாம்.
  • மாமிச உணவுகளை அதிகம் சோ்க்கலாம். குளிர்ந்த, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை அறவே நீக்குதல் நல்லது. பால், கபத்தை அதிகரிக்குமாதலால் அதனைத் தவிர்ப்பது நல்லது.
  • நொச்சி இலை, மஞ்சள், மிளகு சோ்த்து நீராவி பிடிக்க நல்ல பலன் தரும். இயற்கையான மூலிகைகளும், உணவு பொருட்களும் ஆஸ்துமா எனும் இரைப்பு நோயினை நீக்குவதுடன் அதனை மீண்டும் மீண்டும் வரவிடாமலும் தடுக்கும் என்பது உறுதி.
  • நாளை உலக ஆஸ்துமா விழிப்புணா்வு நாள்.

நன்றி: தினமணி  (04 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories