TNPSC Thervupettagam

இது போர்தான் வி.பி.சிங் உரை

November 28 , 2023 173 days 147 0
  • வி.பி.சிங் பிரதமராக நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய வரலாற்று சிறப்பு மிக்க உரை இது. முக்கியத்துவம் கருதி அதன் மொழிபெயர்ப்பை, ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்காக இங்கே தருகிறது.
  • மண்டல் குழு அறிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கசப்புணர்வை ஏற்படுத்தின. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு அமைப்புடன் போரிடப் போகிறோம் என்பதும் அப்படிச் செய்வதன் மூலம் எங்களை நாங்களே நெருக்கடிக்குள் தள்ளப்போகிறோம் என்பதும் எங்களுக்குத் தெரியும். ஒருவேளை அதுதான் எனது விதியாக இருக்கலாம். 
  • நான்  நிதியமைச்சராக இருந்தபோது பொருளாதார அமைப்புடன் என் பார்வைகள் முரண்பட்டன; ஆக, அந்தப் பதவியிலிருந்து நான் விலக நேரிட்டது. பாதுகாப்பு அமைச்சராக நான் இருந்தபோது எனது பார்வைகள் அரசியல் கட்டமைப்புடன் முரண்பட்டன. ஆகவே, அந்தப் பதவியிலிருந்தும் விலக நேரிட்டது. தற்போது நான் பிரதமராக இருக்கிறேன், சமூக அமைப்பைப் பற்றிய எனது கொள்கையும் தற்போதைய கொள்கையும் முரண்படுகின்றன; ஆகவே, நான் வெகு விரைவில் இந்தப் பதவியை விட்டும் போக வேண்டியிருக்கும்.
  • ஆயினும், நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. எங்களுடைய ஐந்தாண்டு கால ஆட்சியை நிறைவுசெய்வதற்காகவே இந்த அமைப்புகளுக்கு நாங்கள் தலைவணங்க வேண்டிய அவசியம் இல்லை. அதிகாரத்திலிருந்து விலகியிருக்கவே நாங்கள் விரும்புகிறோம், அதே நேரத்தில் அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து போரிடுவோம். நூற்றுக் கணக்கான தேர்தல்களில் போட்டியிட வேண்டியிருந்தாலும் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை; ஆனால் நீதியின் பாதையிலிருந்து நாங்கள் விலகிச்செல்ல மாட்டோம். 
  • இந்த ஆண்டு பாபா சாஹேப் பீம் ராவ் அம்பேத்கரின் நூற்றாண்டு, சமூகநீதியின் ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக நாங்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும் சில வகுப்பினரின் வெறுப்புக்கு உள்ளாகத்தான் நேரிடும்.
  • ஏழைகள் எப்படி அதிகாரத்தின் பங்குதாரர்களாக ஆவது என்பதுதான் நம் முன் தற்போது உள்ள கேள்வி. நீதிக்கான போராட்டத்தில் ஏழை எளியோர் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காகப் போராடவில்லை, மாறாக சமூக வாழ்க்கையில் கண்ணியமும் மதிப்பும் கிடைப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
  • அதனால்தான் இந்த அதிகாரக் கட்டமைப்பில் - அது இந்த அவையிலாகட்டும் அல்லது அதிகாரத் தரப்பிலாகட்டும் - அவர்கள் பங்கெடுக்காவிட்டால் அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கவே முடியாது என்பது என்னுடைய கருத்தாக இருந்துவந்திருக்கிறது. ஆகவே, நாட்டின் நிர்வாகத்தில் தங்கள் பங்கை அவர்கள் பெறுவதற்கு வழிவகை செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதிகாரத்தில் அவர்கள் பங்கு பெற்றாலொழிய வெறுமனே விவாதங்கள் நடத்துவது வீணாகப் போவதுடன் அவர்கள் புறக்கணிப்புக்குள்ளாவது தொடரவே செய்யும்.    
  • ஐயா (அவைத்தலைவர்), மிகுந்த போராட்டத்துக்குப் பிறகே இந்தக் கட்டத்தை எட்டியிருக்கிறோம், அரசு அமைப்பது என்பது தற்காலிக நிறுத்தம் மட்டுமே. ஆட்சியில் இருந்தபோதும் எங்களது போராட்டத்தைத் தொடர்ந்தோம், அதிகாரத்தில் இல்லாதபோதும் தொடரவே செய்வோம். விடாமல் போராடுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். முக்கியமான நிகழ்வுகளின் ஒருசில கணங்கள்கூட வரலாற்றில் கணிசமான முக்கியத்துவத்தைப் பெறும். 
  • கடவுளின் படைப்பான, நமது சக மனிதர்கள் மீது நாம் நமது கவனத்தைத் திருப்புவோமாக. எண்ணற்ற மனிதர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு துயர்மிகுந்த வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். அந்த மக்களுக்கு உதவிசெய்வது நம் கடமையாகிறது, நாங்கள் செய்ததும் சரியாக அதைத்தான்.
  • அரசுக்கு அதிகாரம் இருக்கிறது; அந்த அதிகாரம் ஏழைகளுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உதவவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுதான் சில பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மண்டல் குழுவானது சாதியம் என்ற பிரச்சினையை எழுப்புகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். இந்த அம்சத்தை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
  • சமூக அமைப்பும் அரசியல் கட்டமைப்பும் பல வழிகளில் ஒன்றையொன்றைச் சார்ந்தவையாகும். சமூக, பொருளாதார அமைப்புகளில் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் கீழ்மட்ட அளவில் பெருமளவிலான கூட்டுறவு காணப்படுகிறது.
  • இந்தக் கீழ்மட்டமானது பெரிதும் தலித் மக்களாலும் சிறு விவசாயிகளாலும் ஆனது. அவர்களில் 99% ஏழைகள். மேலும் அவர்களில் 90% பேர் சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகள். உயர்சாதி மக்கள் பணக்காரர்கள் என்பதும் உண்மை. சமூக அமைப்புக்கும் பொருளாதார அமைப்புக்கும் வேறுபாடுகள் இருக்கும் என்றால் சமூக அமைப்புக்கும் அரசியல் கட்டமைப்புக்கும் இடையே ஒற்றுமைகளும் இருக்கவே செய்கின்றன.
  • அரசியல் கட்டமைப்பை மாற்றாமல் சாதியத்தை ஒழிக்கவோ சமூக அமைப்பை மாற்றவோ நம்மால் முடியாது. சாதியத்தை வேரோடு அழிக்க அரசியல் கட்டமைப்பில் நாம் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். மண்டல் குழு தொடர்பாக நாங்கள் எடுத்த முடிவு தீவிரமான பரிசீலனைக்குப் பிறகு மனவுறுதியுடன் எடுக்கப்பட்டது. நாம் எல்லோரும் கிராமங்களிலிருந்து வந்திருக்கிறோம், ஆகவே கிராமத்தினரின் நலன்களுக்கு உதவுவதற்காக எங்களின் அதீத சக்தியைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் தயார்.
  • ஐயா, இந்தக் கணத்தில் எங்கள் தரப்பைப் பொறுத்தவரை அதீதத் திமிரோ கடுமையான  வேதனையோ எதுவும் எங்களுக்கு இல்லை. மாறாக, நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் கூடவே நாங்கள் அவமானகரமான முறையில் செல்லவில்லை என்று பெருமிதமும் அடைகிறோம். சில நேரம் மரணம் என்பது வாழ்க்கையைவிட உயர்வானது.
  • ஐயா, ஒரு நபர் தனக்கு மிக மிக முக்கியமான ஒரு லட்சியத்தை அடைவதற்காகத் தன் வாழ்க்கையையே இழக்கத் துணிவார் என்றால், அவர் அதற்காக வருத்தப்பட மாட்டார். இது ஒரு நல்ல நோக்கத்துக்கான போராட்டம், நாங்கள் அதிகாரத்தில் இருந்தபோது இந்த நோக்கத்துக்காக தொடர்ந்து போராடினோம், அதிகாரத்தை விட்டு விலகினாலும் இந்தப் போராட்டத்தைத் தொடரவே செய்வோம்! 

நன்றி: அருஞ்சொல் (28 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories