TNPSC Thervupettagam

இந்திய இயற்பியலில் ஒரு சகாப்தம்

June 7 , 2023 314 days 214 0
  • சென்னையில் உள்ள இந்தியக் கணித அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும் இந்திய இயற்பியல் துறையில் பேராளுமையாகவும் திகழ்ந்த பேராசிரியர் ஜி. ராஜசேகரன் மே 29 ஆம் தேதி அன்று தனது 87ஆவது வயதில் மறைந்துவிட்டார். இந்தியாவில் துகள் இயற்பியல் ஆராய்ச்சித் துறைக்கு அவர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பற்ற பங்கை அளித்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் தலைமுறை இயற்பியல் அறிஞர்களில் முக்கியமானவர். சர்.சி.வி.ராமன், மேக்நாட் சாகா, சத்யேந்திர நாத் போன்ற மாபெரும் இயற்பியல் அறிஞர்களின் வழித்தோன்றலாக விளங்கியவர்.
  • தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 1936இல் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் ஜி. ராஜசேகரன். தனது கல்லூரிப் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் முடித்து 1957இல் ஹோமிபாபாவால் தொடங்கப்பட்ட பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி மாணவராக இணைந்தார். அங்கு வழங்கப்பட்ட பயிற்சியில் முதல் மாணவராகச் சாதனை நிகழ்த்தினார். 2007இல் நடைபெற்ற பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் பொன் விழாவில் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கையால் இச்சாதனைக்காக விருது பெற்றார்.
  • பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிற்சியை முடித்து அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அப்போது அங்கு பணியாற்றிய இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற அறிஞரான சுப்பிரமணியம் சந்திரசேகர், அவருக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். சி.வி. ராமனின் அறிவியல் உரைகளையும் சென்னையில் படித்தபோது அவர் நேரடியாகக் கேட்டிருக்கிறார்.

கடின உழைப்பாளி:

  • ஜி.ராஜசேகரனுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தபோதும் இந்தியாவுக்காக அறிவியல் துறையில் பங்காற்ற வேண்டும் என்று முடிவெடுத்து மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார். சில ஆண்டுகள் அங்கே பணியாற்றிய அவர், தமிழ்நாட்டில் தான் கற்ற இயற்பியல் அறிவு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு 1970களில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாராக இணைந்தார்.
  • பின்னாளில் தரமணியில் உள்ள இந்தியக் கணித அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக ஆனார். அவர் இயக்குநரானபோது அந்நிறுவனத்தில் அடிப்படை வசதிகள்கூட இல்லை. தனது கடின உழைப்பால், சிறந்த நிர்வாகத் திறனால் அதை இந்திய அளவில் ஒரு முக்கிய ஆராய்ச்சி நிறுவனமாக மாற்றினார். இந்தியாவில் அவர் உரை நிகழ்த்தாத இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனங்களே இல்லை எனலாம்.
  • குவாண்டம் இயற்பியல், குவாண்டம் புலக் கோட்பாடு, துகள் இயற்பியல் போன்ற துறைகளில் மிகச்சிறந்த ஆராய்ச்சி விற்பன்னராகத் திகழ்ந்தவர். இத்துறைகளில் வெளிவரும் உலகின் மிகச்சிறந்த ஆராய்ச்சி இதழ்களில் 180க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியிருக்கிறார். உலகம் முழுவதும் உள்ள முக்கிய இயற்பியல் அறிஞர்களுக்கு உற்ற நண்பராக விளங்கியவர். அவரது ஆராய்ச்சிக்காக ‘மேக்நாட் சாகா’ அறிவியல் விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றவர்.

தள்ளாத வயதிலும் பணி:

  • பணி ஓய்வுக்குப் பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று அறிவியல் உரைகள் நிகழ்த்தி, ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார்.
  • தள்ளாத வயதிலும் எட்டு ஆண்டு களுக்கும் மேலாக ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இயற்பியல் வகுப்புகளில் இலவசமாக குவாண்டம் இயற்பியல் உரைகளை நிகழ்த்தினார். தமிழில் பல்வேறு இயற்பியல் கட்டுரைகளை எழுதினார்.
  • தமிழ்நாட்டில் நியூட்ரினோ திட்டத்தைத் தொடங்கிய முன்னோடி இவர். அது நிகழாமல் போனதில் கடைசி வரை வருந்தியவர். மனித நேயம் மிக்கவராகவும், இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அறிவியல் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்து கடைசி வரை வலியுறுத்திவந்தார்.
  • தமிழ்நாட்டில் எங்கோ ஒரு மூலையில் பிறந்து, தனது கடின உழைப்பால், இந்திய இயற்பியல் வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடித்த பேராசிரியர் ஜி.ராஜசேகரன், தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப் பட வேண்டியவர்.

நன்றி: தி இந்து (07 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories