TNPSC Thervupettagam

இந்திய ஜனநாயகம் எப்படி வீழ்கிறது

March 20 , 2023 406 days 296 0
  • இந்தியாவின் ஜனநாயகம் பகுதியளவுக்குத்தான் சுதந்திரமானது என்று குறைத்து மதிப்பிட்டிருக்கிறது, அமெரிக்காவிலிருக்கும் ‘ஃப்ரீடம் ஹவுஸ்’ ஜனநாயக ஆய்வு அமைப்பு. ‘தேர்ந்தெடுக்கப்பட்ட எதேச்சாதிகாரம்’ என்று வர்ணிக்கிறது சுவீடனில் உள்ள ‘வி-டெம்’. (இந்த அமைப்பானது, நாடுகளின் அரசுகள் எப்படிப்பட்டத் தன்மை வாய்ந்தவை என்று ஆராய்ந்து மதிப்பிடுகிறது). லண்டனிலிருந்து வெளியாகும் ‘எகானமிஸ்ட்’ பத்திரிகையின் ஆராய்ச்சி அமைப்போ, ஜனநாயகக் குறியீட்டு எண்ணில் இந்தியா 53வது இடத்துக்கு சரிந்துவிட்டது என்கிறது.
  • இப்படியான ஜனநாயக வீழ்ச்சியில் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்களுக்குப் பங்கு இருக்கிறது.
  • இந்திய நாடாளுமன்றம் எப்படி நலிவடைந்தது என்று சிறு பட்டியலை அளிக்கிறேன். வாசகர்கள் தங்களுடைய தரப்பில் காணும் வேறு அம்சங்களையும் இதில் சேர்க்கலாம். பட்டியல் இதோ:

மக்களுக்கு எது அவசியம்?

  • மாநிலங்களவையின் விதி எண் 267இன் கீழ், (மக்களவைக்கும் இதே மாதிரி விதி இருக்கிறது), மக்களைப் பாதிக்கும் அல்லது மக்களுக்கு அவசியம் தெரிய வேண்டிய முக்கிய பிரச்சினை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்க உடனே விவாதிக்க வேண்டும் என்று கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல முறை முறைப்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களில் இரு அவைகளிலும் இப்படிப்பட்ட கோரிக்கைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். இந்திய எல்லைக்குள் சீனர்கள் ஊடுருவியது, ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் தொடர்பாக வெளியிட்ட ஆய்வறிக்கை ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த வேண்டுகோள் ஒவ்வொன்றையும் அவையின் தலைவர் நிராகரித்துவிட்டார். 
  • முடிவு: எதை விவாதிக்க வேண்டும் என்று அலுவல் ஆய்வுக் குழுவில் முன்கூட்டியே முடிவு செய்தவற்றைத் தவிர விவாதிப்பதற்கு பொதுமக்கள் நோக்கில் எதுவும் அவசரமே இல்லை. இந்திய மக்கள் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும், திருப்தியுடனும் இருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் அவசரமாக விவாதிக்க வேண்டும் என்று எது குறித்தும் அவர்கள் கவலைப்படுவதில்லை!

அதிபர் பாணியில் பிரதமர்!

  • பிரதமராகப் பதவி வகிப்பவர் மக்களவை உறுப்பினர் என்றால், அந்த அவையின் ‘முன்னவர்’ என்று அழைக்கப்படுவார். பிரதமர் நரேந்திர மோடி 17-வது மக்களவையின் முன்னவர். ஆனால், இரு அவைகளுக்குமே அபூர்வமாகத்தான் எப்போதாவது வருகிறார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு ஆண்டுதோறும் பதில் அளிக்கிறார்.
  • இந்த இரு சமயங்களைத் தவிர பெரிய அளவில் மோடி அவையில் பேசியதாக எனக்கு நினைவில்லை. நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிப்பதில்லை; யாராவது ஓர் அமைச்சர் அவர் சார்பில் பதில் அளிக்கிறார் (பிரிட்டிஷ் நாடாளுமன்ற மக்களவையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பிரதமரே பதில் அளிக்கும் கேள்வி-பதில் நேர நடைமுறை, இந்தியாவிலும் இருந்திருக்க வேண்டும் என்று விழைகிறேன்).
  • இதற்கு முன்னால் பிரதமர்களாக இருந்த ஜவாஹர்லால் நேரு, டாக்டர் மன்மோகன் சிங் அல்லது அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் அணுகுமுறையிலிருந்து மோடியின் அணுகுமுறை வித்தியாசமானதாக இருக்கிறது.  ‘அதிபர்’ போலவே நடந்துகொள்கிறார் ‘பிரதமர்’.
  • பிரதமர் இப்படியே அதிபராகத் தொடர்ந்தால், அதிபர் போலவே எல்லாவற்றிலும் நடந்துகொள்ளத் தொடங்கினால், நாடாளுமன்ற ஜனநாயக நாடாக இந்தியா வெகுகாலத்துக்கு நீடிக்காது.

அவைகள் செயல்பட வேண்டாமா?

  • பிரிட்டனில் மக்களவை ஆண்டுக்கு 135 நாள்கள் கூடுகிறது. இந்தியாவில் 2021இல் மக்களவை 59 நாள்களும், மாநிலங்களவை 58 நாள்களும் மட்டுமே கூடின. 2022இல் மக்களவை, மாநிலங்களவை இரண்டுமே 56 நாள்களுக்கு மட்டுமே நடந்தன. பெரும்பாலான நாள்கள், அவையில் ஏற்பட்ட இடையூறுகளால், நடவடிக்கைகள் இன்றி ஒத்திவைக்கப்பட்டன. “அவையில் எதுவும் நடைபெறவிடாமல் இடையூறு செய்து தடுப்பது நாடாளுமன்ற நடைமுறையில் நியாயமான தந்திரம்” என்று மறைந்த பாஜக தலைவர் அருண் ஜேட்லி ஒரு முறை கூறியது மிகவும் பிரபலமானது.
  • 2010இல் குளிர்கால கூட்டத் தொடர் முழுவதுமே, ஓர் அமைச்சரின் பதவி விலகலைக் கோரியும் - நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் இடையூறு செய்ததால் நடவடிக்கை ஏதுமில்லாமல் முடிந்தது. அந்தத் தொடரில் மக்களவை தனக்கு ஒதுக்கப்பட்டதில் 6%, மாநிலங்களவை 2% நேரம் மட்டுமே செயல்பட்டன.
  • சமீபத்திய காலங்களாக இந்த உத்தி மேலும் மேலும் சீர்திருத்தம் பெற்று வலுவாகிக் கொண்டிருக்கிறது. இப்போதைய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆளுங்கட்சியினரே தினந்தோறும் அவை நடவடிக்கைகள் நடைபெறவிடாமல் தடுத்து இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
  • மிகச் சில நாள்களுக்கு மட்டும்தான் விவாதங்கள் - பெரும்பாலான நாள்களுக்கு அமளிகள், ஒத்திவைப்புகள்தான் என்றால், நாடாளுமன்ற கூட்டத் தொடரே தேவையற்றதாகிவிடும். அரசு கொண்டுவரும் மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டுவிடும் (கடந்த காலங்களில் சில சமயங்களில் அப்படி நிறைவேறியுள்ளன). இனி எதிர்காலத்தில் நாடாளுமன்றம் சில நாள்களில் மட்டும் கூடி, அமளி – இடையூறுகளுக்கு இடையே - மசாதாக்கள் மீது விவாதம் ஏதுமின்றி - வாக்கெடுப்பு மட்டும் நடத்திவிட்டு கடமையை முடித்துக்கொண்டுவிடும்.

விவாதங்கள் ஏதுமற்ற நாடாளுமன்றம்

  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளுமே மக்களுடைய பிரச்சினைகளை விவாதிப்பதற்குத்தான். இந்திய நாடாளுமன்றத்தில் முக்கியமான பல விஷயங்கள் மீது மிகப் பெரிய விவாதங்கள் நடந்துள்ளன. 1962இல் ஆண்டு சீனா நிகழ்த்திய படையெடுப்பில் இந்தியாவுக்கு ஏற்பட்ட அவமானகரமான தோல்வி குறித்து நாடாளுமன்றம் விவாதித்திருக்கிறது.
  • ஹரிதாஸ் முந்த்ரா நிறுவனத்தில் எல்.ஐ.சி. நிறுவனம் முதலீடு செய்தது குறித்து அவை விவாதித்திருக்கிறது. போஃபர்ஸ் பீரங்கி இறக்குமதிக்கு கமிஷன் வாங்கப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அவையில் பல முறை விவாதம் நடந்திருக்கிறது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
  • நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இந்த விவாதங்கள் அனைத்துமே வாக்கெடுப்பு நடத்தப்படாமல் அப்படியே முடிபவைதாம். எனவே விவாதங்களுக்கு அரசு அஞ்சத் தேவையில்லை. அத்துடன் இந்த அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது. ஆகவே, விவாதத்துக்குப் பிறகு ஆட்சியை இழந்துவிடுவோமோ என்று அஞ்சத் தேவையே இல்லை. ஆனால் அரசு எதைக் குறித்து அஞ்சுகிறது என்றால், அரசுக்கு தருமசங்கடத்தைத் தரும் உண்மைகளை எதிர்க்கட்சிகள் அவையில் பேசிவிடுமோ என்றுதான் அஞ்சுகிறது.
  • விவாதங்களற்ற நாடாளுமன்றம் என்ற சகாப்தத்துக்குள் இந்தியா பிரவேசித்துவிட்டதா? ‘அப்படித்தான்’ என்று அஞ்சுகிறேன்; என்னுடைய அச்சம் உண்மையாக இருக்குமென்றால், இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நாம் வெகு விரைவிலேயே ‘விடைதரும் விழா’ நடத்த வேண்டியிருக்கும்.

காத்திருக்கும் அச்சுறுத்தல்

  • நாடாளுமன்றம் புதியதொரு தொடருக்காகக் கூடுவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள்; இரு அவைகளையும் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் மிகப் பெரிய அரங்கத்தில் கூடியிருப்பதாகவும் கற்பனை செய்யுங்கள்; இந்தியக் குடியரசின் அதிபரை அவை உறுப்பினர்கள் அனைவருமே வாக்களித்துத் தேர்ந்தெடுப்பதாகவும் கற்பனை செய்யுங்கள்; அந்த வேட்பாளரை எதிர்த்து யாரும் வாக்களிக்க மாட்டார்கள், யாரும் வாக்களிக்க வராமலும் இருந்துவிட முடியாது.
  • உண்மையில் அங்கு ஒரேயொருவர்தான் வேட்பாளராக இருப்பார். இந்தத் தேர்தல் முடிவை நாட்டு மக்கள் அனைவருமே ‘மக்கள் ஜனநாயகத்தின் வெற்றி’ என்று கொண்டாடுவார்கள். இந்தியாவில் இப்படி நடைபெறக்கூடுமா? நடைபெறக்கூடும், காரணம் நாம் இப்போது தொடர்ந்து ஒரே சீராக, ஒரு கட்சி ஆட்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். 15 மாநிலங்கள் ஒரே அரசியல் கட்சியால் ஆளப்படும் நிலையில், அந்தக் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் சேர்ந்து மக்களவையில் 362 உறுப்பினர்களையும் மாநிலங்களவையில் 163 உறுப்பினர்களையும் கொண்டிருப்பதால், இந்தியாவை ‘ஜனநாயக குடியரசு’ என்ற நிலையிலிருந்து ‘மக்கள் குடியரசு’ என்று மாற்றுவதை எதுவும் தடுத்து நிறுத்தாது.
  • இந்த ஆபத்து சற்றுத் தொலைவில் இருக்கிறது, அப்படி நடக்காது என்று நிராகரித்துவிட முடியாது. இந்தியா இப்படி மக்கள் குடியரசாக மாறும்போது, இந்தியாவின் ‘நாடாளுமன்ற ஜனநாயகம்’ கடைசியாக அது ஓய்வெடுக்க வேண்டிய இடத்துக்கு சென்று சேர்ந்திருக்கும்!

நன்றி: அருஞ்சொல் (20 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories