TNPSC Thervupettagam

இந்தியா முன்னேற 70 மணி நேரம் உழைக்க வேண்டுமா

November 3 , 2023 198 days 368 0
  • சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பேசுபொருளாகியிருக்கிறார் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி. கடந்த வாரம் ஒரு நேர்காணலில், இந்திய இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று அவர் பேசியதுதான் சர்ச்சைக்குக் காரணம். “நமது இளைஞர்களின் செயல்திறன் குறைவாக இருக்கிறது. இதை மாற்ற முடியும். அதற்கு ஒவ்வொரு இளைஞரும், ‘இந்திய நாடு என் நாடு. இதை நான் முன்னேற்றுவேன். அதற்காக வாரத்துக்கு 70 மணி நேரம் உழைப்பேன்’ என உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்” - இதுதான் அவரது பேச்சின் சாரம். அவர் பேசியது சரியா?

உடல் நலமும் மன நலமும்

  • நாராயணமூர்த்தி சொல்வதுபோல் உழைத்தால், வாரத்தில் ஆறு நாள்கள், ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். பொதுவாகவே, ஒருவர் ஏழு மணி நேரமேனும் உறங்க வேண்டும். மேலும், காலைக் கடன்களைக் கழிக்காமல் தீராது. உண்ணவும் உடுக்கவும், நகர நெரிசலில் பணியிடத்துக்குப் போகவும் வரவும், இவை எல்லாவற்றுக்குமாக மூன்று மணி நேரமாவது தேவைப்படும். எஞ்சுவது இரண்டு மணி நேரம். இந்திய இளைஞர்கள் இந்த இரண்டு மணி நேரத்தைத் தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்தாருக்காகவும் தாராளமாகச் செலவிட்டுக்கொள்ளலாம் என்று இன்னொருவர் ‘பெருந்தன்மை’யாகப் பேசினால் நாம் வியப்படைய வேண்டியதில்லை.

இப்படி அதிக நேரம் உழைத்தால் என்னவாகும்

  • மருத்துவர்கள் பதில் சொல்கிறார்கள். இதய நோய் வரும், மன அழுத்தம் அதிகரிக்கும், கவலை மிகும், பதற்றம் கூடும், ஆள்கூட்டத்தில் தனியாளான உணர்வு ஏற்படும், சாதிக்கும் மனநிலை குறையும், உறக்கம் கெடும். இவை எல்லாமுமாகப் பணியிடத்தில் வேலையையும் வீட்டில் உறவுகளையும் பாதிக்கும்.
  • பாதிப்புகள் இன்னும் இருக்கின்றன. உணவு நேரம் பிறழும்; துரித உணவு பழக்கமாகும், விளைவாக உடல் எடை கூடும். உடற்பயிற்சி குறையும் அல்லது இல்லாமலாகும்; விளைவாக, தசையும் எலும்பும் வலுவிழக்கும். ஆகவே இந்த அதீத வேலைப்பளு உடலையும் மனத்தையும் அரித்துவிடும்.

போரும் புனர்வாழ்வும்

  • இந்திய இளைஞர்கள் ஏன் 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்பதற்கு நாராயணமூர்த்தி இரண்டு பன்னாட்டு உதாரணங்களை மேற்கோள் காட்டினார்.
  • முதலாவதாக, ஜப்பானும் ஜெர்மனியும் இரண்டாம் உலகப் போரின் தோல்வியிலிருந்து மீண்டு வந்ததற்கு அந்நாட்டு மக்கள் அதிக நேரம் உழைத்ததுதான் காரணம் என்று நாராயணமூர்த்தி சுட்டிக்காட்டினார். ஏடறிந்த வரலாற்றில் இந்தப் பூமி சந்தித்த ஆகப் பெரிய பேரழிவு இரண்டாம் உலகப் போர். மாண்டவர்களின் எண்ணிக்கை எட்டுக் கோடி இருக்கலாம். இது தமிழகத்தின் இப்போதைய மக்கள்தொகையைவிட அதிகம்.
  • தகர்ந்த கட்டிடங்களும் சாலைகளும் பாலங்களும் துறைமுகங்களும் கணக்கிடலங்கா. தோல்வியடைந்த நாடுகள் மட்டுமல்ல, வெற்றி பெற்ற நாடுகளில் சோவியத் ஒன்றியம், பிரிட்டன், பிரான்ஸ், சீனா முதலான நாடுகளும் தத்தமது இழப்புகளின் சாம்பல் துகள்களிலிருந்தும் புழுதியிலிருந்தும் மீட்டுருவாக்கப்பட்டவைதான். அப்படி ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இப்போது இந்தியா இருக்கிறது என்கிறாரா நாராயணமூர்த்தி?
  • மேலும், ஜப்பானும் ஜெர்மனியும் புனர் நிர்மாணிக்கப்பட்ட பயணத்தில் பல படிகள் உண்டு. இரண்டாம் உலகப் போரில் குறைவான பாதிப்புக்கு உள்ளான அமெரிக்கா, இந்த இரண்டு நாடுகளுக்கும் தாராளமாக உதவியது; பல தொழில்நுட்பங்களையும் வழங்கியது. இவ்விரு நாடுகளும் முறையே ஏகாதிபத்தியத்தையும் நாசிசத்தையும் கைவிட்டன; உலக நாடுகளோடு இணக்கத்தைக் கடைப்பிடித்தன.
  • 1945-க்குப் பிறகு அவை இதுவரை நேரடி யுத்தத்தில் ஈடுபடவில்லை; அணு ஆயுதம் தயாரிக்கவில்லை. இரண்டுநாடுகளிலும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு தொழில்கள் தொடங்கப்பட்டன. இவையெல்லாம் முக்கியமான காரணங்கள்.

அப்படியானால் மக்கள் உழைக்கவில்லையா

  • நிச்சயமாக உழைத்தார்கள். கடுமையாக உழைத்தார்கள். ஆனால், நாளொன்றுக்கு 12 மணி நேரம் உழைக்கவில்லை. ‘Our World in Data’ என்கிற அறிவியல் ஆய்விதழ் தரும் அறிக்கையின்படி 1951இல் இவ்விரு நாடுகளின் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 8.3 முதல் 9 மணி நேரம் உழைத்தார்கள் (கவனிக்க, 12 மணி நேரம் அல்ல!). அதே அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டில் அவர்களது உழைக்கும் நேரம் 5.3 முதல் 6 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுவிட்டது.
  • அது மட்டுமல்ல, வேலை நேரம் குறைக்கப்பட்ட பின்னர் அவர்களது செயல்திறன் பல மடங்கு கூடியுள்ளது என்பதையும் அறிக்கை கவனப்படுத்துகிறது. தங்கள் உழைப்பின் மூலமாக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தொழிலாளர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) வழங்கும் பங்களிப்பின் வாயிலாக இந்தச் செயல்திறன் கணக்கிடப்படுகிறது.
  • 1951இல் தங்கள் உழைப்பின் வாயிலாக இவ்விரு நாடுகளின் தொழிலாளர்களின் பங்களிப்பு மணிக்கு வெறும் 5 டாலராக இருந்தது. 2019இல் இது ஜப்பானில் 43 டாலராகவும், ஜெர்மனியில் 69 டாலராகவும் அதிகரித்துவிட்டது. அதாவது, உழைக்கும் நேரம் குறைந்தது; ஆனால் செயல்திறன் கூடியது. ஆகவே, நாராயணமூர்த்தி செல்வதுபோல் கூடுதல் உழைப்பும் செயல்திறனும் நேர் விகிதத்தில் இல்லை.
  • இதே அறிக்கை, 2019இல் இந்தியத் தொழிலாளர்கள் சராசரியாக 8 மணி நேரம் உழைத்ததாகவும், இந்தக் காலகட்டத்தில் உள்நாட்டு உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பு மணிக்கு 9 டாலராக மட்டுமே இருந்ததாகவும் கணித்திருக்கிறது. மாறாக, ஜெர்மனியும் ஜப்பானும் செயல்திறனில் சிறந்து விளங்குகின்றன. எப்படி? அவை உற்பத்தி முறைகளை நவீனப்படுத்தின; தொழிலாளர் திறனை மேம்படுத்தின. நாமும் அந்த வழிமுறைகளைத்தான் பின்பற்ற வேண்டும். அதிக நேர உழைப்பு என்பது செயல்திறனைக் கூட்டிவிடாது.

சீனாவும் இந்தியாவும்

  • இரண்டாவதாக, நாராயணமூர்த்தி சொன்ன பன்னாட்டு உதாரணம் சீனா. நமது இளைஞர்கள் 70 மணி நேரம் உழைத்தால்தான் நாம் சீனாவோடு போட்டியிட முடியும் என்றார் அவர். சீனா இன்று உலகின் தொழிற்சாலையாக விளங்குகிறது. சீனாவைப் போலவே இந்தியாவும் மனிதவளம் மிக்க நாடு; சீனாவோடு போட்டியிடும் எல்லாத் தகுதிகளும் கொண்டது.
  • ஆனால், இன்று சீனாவின் பொருளாதாரம் நம்மைவிடச் சுமார் ஐந்து மடங்கு பெரியதாக இருக்கிறது. பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF) மதிப்பீட்டின்படி, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 17.8 டிரில்லியன் டாலராகவும் (ஏறத்தாழ ரூ.1,482 லட்சம் கோடி), இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 3.7 டிரில்லியன் டாலராகவும் (ஏறத்தாழ ரூ.300 லட்சம் கோடி) இருக்கிறது. சீனா இதை எப்படிச் சாதித்தது?

கல்வியும் மருத்துவமும்

  • ஆய்வாளர்கள் சொல்லும் காரணங்கள் பல. சீனா ஒரு எதேச்சதிகார நாடு, அங்கு சிவப்பு நாடா இல்லை, மனிதவளம் மிகுதி, அரசு வழங்கும் மானியங்கள் அதிகம், உள்கட்டமைப்பு சிறப்பானது. ஆனால், இவை எல்லாவற்றையும்விட முக்கியமானவை என்று நோபல் விருது பெற்ற அமர்த்திய சென் இரண்டு காரணங்களைச் சொல்கிறார்.
  • அவை கல்வியும் மருத்துவமும். இரண்டிலும் இந்தியாவைவிட சீனா மிகவும் மேம்பட்ட நிலையில் இருக்கிறது. அங்கு அரசுதான் கல்வி நிலையங்களையும் மருத்துவமனைகளையும் நடத்துகிறது. மாறாக, இந்தியாவில் அரசுப் பள்ளிகளும் அரசு மருத்துவமனைகளும் வக்கற்றவர்களின் புகலிடமாகிவிட்டன. நமது பொதுப் பள்ளிகளும் மருத்துவமனைகளும் எல்லோருக்குமானவையாக, தரம் மிக்கவையாக இருக்க வேண்டும்.
  • திறமையும் பயிற்சியுமே ஒரு நல்ல தொழிலாளியை உருவாக்கும். இதற்கு அடிப்படைக் கல்வியும் நல்ல ஆரோக்கியமும் அவசியம். கூடவே, தொழில் பெருக வேண்டும். நமது பிரதமரின் ‘ஆத்ம நிர்பார் பாரத்’ (சுயச் சார்புள்ள இந்தியா) திட்டத்தை முழு மூச்சில் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். அப்போது அயல்நாடுகளின் கனரகத் தொழிலகங்கள் இங்கு உருவாகும். அதற்கேற்றவாறு நமது தொழில் துறையும் தொழிலாளர் சக்தியும் தகவமைக்கப்பட வேண்டும்.
  • அதிக நேரம் உழைத்தால் செயல்திறன் கூடும் என்பது மூடநம்பிக்கை. பணியாளர்களை அப்படிக் கசக்கிப் பிழிவது அறமற்றதும்கூட. அது அவர்களின் உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் கேடு. நம்மிடத்தில் மனிதவளம் இருக்கிறது. குடிமக்கள் அனைவருக்கும் அரசு கல்வியும் மருத்துவமும் வழங்கி, நம் மனிதவளத்தை மேம்படுத்த வேண்டும். வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும். உற்பத்தி முறைகளை நவீனப்படுத்த வேண்டும். அப்போது நமது நாட்டின் செயல் திறனும் கூடும்.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories