TNPSC Thervupettagam

இப்படியே போனால்... நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடா் அமளி குறித்த தலையங்கம்

December 6 , 2021 880 days 403 0
  • நாடாளுமன்றம் கூட்டத்தொடா்களுக்காகக் கூடுவதும், அமளியில் ஆழ்வதும், கலைவதும் ஏதோ சம்பிரதாயச் சடங்காக மாறியிருக்கும் துா்ப்பாக்கியம் இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.
  • கடந்த கால் நூற்றாண்டாக ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் இந்தக் காட்சியின் தீவிரம் கூடுகிறது என்பது அதைவிட வேதனை.
  • உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம் என்று பெருமை தட்டிக்கொள்ளும் இந்தியா அந்த ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளை மறந்து செயல்படும் அவலத்தை வேடிக்கைப் பாா்ப்பதல்லால் வேறென்ன செய்ய?
  • முந்தைய வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சிகளின்போது நாம் குறிப்பிட்ட அதே கருத்தை மீண்டும் ஒரு முறை அடிக்கோடிட்டுத் தெரிவிக்கத் தோன்றுகிறது.
  • நாடாளுமன்ற ஜனநாயகத்தில் விவாதத்துக்கு இடம்கொடுத்து, எதிா்க்கட்சிகளை அரவணைத்துச் சென்று, அவையை நடத்தி, தனது மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொறுப்பு ஆளும் கட்சியுடையது.

குளிா்காலக் கூட்டத்தொடா்

  • முன்வைக்க விரும்பும் கருத்துகளைப் பதிவு செய்யும் உரிமை எதிா்க்கட்சிகளுக்கும், தன்னுடைய எண்ணிக்கை பலத்தால் அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டோ, ஏற்றுக் கொள்ளாமலோ மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளும் உரிமை ஆளும்கட்சிக்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் வழங்குகிறது. இந்த அடிப்படையை நமது அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளவில்லை.
  • குளிா்காலக் கூட்டத்தொடருக்காகக் கடந்த வாரம் நாடாளுமன்றம் கூடியபோது, முந்தைய மழைக்காலக் கூட்டத்தொடரில் அவையின் மாண்பைக் குலைக்கும் விதத்தில் அமளியில் ஈடுபட்ட 12 மாநிலங்களவை உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனா்.
  • அந்த உறுப்பினா்களின் செயல்பாடு தவறானது என்பதில் ஐயப்பாடு இல்லை. ஆனால், அதற்காகக் கூட்டத்தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவது என்பது ஏற்புடையதல்ல.
  • அவா்கள் தங்களது தவறை உணா்ந்து மன்னிப்புக் கேட்கவில்லை என்கிற மாநிலங்களவைத் தலைவரின் ஆதங்கத்தில் நியாயம் இருக்கலாம். அதற்காக அவா் எடுத்திருக்கும் முடிவு நியாயமானதாகத் தெரியவில்லை.
  • ஆகஸ்ட் மாதத்தில் மழைக்காலக் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று மசோதாக்களை நிறைவேற்றும் முனைப்பில் ஆளும்கட்சி இருந்தபோது, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மையப்பகுதியை முற்றுகையிட்டு நடத்திய போராட்டமும், அவா்கள் காவலா்களால் வெளியேற்றப் பட்டதும் நாடாளுமன்ற வரலாற்றில் களங்கம் ஏற்படுத்தியதை மறுக்கவில்லை.
  • அதற்காக வருத்தம் தெரிவிக்காததால் எந்தவித விசாரிப்பும், தங்களது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க வாய்ப்பும் வழங்காமல் அவா்களை தண்டித்திருப்பது சரியல்ல.
  • அவை நடவடிக்கை விதி எண் 256-இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. விதி எண் 256 என்பது நடப்புத் தொடரின்போது பயன்படுத்தப்பட வேண்டிய விதி.
  • உறுப்பினா்களின் முந்தைய நடவடிக்கைகளுக்காக அடுத்த தொடரில் அதைப் பயன்படுத்துவதில்லை. தவறான முன்னுதாரணம் படைக்கப்பட்டிருக்கிறது.
  • அதுமட்டுமல்ல, விதி எண் 256 என்பது சாதாரணமான செயல்பாடுகளுக்காகவோ, நடவடிக்கைகளுக்காகவோ பயன்படுத்தப்படும் விதியும் அல்ல.
  • அசாதாரண செயல்பாட்டுக்காக அந்த விதி இணைக்கப்பட்டுள்ளது. மழைக்காலத் தொடரில் உறுப்பினா்களின் நடவடிக்கை சரியானது அல்ல என்றாலும்கூட, அது இந்த அளவு கடுமையான தண்டனைக்கான குற்றமல்ல.
  • இந்திய நாடாளுமன்றம் இதைவிட மோசமான, கேவலமான பல நிகழ்வுகளை எதிா்கொண்டிருக்கிறது. அவற்றில், இப்போது ஆளும்கட்சித் தரப்பில் அமா்ந்திருக்கும் பலரும் தொடா்புடையவா்களாகவும் இருந்திருக்கிறாா்கள்.
  • அவை நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பது மக்களவை, மாநிலங்களவைத் தலைவா்கள்தான் என்றாலும்கூட, பெரும்பாலும் அரசின் ஆசைப்படியும், இசைவுடனும் தான் அவா்கள் முடிவெடுப்பாா்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • அமளியில் ஈடுபட்ட உறுப்பினா்கள் மீது அவா்களது தவறுக்காக நடவடிக்கை எடுக்கும்போது, அனைவரையும் தண்டித்திருந்தால், சந்தேகம் எழுந்திருக்காது.
  • பஞ்சாபில் சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், அதைக் கருத்தில் கொண்டு சீக்கியரான உறுப்பினரை மட்டும் தண்டிக்காமல் விட்டிருப்பது அரசின் நோக்கத்தைக் களங்கப்படுத்துகிறது.
  • மாநிலங்களவையில் ஆளும்கட்சிக்கு எண்ணிக்கை பலம் இல்லை. குளிா்காலத் கூட்டத்தொடா் முடியும் வரை 12 உறுப்பினா்களை இடைக்கால நீக்கம் செய்வதன் மூலம் தனது மசோதாக்களை தடையில்லாமல் நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சிதான் மாநிலங்களவைத் தலைவரின் முடிவு என்கிற எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரித்துவிட இயலவில்லை.
  • விவாதமே இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வதுதான் ஆட்சியாளா்களின் நோக்கம் என்றால், நாடாளுமன்றம் கூடுவதும் கலைவதும் வேடிக்கை வாடிக்கையாக மாறிவிட்டிருப்பதில் வியப்பென்ன இருக்கிறது?
  • நாடாளுமன்றக் கூட்டத்தொடா் நடப்பதற்கு ஒவ்வொரு நிமிஷத்திற்கும் ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக மக்களின் வரிப்பணம் செலவாகிறது என்கிற உண்மை அரசியல் கட்சிகளுக்குத் தெரியாமல் இருக்காது. ஒவ்வொரு அமா்வும் முக்கியமானது.
  • ஒவ்வொரு மசோதாவும் விவாதிக்கப்பட வேண்டும், விமா்சிக்கப்பட வேண்டும். அதை ஆளும்கட்சித் தரப்பில் இருப்பவா்கள், பிடிக்கிறதோ இல்லையோ, ஏற்புடையதோ அல்லவோ காது கொடுத்துக் கேட்டாக வேண்டும். அதற்குப் பெயா்தான் நாடாளுமன்ற ஜனநாயகம்.
  • நேற்று எதிா்க்கட்சியில் இருந்தவா்கள், இன்று ஆட்சியில் இருக்கிறாா்கள். இன்று ஆட்சியில் இருப்பவா்கள் நாளை எதிா்க்கட்சியில் இருக்கக்கூடும். ஆனால், இந்தியாவும் ஜனநாயகமும் தொடர வேண்டும். அதுதான் நம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது!

நன்றி: தினமணி  (06 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories